Monday, January 30, 2012

கரப்பான் பூச்சிக் கொல்லியும் அதனால் விளைந்த ஆபத்தும்
கரப்பான் பூச்சியை பார்த்தவுடன் அலறி பூச்சிக் கொல்லி மருந்தினைத் தெளிக்கும் உபகரணத்தினை கையில் எடுப்பவரா நீங்கள்? அப்படியென்றால்  உங்களுக்குத் தான் இந்த செய்தி.

சொல்லப்போகும் பயங்கர தகவலுக்கு முன்னால் மனதைக் கொஞ்சம் சந்தோஷப் படுத்திக் கொள்வோம் – ஒரு கரப்பான் பூச்சி பற்றிய நகைச்சுவையைப் படித்து.

இரண்டு கரப்பான்பூச்சிகள் ஐ.சி.யூவில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தனவாம்.  அவற்றுக்கிடையே நடந்த சம்பாஷனை:.

க.பூ – 1:  உன்னை யாரு அடிச்சா?

 க.பூ – 2: அட அடிக்கல்லாம் இல்லை – என்னைப் பார்த்தவுடன் ஒரு அம்மணி போட்ட காட்டுக் கூச்சல்ல எனக்கு மாரடைப்பு வந்து இங்கே அட்மிட் பண்ணிட்டாங்க!


சரி விஷயத்துக்கு வருகிறேன்.  சமீபத்தில் புனே நகரத்தில் ஒரு பெண்மணி கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது பாத்திரம் கழுவுவதற்காக  Sink பக்கம் போனவர் அங்கே கரப்பான் பூச்சியைப் பார்த்தவுடன் அலறியடித்து கீழே வைத்திருந்த கரப்பான்பூச்சிக் கொல்லியை எடுத்து அதன் மேல் Spray செய்ய, அது ஓட, தொடர்ந்து அதன் மேல்  ஸ்ப்ரே செய்திருக்கிறார். பக்கத்தில்  எரிந்து கொண்டு இருந்த கேஸ் அடுப்பு ஜுவாலையில்  இந்த ஸ்ப்ரே பட்டதும் "டமால்" என்ற  பெரிய சப்தத்துடன் வெடித்து, சில நொடிகளில் அந்தப் பெண்மணியின் உடல் முழுவதும் தீப்பற்றிக் கொண்டது.  

வீட்டின் உள்ளே இருந்த கணவர்  உடனே வந்து தீயை அணைக்க முற்பட, அவருக்கும் தீக்காயங்கள்.  அக்காயங்களுடன் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட, கணவர் இன்னமும் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டு இருக்கிறார் – தன் மனைவி இறந்தது கூடத்  தெரியாமல்.

பெரும்பாலான கரப்பான் கொல்லிகளில் இருப்பவை எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை.  அதனால் அவைகளை  சமையல் அறையிலோ, தீ இருக்கும்  இடங்களிலோ நிச்சயம் பயன்படுத்தக் கூடாது.   அவைகளில் அச்சிடப்பட்டிருக்கும் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டிய வழிமுறைகளை கவனமாகப்  படித்து அதன்படி நடக்க வேண்டும்.  அப்படி நடந்துகொண்டிருந்தால் இந்த விபத்தினை நிச்சயம் தடுத்திருக்க முடியும்.

கரப்பினைக்  கண்டு அலற வேண்டாம்.  அப்படியே ஹிட், மார்ட்டீன் போன்றவற்றை உபயோகிக்க வேண்டுமெனில் முதலில் கேஸ் அடுப்பினை அனைத்திருக்கிறதா எனப் பார்த்த பின்னரே உபயோகியுங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

ஆதி வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  கரப்பு தவிர பல்லி, பூரான், எலி – அதுவும் இந்த சுண்டெலி, போன்ற எல்லாமே எனக்கு எதிரிகள் தான். வருகிறார்கள் எனத் தெரிந்தாலே புறமுதுகு காட்டி ஓடிவிடுவேன்.  கரப்பு மட்டும் என்னவோ, சுலபமாக அடித்து விடுவேன். :)

பட உதவி:  கூகிள்.

