Sunday, November 27, 2011

போவோமா கண்காட்சிக்கு…
தில்லியில் வருடா வருடம் நவம்பர் மாதத்தில் குழந்தைகள் தினமான 14 ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ”இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி” உயர்நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ”பிரகதி மைதான்” என்ற மிகப்பெரிய இடத்தில் நடைபெறும். சென்ற வாரம் இந்த கண்காட்சிக்கு நாங்கள் சென்று வந்தோம். விடுமுறை நாட்களில் செல்லவே முடியாது என்பதால் அலுவலக நாளில் சென்றோம். நவம்பர் மாதம் வந்தாலே இந்த கண்காட்சியைக் காண மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். முதல் நான்கு நாட்கள் வர்த்தகர்களுக்கும், மற்ற நாட்கள் பொது மக்கள் பார்வைக்காகவும் திறக்கப்பட்டிருக்கும். காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை உள்ளே செல்ல அனுமதி உண்டு.

கண்காட்சிக்குச் செல்ல பெரியவர்களுக்கு நுழைவுச்சீட்டு 40 ரூபாயாகவும், சிறியவர்களுக்கு 20 ஆகவும் உள்ளது. நுழைவுச்சீட்டுகள் மெட்ரோ ரயில் நிலையங்கள், மதர் டைரி பால் விற்பனை நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். பிரகதி மைதான் அருகே நுழைவுச்சீட்டு விற்பனை கிடையாது! பிரதி நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே அனுமதி.  அதை விட அதிகமானால் கூட்டத்தினைக் கட்டுப்படுத்த நுழைவாயில்களை மூடி விடுவார்கள்.  இந்த சனிக்கிழமை [26.11.11] அன்று மதியம் 02.00 மணிக்கே மூடிவிட்டார்கள்.  இந்த கண்காட்சி திறந்திருக்கும் நாட்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க கூடுதலாக மெட்ரோ ரயில்கள் விடப்படுகிறது. அப்படியும் கும்பல் தான். இந்த கண்காட்சி சமயத்தில் தினமும் செய்திதாள்களில் இந்தக் கண்காட்சியை பற்றிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்.  உள்ளே  செல்ல 11 நுழைவு வாயில்கள் உள்ளன.

எல்லா நுழைவு வாயில்களிலும் தில்லியில் எல்லா இடத்திலும் நடப்பது போலவே ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி செக்கிங், மற்றும் கையில் எடுத்துச் செல்லும் பைகள் போன்றவற்றுக்கு ஸ்கேனிங் போன்றவைகள் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவீர்கள்.


உள்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிரந்தரமாகவே தனித்தனி கட்டிங்கள் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தினை மையமாக எடுத்துக் கொண்டு எல்லா மாநிலத்தவரும் அவர்களது கண்காட்சியை வடிவமைக்கின்றனர். இந்த ஆண்டின் கருத்தாக எடுத்துக் கொண்டது ”கைவினைப் பொருட்கள்”. அதன்படி அந்த மாநிலக் கட்டிடத்தின் வெளி அலங்காரம் செய்வார்கள் [தமிழகம் மட்டும் விதிவிலக்கு!  ஆட்சியாளரைப் பொறுத்து அவரது பெரிய பெரிய புகைப்படங்கள் தான்!]. உள்ளேயும் சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கும். இவைத் தவிர எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் கடைகளில் அங்கு விளையும் உணவுப் பொருட்கள், அல்லது தயாரிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வெளியே உணவகங்களும் உண்டு. இதிலும் அந்த மாநிலத்தின் சிறப்பு உணவுகள் தான் இடம் பெற்றிருக்கும்.


விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் விலை சில நியாயமானதாகவும் சில கூடுதலாகவும் இருக்கும். கடைகளில்  விற்பனை செய்பவர்கள் சிலர் அந்தந்த மாநிலத்தவரும் மற்றவர்கள் தில்லி வாசிகளுமாக இருப்பார்கள்.

இந்த முறை நாங்கள் கேரளா, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தில்லி, தமிழ்நாடு மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலக் கட்டிடங்களுக்கு சென்று வந்தோம். தமிழ்நாடு வழக்கம் போலவே சுமாராக தான் இருந்தது. கடைகளில் மிகச் சிலதே தமிழ் பொருட்களாக இருந்தது. பத்தமடை பாய் ஒரு பாட்டி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். சிதம்பரத்திலிருந்து வந்திருந்த இரு பெண்மணிகளிடம் மண்ணால் செய்யப்பட்ட சிறுசிறு காய்கனிகளை வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் மகிழ்ந்து இவ்வளவு வருடங்களாக தில்லியில் இருந்தும் அப்படியே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். எதற்காக பாசாங்கு செய்ய வேண்டும். எங்கு இருந்தாலும் நாம் எப்போதும் தமிழர்கள் தானே….

