Monday, January 23, 2012

பிரயாண அனுபவங்கள்


ஒவ்வொரு பயணத்தின் போதும் நமக்கு விதவிதமான அனுபவமும், நட்புகளும் கிடைக்கும். அப்படிப்பட்ட அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


முதல் அனுபவம்:-

சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் தனியாக எங்கேயும் போக விடமாட்டார்கள். நானும் அப்படியே பழக்கப்பட்டு விட்டேன். பயமும் கூட… அப்படியிருக்க தில்லி இந்தியாவின் தலைநகரம் என்று புத்தகத்தில் படித்ததோடு சரி. மற்றபடி எதுவும் தெரியாது. கனவிலும் நினைத்து பார்த்ததில்லை நான் தில்லியில் குடித்தனம் நடத்துவேன் என்று. ஆயிற்று பத்து வருடங்கள் ஓடி விட்டது. திருமணமாகி இங்கு வந்த பின்பும் கூட எங்கு போவதென்றாலும் கணவரோடு தான்.

ஒரு முறை நான் ஊருக்கு போக வேண்டிய சூழல். கணவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நான் மட்டும் செல்வதென முடிவாயிற்று. பயணச்சீட்டும் இறுதி நேரத்தில் தான் உறுதி செய்யப்பட்டது.  உள்ளூரிலேயே எங்கும் செல்ல மாட்டேன். அப்படியிருக்க தில்லியிலிருந்து கோவை வரை மூன்று நாட்கள் பயணம். எப்படி செல்லப் போகிறேனோ என்று மனது முழுவதும் பயம்.

முதலில் தில்லியிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியை பிடித்தாயிற்று. இதில் என்னுடன் பயணித்தவர்கள் அனைவருமே மறுநாள் பாதி வழியில் உள்ள போபால், நாக்பூர் ஆகிய இடங்களில் இறங்கி விட்டனர். நாக்பூரில் வேறு ஒரு கும்பல் ஏறியது. அதில் எதிர் இருக்கையில் ராணுவத்தில் பணிபுரியும் ஒரு தமிழர் ஏறினார். பயணம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கையில் அதற்கடுத்த நாள் ரயில் சென்னை சென்று சேர வேண்டிய நேரத்தில் மூன்று மணிநேரம் தாமதம். எனக்கோ படபடப்பு. காரணம் 11.00 மணிக்கு கோவை செல்ல வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் வண்டியை பிடிக்க வேண்டும். தாமதமானதால் கவலையாய் இருந்தேன்.

கோவை வண்டியை பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் இருக்கை நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று நிலைமையைச் சொன்னால் அடுத்த ரயிலுக்கு பயணச்சீட்டை மாற்றிக் கொடுப்பார் என்று சொன்னார். எட்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் என்னிடம் அப்போது அலைபேசியும் இல்லை. கணவரிடம் என்னால் புலம்பவும் முடியவில்லை. கணவரின் நண்பர் சென்னையில் இருக்கிறார். அவரிடம் என்னை சென்ட்ரலில் பார்த்து வெஸ்ட் கோஸ்ட் பிடிப்பதற்கு உதவி செய்யும்படி இங்கேயே கணவர் தொலைபேசியில் சொல்லியிருந்தார். அந்த நண்பரும் பாவம் அலுவலகம் செல்லாமல் காத்துக் கொண்டிருப்பாரே… என்ன செய்யப் போகிறேன்… மனது திக்..திக்..என்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் சேர வேண்டிய வண்டி 10.30 மணிக்கு சென்றடைந்தது. ஸ்டேஷன்   வருவதற்கு முன்பாகவே எதிர் இருக்கை நண்பர் என் பெட்டிகளை கதவோரம் கொண்டு வந்து வைத்து, வண்டி நின்றவுடன் முதலில் இறங்கி விடலாம் இல்லையெனில் எல்லோரும் இறங்குவதற்குள் நேரமாகி விடும் என்று உதவி செய்தார். இறங்கியதும் தன் அலைபேசியை என்னிடம் தந்து கணவரின் நண்பர் எங்கிருக்கிறார் என்று விசாரிக்கச் சொன்னார். அப்படி அவர் வரவில்லையென்றால் தனக்கு தூத்துக்குடிக்கு இரவு தான் ரயில் என்றும் அதனால் தான் வந்து ஏற்றி விடுவதாகவும் கூறினார். நண்பரின் அலைபேசிக்கு அழைத்ததும் அவர், தான் வந்து கொண்டிருப்பதாக கூறி என் கண் முன்னே தோன்றினார். எனவே இது வரை எனக்கு உதவி செய்த எதிர் இருக்கை நண்பருக்கு என் நன்றிகளை கூறி விடைபெற்றேன்.

