Monday, March 26, 2012

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு

தலைப்பைப் பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா? பதட்டப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.என்னுடைய கோடை விடுமுறை என்ற பதிவில் என் சிறு வயதில் அத்தை வீட்டிற்கு சென்றிருந்ததைப்  பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். சின்ன அத்தை வீடு இராமநாதபுரம்  மாவட்டத்தில் உள்ளது. இவர்கள்  கூட்டுக்  குடும்ப வாழ்கையை பல வருடங்களாக அனுபவித்து வருகின்றனர். தினமும் சாப்பாடே மூன்று நான்கு பந்திகளுக்கு நடக்கும். இப்போது அவர்களின் குழந்தைகள் வளர்ந்து படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் வெளியூர்/வெளிமாநிலங்களுக்கு என்று சென்றுவிட்டாலும் பெரியவர்கள் ஒன்றாகத் தான் இருக்கிறார்கள்.விடுமுறையில் இந்த அத்தை வீட்டில் 15 நாட்கள் இருப்பதற்காக அப்பா என்னையும், தம்பியையும் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். அப்பா-அம்மாவை பிரிந்திருப்பது எனக்கு ஏக்கமாக இருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளுடன் எப்போதும் விளையாட்டு, தினமும் ஒரு சினிமா, விதவிதமான ஐஸ்கிரீம், அவர்கள் நடத்தும் ஹோட்டலிலிருந்து தினமும் ஒரு டிபன் என்று சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் அருகில் உள்ள ஊரில் கோவில் திருவிழா என்றும் அங்கு மயில்கள் நிறைய இருப்பதாகவும் அதற்குப் போகலாம் என்றும் என்னை அத்தையின் புகுந்த வீட்டு மனிதர்கள் சிலர் அழைத்துச் சென்றனர்.அந்த ஊரின் பெயரை இப்போது நினைத்தாலும் ஞாபகம் வரவில்லை. கோவில் தரிசனம் முடிந்ததும் அங்கேயே கையில் கொண்டு சென்றிருந்த உணவையும் சாப்பிட்டு விட்டு பேருந்து நிலையத்தை சென்றடைந்தோம். பல ஊர்களுக்கும் செல்ல அங்கு மாறி மாறி பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. கைக்குட்டை, பை, இவற்றையெல்லாம் போட்டு இடம் பிடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் ஒரு பத்து பேராவது இருந்திருப்போம். எல்லோருக்கும் இடம் வேண்டுமே என்று காத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்திற்குப் பிறகு எல்லோரும் நின்று கொண்டிருந்த ஒரு பேருந்துக்கு அருகில் சென்றோம். சரி இந்த பேருந்தில் தான் ஏற வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.திடீரென்று கூட்டத்திலிருந்த மக்கள் திபுதிபுவென்று பேருந்தில் ஏறினர். எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் சடாரென திரும்பிப் பார்க்க என்னருகில் இருந்த உறவினர்களைக்  காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாலும் தெரியவில்லை. சரி பேருந்தில் ஏறி விட்டார்கள் என்று நினைத்து நானும் பேருந்தில் ஏறிவிட்டேன். கும்பல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் அருகில் நின்று கொண்டு பின்னால் திரும்பி பேருந்தின் உள்ளே அவர்களை தேடிக் கொண்டே இருக்கிறேன்… ஆனால்…யாருமே தென்படவில்லை…. பயம் வந்து விட்டது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. கீழே இறங்கலாம் என்றால் நகரவே முடியவில்லை. வண்டியை வேறு எடுக்கப் போகிறார்கள். கடவுளே…பேருந்து நகர ஆரம்பிக்க… ஓட்டுநர் இருக்கும் பக்கத்தின் வெளியே என் உறவினர் கத்திக் கூப்பிடுகிறார். ஏய், வண்டியை விட்டு சீக்கிரம் இறங்குடி என்று… நான் அப்போது தான் கவனித்தேன். பின்பு அவர் ஓட்டுநரிடம் சொல்லி நிறுத்தச் சொல்ல  நான் இறங்கினேன். அப்பாடா… எனக்கு உயிர் வந்தது. கூடவே அழுகையும்.அப்போது தான் அந்த அண்ணா சொன்னார் "இப்படியே விட்டிருந்தா, நீ இராமேஸ்வரம் போயிருப்ப!" என்று. ஆமாங்க அந்த பேருந்து இராமேஸ்வரம் செல்வதாம். பின்பு எல்லோருடனும் சேர்ந்து வீட்டிற்குப்  போய் சேர்ந்ததும், அத்தையிடம் சொல்லி அழுதேன். எல்லோரும் மிகவும் ஆறுதலாக பேசினார்கள். இருந்தும் அன்றே எனக்கு ஜுரம் வந்து விட்டது. அப்பா, அம்மாவிடம் செல்ல வேண்டும் என்று ஒரே அழுகை. ஒரு வாரம் ஜுரத்துடனேயே இருந்தேன். எங்க ஊருக்கு வந்து அப்பாவையும், அம்மாவையும் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது என்றும் சொல்லலாம்.இந்த சம்பவத்திற்குப்  பிறகு என் பயம் மிகவும் அதிகமாகி விட்டது. அப்பா-அம்மாவுடன் எங்கு போனாலும் என்னை விட்டுட்டு எங்கேயும் போயிடாதம்மா என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கையையும் இறுக்கிப் பிடித்துக் கொள்வேன்.திருமணமான பிறகும் என்ன, இப்பவும் இப்படித்தான். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. அதை பற்றி எனக்குக் கவலையுமில்லை. என் பயம் எனக்கு. கூட்டம் என்றால் கணவரின் கையை இறுக்கிப் பிடித்துக் கொள்வேன். திருமணமான புதிதில் கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது வாந்தியின் காரணத்தால் நான் மாத்திரை போட்டு தூங்கி விட காங்கேயத்தில் வண்டி நின்றிருக்கிறது. கணவர் இறங்கி போன் பேசப் போய்விட தீடீரென முழித்தவள் அருகில் கணவர் இல்லாததையும், அக்கம் பக்கம் தேடியும் காணாததால் எனக்கு அழுகையே வந்து விட்டது. சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே வருகிறார்.இப்படி பலநேரம் என்னை பயமுறுத்துவதுண்டு. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இறங்கி விட்டு வண்டி கிளம்பி நான் பயந்து அழ ஆரம்பிக்கும் முன்னர் வந்து விடுவார்.உண்மையிலேயே என்  சிறுவயதில் அன்று காணாமல் போயிருந்தால்?... நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்ன நடந்திருக்குமென்று?மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்