இந்த கண்காட்சியை ஒரே நாளில் எல்லாம் சுற்றி பார்த்து விட முடியாது. அவ்வளவு பெரிய ஏரியா இது. காலையில் இருந்து பார்க்க ஆரம்பித்து மாலை வரை எங்களால் ஒன்பது மாநிலங்களைத் தான் பார்க்க முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மதிய வேளையில் அங்கே கிடைக்கிற உணவை வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு. வீட்டிலிருந்து கொண்டு வந்து அங்கிருக்கும் புல்வெளிகளில் குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுபவர்களும் உண்டு. நான் சப்பாத்தியும், சப்ஜியும் பேக் செய்து எடுத்துச் சென்றிருந்ததால் புல்வெளியில் அமர்ந்து சாப்பிட்ட பின் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் சுற்றிப் பார்க்கக்  கிளம்பினோம். வெளியில் வாங்கும் உணவுகள் சில நேரம் ஒத்துக் கொள்ளாது. போனால் ஏதாவது வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. சுற்றி பார்த்து விட்டு அன்றைய நாளை இனிமையாக கழித்து விட்டு திரும்பலாம்.

வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவது எத்தனை கஷ்டமோ அதுபோலத்தான் இந்த மக்கள் வெள்ளத்தினைக் கட்டுப்படுத்துவதும்.  எத்தனை விதிமுறைகள் சொல்லி, அவற்றைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்தாலும், “விதிமுறைகள் என்றாலே அதை மீறத்தானே வேண்டும்!” என்றே சிலர் இருப்பார்கள் அல்லவா.  எங்கே “Do not Touch” என்று எழுதி இருக்கிறார்களோ அங்கே தான் நிறைய பேர் கை வைக்கிறார்கள். அஸ்ஸாம் மாநில கடைகளில் மூங்கிலில் செய்யப்பட்ட மாதிரி நாற்காலிகளில் “Do not Sit” என எழுதி இருக்க அங்கே தான் நிறைய பேர் உட்கார்ந்தார்கள்!!

சரி நாங்கள் என்ன வாங்கினோம் என்றா கேட்கிறீர்கள். அடுத்த வருடம் எங்கள் வீட்டு கொலுவில் வைக்க ஒரு சிலப் பொருட்கள் வாங்கினோம். 

நாங்க பார்த்த இடங்களை இங்கே நீங்களும் பார்க்கலாம்!


 
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட். 

Friday, November 25, 2011

மழலை உலகம்… (தொடர்பதிவு)”மழலை உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு எழுதச் சொல்லி ஆச்சியும், ராஜியும் அன்புடன் அழைத்திருந்தார்கள். அதற்க்கிணங்க என் மனதில் தோன்றும் சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். இத் தொடர் பதிவை பலர் அருமையாய் பதிந்துள்ளார்கள். அந்த அளவிற்கு இல்லையாயினும் எனக்கு தெரிந்த அளவு எழுதுகிறேன்.

குழந்தைகளைப் பார்த்தால் தூக்கிக் கொஞ்ச எண்ணாதவர் எவரேனும் உண்டோ! ஒவ்வொரு குழந்தையும் தனி அழகு தான். அவர்களின் தளிர்நடை, மழலைப்பேச்சு, இளங்குறும்பு இவைகளை ரசிக்காமல் இருக்க முடியுமா! அவர்களின் செல்லமான கோபம் கூட அழகு தான். நாம் குழந்தைகளாக இருந்த போது என்ன செய்திருப்போம் என்பதை நம் மனக் கண் முன்னே விரிய குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் பங்கு கொள்வது அழகு.


 
நாம் குழந்தைகளாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பலநேரங்களில் நினைப்போம், காரணம் கவலைகளற்ற உலகம் அவர்களுடையது. நமக்குத் தான் எதிர்காலத்தைப் பற்றிய யோசனைகள், எதிர்பார்ப்பு, பயம், பொறுப்பு, வெறுப்பு ஆகியவை இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அதைப் பற்றிய எதுவும் கிடையாது. அந்த கால குழந்தைகளை விட இந்த காலக் குழந்தைகள் மிகவும் தெளிவாக பெற்றோருக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள். தைரியசாலிகளாகவும், கல்வி மற்றும் இன்ன பிற கலைகளிலும் தேர்ந்தவர்களாக திகழ்கின்றனர். சில நேரங்களில் அவர்களின் செயல்கள் பிரமிக்க வைக்கின்றன.