அதன் பின் என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கணவரின் நண்பருடன் சென்றேன். அவரோ "பதட்டப்பட வேண்டாம், கோவை என்பதால் இங்கேயே தான் வண்டி அதனால் நேரமிருக்கிறது. வா சாப்பிட்டு விட்டு வரலாம்" என்றார். நான் இல்லை இல்லை அதெல்லாம் ரயிலில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல….என் பதட்டத்தை புரிந்து கொண்டு " சரி, சரி உன்னை ரயிலில் அமர வைத்து விட்டு நான் உணவு வாங்கி வருகிறேன்" என்று கூறி ரயில் பிளாட்ஃபார்முக்கு வந்து விட்டதால் இருக்கையில் என்னை அமர்த்திவிட்டு அவருடைய அலைபேசியை என்னிடம் கொடுத்து என் கணவரிடம் பேச சொல்லி விட்டு உணவு வாங்கச் சென்றார். 

காலையில் சாப்பிடுவதற்கு சிற்றுண்டியும், மதியத்திற்கான உணவு, தண்ணீர் பாட்டில், பத்திரிக்கைகள். வாங்கிக் கொடுத்தார். நேரமிருந்ததால் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்பு விடைபெற்றுச் சென்றார். ரயில் இரவு கோவையை சென்றடைந்தது. பயணமும் நல்லபடியாக முடிந்தது

தனியாக முதலில் பயணம் செய்த அனுபவம் இது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் சில… பயமும் சற்று குறைந்தது. பிரயாணங்களில் சில பேர் நம்மிடம் தகவல்களை வாங்கிக் கொண்டு அதை தவறாக பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆகையால் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அடுத்தவர் தரும் உணவுப்பொருட்களை வாங்கக் கூடாது.


இது போல் இரண்டாம் அனுபவமும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்….. அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அதுவரை காத்திருங்கள்.


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


31 comments:

 1. வாழ்க்கைக் கல்வி, பயணங்களில் கிடைச்சுருதுங்க. ஆரம்பப் பயணமே அலுக்காம நல்லாப் போச்சே உங்களுக்கு!

  வரும் பயணங்களை வாசிக்கக் காத்திருக்கோம்.

  ReplyDelete
 2. அழகான அவசியமான அனுபவப்பகிர்வு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. நீங்க பயந்தபடியே தனியாக ஒபயணம் செய்தாலும், தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைச்சிருக்கே. அது பெரிய விஷயம் இல்லியா?>

  ReplyDelete
 4. //இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் சில//
  ஆம் ஆதி பயணங்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்று தருகிறது.
  மிகவும் அழகாக தெளிவாக எழுதியிருக்கீங்க.

  தொடருங்க உங்க பயண அனுபவங்களை.

  ReplyDelete
 5. வாங்க டீச்சர்,

  இந்த மாதிரி தனியாக பயணம் செய்ததே எனக்கு ஒரு சாகசம் செய்தது போல் தான் அப்போது தோன்றியது....:)

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 7. //என்னிடம் அப்போது அலைபேசியும் இல்லை. கணவரிடம் என்னால் புலம்பவும் முடியவில்லை. //

  அடே.. நண்பர் வெங்கட் புலம்பலில் இருந்து தப்பி விட்டாரா.. சபாஷ்..
  --------
  எந்த கஷ்டத்திலும், நிதானம் இழக்காமல் பொறுமையா செய்தால் நல்ல விளைவு இருக்கும்.

  ReplyDelete
 8. வாங்க லஷ்மிம்மா,

  அந்த இரு நண்பர்களின் உதவி கிடைத்ததே பெரிய விஷயம் தான்....
  இன்றும், பலர் உதவி கேட்டாலும் செய்வதற்கு யோசிப்பவர்களும் இந்த உலகில் உண்டு.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 9. வாங்க ராம்வி,

  ஒவ்வொரு பயணத்திலுமே பலதரப்பட்ட மனிதர்கள், புதுப் புது விஷயங்கள் என்று சந்திக்கிறோம் தான்.