Saturday, March 24, 2012

நல்வாழ்விற்கு சில விதிகள்சில சமயங்களில் கடையிலிருந்து பொருட்கள் கட்டி வரும் சின்னச் சின்ன  காகிதங்களில் கூட நல்ல பல கருத்துக்களும், கதைகளும் இருக்கும். அது போலவே என் அப்பாவிடமிருந்த புத்தகங்கள் சிலவற்றைக்  கொண்டு வந்ததில் அதில் ஏதோ ஒரு விழாவில் தந்த சிறிய புத்தகம் ஒன்றும் இருந்தது. பல நல்ல விஷயங்கள் அதில் இருந்தன. அப்பா சில இடங்களில் அடிக்கோடிட்டும் வைத்திருந்தார். அவற்றில் ஒரு சிறிய பகுதி தான் இது. இதை பதிந்தும் வைத்துக் கொள்கிறேன்.

உணவைக் குறை, அதிகமாகக் கடித்துண்
சவாரியைக் குறை, அதிகமாக நட
கவலையைக் குறை, அதிகமாய் வேலை செய்
சோம்பலைக் குறை, அதிகமாய் விளையாடு
பேசுவதைக் குறை, அதிகமாய் சிந்தி
திரிவதைக் குறை, அதிகமாய்த் தூங்கு
வீண்செலவைக் குறை, அதிகமாய் தானம் செய்
திட்டுவதைக் குறை, அதிகமாய்ச் சிரி
சத்தத்தைக் குறை, செயலை அதிகரி
 
ஆரோக்கியமான வாழ்விற்கு ஏற்ற உணவு முறைகள்
 
1)   பசித்துப் புசிப்போம். ருசிக்காக மட்டும் உண்பது வீண் வம்பு. வாய்க்கு பிடித்தது வயிற்றுக்குப் பிடிக்காது என்பது ஆயுர்வேத வாக்கு.
2)   உணவில் கால் பங்கு காய்கறி, கீரைகளையும், பழங்களையும் உபயோகிப்போம். இது உணவுச்சமன் செய்யும்.