Wednesday, January 25, 2012

பிரயாண அனுபவங்கள் – 2

சென்ற பிரயாண அனுபவத்திலிருந்து சற்றே மாறுபட்டு இந்த முறை நானும் அப்பொழுது இரண்டரை வயதான ரோஷ்ணியும் கோவைக்கு தனித்து செல்ல வேண்டிய சூழல். இந்த பயணம் 2007-ல் நடந்தது. இறுதி நேரத்தில் பயணச்சீட்டு வாங்கச் சென்றதால் வழக்கமாக செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியிலோ, அல்லது நேரிடையாக கோவைக்கு செல்லும், கேரளா எக்ஸ்பிரஸ் போன்றவற்றிலோ இடம் கிடைக்காமல் புதிதாக கொங்கு விரைவு வண்டியில் பயணப்பட்டோம்.அப்பொழுது கிறிஸ்துமஸ் நேரம் ஆகையால் கடுங்குளிராக இருந்தது. இந்த கொங்கு விரைவு வண்டி வேறு வழியாக அதாவது செகந்திராபாத், பெங்களூர், சேலம் வழியாக கோவையை சென்றடையும் என்று தெரிந்தது. சுற்று தான். ஆனால் வேறு வழியில்லை.  காலை தில்லியில் இருந்து புறப்பட்டால் அந்த நாள் முழுவதும், மறு நாள்  முழுவதும் பயணித்து அதற்கடுத்த நாளான மூன்றாம் நாள் காலை 10 மணியளவில் கோவையை சென்றடையும்.

பயணம் ஆரம்பித்தது. எங்களுடன் வந்த அனைவரும் நேபாளிகள். அவர்களது முகமே கண்களுக்கு கீழேயும், முகம்,கை,கால்கள் என சுருக்கத்துடன் வித்தியாசமாக இருந்தனர். அவர்கள் பேசுவதும் வித்தியாசமாக இருந்தது. ரயில் புறப்பட்டு சிறிது நேரம் ஆனவுடன் அவர்கள் அமர்ந்த இடத்திலேயே கடவுளை  பிரார்த்தித்தனர்… எப்படித்  தெரியுமா? க்யாங்…க்யாங்…குயாங்… இப்படித்தான் என் காதுகளில் விழுந்தது. ஒரு வித மெட்டுடன் திரும்பத் திரும்ப இதே மாதிரி… எல்லோரும் பெங்களூரில் இறங்கி விடுவார்களாம்.
ரயில் புறப்பட்டது முதல் கோவையை சென்றடையும் வரை ரோஷ்ணி வேறு இப்பவே ரயிலை விட்டு இறங்கு. நாம் அப்பாவை பார்க்கலாம் என்று ஒரே படுத்தல். சமாளிப்பதும், வேறு வகையில் அவள் கவனத்தைத் திருப்பவும் மிகவும் கஷ்டப்பட்டேன். அவள் யாருடனும் சட்டென்று பழகவும் மாட்டாள். என் மடியிலும், என்னிடம் ஒளிந்து கொண்டும் தான் வந்தாள்.

எங்கள் பக்கத்திலேயே சேலம் செல்லும் ஒரு தமிழர் வந்தார். மற்றொருவர் செகந்திராபாத்தில் இறங்கும் ஒரு தெலுங்கர். எங்கள் கோச்சில் உள்ள மற்ற அனைவருமே பெங்களூரில் இறங்கும் நேபாளிகள்.  என்னுடையது மேல் படுக்கை. குழந்தையுடன் ஏறுவதும், படுப்பதும் கடினம் என்பதால், அந்த தமிழர் தன்னுடைய கீழ் இருக்கையை எங்களுக்குத்  தந்தார். அவர் தன்னையும், தன் குடும்பத்தைப் பற்றியும் நிறைய பேசிக் கொண்டேயிருந்தார். நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க எண்ணி அவ்வளவாக பேசவில்லை. எந்த தகவலையும் சொல்லவில்லை. தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வாங்கித் தருமாறு ஒருமுறை சொன்னேன். அடுத்த நாள் மதியம் செகந்திராபாத்தில் அந்த தெலுங்கர் இறங்கி விட்டார்.


