Pages

Wednesday, January 25, 2012

பிரயாண அனுபவங்கள் – 2

சென்ற பிரயாண அனுபவத்திலிருந்து சற்றே மாறுபட்டு இந்த முறை நானும் அப்பொழுது இரண்டரை வயதான ரோஷ்ணியும் கோவைக்கு தனித்து செல்ல வேண்டிய சூழல். இந்த பயணம் 2007-ல் நடந்தது. இறுதி நேரத்தில் பயணச்சீட்டு வாங்கச் சென்றதால் வழக்கமாக செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியிலோ, அல்லது நேரிடையாக கோவைக்கு செல்லும், கேரளா எக்ஸ்பிரஸ் போன்றவற்றிலோ இடம் கிடைக்காமல் புதிதாக கொங்கு விரைவு வண்டியில் பயணப்பட்டோம்.



அப்பொழுது கிறிஸ்துமஸ் நேரம் ஆகையால் கடுங்குளிராக இருந்தது. இந்த கொங்கு விரைவு வண்டி வேறு வழியாக அதாவது செகந்திராபாத், பெங்களூர், சேலம் வழியாக கோவையை சென்றடையும் என்று தெரிந்தது. சுற்று தான். ஆனால் வேறு வழியில்லை.  காலை தில்லியில் இருந்து புறப்பட்டால் அந்த நாள் முழுவதும், மறு நாள்  முழுவதும் பயணித்து அதற்கடுத்த நாளான மூன்றாம் நாள் காலை 10 மணியளவில் கோவையை சென்றடையும்.

பயணம் ஆரம்பித்தது. எங்களுடன் வந்த அனைவரும் நேபாளிகள். அவர்களது முகமே கண்களுக்கு கீழேயும், முகம்,கை,கால்கள் என சுருக்கத்துடன் வித்தியாசமாக இருந்தனர். அவர்கள் பேசுவதும் வித்தியாசமாக இருந்தது. ரயில் புறப்பட்டு சிறிது நேரம் ஆனவுடன் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே கடவுளை  பிரார்த்தித்தனர்… எப்படித்  தெரியுமா? க்யாங்…க்யாங்…குயாங்… இப்படித்தான் என் காதுகளில் விழுந்தது. ஒரு வித மெட்டுடன் திரும்பத் திரும்ப இதே மாதிரி… எல்லோரும் பெங்களூரில் இறங்கி விடுவார்களாம்.




ரயில் புறப்பட்டது முதல் கோவையை சென்றடையும் வரை ரோஷ்ணி வேறு இப்பவே ரயிலை விட்டு இறங்கு. நாம் அப்பாவை பார்க்கலாம் என்று ஒரே படுத்தல். சமாளிப்பதும், வேறு வகையில் அவள் கவனத்தைத் திருப்பவும் மிகவும் கஷ்டப்பட்டேன். அவள் யாருடனும் சட்டென்று பழகவும் மாட்டாள். என் மடியிலும், என்னிடம் ஒளிந்து கொண்டும் தான் வந்தாள்.

எங்கள் பக்கத்திலேயே சேலம் செல்லும் ஒரு தமிழர் வந்தார். மற்றொருவர் செகந்திராபாத்தில் இறங்கும் ஒரு தெலுங்கர். எங்கள் கோச்சில் உள்ள மற்ற அனைவருமே பெங்களூரில் இறங்கும் நேபாளிகள்.  என்னுடையது மேல் படுக்கை. குழந்தையுடன் ஏறுவதும், படுப்பதும் கடினம் என்பதால், அந்த தமிழர் தன்னுடைய கீழ் இருக்கையை எங்களுக்குத்  தந்தார். அவர் தன்னையும், தன் குடும்பத்தைப் பற்றியும் நிறைய பேசிக் கொண்டேயிருந்தார். நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி அவ்வளவாக பேசவில்லை. எந்த தகவலையும் சொல்லவில்லை. தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வாங்கித் தருமாறு ஒருமுறை சொன்னேன். அடுத்த நாள் மதியம் செகந்திராபாத்தில் அந்த தெலுங்கர் இறங்கி விட்டார்.