3)   அதிகமான காரம், மசாலா எண்ணெய்ப் பொருள்களைத் தவிர்ப்போம்.
4)
   பச்சைக்  காய்கறிகள், முளைவிடச் செய்த பயறுகள், உடலுக்கு மிகுந்த போஷாக்கு அளிப்பதால் அவற்றை திட்டமிட்டு உணவில் சேர்த்துக் கொள்வோம்.
5)   இஞ்சி, சுக்கு, மிளகு, கடுக்காய் இவற்றை திட்டமிட்டு உண்பதால், உடலிற்கு டானிக் போன்ற ஆற்றலும் நோய் எதிர்ப்புச் சக்தியும் கிடைக்கின்றன.
6)
   அறுசுவைகளான இனிப்பு, காரம், உப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு இவற்றில் கசப்பும், துவர்ப்பும் ஆரோக்கியத்தை வளர்ப்பன. அளவான இனிப்பும், உப்பும் நன்மையோ தீமையோ செய்யாது. புளிப்பும், காரமும் ஆரோக்கியத்தைக் கெடுப்பன. இந்த ரகசியத்தை உணர்ந்து தேர்ந்த உணவுப் பழக்கத்தை மேற்கொள்வோம்.
7)   மிதமிஞ்சி உண்ணல், உழைக்காது உண்ணல், பெருத்த சிந்தனை செய்தல், இரவில் கண்விழித்தல், காலம் தவறி உண்ணுதல், அளவின்றி காபி, டீ அருந்துதல் இவற்றால் வியாதிகள் ஏற்படுவதால் இவற்றைத்  தவிர்ப்போம்.
8)   மாதம் ஒரு நாள் உபவாசம் இருந்து அல்லது வாரமொரு முறை ஒரே வேளை மட்டும் உண்டு ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்துவோம்.

திட்டமிட்டு உண்போம் திடமாக வாழ்வோம்…

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.

Thursday, March 22, 2012

தண்ணீரில்லா வாழ்க்கை....


காடுகளையும், மரங்களையும் அழித்துக் கொண்டே வருவதால் மழை பொய்த்துக் கொண்டே வருகிறது. இல்லையென்றால் ஒரேடியாக மழை பெய்து வெள்ளக்காடாக மாறி விடுகிறது. மின்சாரத்தையும், தண்ணீரையும் எவ்வளவு சிக்கனமாக உபயோக்கிறோமோ அவ்வளவு நமக்கு நல்லது. நமக்கு பின்வரும் தலைமுறைக்கும் நாம் வைத்து விட்டு செல்லலாம். தண்ணீரின் தேவை எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு தெரியாததல்ல…. தண்ணீர் விநியோகம் இல்லாத நாளில் தான் அதன் அருமையை நாம் சிறிது உணர்வோம். இன்று உலக நீர்நாள். இன்று முதலாவது தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனத்தை கடைபிடிப்போம்.

தில்லியை பொறுத்தவரை மின்சாரம் எப்படி, எப்ப வேண்டுமானாலும் போகுமோ, அதே போல் தான் தண்ணீரும். கோடையில் அவ்வப்போது தண்ணீர் விநியோகம் இருக்காது. பராமரிப்புப் பணி, குழாயில் பிரச்சினை என்று ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணம். சில நேரங்களில் சாக்கடை நீரும் அங்கங்கே கலந்து விடும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். இதனால் நோய் நொடிகள் பரவுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் கட்டிடத்தில் கீழேயிருந்து தண்ணீர் வரும் ஏதோ குழாயில் பிரச்சினை. அதனால் எல்லா வீட்டின் குழாயையும் பூமிக்குள் தோண்டி மாற்ற வேண்டும். கட்டிடத்தில் உள்ள எல்லோரும் கூடி பேசி முடிவெடுத்து வேலைகள் ஆரம்பமாயின. அன்றிலிருந்து நான்கு-ஐந்து நாட்களுக்கு தண்ணீர் வரவில்லை. கங்கை நீர் தான் எங்களுக்கு எல்லாமும். முதல் இரண்டு நாட்களுக்கு பக்கத்து வீடு காலியாக இருந்ததால், அவர்கள் வீட்டு மேல்நிலைத் தொட்டியில் இருந்த தண்ணீரில் சிக்கனமாக குளித்து, பாத்திரங்கள் கழுவி என்று வேலைகள் ஆயிற்று.
கிடைக்கும் இடத்திலெல்லாம் FLATS வந்து விடுகிறது. அடி பம்பிற்கோ, கிணறுக்கோ வழியில்லை. தண்ணீர் லாரி வந்தாலும் தண்ணீரை தூக்கிக் கொண்டு மூன்று மாடி ஏறுவதெல்லாமும் கடினம் தான். குடம் கூட கிடையாது. பக்கெட் தான்.  கோவையில் இருந்த வரை கீழேயிருந்து பெரிய குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இரண்டு மாடி வரை ஏறி பழக்கமுண்டு. 40 குடம் தண்ணீர் கூட சுமந்து விடுவேன்.