இந்த நேபாளிகள் எதுவும் சாப்பிடவேயில்லை. எடுத்துக் கொண்டும் வரவில்லை. ரயிலிலும் வாங்கிக் கொள்ளவில்லை. செகந்திராபாத்தில் சிறிது நேரம் ரயில் நின்றவுடன் சிலர் இறங்கி உளுந்துவடையும், டீயும் மட்டும் வாங்கி சாப்பிட்டனர். எப்படித்தான் சாப்பிடாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை… அன்றைய இரவு 1.30 மணிக்கு ரயில் பெங்களூரை சென்றடைந்த போது நேபாளிகள் அனைவரும் இறங்கி விட்டனர். எங்கள் கோச்சை பார்த்தால் என்னையும் அந்த தமிழரையும் தவிர யாருமேயில்லை. எனக்கோ மனதுக்குள் பயம்…பெங்களூரை விட்டு ரயில் புறப்பட்டவுடன் அந்த தமிழர் அடுத்த கோச்சுக்கு சென்று அங்கு இடம் ஏதேனும் காலியாக உள்ளதா என்று பார்த்து விட்டு வந்து, அங்கு இரண்டு, மூன்று படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், அங்குள்ளவர்கள் கோவைக்குத்  தான் செல்வதாகவும் சொன்னார். இங்கு தனியாக இருக்க வேண்டாம். நான் உங்க பெட்டிகளை எடுத்து வருகிறேன். நீங்க குழந்தையை தூக்கிக் கொண்டு வாங்க என்றார். எனக்கும் சரியெனப் பட்டது. ஆகையால் தூங்கிக் கொண்டிருந்த ரோஷ்ணியை தூக்கிக் கொண்டு அவரின் பின்னே சென்றேன்.அங்கிருந்தவர்களிடமும் வேண்டுமானால் நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள் அவர்கள் கோவை வரை செல்கிறார்களா என்று, என்றார். நானும் பயத்துடன் இருந்ததால், இவர் சொல்வதை மட்டும் எப்படி நம்புவது என்று நினைத்து. அங்கு முழித்துக் கொண்டிருந்த சில பெண்மணிகளிடம் விசாரித்து விட்டு ஒரு இருக்கையில் ரோஷ்ணியை படுக்க வைத்து, பெட்டிகளையும், சங்கிலி போட்டு பூட்டி விட்டு படுத்து விட்டேன். அவர் பழைய கோச்சுக்கே சென்று விட்டார்.மீண்டும் அதிகாலையில் வந்து என்னை எழுப்பி சேலம் வந்து விட்டதாகவும் தான் இறங்கப் போவதாகவும், கோவைக்கு சென்ற பின் தனக்கு தொலைபேசியில் தெரிவிக்குமாறு தன் எண்ணையும் தந்தார். நானும் அவருக்கு என் நன்றிகளை தெரிவித்தேன். காலை 7 மணிக்கு மேல் எல்லோரும் எழுந்து கொள்ள ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தோம். அங்கிருந்த அனைவருமே பாதி வழியில் ஏறியவர்கள் தான். யாருமே தில்லியிலிருந்து வரவில்லை. என்னைப் பார்த்து எப்படிங்க மூன்று நாள் பிரயாணம் செய்து இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு வழியாக ரயில் கோவையை சென்றடைந்தது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்டது…. யாரையுமே முழுதாக நம்பி விடக்கூடாது. அதே சமயம்  நாம் சந்தேகமாக நினைப்பவர்களும் நமக்கு உதவி செய்வார்கள். ஆகவே ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. குழந்தைகளை எடுத்து செல்பவர்கள் அவர்களுக்கு தேவையான அளவு உடைகள், மருந்துகள் உணவு ஆகியவற்றை எடுத்து செல்வது நலம்.கோவை வந்த பின் அந்த நண்பருக்கு தொலைபேசியில் தெரிவித்தேனா என்றால் இல்லை. காரணம் பயம் தான்…மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday, January 23, 2012