இந்த நேபாளிகள் எதுவும் சாப்பிடவேயில்லை. எடுத்துக் கொண்டும் வரவில்லை. ரயிலிலும் வாங்கிக் கொள்ளவில்லை. செகந்திராபாத்தில் சிறிது நேரம் ரயில் நின்றவுடன் சிலர் இறங்கி உளுந்துவடையும், டீயும் மட்டும் வாங்கி சாப்பிட்டனர். எப்படித்தான் சாப்பிடாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை… அன்றைய இரவு 1.30 மணிக்கு ரயில் பெங்களூரை சென்றடைந்த போது நேபாளிகள் அனைவரும் இறங்கி விட்டனர். எங்கள் கோச்சை பார்த்தால் என்னையும் அந்த தமிழரையும் தவிர யாருமேயில்லை. எனக்கோ மனதுக்குள் பயம்…



பெங்களூரை விட்டு ரயில் புறப்பட்டவுடன் அந்த தமிழர் அடுத்த கோச்சுக்கு சென்று அங்கு இடம் ஏதேனும் காலியாக உள்ளதா என்று பார்த்து விட்டு வந்து, அங்கு இரண்டு, மூன்று படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், அங்குள்ளவர்கள் கோவைக்குத்  தான் செல்வதாகவும் சொன்னார். இங்கு தனியாக இருக்க வேண்டாம். நான் உங்க பெட்டிகளை எடுத்து வருகிறேன். நீங்க குழந்தையை தூக்கிக் கொண்டு வாங்க என்றார். எனக்கும் சரியெனப் பட்டது. ஆகையால் தூங்கிக் கொண்டிருந்த ரோஷ்ணியை தூக்கிக் கொண்டு அவரின் பின்னே சென்றேன்.



அங்கிருந்தவர்களிடமும் வேண்டுமானால் நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள் அவர்கள் கோவை வரை செல்கிறார்களா என்று, என்றார். நானும் பயத்துடன் இருந்ததால், இவர் சொல்வதை மட்டும் எப்படி நம்புவது என்று நினைத்து. அங்கு முழித்துக் கொண்டிருந்த சில பெண்மணிகளிடம் விசாரித்து விட்டு ஒரு இருக்கையில் ரோஷ்ணியை படுக்க வைத்து, பெட்டிகளையும், சங்கிலி போட்டு பூட்டி விட்டு படுத்து விட்டேன். அவர் பழைய கோச்சுக்கே சென்று விட்டார்.



மீண்டும் அதிகாலையில் வந்து என்னை எழுப்பி சேலம் வந்து விட்டதாகவும் தான் இறங்கப் போவதாகவும், கோவைக்கு சென்ற பின் தனக்கு தொலைபேசியில் தெரிவிக்குமாறு தன் எண்ணையும் தந்தார். நானும் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்தேன். காலை 7 மணிக்கு மேல் எல்லோரும் எழுந்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம். அங்கிருந்த அனைவருமே பாதி வழியில் ஏறியவர்கள் தான். யாருமே தில்லியிலிருந்து வரவில்லை. என்னைப் பார்த்து எப்படிங்க மூன்று நாள் பிரயாணம் செய்து இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.



ஒரு வழியாக ரயில் கோவையை சென்றடைந்தது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்டது…. யாரையுமே முழுதாக நம்பி விடக்கூடாது. அதே சமயம்  நாம் சந்தேகமாக நினைப்பவர்களும் நமக்கு உதவி செய்வார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. குழந்தைகளை எடுத்து செல்பவர்கள் அவர்களுக்கு தேவையான அளவு உடைகள், மருந்துகள் உணவு ஆகியவற்றை எடுத்து செல்வது நலம்.



கோவை வந்த பின் அந்த நண்பருக்கு தொலைபேசியில் தெரிவித்தேனா என்றால் இல்லை. காரணம் பயம் தான்…



மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

55 comments :

அப்பாவி தங்கமணி said...

Nice travel post Aadhi... reading your posts after sometime... missed reading your simple yet interesting posts...:)

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான அனுபவம்..

Asiya Omar said...

பயண் அனுபவப் பகிர்வு அருமை.
//கோவை வந்த பின் அந்த நண்பருக்கு தொலைபேசியில் தெரிவித்தேனா என்றால் இல்லை. காரணம் பயம் தான்…//
நானும் இப்படி தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.சில நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

துளசி கோபால் said...

ஆஹா.... அவர் இந்த பதிவைப் படிச்சு, நீங்க கோவை சேர்ந்த விஷயத்தைத் தெரிஞ்சுண்டார்:-)))))

இப்படி நம்பிக்கலாம்!!!!