அடுத்த நாளிலிருந்து காலை உணவு ஜாம் தடவிய ப்ரெட்டும், பாலும் தான். மதியம் கிர்ணிபழ ஜூஸ், இரவு DHABAA ஜிந்தாபாத் தான். அப்பொழுது நானும் அவரும் தான். அதனால் சமாளிக்க முடிந்தது. ஊரிலிருந்தும் யாரும் அந்த சமயம் வரவில்லை. வெய்யிலும் கொன்று எடுக்கிறதே. குழந்தைகள் இருக்கும் இடங்களில் தண்ணீரின் தேவை கூடுதலாக இருக்கும்.

மூன்று தெரு தாண்டி இருந்த நண்பர் காலையில் அலுவலகம் செல்லும் போது 10 லிட்டர் அளவு கொள்ளும் Jug-ல் குடி தண்ணீர் கொடுத்து விடுவார். எங்கள் கட்டிடத்தில் கீழ் வீட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒன்று, இரண்டு நாட்கள் பத்து நிமிஷம் போல தண்ணீர் வந்திருக்கிறது. மூன்றாம் மாடியில் இருந்த எங்களுக்கு ஒரு நாள் கூட வரவில்லை. கீழ்வீட்டு மாமி வீட்டில் ஒருநாள் குளித்தோம்.

அடுத்த இரண்டு, மூன்று நாட்கள். ஆடு மாடெல்லாம் குளிக்குதா…. கணக்காக ஆகிவிட்டது. ஒருநாள் மூன்றாம் தெரு நண்பர் வீட்டுக்கு அவசியமான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு போய் குளித்து துவைத்து வந்தோம். இப்படியாக அந்த நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். அப்புறம் குழாய்கள் சரியாகி விட்டது.

இப்படி அவ்வப்போது தண்ணீர் வராமல், இல்லையென்றால் சாக்கடைத் தண்ணீர் மேல்நிலைத்தொடியில் ஏறி பின்பு காலி செய்து விட்டு காய்ந்து கிடக்க வேண்டும். இதனால் எப்போதும் இரண்டு வாளித் தண்ணீராவது பிடித்து வைத்திருப்பேன். ஊருக்கு சென்றாலும் கூட பிடித்து வைத்து விட்டு செல்வேன்.

தண்ணீரை சிக்கனமாக செலவழிப்போம். திண்டாட்டமில்லாமல் இருப்போம்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

டிஸ்கி:-
தண்ணீர் கலங்கலாகவும், பழையதாகவும் இருந்து அப்போது உடனடியாக தேவைப்பட்டால் சிறிது படிகாரத்தை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விட்டு மேலாக தெளிந்த தண்ணீரை தாராளமாக உபயோகப்படுத்தலாம்.

Monday, March 19, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம் -தொடர்பதிவுஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம். என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும் நான் பத்தாவது முடித்து விட்டு நேரிடையாக பாலிடெக்னிக்கில் DIPLOMA IN MECHANICAL ENGINEERING படித்தவள் என்று. அதனால் பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு கிடையாது. அதற்குப் பதிலாக என் L.K.G மற்றும் U.K.G நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். என்ன கணக்கு சரியாப் போச்சா?


L.K.G யில்

1986ல் அப்பாவும், அம்மாவும் என்னை கோவையில் அவினாசி சாலையில் உள்ள Y.W.C.A மெட்ரிகுலேஷன் பள்ளியில் L.K.G சேர்த்து விட்டனர். என் அப்பாவிடம் தினமும் உடனே என்னை அழைத்துச் செல்லும் படி அழுவேனாம். இப்படியே பல மாதங்கள் வரையில் காலையில் விடும் போது தொடர்ந்ததாம். என் ஆசிரியர் ஒரு வயதான ANGLO INDIAN. பாப் செய்யப்பட்ட தலை பூரா பஞ்சு மிட்டாய் தான். இவர்களை நாங்கள் ”பாட்டி மிஸ்” என்று அழைப்போம். அழும் குழந்தைகளை ஒரே சமயத்தில் இடுப்பிலும், தோளிலும், தலையிலும் வைத்துக் கொண்டு பாட்டுப் பாடி நடனமாடுவார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் விளையாட ஆரம்பித்து விடுவர். நான் பெரியவளான பின் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் என் பெயர் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும், நினைவுபடுத்திக் கொண்டு என்னைக் கொஞ்சினார். அருமையான ஆசிரியை.

U.K.Gயில்


இந்த வகுப்பில் நான் மிகவும் மிரண்டு போயிருப்பேன். காரணம் கண்டிப்பான ஆசிரியை FRACSY மிஸ். இவரும் ஒரு ANGLO INDIAN. எல்லோருக்குமே இவரைக் கண்டாலே பயம் தான். அங்கும் இனிமையாகவே நாட்கள் கழிந்தன. மதியம் எல்லா குழந்தைகளும் பாய் போட்டு தூங்க வைக்கப்படுவார்கள். எழுந்ததும் இரண்டு பிஸ்கெட்டுகளுடன் ஒரு தம்ளர் பால். அப்புறம் பாட்டு, விளையாட்டு…. ச்சே குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு ஜாலி… இங்கு என் தோழிகள் அம்பிகா, ஷ்யாமளா, அங்குலட்சுமி ஆகியோர்.


