நம் உடலுக்கு
நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது
உகந்தது. பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை
அதிகம் வாங்கும் சமாச்சாரம் என்றாலும்
மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த
வாழைப்பூ பருப்புசிலி வத்தக்குழம்பு, மோர்குழம்பு போன்ற துவரம்பருப்பு சேர்க்காத
குழம்புகளுக்கு நல்லதோர் ஜோடியாக இருக்கும்.
தேவையான
பொருட்கள்:-
வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு
– 1 கப்
துவரம்பருப்பு
– கால் கப்
மிளகாய்
வற்றல் – 4 அல்லது 5
சீரகம் – ½
தேக்கரண்டி
பெருங்காயம் –
சிறிதளவு
உப்பு –
தேவையான அளவு
எண்ணெய் –
தேவையான அளவு
கறிவேப்பிலை –
சிறிதளவு
கடுகு - சிறிதளவு
செய்முறை:-
வாழைப்பூவை
நன்கு ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கி தண்ணீரில் சிறிதளவு மோர் விட்டு அதில்
போட்டுக் கொள்ளவும். மோர் விடுவதால் கருத்துப் போகாமல் இருக்கும். வாழைப்பூவை
எப்படி ஆய்ந்து கொள்ள வேண்டும் என்பதை நம்ம துளசி டீச்சர் தன் பதிவில் அழகா
சொல்லிக் கொடுத்திருக்காங்க. நறுக்கி மோரில் போட்டு வைத்திருக்கும் வாழைப்பூவை
பிழிந்து எடுத்து குக்கரில் சாதம், பருப்பு வைக்கும் போது தனியாக மேலே ஒரு
பாத்திரத்திலோ அல்லது தட்டிலோ வைத்து வேக வைத்துக் கொள்ளலாம். அல்லது ஆவியில்
தனியாக வைத்தும் எடுக்கலாம்.
கடலைப்பருப்பையும்,
துவரம்பருப்பையும் தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய பருப்பை
தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் வரமிளகாய், சீரகம், பெருங்காயத்துடன்
கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து
அரைக்கலாம். அரைத்த விழுதை இட்லி தட்டிலோ, அல்லது ஒரு பாத்திரத்திலோ போட்டு
குக்கரில் இட்லி வேக வைப்பது போல 10-லிருந்து 12 நிமிடங்கள் ஆவியில் வைத்து
எடுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்சியில் விப்பர் பட்டனில் ஒரு சுற்று சுற்றி
எடுத்தால் உதிர் உதிராக வந்து விடும்.
வாணலியில்
சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அதில் பருப்பு
கலவையை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். இத்துடன் வேக வைத்த வாழைப்பூவை பிழிந்து
போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்தால் சுவையான, சத்தான
வாழைப்பூ பருப்புசிலி தயார்.
என்ன உங்க
வீட்டிலும் செய்து பார்ப்பீர்கள் தானே...
பின்
குறிப்பு:- வாழைப்பூவுக்கு பதிலாக
பீன்ஸ், கொத்தவரங்காய், குடமிளகாய் போன்றவற்றிலும் இதே முறையில் பருப்புசிலி
செய்யலாம். கொத்தவரங்காயை வேக வைத்து எடுக்கவும். பீன்ஸ் மற்றும் குடமிளகாயை
வாணலியில் எண்ணெயில் வதக்கி இதனுடன் பருப்பு கலவையை சேர்க்க வேண்டும்.
மீண்டும்
சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

44 comments:
பயனுள்ள ருசியான பகிர்வுக்கு பாராட்டுக்கள்..
நானும் வாழை பூ உசிலி ரசிகன்தான்
எப்படியும் மாதம் ஒரு முறை செய்துவிடுவோம்
தாங்கள் பின் குறிப்பில் சொல்லியுள்ள
காய் கறிகளில் செய்து பார்க்கவேண்டும்
குடலுக்கும் நாவிற்கும் நலம் பயக்கும்
நல்ல டிஷ்ஷை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
த.ம 2
தமிழ்மணம்: 3
இன்ட்லி: 2
எனக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பூ பருப்புசிலி மிகவும் காரசாரமாக நல்லாயிருந்தது. பசியைக்கிளறி விட்டுவிட்டது. பதிவுக்கு நன்றி.
சப்பு கொட்ட வைத்த பதிவு.. உசிலின்னா உசிராச்சே
ஆரோக்கியமான உசிலி குறிப்புக்கு நன்றி..
வாழைப்பூ எனக்கு மிகவும் பிடிச்ச காய் .இங்கே கிடைப்பது கஷ்டம்
கிடைச்சா இந்த முறையில் செய்து பார்க்கிறேன் .இரும்பு சத்து நிறைய இருக்கும் தானே வாழைப்பூவில் .உசிலி அருமையா இருக்கு .பகிர்வுக்கு நன்றி
வேலை அதிகம், ஆனால் உடலுக்கு மிகவும் நன்மை தரும் வாழைப்பூ.
படங்கள் அருமை.
உசிலி எனக்கும் பிடித்தது.
சத்தான அருமையானதொரு குறிப்பு.. சப்பாத்தியோடயும் பீன்ஸ் உசிலி அருமையா ஜோடி சேருது..
வீட்டம்மா கிட்டே இந்த ரெசிப்பி காட்டுறேன். Thanks
ருசிகரமான பதிவு.என் வீட்டில் யருக்கும் கோஸ் வாசனை பிடிக்காது.ஆதனால் நான் கோஸ் பருப்புசுலி செய்துவிடுவேன்.கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
சுவையான தகவலுக்கு நன்றி ஆதி.