முன் ஜாக்கிரதையா இருக்கணும் என்ற பயம் அடிவயித்தில் எப்பவும் கனமா உக்கார்ந்துருக்குமே!

ரயில் ரயில்ன்னு ஆசைப்பட்டு ஒரு முறை தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸில் சென்னை டு டெல்லி போனதே போதும் போதும்ன்னு ஆகிருச்சு.

Chitra said...

யாரையுமே முழுதாக நம்பி விடக்கூடாது. அதே சமயம் நாம் சந்தேகமாக நினைப்பவர்களும் நமக்கு உதவி செய்வார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. குழந்தைகளை எடுத்து செல்பவர்கள் அவர்களுக்கு தேவையான அளவு உடைகள், மருந்துகள் உணவு ஆகியவற்றை எடுத்து செல்வது நலம்.


...... Good advice.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு நியாயமான சந்தேகங்களுடன் கூடிய பயண அனுபவம் தான். பகிர்வுக்கு நன்றி.

Lakshmi said...

பயண அனுபவம் நல்லா சொல்லி இருக்கீங்க.

அமைதிச்சாரல் said...

என் குழந்தைங்களோட மும்பையிலிருந்து ரயிலில் தனியாப் பயணப்பட்டது நினைவுக்கு வருது :-)

யாரும் எதிரியும் இல்லை, யாரும் நண்பரும் இல்லை. இதுதான் ரயில் பயணங்கள் கத்துக்கொடுக்குது :-)

அமுதா கிருஷ்ணா said...

செம ஜாக்கிரதை தான் நீங்க..நான் லொட லொட என்று பேச ஆரம்பித்து விடுவேன்..

கோவை2தில்லி said...

வாங்க புவனா,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க இராஜராஜேஸ்வரி,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க ஆசியா உமர்,

பயம் தாங்க காரணம்..... நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க டீச்சர்,

தனியாக வேறு போவதால் பயம் எப்பவுமே இருக்குமே....நான் தான் அப்போதே நன்றி சொல்லி விட்டேனே.....

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க சித்ரா,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க லஷ்மிம்மா,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க அமைதிச்சாரல்,

நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை.... இது மிகவும் சரியானது தான்.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

இப்போது பரவாயில்லை. முன்பெல்லாம் கேட்ட கேள்விக்கு பதில். எங்கேயுமே.... :)

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோமதி அரசு said...

நல்ல அனுபவ பயணம் ஆதி.

RAMVI said...

பயண அனுபவத்தை அழகாக எழுதியிருக்கீங்க,ஆதி.

//யாரையுமே முழுதாக நம்பி விடக்கூடாது. அதே சமயம் நாம் சந்தேகமாக நினைப்பவர்களும் நமக்கு உதவி செய்வார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது.//

உண்மை, ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.

angelin said...

பிரயாண அனுபவம் அருமையா எழுதியிருக்கீங்க .
நானும் உங்களை மாதிரிதாங்க செய்திருப்பேன் .நிச்சயம் போன பண்ணிருக்க
மாட்டேன் .எல்லா மனிதரும் தீயார் இல்லை சில நல்லவங்களும் இருக்காங்க .

Ramani said...

இரண்டாவது பயணப் பதிவும் அருமை
நீங்கள் சொல்லிச் செல்லும் விதமும் முடிவாக கொடுக்கிற
அனுபவப் பூர்வமான கருத்தும் பயனுள்ளதாக உள்ளது
பின்தொடர்பவர்கள் நூறு பேரைப் பெற்றமைக்கும்
அருமையான பகிர்வுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ramani said...

Tha.ma 5

Madhavan Srinivasagopalan said...

அட.. அந்தப் பெண்மணி நீங்கதான..
சொன்னாரு என்னோட பிரண்டு..
ஹெல்ப் பண்ணேன்.. பத்திரமா போனதுக்கு பொன் பண்ணுங்கனு சொன்னனே..
ஆனா பண்ணலியே.. பத்திரமா போயிருப்பாங்களோ தெரியலையே..!

--- சும்மா.. என்னோட கற்பனை..

சிநேகிதி said...

பயண அனுபவப் பகிர்வு அருமை.

A.R.ராஜகோபாலன் said...

”””ஆஹா.... அவர் இந்த பதிவைப் படிச்சு, நீங்க கோவை சேர்ந்த விஷயத்தைத் தெரிஞ்சுண்டார்:-)))))

இப்படி நம்பிக்கலாம்!!!!”””