ஒன்றாம் வகுப்பில்


படிப்பு, பாட்டு, கை வேலை, ஓவியம் என பள்ளி நாட்கள் உற்சாகமாக கழிந்தன. அப்போது என் தலைமுடி பெரியோர்களுக்கு இருக்கும் அளவு இருந்ததாக என் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருப்பார். (அதன் பிறகு வந்ததே… வினை) விளையாட்டில் அவ்வளவாக ஆர்வமில்லாத என்னை ஆசிரியர் கட்டாயப்படுத்தி ஊசியில் நூல் கோர்க்கும் போட்டியில் சேர்த்து விட்டார். ஊசியில் நூலை கோர்த்த பின் ஓடிச் சென்று கயிறைத் தாண்டி குதிக்க வேண்டும். நானே எதிர்பார்க்கவில்லை முதலிடம் வாங்குவேன் என்று... பரிசாக சிவப்பு நிறத்தில் அழகான ஒரு LUNCH BOX கிடைத்தது. மூடியின் மீது ஒரு ஸ்கேல் இருக்கும். அதை இழுத்தால் உள்ளே ஒரு ஸ்பூன் இருக்கும். நான் அதை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

இரண்டாம் வகுப்பில்

எனக்கும் தம்பிக்கும் ஒரே சமயத்தில் அம்மை போட்டு ஒரு மாதம் வரை பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தோம். இதனால் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனதால், அந்த முறை வந்த காலாண்டு தேர்வில் நான் கணக்கு பரீட்சையில் தோற்றுப் போக, என் ஆசிரியரோ என் நிலையை தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் என் சீருடையின் பின்பக்கம் என் தேர்வுத்தாளை பின் செய்து எல்லா வகுப்புகளுக்கும் சென்று காட்டி வரச் சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.  அடுத்து வந்த அரையாண்டுத் தேர்வில் நான் தான் வகுப்பிலேயே முதலிடம்.

மூன்றாம் வகுப்பில்

என் ஆசிரியர் பெயர் JAYANTHI ROSE அமைதியானவர். வகுப்புகளும் நன்றாகவே சென்றது. இந்த வகுப்பில் தான் என் தலை முழுவதும் புண்கள் வந்து நீளமான தலைமுடியை மொத்தமாக எடுத்து விட்டு தினமும் மருந்து தடவி ஸ்கார்ஃப் கட்டிக் கொண்டு பள்ளி செல்லும் நிலை வந்தது.

நான்காம் வகுப்பில்

நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் அப்போதிருந்த  மாதக் கட்டணமான 40 ரூபாயை 100 ரூபாயாக ஏற்றி விட இரண்டு குழந்தைகளையும் படிக்க வைப்பது சிரமமென்று யோசித்த அப்பா. அருகிலிருந்த மற்றொரு பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் எங்களை சேர்த்து விட்டார். மூன்றாம் வகுப்பில் COMPUTER SCIENCE வரை படித்த நான் இங்கு நான்காவதில் தான் ஆங்கிலமே ஆரம்பித்திருந்தபடியால் திரும்பவும் அடித்தளத்திலிருந்து படித்துக் கொண்டு வந்தேன். இங்கு என் ஆசிரியை மணிமேகலை. மிகவும் பிடித்தவர். இவரின் வகுப்புகள் பலநாட்கள் மரத்தடியில் நடக்கும். இவரின் சமூக சேவையைப் பாராட்டிய ஒரு பத்திரிக்கையில் இவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதைப் பற்றியும் எழுதியிருந்ததை படித்து மிகவும் வருந்தினேன். பின்னர் கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை இவரை பேருந்தில் பார்த்து பேசியிருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பில்

இவ்வகுப்பில் நான் தான் கிளாஸ் லீடர். மற்றும் SCHOOL PUPIL LEADER. மொத்த பள்ளியையும் பிரார்த்தனை கூடத்திற்கு அழைத்து வரவும் அவர்களை ஒழுங்காக நிற்க வைப்பது, ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மணி அடிப்பதும் என ”ஆல் இன் ஆல்” ஆக இருந்தேன். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்போடு சரி என்பதால் வேறு பள்ளிக்கு மாற வேண்டும். நிர்மலா தேவி, கனிதா ஆகியோர் தோழிகள்.

