Monday, December 10, 2012

கரைமேட்டுக் குறிஞ்சி


நெய்வேலி எழுத்தாளர்களின் சிறுகதைத்  தொகுப்பான "கரைமேட்டுக் குறிஞ்சி" எனும் புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. வருடாவருடம் நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. 31  சிறுகதைகளை கொண்ட இப்புத்தகத்தை சாரதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கூடத்தில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம் நெய்வேலி என்று படித்ததற்குப் பிறகு இந்த நிலக்கரி நகரத்தை பற்றி என் கணவர் சொல்லும் போதெல்லாம் மனதில் கற்பனைக்குதிரையை தட்டி விட்டு கண்கள் விரிய கேட்டிருக்கிறேன். அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சி, நகர் முழுவதும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை போன்ற தகவல்கள், அமைதியான சூழ்நிலை, பாம்புக் கதைகள், பேய்க் கதைகள் (நல்லவேளை! நான் திருமணமாகி வரும் போது அவர்கள் அங்கு இல்லை), பங்குனி உத்திரத் திருவிழா, வில்லுடையான் பட்டு கோவில், நடராஜர் கோவில், சாலைகளின் பெயர்கள், தோட்டம், மரங்கள், செடிகள், கல்லூரிக் கதைகள் என் ஒவ்வொன்றுமே கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

என்னையும் மூன்று முறை நெய்வேலிக்கு அழைத்துச் சென்று தான் படித்த பள்ளிக்கூடம், அவர்கள் வசித்த வீடு, சுற்றித் திரிந்த சாலைகள், இப்போது அங்கு வசிக்கும் நண்பர்கள் வீடு, பங்குனி உத்திரத் திருவிழா என காண்பித்திருக்கிறார். நெய்வேலி பற்றிய என் நினைவுகளை தூண்டி விட்டது இந்த புத்தகம்.

ஒவ்வொரு கதையும் நெய்வேலியைச் சுற்றி தான் உள்ளது. அங்கு நடக்கும் நிகழ்வுகள், தொழிற்சங்கங்களின் போராட்டம், மரங்கள், புத்தகக் கண்காட்சி என நகர்கின்றன.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நெய்வேலி எழுத்தாளர்கள் சுப்பு அருணாசலம், பா.சத்தியமோகன், கோவிந்தசாமி சேகர், தர்மசம்வர்த்தினி, த. அறிவழகன், இராம.ஆதவன், மேசா, ப.ஜீவகாருண்யன், இரவிச்சந்திரன், ஏ.முகமது முஸ்தபா, ஜூலியட் ராஜ், குந்தன், நளினி சாஸ்திரி, அன்பு சாவித்திரி, பூவை சுபா மதிவாணன், ஆர்.டி. உதயகுமார், வெ. வெங்கடாசலம், அ. பிரான்சிஸ், சுப்ரமணி, ப. கோவிந்தராசு, பா. மனோகரன், மாலா உத்தண்டராமன், பநியான், ப்ரீதி, ஜெ.பி. குமரகுரு, விஜி பாரதி, கி. இராமசாமி, மூங்கில் உதயா, நெய்வேலி நா. கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி பாரதிக்குமார் (இவர் நமது நிலாமகளின் கணவர்) தென்றல் ஆகியோர்.

எல்லா கதைகளுமே அருமையாக உள்ளன. எதை குறிப்பிட எதை விட. இருந்தாலும் கரைமேட்டுக் குறிஞ்சி என்னும் அறுசுவை விருந்தில் ஒரு சிறு பகுதியாக ஒரு கதையைப் பற்றிச் சொல்கிறேன்

வீரரே நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நம் திருமணம் தடைபட்டால்...விசும்பலுடன் அமுதா வைரவனின் மார்பில் சாய்ந்தாள்.

கலங்காதே அமுதா. நிச்சயமாக நம் திருமணம் நடக்கும். ஒருவேளை நாம் பிரிய நேர்ந்தால், நான் வேறுயாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து மீண்டும் அடுத்த பிறவியிலாவது உன்னை மணப்பேன். இது வில்லுடையான் மீது சத்தியம். ஆனால் நீ யார், உன் தாய், தந்தை பற்றி சொல்ல மறுக்கிறாயோ

இது நெய்வேலி.நா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள வில்லுடையான்என்ற சிறுகதையில் உள்ள வரிகள். பாண்டிய நாட்டு தளபதி வைரவன் கானகத்தில் தன் புரவியில் சென்று கொண்டிருக்க திடீரென்று தன் உயிரை காப்பாற்றும்படி ஒரு அலறல். அலறல் வந்த திசையை நோக்கி சென்றால் அங்கு ஒரு சிறுவனை மலைப்பாம்பு விழுங்க காத்திருக்கிறது. அருகில் சென்று சிறுவனை மலைப்பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறான் வைரவன். நன்றி சொல்லி விட்டு வேறு தன்னை பற்றிய எந்த தகவலுக்கும் பதில் தராமல் அந்த சிறுவன் சென்று விட