பிரயாண அனுபவங்கள்


ஒவ்வொரு பயணத்தின் போதும் நமக்கு விதவிதமான அனுபவமும், நட்புகளும் கிடைக்கும். அப்படிப்பட்ட அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.


முதல் அனுபவம்:-

சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் தனியாக எங்கேயும் போக விடமாட்டார்கள். நானும் அப்படியே பழக்கப்பட்டு விட்டேன். பயமும் கூட… அப்படியிருக்க தில்லி இந்தியாவின் தலைநகரம் என்று புத்தகத்தில் படித்ததோடு சரி. மற்றபடி எதுவும் தெரியாது. கனவிலும் நினைத்து பார்த்ததில்லை நான் தில்லியில் குடித்தனம் நடத்துவேன் என்று. ஆயிற்று பத்து வருடங்கள் ஓடி விட்டது. திருமணமாகி இங்கு வந்த பின்பும் கூட எங்கு போவதென்றாலும் கணவரோடு தான்.

ஒரு முறை நான் ஊருக்கு போக வேண்டிய சூழல். கணவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. ஆகவே நான் மட்டும் செல்வதென முடிவாயிற்று. பயணச்சீட்டும் இறுதி நேரத்தில் தான் உறுதி செய்யப்பட்டது.  உள்ளூரிலேயே எங்கும் செல்ல மாட்டேன். அப்படியிருக்க தில்லியிலிருந்து கோவை வரை மூன்று நாட்கள் பயணம். எப்படி செல்லப் போகிறேனோ என்று மனது முழுவதும் பயம்.

முதலில் தில்லியிலிருந்து சென்னை செல்லும் தமிழ்நாடு விரைவு வண்டியை பிடித்தாயிற்று. இதில் என்னுடன் பயணித்தவர்கள் அனைவருமே மறுநாள் பாதி வழியில் உள்ள போபால், நாக்பூர் ஆகிய இடங்களில் இறங்கி விட்டனர். நாக்பூரில் வேறு ஒரு கும்பல் ஏறியது. அதில் எதிர் இருக்கையில் ராணுவத்தில் பணிபுரியும் ஒரு தமிழர் ஏறினார். பயணம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கையில் அதற்கடுத்த நாள் ரயில் சென்னை சென்று சேர வேண்டிய நேரத்தில் மூன்று மணிநேரம் தாமதம். எனக்கோ படபடப்பு. காரணம் 11.00 மணிக்கு கோவை செல்ல வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் வண்டியை பிடிக்க வேண்டும். தாமதமானதால் கவலையாய் இருந்தேன்.