ஆறாம் வகுப்பில்

அதே சாலையில் உள்ள R.K.SHREE RANGAMMAL மேல்நிலைப்பள்ளிக்கு மாறினேன். அப்போது கோவை மாவட்டத்திலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறந்த பள்ளியாக இருந்தது. இங்கு தேர்வெழுதி தான் இடம் கிடைத்தது. அதுவும் 400 பேர் எழுதியதில் நான் முதலிடம். இந்த நேரத்தில்தான் எனக்கு பிடிக்காத ஹிந்தியைப்  படிக்க பிரச்சார் சபாவில் சேர்த்து விட்டார்கள் என் பெற்றோர். (அந்த சோகக் கதையைப்  பற்றி பிறிதொரு பகிர்வில் சொல்கிறேன்) ஆறுமாதத்துக்கு ஒரு பரீட்சை என ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் 6 பரீட்சை எழுதித் தேறினேன்.


ஏழாம் வகுப்பில்

மாணவ மணிகளின் சிறுசேமிப்பான சஞ்சய்காவில் மூன்று வருடம் பொறுப்பான பதவியில் இருந்தேன். மதிய உணவை முடித்துக் கொண்டு கவுண்ட்டரில் அமர வேண்டும். எப்போதுமே படிப்பு படிப்பு என்று இருந்ததாலோ என்னவோ என்னுடைய நட்பு வட்டம் மிகவும் சிறியது. முந்திரிக்கொட்டை, தயிர்சாதம், படிப்ஸ் என்று பல பெயர்களை வாங்கியிருக்கிறேன்.

எட்டாம் வகுப்பில்

வகுப்புகள் நன்றாகவே சென்றது. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை என்னை வழிநடத்தி என்னை செதுக்கிய என் ஆசிரியர்களான  தனலஷ்மி டீச்சர், நடராஜன் சார், சரஸ்வதி டீச்சர், சாந்த சுந்தரி டீச்சர், திருஞானசம்பந்தம் சார், புலவர் இலட்சுமணன் ஐயா, விஜயலஷ்மி டீச்சர், ஞானாம்பாள் டீச்சர் ஆகியோர். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடம் எடுத்திருக்கிறார்கள். கணக்கு ஆசிரியை செல்வி மேடமை நினைத்தால் இப்போதும் அடிவயிற்றை கலக்கி விடும். ஸ்கேலை குறுகலான பக்கமாக பிடித்துக் கொண்டு கையை முட்டி பக்கம் காட்டச் சொல்லி விளாசி விடுவார். போதாக்குறைக்கு பெஞ்ச்சின் மீதும் ஏற வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பில்

இந்த ஆண்டு பள்ளி நேரத்தை ஷிப்ட் முறையாக்கி விட்டார்கள். அதனால் காலை 7.40 முதல் மதியம் 12.30 மணி வரை தான். அதே போல் ஸ்கர்ட்டும் ஷர்ட்டும் போட்டுக் கொண்டிருந்த சீருடையையும் சுடிதாராக மாற்றி இருந்தனர். மதியமே வீட்டுக்கு வந்ததும் ஒரு புது அனுபவமாக அப்போது இருந்தது. ஆனால் எப்போதுமே கணக்கு பரீட்சையென்றாலே எனக்கு தவறாமல் ஜுரம் வந்து விடும். புரிந்து விட்டால் ஜாலியாக நானே விதவிதமாக போட்டு பார்ப்பேன். புரியாமல் போனால் அதோ கதி தான்…

பத்தாம் வகுப்பில்

வகுப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே விழுந்து விழுந்து படிக்க ஆரம்பித்தேன். என் வகுப்பில் ஜோதிமணி என்ற பெண்ணுக்கும் எனக்கும் போட்டியோ போட்டி… ஆரோக்கியமான போட்டி தான். கடைசி மூன்று மாதம் தான் கணக்கிற்கும், அறிவியலுக்கும் டியூஷன். என் டியூசன் ஆசிரியை தான் நான் டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமானவர். கணக்குகளை அருமையாக சொல்லித் தந்து புரிய வைத்தார். ஏதோ என்னால் முடிந்த அளவு மார்க் வாங்கினேன். 500க்கு 437. கணக்கில் 99. அந்த ஒரு மார்க்கும் விடையை எடுத்து எழுதாததால் குறைந்தது. இறுதியிலும் என்னை விட ஒரு மார்க் கூடுதலாக எடுத்து ஜோதிமணி வென்று விட்டாள். இப்படியாக 1997ல் என்னுடைய பத்தாம் வகுப்பை முடித்தேன்.  

