Sunday, November 27, 2011

போவோமா கண்காட்சிக்கு…
தில்லியில் வருடா வருடம் நவம்பர் மாதத்தில் குழந்தைகள் தினமான 14 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ”இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி” உயர்நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ”பிரகதி மைதான்” என்ற மிகப்பெரிய இடத்தில் நடைபெறும். சென்ற வாரம் இந்த கண்காட்சிக்கு நாங்கள் சென்று வந்தோம். விடுமுறை நாட்களில் செல்லவே முடியாது என்பதால் அலுவலக நாளில் சென்றோம். நவம்பர் மாதம் வந்தாலே இந்த கண்காட்சியைக் காண மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். முதல் நான்கு நாட்கள் வர்த்தகர்களுக்கும், மற்ற நாட்கள் பொது மக்கள் பார்வைக்காகவும் திறக்கப்பட்டிருக்கும். காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உள்ளே செல்ல அனுமதி உண்டு.

கண்காட்சிக்குச் செல்ல பெரியவர்களுக்கு நுழைவுச்சீட்டு 40 ரூபாயாகவும், சிறியவர்களுக்கு 20 ஆகவும் உள்ளது. நுழைவுச்சீட்டுகள் மெட்ரோ ரயில் நிலையங்கள், மதர் டைரி பால் விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். பிரகதி மைதான் அருகே நுழைவுச்சீட்டு விற்பனை கிடையாது! பிரதி நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே அனுமதி.  அதை விட அதிகமானால் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த நுழைவாயில்களை மூடி விடுவார்கள்.  இந்த சனிக்கிழமை [26.11.11] அன்று மதியம் 02.00 மணிக்கே மூடிவிட்டார்கள்.  இந்த கண்காட்சி திறந்திருக்கும் நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக மெட்ரோ ரயில்கள் விடப்படுகிறது. அப்படியும் கும்பல் தான். இந்த கண்காட்சி சமயத்தில் தினமும் செய்திதாள்களில் இந்தக் கண்காட்சியை பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்.  உள்ளே  செல்ல 11 நுழைவு வாயில்கள் உள்ளன.

எல்லா நுழைவு வாயில்களிலும் தில்லியில் எல்லா இடத்திலும் நடப்பது போலவே ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி செக்கிங், மற்றும் கையில் எடுத்துச் செல்லும் பைகள் போன்றவற்றுக்கு ஸ்கேனிங் போன்றவைகள் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவீர்கள்.


உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிரந்தரமாகவே தனித்தனி கட்டிங்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தினை மையமாக எடுத்துக் கொண்டு எல்லா மாநிலத்தவரும் அவர்களது கண்காட்சியை வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டின் கருத்தாக எடுத்துக் கொண்டது ”கைவினைப் பொருட்கள்”. அதன்படி அந்த மாநிலக் கட்டிடத்தின் வெளி அலங்காரம் செய்வார்கள் [தமிழகம் மட்டும் விதிவிலக்கு!  ஆட்சியாளரைப் பொறுத்து அவரது பெரிய பெரிய புகைப்படங்கள் தான்!]. உள்ளேயும் சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும். இவைத் தவிர எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் கடைகளில் அங்கு விளையும் உணவுப் பொருட்கள், அல்லது தயாரிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வெளியே உணவகங்களும் உண்டு. இதிலும் அந்த மாநிலத்தின் சிறப்பு உணவுகள் தான் இடம் பெற்றிருக்கும்.


விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் விலை சில நியாயமானதாகவும் சில கூடுதலாகவும் இருக்கும். கடைகளில்  விற்பனை செய்பவர்கள் சிலர் அந்தந்த மாநிலத்தவரும் மற்றவர்கள் தில்லி வாசிகளுமாக இருப்பார்கள்.