நான் சொல்ல நினைத்ததையே துளசி மேடம் முன்னமே சொல்லிட்டாங்க...........

யாரையும் நம்பாதிருப்பதும் தவறு
யாரையும் நம்புவதும் தவறு.......

கத்தி மேலையும் கயத்து மேலையும் நடக்கற மாதிரித்தான்.

ரிஷபன் said...

உங்களுக்கு நேர் ஆப்போசிட் நான்.. என் கூட பயணம் பண்ணா அவங்கதான் என்னைப் பத்தி பயப்படணும்! லொட லொடன்னு பேசிகிட்டே வருவேன்.. மிகைப்படுத்தாமல் உண்மை அனுபவங்களைப் பகிர்தல் சுவையாய் இருக்கு

ஹுஸைனம்மா said...

ம், இதே போலத்தான் நானும் நடந்திருப்பேன். ஆனாலும், வந்து சேர்ந்ததும் அந்தத் தமிழ் நண்பரை தொலைபேசியில் என்னவரை விட்டு அழைத்து நன்றி சொல்லியிருப்பேன். :-))))

ஆனாலும், ரெயில்ல மூணு நாள் பயணம்லாம் எப்படிங்க பண்றீங்க - அதுவும் குழந்தையோட? நினைச்சாலே கலவரமாகுது!! ரெயில் சுத்தம் அப்படி நினைக்க வைக்குது. அதுவும் குளிரை எப்படிச் சமாளிச்சீங்க?

Kanchana Radhakrishnan said...

பயண அனுபவத்தை அழகாக எழுதியிருக்கீங்க,ஆதி.

Jaleela Kamal said...

இப்போதைக்கும் இந்த பதிவ இன்ன்னும் படிக்கல. பிறகு வரேன்....

அப்படியே ஒரு எட்டு என் பக்கம் வந்து போங்க

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமையாக இருந்தது..ரயில்ல பக்கத்து சீட் காரர் பிஸ்கெட் கொடுப்பாரோன்னு பயந்தேன்..

நிலாமகள் said...

அட‌... நேபாளிப் பாட்டியின் முக‌ச் சாய‌ல் 100 வ‌ய‌சு தாண்டி இருந்த‌ எங்க‌ அம்மாவைப் பெற்ற‌ பாட்டி நினைவைக் கிள‌றி விட்ட‌தே...

ச‌கோத‌ர‌ரிட‌ம் அந்த‌ ம‌னித‌ரின் எண்ணைக் கொடுத்து பேச‌ச் சொல்லியிருக்க‌லாமென‌த் தோன்றுகிற‌து. ச‌ந்தோஷ‌த்தில் இன்னும் நாலு பேருக்கு உற்சாக‌மாக‌ த‌ன் சுபாவ‌ப்ப‌டி உத‌வியிருப்பார‌ல்ல‌வா... இப்ப‌ய‌ண‌ப் ப‌திவுக‌ளெழுதுகையில் உள்ம‌ன‌ம் அவ‌ர்க‌ளுக்கான‌ ந‌ன்றியை ச‌ம‌ர்ப்பித்த‌ப‌டித்தான் இருந்திருக்கும் இல்லையா...

sakthi said...

நல்ல பகிர்வுங்க ,கோவைகாரர சந்திஜதில சந்தோசமுங்க !

நட்புடன் ,
கோவை சக்தி

http://kovaisakthi.blogspot.com/

கோவை2தில்லி said...

வாங்க கோமதிம்மா,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க ரமா,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க ஏஞ்சலின்,

பயம் தாங்க காரணம்.... அவருக்கு தகவல் சொல்லவில்லையே என்ற சிறு உறுத்தல் இன்றும் இருப்பதால் தான்... இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டேன்.

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க ரமணி சார்,

தங்களின் வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும், வாக்குகளுக்கும் நன்றி சார்.

கோவை2தில்லி said...

வாங்க மாதவன்,

கற்பனை ரொம்ப நல்லாயிருக்கு... அப்படியே அந்த கற்பனையிலயே அவருக்கு நான் நன்றிகளை தெரிவித்ததாக சொல்லிடுங்க... :))

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.

கோவை2தில்லி said...

வாங்க சிநேகிதி,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க ஏ.ஆர்.ராஜகோபாலன் சார்,

//கத்தி மேலையும் கயத்து மேலையும் நடக்கற மாதிரித்தான்.//

நீங்க சொல்வது சரி தான்...