இருங்க… இருங்க நம்ம வாழ்க்கை வரலாற்றில் கொஞ்சூண்டு தான் பாக்கி இருக்கு. அதனால அதையும் கேட்டுட்டுப்  போங்க.

பத்தாம் வகுப்பிற்கு பின் D.M.E.  AUTOCAD, சென்னையில் CNC MACHINE TRAINING. பின்பு இரண்டு வருடம் சில இடங்களில் வேலை. இடையில் இந்திய விமானப் படையில் பொறியியல் பிரிவில் சேர்வதற்குக் கூட சில நாட்கள் படித்துக் கொண்டிருந்தேன். டிப்ளமோ தேர்ந்தெடுக்க காரணமே முடித்து விட்டு நேரிடையாக இரண்டாம் ஆண்டு B.E பண்ணலாம் என்று தான். ஆனால் என் அப்பா விடவில்லை. படித்தது போதும் என்று சொல்லிவிட்டார்.  அடுத்து என்ன… திருமணம் செய்து தில்லிக்கு பேக் செய்து அனுப்பி விட்டனர்.

இந்த நினைவலைகளை நானும் நினைவு கூற நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.  

Monday, March 12, 2012

கதம்பம்- 7

அன்றைய தில்லி:-  

[பட உதவி: கூகிள்]


[பட உதவி: கூகிள்]

தினமணியில் வாரா வாரம் ”அன்றைய தில்லி” என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. இதை தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்தேன். இந்தத் தொடரில் 50 வருடங்களுக்கும் மேலாக தில்லியில் வாசம் செய்து கொண்டிருக்கிற மூத்த தமிழர்களின் பேட்டி இடம் பெற்றிருக்கும். இதில் அவர்கள் வேலை வாய்ப்புக்காக தில்லி வந்த நாளிலிருந்து தங்கிய இடங்கள், தில்லியில் இருந்த/கிடைத்த தென்னிந்திய உணவகங்கள்/உணவுகள், ரசித்த கர்நாடக சங்கீத கச்சேரிகள் முதலியவற்றை பகிர்ந்திருந்தனர். அன்றைய தில்லியில் உள்ள குறைவான மக்கள் தொகை, மாசில்லாத காற்று, நெரிசல் இல்லாத போக்குவரத்து, வீட்டில் தாய்மொழியில் பேசும் மக்கள், திருட்டுப்பயம் என்பதே இல்லாதது (கோடையில் வெளியில் கயிற்றுக் கட்டிலில்தான் படுப்பார்களாம், வைரம் அணிந்து சென்றாலும் பயம் இல்லையாம்) போன்றவற்றை பற்றி கூறுயிருந்தனர். இப்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு மேலே கூறியுள்ளவை எல்லாமே இப்போது தலைகீழாய் மாறியுள்ளதை கூறி வருந்தினாலும் யாருக்குமே ஓய்வு பெற்ற பின்னரும் ஊருக்குச் செல்வதில் விருப்பமில்லையாம். தில்லியை அவ்வளவு பிடித்திருக்கிறதாம்.  எனக்குத்தான் பிடிக்கவில்லை…
 

 அங்கே இரண்டரை இங்கே முப்பது!!!!


[பட உதவி: கூகிள்]

மாமியாரிடம் தொலைபேசியில் ஊர்க்கதைகளை  பேசிக் கொண்டிருக்கும் போது அதில் ஒன்றாக   “அம்மா வாழைப்பூ இப்போ 20 லிருந்து 30 ரூபா ஆயிடுத்தும்மா!” என்றேன். ஸ்ரீரங்கத்திலிருந்த அவரோ “இங்கே இரண்டரை ரூபாய்க்கு விற்கும் வாழைப்பூவையே விலை ஜாஸ்தி என்கிறார்கள்” என்றார். தில்லியில் வாழைப்பூ கிடைப்பதே பெரிசு. இதில் விலை ஜாஸ்தி பற்றியெல்லாம் என்ன பேச்சு என்கிறீர்களா. கொஞ்சம் இருங்க. இந்த பூவெல்லாம் தென்னிந்தியாவிலிருந்து வரலை….  குஜராத்திலிருந்துதான் வருகிறது. என்னதான் 30 ரூபாய்க்கு இங்கு விற்றாலும், இதை விளைவித்த விவசாயிக்கு என்ன பெரிதாகக் கிடைத்திருக்கும் என்று தோன்றியது…