  ஒரிரு நாட்களில் அடுத்த பயண அனுபவம் வரும்...
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. வாங்க மாதவன்,

  ஆமாங்க. ஆனா செண்டரலில் இருந்து தான் நண்பரின் அலைபேசி மூலம் பேசி புலம்பி விட்டேனே....என்னால் அன்றாடம் நிகழ்வுகளை அவரிடம் சொல்லாமல் இருக்கவே முடியாது....:))

  நிதானத்தை கடைபிடித்தால் எல்லாமே சரியாக நடக்கும் என்று சொல்வது சரியே....

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. பயண அனுபவம் பற்றிய சுவாரஸ்யமான பகிர்வை அறிவுரையுடன் அழகாய் முடிச்சிருக்கீங்க! தொடருங்கள்.

  ReplyDelete
 12. பயணங்களின் போது நமக்குக் கிடைக்கின்ற அனுபவங்களை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது என்பதை மிக அழகாகக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி ஆதி.

  ReplyDelete
 13. நண்பர்கள் உதவியதும் இந்தப் பயண அனுபவப் பாடம்..
  இப்போதும் சென்னை தாண்டி பயணிப்பது என்றால் எனக்கு கொஞ்சம் உள்காய்ச்சல் அடிக்கும்! இக்கட்டான நேரங்களில் அறிமுகமே இராத நண்பர்கள் உதவி இருக்கிறார்கள்.

  ReplyDelete
 14. தெளிவாக எழுதியிருக்கீங்க.

  ReplyDelete
 15. பரவாயில்லை.நல்ல நபர்கள்,இது போல பயணத்தில் மனசாட்சி உடையவர்கள் கிடைப்பது அரிது.

  ReplyDelete
 16. :) அனுபவம் தான்..
  எனக்கு திகில் அனுபவமெல்லாம் இருக்கு.. எழுதியதாகக்கூட நினைவு..

  ReplyDelete
 17. நல்ல அனுபவப் பகிர்வு......... நிறைவு

  ReplyDelete
 18. முதல் பயணப் பதட்டம் எங்களையும் பற்றிக்கொள்ளும்விதம்
  அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. வாங்க சென்னை பித்தன் சார்,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க புவனேஸ்வரி ராமநாதன்,

  என்றுமே மறக்க முடியாத அனுபவங்கள்....முதல் பயணம் அல்லவா...

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க ரிஷபன் சார்,

  நண்பர்களின் உதவி தான் பெரிது....

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 23. வாங்க ஆச்சி,

  மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்கள் மிகவும் அரிது....

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 24. வாங்க முத்துலெட்சுமி,

  உங்க திகில் அனுபவம் படித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. சுட்டி கொடுங்களேன்....

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க ஏ.ஆர்.ஆர் சார்,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க ரமணி சார்,

  நாளை அடுத்த பயணம் வரும்.

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் வாக்குகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. ம‌ன‌தில் ப‌திந்த‌ முத‌ல் அனுப‌வ‌ங்க‌ளை ப‌ல‌கால‌ம் சென்று அசைபோடும்போது அன்றைய‌ உண‌ர்வுக‌ளுக்கே சென்று மீள்வோம். அன்று நினைத்திருக்க‌ மாட்டீர்க‌ள். ச‌கோத‌ர‌ர், பெற்றோர் த‌விர‌ பிற்கால‌த்தில் சொல்லிக்கொள்ள‌ நாங்க‌ளெல்லாம் கிடைப்போம் என்று!தொட‌ர் ந‌ண்ப‌ருக்கும், திடீர் ந‌ண்ப‌ருக்கும் புரையேறியிருக்கும் இன்று!

  ReplyDelete
 28. வாங்க நிலாமகள்,

  இவ்வளவு நண்பர்கள் கிடைப்பார்கள், என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.
  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. முதல் பயணம் தனியான பயணம் தாமதமாகிய பயணம் இருந்தும் உங்களை தயார்படுத்திய விதமும் உதவிய மனிதரும் மறக்க முடியாத பயணம் தான்.

  ReplyDelete
 30. வாங்க சீனு,

  தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…