கோவை வண்டியை பிடிக்க முடியாமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்று எதிர் இருக்கை நண்பரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று நிலைமையைச் சொன்னால் அடுத்த ரயிலுக்கு பயணச்சீட்டை மாற்றிக் கொடுப்பார் என்று சொன்னார். எட்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் என்னிடம் அப்போது அலைபேசியும் இல்லை. கணவரிடம் என்னால் புலம்பவும் முடியவில்லை. கணவரின் நண்பர் சென்னையில் இருக்கிறார். அவரிடம் என்னை சென்ட்ரலில் பார்த்து வெஸ்ட் கோஸ்ட் பிடிப்பதற்கு உதவி செய்யும்படி இங்கேயே கணவர் தொலைபேசியில் சொல்லியிருந்தார். அந்த நண்பரும் பாவம் அலுவலகம் செல்லாமல் காத்துக் கொண்டிருப்பாரே… என்ன செய்யப் போகிறேன்… மனது திக்..திக்..என்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் சேர வேண்டிய வண்டி 10.30 மணிக்கு சென்றடைந்தது. ஸ்டேஷன்   வருவதற்கு முன்பாகவே எதிர் இருக்கை நண்பர் என் பெட்டிகளை கதவோரம் கொண்டு வந்து வைத்து, வண்டி நின்றவுடன் முதலில் இறங்கி விடலாம் இல்லையெனில் எல்லோரும் இறங்குவதற்குள் நேரமாகி விடும் என்று உதவி செய்தார். இறங்கியதும் தன் அலைபேசியை என்னிடம் தந்து கணவரின் நண்பர் எங்கிருக்கிறார் என்று விசாரிக்கச் சொன்னார். அப்படி அவர் வரவில்லையென்றால் தனக்கு தூத்துக்குடிக்கு இரவு தான் ரயில் என்றும் அதனால் தான் வந்து ஏற்றி விடுவதாகவும் கூறினார். நண்பரின் அலைபேசிக்கு அழைத்ததும் அவர், தான் வந்து கொண்டிருப்பதாக கூறி என் கண் முன்னே தோன்றினார். எனவே இது வரை எனக்கு உதவி செய்த எதிர் இருக்கை நண்பருக்கு என் நன்றிகளை கூறி விடைபெற்றேன்.

அதன் பின் என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கணவரின் நண்பருடன் சென்றேன். அவரோ "பதட்டப்பட வேண்டாம், கோவை என்பதால் இங்கேயே தான் வண்டி அதனால் நேரமிருக்கிறது. வா சாப்பிட்டு விட்டு வரலாம்" என்றார். நான் இல்லை இல்லை அதெல்லாம் ரயிலில் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல….என் பதட்டத்தை புரிந்து கொண்டு " சரி, சரி உன்னை ரயிலில் அமர வைத்து விட்டு நான் உணவு வாங்கி வருகிறேன்" என்று கூறி ரயில் பிளாட்ஃபார்முக்கு வந்து விட்டதால் இருக்கையில் என்னை அமர்த்திவிட்டு அவருடைய அலைபேசியை என்னிடம் கொடுத்து என் கணவரிடம் பேச சொல்லி விட்டு உணவு வாங்கச் சென்றார். 

காலையில் சாப்பிடுவதற்கு சிற்றுண்டியும், மதியத்திற்கான உணவு, தண்ணீர் பாட்டில், பத்திரிக்கைகள். வாங்கிக் கொடுத்தார். நேரமிருந்ததால் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பின்பு விடைபெற்றுச் சென்றார். ரயில் இரவு கோவையை சென்றடைந்தது. பயணமும் நல்லபடியாக முடிந்தது

தனியாக முதலில் பயணம் செய்த அனுபவம் இது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட விஷயங்கள் சில… பயமும் சற்று குறைந்தது. பிரயாணங்களில் சில பேர் நம்மிடம் தகவல்களை வாங்கிக் கொண்டு அதை தவறாக பயன்படுத்துபவர்களும் உண்டு. ஆகையால் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அடுத்தவர் தரும் உணவுப்பொருட்களை வாங்கக் கூடாது.


இது போல் இரண்டாம் அனுபவமும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்….. அது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அதுவரை காத்திருங்கள்.