அடுத்த நாள் கானகத்தில் இருந்த வில்லுடையானான முருகனிடம் ஒரு பெண் பாடல்கள் பாடி பூஜை செய்து கொண்டிருக்க யாருமில்லாத இந்த இடத்தில் இவள் எப்படி என்று விசாரிக்கஅவள் வாள்போர் புரிய அழைக்கிறாள். நேற்று தன் உயிரை மீட்டவர் இவர் தான் என அக்காளிடம் சொல்கிறான் சிறுவன். தங்களைப் பற்றிய எந்த விவரத்தையும் சொல்லாமல் தளபதியிடம் மனதை பறி கொடுக்கிறாள். காதலின் உச்சத்தில் இருவரும் பேசிய உரையாடல் தான் மேலே உள்ளது. பாண்டிய மன்னன் மூலம் சிறுவனும், அமுதாவும் பல்லவ நாட்டு ஒற்றர்கள் என தெரியவந்து அவர்களை வைரவனே கைது செய்ய அனுப்புகிறார் மன்னன். ஆனால் அதற்குள் தப்பி விடுகின்றனர். காதலியை பிரிய நேரிடுகிறது.

இவர்கள் அடுத்த ஜன்மத்தில் முத்து மற்றும் லட்சுமியாக பங்குனி உத்திர திருவிழாவில் வில்லுடையான் பட்டு முருகனை கண்டதும் கோவிலில் தங்கள் முன் ஜென்ம நினைவுகள் வந்து புரிந்து கொள்கின்றனர். அந்த நேரத்தில் திருமணம் பற்றிய உறுதி பூண்டதும் முத்துவுக்கு இராணுவத்தில் இருந்து அழைப்பு வருகிறது. விடுமுறை முடிந்து வரும்படி.

என்ன நட்புகளே சுவாரசியமாக இருந்ததா? வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி வாசியுங்கள்.

புத்தகத்தை வாங்க அணுகவேண்டிய முகவரி

சாரதா பதிப்பகம்
G 4 சாந்தி அபார்ட்மெண்ட்
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, (அஜந்தா ஹோட்டல் அருகில்)
இராயப்பேட்டை, சென்னை – 14
புத்தகத்தின் விலை ரூ 50


மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Wednesday, December 5, 2012

கதம்பம் – 12

கைசிக ஏகாதசி:நான் இதைப் பற்றி எழுதுவதற்குள் அடுத்து இந்த மாதம் 24 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியே வரப் போகிறது. ஏகாதசிகளிலே சிறப்பானதாம் இந்த கைசிக ஏகாதசி. இந்நாளில் எல்லோரும் வீதி பிரதட்சணம் செய்தார்கள். இப்படி பிரதட்சணம் செய்தால் மறுபிறவியே கிடையாதாம். நாங்களும் இம்முறை ஸ்ரீரங்கத்தில் இதில் கலந்து கொண்டோம். காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி சித்திரை வீதிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, என நான்கு வீதிகளும் சுற்றி விட்டு, கோவிலுக்குச் சென்றோம்.

அங்கு பெருமாள் புறப்பாடு நின்று பார்த்தோம். கூட்டம் அலைமோதியது. கும்பலில் ரோஷ்ணிக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்பு ஒரு வேகம்பளு தூக்கக் கூடாது என்று சொன்னாலும் மனது கேளாமல் தூக்கி வைத்துக் கொண்டு காண்பித்தேன். எல்லோருமே ஒருமுறை பார்த்ததும் நகர்ந்தால் பரவாயில்லை. ஊஹூம்….. யாரும் நகருவதாயில்லை. கோவிலுக்குள்ளும் பிரதட்சணம் முடித்துக் கொண்டு பின்பு உத்திர வீதிகளில் கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு, என நான்கையும் முடித்துக் கொண்டு பதினோரு மணிவாக்கில் வீட்டை வந்தடைந்தோம். அன்று முழுவதும் பாட்டிம்மா பலகாரம் தான்அடுத்து வைகுண்ட ஏகாதசிக்கு சென்று பார்த்து விட்டு வந்து எழுதுகிறேன்.

வானில் வட்டம்:-

சிலநாட்களுக்கு முன் வானில் வட்டம் தோன்றியதை ஆச்சரியத்துடன் பார்த்தேன். இதுவரை இம்மாதிரி நான் பார்த்ததில்லை. அளந்து எடுத்து பாகைமானி கொண்டு வட்டம் போட்டது போல் நிலவைச் சுற்றி என்ன ஒரு அழகான வட்டம். இம்மாதிரி வட்டம் போட்டால் மழை வரும் என்றார்கள். ஆனால் மழை தான் எங்கே போயிற்றோ தெரியவில்லை

ரசித்த காட்சி:-

வீதி பிரதட்சணம் செய்தவர்களில் ஒரு தம்பதி. அதில் கணவருக்கு காலில் அடிபட்டிருந்தது. அவரும் எங்களுடன் மெதுவாக நடந்து வந்திருந்தார். பெருமாளை பார்த்து விட்டு மனைவி அவரை அவ்வளவு கூட்டத்திலும் கால் நசுங்காமல் ஜாக்கிரதையாக சேவிச்சிட்டியாம்மா, பார்த்து வாங்கோஎன பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்றார்.