இந்த முறை நாங்கள் கேரளா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தில்லி, தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலக் கட்டிடங்களுக்கு சென்று வந்தோம். தமிழ்நாடு வழக்கம் போலவே சுமாராக தான் இருந்தது. கடைகளில் மிகச் சிலதே தமிழ் பொருட்களாக இருந்தது. பத்தமடை பாய் ஒரு பாட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். சிதம்பரத்திலிருந்து வந்திருந்த இரு பெண்மணிகளிடம் மண்ணால் செய்யப்பட்ட சிறுசிறு காய்கனிகளை வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் மகிழ்ந்து இவ்வளவு வருடங்களாக தில்லியில் இருந்தும் அப்படியே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எதற்காக பாசாங்கு செய்ய வேண்டும். எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள் தானே….

இந்த கண்காட்சியை ஒரே நாளில் எல்லாம் சுற்றி பார்த்து விட முடியாது. அவ்வளவு பெரிய ஏரியா இது. காலையில் இருந்து பார்க்க ஆரம்பித்து மாலை வரை எங்களால் ஒன்பது மாநிலங்களைத் தான் பார்க்க முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிய வேளையில் அங்கே கிடைக்கிற உணவை வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு. வீட்டிலிருந்து கொண்டு வந்து அங்கிருக்கும் புல்வெளிகளில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுபவர்களும் உண்டு. நான் சப்பாத்தியும், சப்ஜியும் பேக் செய்து எடுத்துச் சென்றிருந்ததால் புல்வெளியில் அமர்ந்து சாப்பிட்ட பின் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சுற்றிப் பார்க்கக்  கிளம்பினோம். வெளியில் வாங்கும் உணவுகள் சில நேரம் ஒத்துக் கொள்ளாது. போனால் ஏதாவது வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சுற்றி பார்த்து விட்டு அன்றைய நாளை இனிமையாக கழித்து விட்டு திரும்பலாம்.

வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவது எத்தனை கஷ்டமோ அதுபோலத்தான் இந்த மக்கள் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதும்.  எத்தனை விதிமுறைகள் சொல்லி, அவற்றைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்தாலும், “விதிமுறைகள் என்றாலே அதை மீறத்தானே வேண்டும்!” என்றே சிலர் இருப்பார்கள் அல்லவா.  எங்கே “Do not Touch” என்று எழுதி இருக்கிறார்களோ அங்கே தான் நிறைய பேர் கை வைக்கிறார்கள். அஸ்ஸாம் மாநில கடைகளில் மூங்கிலில் செய்யப்பட்ட மாதிரி நாற்காலிகளில் “Do not Sit” என எழுதி இருக்க அங்கே தான் நிறைய பேர் உட்கார்ந்தார்கள்!!

சரி நாங்கள் என்ன வாங்கினோம் என்றா கேட்கிறீர்கள். அடுத்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் வைக்க ஒரு சிலப் பொருட்கள் வாங்கினோம். 

நாங்க பார்த்த இடங்களை இங்கே நீங்களும் பார்க்கலாம்!


 
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட். 

32 comments:

 1. அவர்கள் மகிழ்ந்து இவ்வளவு வருடங்களாக தில்லியில் இருந்தும் அப்படியே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எதற்காக பாசாங்கு செய்ய வேண்டும். எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள் தானே

  கண்காட்சியை நிறைவாக பார்த்த உணர்வு!

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  ReplyDelete
 2. கால் கெஞ்சினதால் கிளம்பி வரது தான்..இல்லன்னா அதெல்லாம் சுத்தி முடியர இடமா..

  அழகா இருக்கு வாங்கின ஐட்டமெல்லாம்..நாங்க சனிக்கிழமைதான் போயிருந்தோம்.. மெட்ரோ நிலையம் தாங்கவில்லை..