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க ரிஷபன் சார்,

சிறுவயதிலிருந்தே எப்பவுமே வீட்டிலேயே கூட அவசியமிருந்தால் மட்டுமே பேசுவேன்... திருமணமான பிறகு புகுந்த வீட்டிலும், கணவரும் எவ்வளவோ சொல்லி இப்போ பேசுகிறேன்...

ஆனாலும் புது இடங்களில் கப் சிப் தான்....:)))

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க ஹுசைனம்மா,

நீங்க சொல்லியிருப்பது போல் கணவரிடம் சொல்லி பேச சொல்லியிருக்கலாம்... ஆனால் நான் ஊருக்கு சென்றவுடன் அங்கிருந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் எனக்கு இது தோணவில்லை... அது என்ன சந்தர்ப்பம் என்று பிறகு சொல்கிறேன்...

குளிர் அன்று மட்டுமே கடுமையாக இருந்தது. பாதி வழி தாண்டியதும் குறைந்து விட்டது. வடமாநிலங்கள் அளவுக்கு அங்கு இல்லை...

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க ஜலீலாக்கா,

பொறுமையாக வந்து படிங்க... அவசரம் இல்லை...
உங்க பக்கம் வருகிறேன்..

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க ஆர்.ஆர்.ஆர் சார்,

சென்ற பயண அனுபவத்திலேயே எழுதியுள்ளேன் சார்.. அடுத்தவர் கொடுக்கும் உணவுப் பொருட்களை வாங்கக்கூடாது என்று....

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

கோவை2தில்லி said...

வாங்க நிலாமகள்,

அட! 100 வயசு தாண்டி இருந்த உங்க பாட்டியை நினைவுபடுத்தியதா....

அந்த நபர் செய்த உதவிக்கு அப்போதே என் நன்றிகளை தெரிவித்த நான் தொலைபேசியில் சென்று சேர்ந்த விவரத்தை தெரிவிக்க ஏனோ பயமாக இருந்தது. கணவரிடம் சொல்லி பேசவும் முடியவில்லை. இந்த பதிவிடுகையில் உள்மனதில் என் நன்றிகளை தெரிவித்து கொண்டு தான் இருந்தேன்...

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

வாங்க சக்தி,

தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

கோவை2தில்லி said...

ஊருக்கு சென்ற பின் எனக்கு எதுவுமே மனதில் தோன்றவில்லை. காரணம்...
நான் ஊருக்கு சென்றதே உடல் நிலை மோசமாகி தன் வாழ்வின் இறுதி நாட்களில் இருந்த என் அப்பாவை கவனித்து கொள்வதற்காக தான்....

13 நாட்கள் அப்பாவுக்கு என்னால் பணி விடைகள் செய்ய முடிந்தது...

கோவை2தில்லி said...

13 நாட்கள் கழிந்து 14-ஆவது நாள் என் அப்பா இறைவனடி சேர்ந்தார்....

thirumathi bs sridhar said...

இந்தப் பதிவும் சுவாரஸ்யம்.

//13 நாட்கள் கழிந்து 14-ஆவது நாள் என் அப்பா இறைவனடி சேர்ந்தார்//

வருந்தினேன்.

Porkodi (பொற்கொடி) said...

ஆதி! நீங்க எழுதற அழகே அழகு.. சோ ஸ்வீட்! நல்ல அனுபவம் 3 நாள் ரயில் பயணம்.. இந்த பயணம் அப்பாவுக்காக இருந்திருக்கு, உங்க மத்த பயணங்கள் பத்தியும் எழுதுங்க!

கோவை2தில்லி said...

வாங்க ஆச்சி,

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

கோவை2தில்லி said...

வாங்க பொற்கொடி,

சின்னச் சின்ன பிரயாண அனுபவங்கள் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்...

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

சீனு said...

// க்யாங்…க்யாங்…குயாங்… இப்படித்தான் என் காதுகளில் விழுந்தது // ஹா ஹா ஹா

பயன்களில் மனிதர்களை நம்புவது கடினம் தான். இருந்தும் ஒவ்வொரு பயணங்களும் நமக்கு புதிய உலகத்துக்கான வழியைத் திறந்து விடுகின்றன.

உங்கள் எழுத்து நடை சலிப்பு தட்டாமல் செல்கிறது வாழ்த்துக்கள்

கோவை2தில்லி said...

வாங்க சீனு,

தங்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் நன்றிங்க.

Post a Comment

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…