டிப்ஸ்:-

தண்ணீர் உப்பாக வரும் இடங்களில் வெந்நீர் போடும் பாத்திரங்களில் வெள்ளையாக கீழே படிந்து விடும். எவ்வளவு தேய்த்தாலும் சொரசொரப்பாக போகவே போகாது. இதைப் போக்க புளித்த மோரை அந்தப் பாத்திரத்தில் விட்டு முழுவதும் தண்ணீரால் நிரப்பி வைத்து இரவு முழுவதும் விட்டு விட்டு காலையில் தேய்த்தால் பளிச்சென்று ஆகி விடும். இது நான் நடைமுறையில் செய்து கொண்டு வருவது. இது என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. பூஜை பாத்திரங்களையும் இம்மாதிரி மோரில் ஊற வைத்து விட்டு தேய்த்தால் பளிச் பளிச் தான்

பொன்மாலைப் பொழுதும், வசந்த காலமும்:-

சமீபத்தில் புதிதாக ஆரம்பித்திருக்கும் சேனல் சன் லைஃப். மின்வெட்டு இல்லாத ஒரு மாலைப் பொழுதில் இந்த சேனலைப் பார்த்தேன். பொன்மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சியில் 70, 80 களில் வந்த அருமையான பாடல்கள் இடம்பெற்றன. விளம்பர இடைவேளை இல்லாமல் பார்ப்பதே பெரிய விஷயம். இதில் அந்த தொந்தரவுகள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இன்னொரு நாள் காலையிலும் அந்த வாய்ப்பு கிட்டியது. வசந்தகாலம் என்ற நிகழ்ச்சியில் இதே போல் இனிமையான பாடல்கள்.

பொன்மாலைப் பொழுது மாலை 5 முதல் 6 வரை
வசந்த காலம் - காலை 10 முதல் 11 வரை

நீங்களும் நேரமும் மின்சாரமும் இருந்தால் பாருங்கள்.

மழலை மொழி:-

மேல் வீட்டு வாண்டு அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்வது உண்டு. மூன்றரை வயதில் மழலைமொழியில் பிச்சு உதருகிறது. நமக்கு புரிவது தான் கொஞ்சம் கடினமாக உள்ளது.

நான்:- என்னடா சாப்பிட்ட?
வாண்டு:- ரசஞ்சாம், கூத்து கரமுது
நான் :- தம்பி பாப்பா என்ன பண்றது?
வாண்டு:- ஜோ குளிக்கறது….
நான்:- என்ன சோப் போட்டு குளிக்கறது?
வாண்டு :- மஞ்சப் பொடி சோப்
நான்:- நீ என்ன போட்டு குளிப்ப?
வாண்டு :- நானா? கண் எரியற சாம்பு
நான் :- என்ன பேஸ்ட் போட்டு பல் தேய்ப்ப?
வாண்டு :- கார பேஸ்த்..

ரோஷ்ணி கார்னர்:-

இது எங்க வீட்டு வாண்டின் குறும்பு மொழி. பள்ளியில் இருந்து வந்ததும் வராததுமாக அம்மா நம்ம வாசன் ஐ கேர்போலாமா என்றாள். என்னாச்சு கண்ணா? ஸ்கூலில் ஏதாவது சொன்னாங்களாதலைவலிக்குதா? போர்டில் இருப்பது தெரியலையா? என்று அடுக்கடுக்காக கேள்விக் கணைகளால் துளைத்தேன். உடனே அவள் இல்லம்மா கொஞ்சம் கேளு

டீவியில் தான் வாங்க நாங்க இருக்கோம்ன்னு சொல்றாங்களே..அதனால் நம்ம போயி எனக்கு ஒரு கண்ணாடி வாங்கிண்டு வரலாம் என்றாள். ஓஹோ! அப்படியா சங்கதி என்று தெரிந்து விட்டதுஅதனால நிதானமாய் அவளிடம் சரி வா போகலாம். ஆனால் அங்கே கண்ணாடி போடுவதற்கு முன்னாடி கண்ணில் ஒரு ஊசி போட்டுட்டு தான் போடுவாங்களாம். பரவாயில்லை உனக்கு தான் போடணுமே…. என்றதும்….

அப்படியா! அப்படியென்றால் எனக்கு வேண்டாம்மா... ப்ளீஸ்ம்மா… வேண்டாம்

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.