  ReplyDelete
 3. நல்ல பதிவு.. தில்லியில் இப்படிலாம் இருக்குதா? நல்ல வாய்ப்பு..
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 4. அழகிய பதிவு. தங்களுடன் நாங்களும் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்த உணர்வு. காலில் ஆயிண்மெண்ட் தடவியபடி vgk

  ReplyDelete
 5. இவ்வளவு வருடங்களாக தில்லியில் இருந்தும் அப்படியே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எதற்காக பாசாங்கு செய்ய வேண்டும். எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள் தானே….

  பாராட்டப்பட வேண்டிய அம்சம்

  கணகாட்சி பார்த்த திருப்தி பதிவு படித்து

  ReplyDelete
 6. எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள்தானே.
  அது பாயிண்ட்.

  நீங்க வாங்கிருக்கறதெல்லாம் நல்லாருக்கு,முக்கியமா அந்த சோஃபா செட் சூப்பர்.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 7. //எதற்காக பாசாங்கு செய்ய வேண்டும். எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள் தானே….//
  முத்தான வார்த்தைகள்.
  கண்காட்சி பகிர்வும்,வாங்கிய கைவினைப்பொருட்களும் சூப்பர்.அடுத்த வருட கொழுவில் பார்க்கலாமே..

  ReplyDelete
 8. all pavilion photographs are really interesting..superb venkat..nice presentation..

  ReplyDelete
 9. கண்காட்சியை பற்றி நாங்கள் அறிந்து கொள்ளும் விதமாக மிகவும் நல்ல பதிவு ஆதி.

  //அந்த மாநிலக் கட்டிடத்தின் வெளி அலங்காரம் செய்வார்கள் [தமிழகம் மட்டும் விதிவிலக்கு! ஆட்சியாளரைப் பொறுத்து அவரது பெரிய பெரிய புகைப்படங்கள் தான்!].//

  வருத்தமான விஷயம்.

  அந்த குட்டி சோபா செட் மிக அழகாக உள்ளது.

  ReplyDelete
 10. நாங்கள் சனிக்கிழமை போனோம், கூட்டம் எக்க சக்கம். நுழைவுச்சீட்டு விடுமுறை என்பதால் 60ரூபாய்.

  மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ பணியாளர்கள் கூட்டத்தை கூட்டம் இல்லாத பக்கம் திருப்ப விசில் சத்தம் கொடுத்து திருப்புவது காதை கிழிக்கிறது.

  வர்த்தக கண்காட்சியில் நீங்கள் வாங்கிய கைவினைப் பொருட்கள் எல்லாம் அழுகு.

  ReplyDelete
 11. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 12. வாங்க முத்துலெட்சுமி,

  முழுசா எல்லாம் பார்க்க 4 இல்லைன்னா 5 நாட்கள் ஆகுமே...
  நாங்க வியாழக்கிழமை போயிருந்தோம். அப்போவே கும்பல் தாங்க முடியவில்லை. தில்லி கட்டிடத்துக்குள் நுழைந்தது தான் தெரியும் கும்பலோடு தள்ளப்பட்டு வெளியே கொண்டு வந்து விட பட்டோம்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க Madhavan Srinivasagopalan சார்,

  ஆமாம் சார். இது வருடா வருடம் நடைப்பெறும் கண்காட்சி. எவ்வளவு முடியாதவர்களும் வயதானவர்களும் கூட இந்த கண்காட்சியை பார்க்க வந்து விடுவார்கள். அந்தளவு ஆர்வம் இருக்கிறது மக்களிடையே...
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  வீடியோ youtubeல் போட்டிருந்ததையும் பார்த்தீர்களா?
  அருமையான, வருடா வருடம் நான் பார்க்க ஆசைப்படும் கண்காட்சி இது.
  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தின் தினமாக கொண்டாடப்பட்டு கிராமிய நடனங்களும்,இன்ன பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ரிஷபன் சார்,

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 16. வாங்க ராஜி,

  அந்த சோபா செட் அழகான வேலைப்பாட்டோடு நன்றாக இருந்தது. அதற்கு கீழே உள்ள கூடைகளும் இந்த சோபா செட்டும் அஸ்ஸாம் மாநிலத்தில் வாங்கியது.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 17. வாங்க ஆசியா உமர்,

  கண்காட்சி காணொளியை ரசித்ததற்கும் பகிர்வை படித்து கருத்து தெரிவித்ததற்கும் நன்றிங்க. அவரிடமும் தெரிவித்து விடுகிறேன்.