உசிலி நன்றாக இருந்தது. அப்படியே, அசிலி, பிசிலி இவைகளின் செய்முறையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
வாழைப்பூ நான் இருக்கும் பகுதியில் கிடைப்பதில்லை.பதிவை படித்தவுடன் வாழைப்பூ மீதே எண்ணம் சுற்றுகிறது. எளிமையான செய்முறை.நல்ல பகிர்வு.
பகிர்விற்கு நன்றி சகோதரி! த.ம. 5
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
வாங்க இராஜராஜேஸ்வரி,
தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க ரமணி சார்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க ரிஷபன் சார்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க சிநேகிதி,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க ஏஞ்சலின்,
கிடைக்கும் போது செய்து பாருங்கள்.தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க கோமதிம்மா,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.
வாங்க அமைதிச்சாரல்,
சப்பாத்தியோட பீன்ஸ் உசிலி நல்லாயிருக்கா...
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க மோகன் குமார்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.
வாங்க ரமா,
கோஸ் பருப்புசிலி நான் செய்ததில்லை. தகவலுக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க ஈஸ்வரன் சார்,
அசிலி, பிசிலிக்கும் விரைவிலேயே ரெசிபி தந்து விடுகிறேன்...:)))
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க ஆச்சி,
நாங்க முன்பு இருந்த பகுதியில் வார சந்தையில் வாழைத்தண்டு, வாழைப்பூ, முருங்கைக்காய் எல்லாமே கிடைக்கும். இப்போ இருக்கும் பகுதியில் முருங்கைக்காய் மட்டும் தான் கிடைக்கிறது. கரோல் பாக் செல்லும் போது தான் வாழைப்பூ வாங்குவேன். ஒரு பூவின் விலை -ரூபாய் 20.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.
வாங்க திண்டுக்கல் தனபாலன்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாழைப்பூ , கொத்தவரை, பீன்ஸ்..
பருப்பு உசிலி... செமையா இருக்கும்
வாங்க மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.
வாழைப்பூ கோலா உருண்டை, வாழைப்பூ பஜ்ஜி, வாழைப்பூத் தொக்கு இதெல்லாமும் சொல்லியாச்சா...? டெல்லியில் வாழைப்பூ விற்கும் விலை கேட்டு அதிர்ந்தேன். உங்க பதிவின் புண்ணியத்தில் வாழைப்பூ வேட்டை தொடங்கியிருக்கும் பலருக்கு. வாழைப்பூச்சாறு சிறுநீரகக் கோளாறுகளுக்கு நல்லது. விலை என்னவானாலும் ஆரோக்கியத்துக்கும் அதிருசிக்குமாக வாங்கித் தானே ஆகணும்!
வாழைப்பூ நான் இருக்கும் பகுதியி கிடைக்காது பீன்ஸ் கொத்தவரங்காயில் செய்திருக்கேன். ஊர்பக்கம் போனால் வாழைப்பீ உசிலிதான் முத நா இரவே கள்ளன் எடுத்து கிளீன் பண்ணி நறுக்கி மோர்தண்ணீரில் போட்டு வச்சிடுவோம்.
ஆகா!நாக்கில் நீர் ஊறுகிறது!
வாழைப்பூ ரொம்பவும் பிடிச்ச காய் எனக்கு.
பருப்பை வேகவைத்து, காயுடன் சேர்த்து செய்வதே எங்கள் பக்கம் வழக்கம். உசிலி (வேறு காய்கறியில்) செய்துபார்த்தேன். ரொம்ப டிரையா இருக்கே? அதனால், நானும் அதன்பின் பருப்பு வேகவைத்துச் சேர்த்தே செய்கிறேன். சப்பாத்திக்கும் டிரையா இல்லாம, கொஞ்சம் குழம்பா இருந்தாத்தானே நல்லாருக்கும்?
நல்ல ருசியான வாழைப்பூ உசிலி! புகைப்படமும் மிக அழகு!!
வாழைப்பூ உசிலி எங்கம்மா செய்வாங்க. நல்லா இருக்கும். பகிர்வுக்கு நன்றி
வாங்க நிலாமகள்,
தில்லியில் வாழைப்பூ கிடைப்பதே பெரிதில்லையா! அதனால் விலை ஜாஸ்தியானாலும் கிடைக்கும் போது வாங்கி விடுவேன். சிறுநீரக கோளாறுகளுக்கும் நல்லது என்ற தகவலுக்கு நன்றிங்க.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க லஷ்மிம்மா,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க சென்னை பித்தன்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி சார்.
வாங்க ஹுசைனம்மா,
இந்த பருப்புசிலி பருப்பு சேர்க்காத குழம்புகளுக்கு தான் ஏற்ற ஜோடி. சப்பாத்திக்கு ஒத்து வராது.
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
வாங்க மனோம்மா,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
வாங்க சி.பி.செந்தில்குமார்,
தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.
போன வாரத்தில் ஒருநாள் தைரியம் வரவழைச்சுட்டு வாழப்பூ வாங்கிவந்து இதை செய்து பார்த்துட்டேன்..
நல்லா இருந்துச்சுங்க:)
வாங்க முத்துலெட்சுமி,
செய்து பார்த்து தெரிவித்ததற்கு நன்றிங்க.
இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html
வாங்க விச்சு,
வலைச்சர அறிமுகத்துக்கு நன்றிங்க.
Post a Comment
படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…