ரோஷ்ணி கார்னர்:-


இந்த மாதத்தோடு இந்த ஆண்டுக்கான வகுப்புகள் முடிவடைவதால் ரோஷ்ணியின் வகுப்பில் க்ரூப் போட்டோ எடுத்து அதை எல்லா குழந்தைகளிடமும் கொடுத்து விட்டிருந்தார்கள் பள்ளியில். அதை வீட்டுக்கு எடுத்து வந்ததும் என்னிடம் எல்லா குழந்தைகளின் பெயரையும் சொன்னாள். மாலையில் அப்பா வந்ததும் அவரிடம் ”அப்பா எல்லா பாப்பாவுக்கும் போட்டோ குடுத்தாங்க டீச்சர். எல்லா போட்டோவிலும் நானும் இருக்கறேன் அப்பா” என்றதும் எனக்கும் அவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. என்னே குழந்தையின் வெள்ளந்தியான குணம்… பின்பு அவளிடம் எல்லா போட்டோவும் ஒரு முறை எடுத்ததுதான் பிரிண்ட் மட்டும் நிறைய போட்டுக்கலாம் என்று சொல்லி புரிய வைத்தேன்.
 

தில்லியில் புத்தகக் கண்காட்சியும் பதிவர் சந்திப்பும்:


[பட உதவி: கூகிள்]

தில்லியில் 25.02.2012 முதல் 04.03.2012 வரை உலகப் புத்தகக் கண்காட்சி நடந்தது.  முதல் ஞாயிறன்றே நாங்கள் சென்று வந்தோம்.  அங்கேயே தில்லி தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பும் நடந்தது.  என்னவர் மற்றும் முத்துலெட்சுமி ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதி விட்டதால் கதம்பத்தில் ஒரு பூவாய் மட்டுமே எழுதியிருக்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.
புது தில்லி.

Thursday, March 8, 2012

கல்கியின் ஒற்றை ரோஜா


கல்கி அவர்களின்ஒற்றை ரோஜாபுத்தகத்தை சென்ற வாரம் வாசித்தேன். நான்கு சிறுகதைகள் அடங்கிய சிறிய புத்தகம். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1952 ல் வெளியாகியுள்ளது. நாங்கள் வைத்திருக்கும் புத்தகம் ஆறாம் பதிப்புகல்கியின் ஆசிரியர் திரு கி.ராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் முதல் கதையாக இடம்பெற்றுள்ளஒற்றை ரோஜாதீபாவளி மலரில் பிரசுரமானதெனவும் ”ஏட்டிக்கு போட்டி”  என்ற புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் பிரிந்தெடுக்கப்பட்டு இந்த ஒற்றை ரோஜா நூலில் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவையாவன

1)       தீப்பிடித்த குடிசைகள்
2)       புது ஓவர்சியர்
3)       வஸ்தாது வேணு

முதல் கதை ஒற்றை ரோஜாவில் கதா நாயகன் பாபநாசத்துக்கு சென்று சாகப் போகிறார். எதற்கு? பி. பரீட்சையில் மூன்று முறை தோற்றுவிட்டதால். அங்கு சென்ற பின் மனம் மாறி சென்னைக்கு செல்ல முடிவெடுக்கிறார். ரயில் பயணத்தில் அடுத்த பெட்டியில் உள்ள பெண்ணின் தலையில் இருந்த ஒற்றை ரோஜா அவரை கவர்ந்திழுக்கிறது. அந்த பெண்ணிடம் சென்று பேச நினைக்கிறார். அதற்குள் அந்த பெண்ணைச் சுற்றி ஏதோ மர்மம் இருப்பது தெரிகிறது. ஒருவன் கதாநாயகனின் அருகில் வந்து அமர்ந்து அந்த பெண் வைத்திருக்கும் அந்த ரோஜாவில் தான் தன்னுடைய உயிர் இருப்பதாகச் சொல்லுகிறார். இப்படி மர்மக் கதையாக சென்று இறுதியில் சந்தோஷத்தில் முடிகிறது கதை.

அந்த பெண்ணைப் பற்றிய மர்மம் என்ன? அந்த ரோஜாவில் என்ன தான் இருக்கிறது? கதாநாயகன் என்ன ஆனார்? போன்ற உங்களின் கேள்விகளை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள். மற்ற கதைகளும் நன்றாக உள்ளன. எனக்கு முதல் கதையானஒற்றை ரோஜாவும்கடைசி கதையான வஸ்தாது வேணுவும் மிகவும் பிடித்திருந்தது.

புத்தகத்தை வாங்க:


வானதி பதிப்பகம்
13, தீனதயாளு தெரு
தியாகராய நகர்
சென்னை – 17
விலை – 18 ரூபாய்.மீண்டும் சந்திப்போம்,


ஆதி வெங்கட்.தொடர்புள்ள இடுகைககள்:படித்ததில் பிடித்ததுபுத்தக விமர்சனங்கள்கல்கியின்கமலாவும் சுண்டுவும்
அத்தியாவசியமான வைட்டமின்கள்