  ReplyDelete
 18. வாங்க ரமா,

  எப்பவுமே அப்படித்தாங்க. வெளியேயும், உள்ளேயும் ஆட்சியாளர்களின் பெரிய பெரிய படங்களும் கட் அவுட்டும் தான் இடம் பெற்றிருக்கும்.

  இந்த வருட அழகான அலங்காரங்களுடன் சிறப்பான மாநிலமாக தேர்ந்தெடுத்தது கேரளாவை. தங்கப் பதக்கம் தந்திருக்கிறார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க கோமதிம்மா,

  மெட்ரோ இப்போ சாதாரண நாட்களிலுமே பயங்கரமான கும்பலோடு தான் செல்கிறது. இந்த கண்காட்சி நேரத்தில் கேட்கவே வேண்டாம். மக்களும் விதிமுறையை எங்கே பின்பற்றுகிறார்கள்.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 20. நல்ல பதிவு.. தில்லியில் இப்படிலாம் இருக்குதா? நல்ல வாய்ப்பு..
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 21. வீடியோ காட்சிகளும் பின்னனி இசையும் அருமை ஆதி.

  ReplyDelete
 22. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இன்னொரு தளத்தை போலவே இந்த தளமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி..!
  நம்ம தளத்தில்:
  "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

  ReplyDelete
 23. நல்ல பகிர்வு.நீங்கள் வாங்கிய பொருட்களும் அழகு.

  http://aatchi.blogspot.com/2011/05/blog-post_16.html

  இந்த முகவரியில் நானும் இந்த கண்காட்சி&பிரகதி மைதானம் பற்றி பதிவிட்டிருந்தேன்.

  நானும் அங்கு தமிழ்நாட்டை பார்த்து “ மற்ற பல மாநிலங்களுக்கு மக்கள் கூட்டம் இப்படி ஓடுதே,நம்மூர்ல என்னென்னவோ இருக்கு ஆனாலும் ப்ரசண்டேசன் பத்தலையேனு நினத்ததுண்டு,”

  ReplyDelete
 24. நேரில் பார்த்ததை போன்ற அனுபவத்தை உண்டாக்கியது உங்கள் பதிவு.மிக்க நன்றி

  ReplyDelete
 25. தமிழ்நாடு பெவிலியன் பாத்து மெய் சிலிர்த்து போச்சு போங்க...ரெம்ப அழகா கண்காட்சிய சுத்தி காட்டி இருக்கீங்க ஆதி... தேங்க்ஸ்...;)

  ReplyDelete
 26. வாங்க லஷ்மிம்மா,

  ஆமாம்மா. இது ஒரு நல்ல வாய்ப்பு தான்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 27. வாங்க கோமதிம்மா,

  மீண்டும் வந்து காணொளியை ரசித்ததை தெரிவித்ததற்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 28. வாங்க திண்டுக்கல் தனபாலன்,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 29. வாங்க ஆச்சி,

  தமிழ்நாடு கட்டிடத்தில் எப்பவுமே இப்படித்தான். கும்பலே இருக்காது.
  உங்கள் பதிவை மீண்டும் வந்து படித்தேன்.நல்ல தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 30. வாங்க KParthasarathi,

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 31. வாங்க புவனா,

  நிஜமாகவே சொல்றீங்களா தமிழ்நாடு பெவிலியன் பற்றி!
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. மூங்கில் செட், கைவினைப் பொருள் எல்லாம் அழகு.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…