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Sunday, January 8, 2012

கதம்பம் – 6

இந்த முறை கதம்பத்தில் சில சுவாரசியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

சட்டுன்னு ஒரு கல்யாணம்:-


வீட்டின் பின் பக்கத்தில் மரங்களின் நடுவில் யாருமே உபயோகப்படுத்தாத இடம் இருந்தது. சென்ற வாரம் ஒருநாள் காலையில் சில கம்பங்களை நட்டு பந்தல் போட்டு இருக்கைகளை கொண்டு வந்து வைத்தனர். சமையல் செய்வதற்காக சிறிது இடத்தை ஒதுக்கி அங்கு பெரிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வந்து வைத்து சப்பாத்தி இட்டு, பூரி பொரித்து உருளைக்கிழங்கை வேக வைத்து என்று ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் இனிப்புகள் தயாரிப்பு பணி என விதவிதமான வாசனைகள் வந்தன. பந்தல் போட்ட இடத்தில் அரண்மனை போல தூணெல்லாம் வைத்து பிரமாண்டமான அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலமும், பேண்ட் வாத்தியங்களும், நடனங்களும் நடைபெற்று  உணவும் பரிமாறப்பட்டது. திருமணமும் நடந்தேறி மறுநாள் பந்தலையும் பிரித்தெடுத்துச் சென்றுவிட்டார்கள். நேற்று பிரமாண்டமான இடமாக இருந்ததே அதுவா இது என ஆச்சரியப்பட வைத்தது. நம்ம ஊரில் ஒரு கல்யாணம் நடத்த எத்தனை முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மண்டபம் காலியாக இருக்கும் நாளில் தான் திருமணத்தையே வைக்க வேண்டும்… இங்கோ!

அழகோவியம்……நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர்களின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளுக்கு சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வமாம். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறாள். ரோஷ்ணியை பத்தே நிமிடத்தில் வரைந்து கொடுத்து விட்டாள். வெறும் பென்சில் மட்டுமே பயன்படுத்தி இந்த அழகோவியத்தினை வரைந்தது விட்டாள்.

ரோஷ்ணி கார்னர்:


ரோஷ்ணி ஒருநாள் பேசும் போது "அம்மா தாத்தா, பாட்டி சென்ற முறை ஊரிலிருந்து வந்த போது போலியோ சொட்டு மருந்து சாப்பிட்டு வந்தா" என்றாள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா பாட்டிக்கெல்லாம் சொட்டு மருந்து கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னேன். "இல்லம்மா! தாத்தா பாட்டி கைகளில் நான் குழந்தையாக இருந்த போது மருந்து குடித்தவுடன் கை விரலில் பேனாவால் மார்க் பண்ணுவாங்கல்ல அந்த மாதிரி மார்க் பண்ணி இருந்தது!" என்றாள். அதற்கு பிறகு தான் விஷயம் என்னவென்றே எங்களுக்குப் புரிந்தது….

சென்ற முறை அவர்கள் வருவதற்கு முன்பு தான் தேர்தல்  நடந்திருந்தது. ஓட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைத்திருந்ததை தான் அவள் அப்படி புரிந்து கொண்டிருக்கிறாள் என்று.

என்ற ஊருங்கோ!

ஆனந்த வாசிப்பு பத்மநாபன் அவர்கள் அவரது முகப்புத்தகத்தில் என் சொந்த ஊரான கோவையைப் பற்றிய ஒரு காணொளியை பகிர்ந்திருந்தார்.  மிகவும் நன்றாக இருந்தது [சொந்த ஊர் பற்றிய பாட்டு என்பதால் சொல்லவில்லை!].  பாட்டின் நடுவே 7-ஆம் நம்பர் பஸ் என்று வந்தவுடன் ‘எனக்கு மட்டும் காணொளி உள்ளே செல்லும் திறன் இருந்தால், உள்ளே புகுந்து ஒரு ஆட்டமே போட்டுவிடுவேன்” எனத் தோன்றியது.  காணொளியை நீங்களும் ரசியுங்களேன்….
Wall Hanging!

உபயோகப்படுத்த முடியாத குறுந்தகடுகள் நம்மிடம் இருந்தால் அவற்றினை வைத்து இப்படி அலங்காரப் பொருளாகச் செய்யலாம்.  சில தகடுகளை வைத்து நான் செய்த ஒரு Wall Hanging கீழே…..மீண்டும் சந்திப்போம்

நட்புடன்


ஆதி வெங்கட்.