நாளைய சந்ததிகள் நல்ல மனிதர்களாகத் திகழ நாம் அவர்களை சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும். அனைவரிடத்திலும் மரியாதை காட்ட சொல்லித் தர வேண்டும். தன்னிடம் சிறிதளவே இருந்தாலும் பகிர்ந்துண்ணும் குணத்தை கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கு வருபவர்களை ”வாங்க” என்று அழைக்க பழக வைக்க வேண்டும். இன்று பெரியவர்களே மறந்து கொண்டு வரும் பண்பு இது.


 
கேட்டதையெல்லாம் வாங்கித் தரக் கூடாது. வீட்டு நிலவரம் குழந்தைகளுக்கு தெரிந்திருத்தல் நலம். அப்போது தான் பொறுப்பு வரும் இல்லையா. துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவை அவற்றில் உள்ள சத்துக்களையும், பயன்களையும் கூறி தந்தால் நலம். அவரவர்களின் வேலைகளை செய்ய சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.  பெண் குழந்தைகளுக்கு தாயானவள் நல்ல சிநேகிதி போல் நடந்து ஒவ்வொரு கட்டத்திலும் வழிநடத்த வேண்டும். எதையும் மறைக்காமல் நம்மிடம் பகிர்ந்து கொள்ள குழந்தைகளை தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.


 
தோல்விகளை ஏற்கும் மனப்பாங்கை உருவாக்கினால் நல்லது. உறவுகளின் மகிமையை நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தந்தால் தான் நமக்குப் பின் அவர்கள் ஒட்டுதலோடு இருப்பார்கள். சேமிக்கும் பழக்கத்தையும் உண்டாக்க வேண்டும். தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்த்து எளிமையாய் வாழ  வருங்கால சந்ததிகளுக்கு சொல்லித் தருதல் நம் கடமை.

தங்கங்களே நாளை தலைவர்களே…. [பழைய பாடலாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பாடல்….] கவிஞர் கண்ணதாசனின் அருமையான வரிகள்... 

Thangangale Naalai Thalaivargale | Online Karaokeஒரு சுட்டி குட்டிப் பெண்ணுக்கு அம்மா என்ற முறையில் என் குழந்தையையும் இந்த மாதிரி தான் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வளர்த்துக் கொண்டும் வருகிறேன். கொஞ்ச வேண்டிய நேரத்தில் கொஞ்சியும், கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியதும் அவசியம்.

நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் நாளைய சந்ததிக்குச் சொல்லித் தந்து மகத்தான ஒரு உலகம் செய்ய வழிகாட்டுவோம்.

தொடர விரும்புவர்கள் தொடருங்களேன்... 
மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Saturday, November 19, 2011

கமலாவும் சுண்டுவும்

தலைப்பைப் பார்த்தவுடன் கமலாவும்  சுண்டு விரல் சைசே  உள்ள சிறுவனும் பற்றிய கதையாயிருக்குமோ என்று கற்பனையை ஓட விடாமல் மேலே படியுங்க.

சென்ற வாரம் எங்கள் வீட்டு புத்தக அலமாரியை ஆராய்ந்ததில் அமரர் கல்கியின் இரண்டு சிறுகதைத்  தொகுப்பு புத்தகங்கள் கிடைத்தது.  உடனே எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். என்னவருக்கு ஒரு வழக்கம் - புத்தகம் வாங்கிய தேதியையும், வாங்கிய ஊரையும் குறித்து வைப்பார்.  அதே வழக்கம் என் அப்பாவுக்கும் உண்டு! இரண்டு புத்தகங்களையும் கடந்த 2004-ஆம் வருடம் ஜூலை 11-ஆம் தேதி திருச்சிக்கு சென்ற போது மலைவாசல் அருகே உள்ள பி.ஆர்.என் புத்தகக் கடையில் வாங்கியிருக்கிறார்.


கமலாவின் கல்யாணம் என்ற புத்தகம் வித்தியாசமான ஏழு, சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு புத்தகமாக இருந்தது. இவையெல்லாம் அந்த கால மனிதர்களையும், அவர்களின் நடைமுறைகளையும் காட்டும் கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கதைகள். கல்யாணமென்றால் சும்மாவா? எவ்வளவு திருப்பங்கள், கப்பலில் தோன்றும் ஒரு காதல் கதை, தற்கொலைக்கு முயலும் போது நண்பர்களாகி அவர்கள் வாழ்வில் முன்னேறிய கதை போன்ற வேறுபட்ட கதைகள். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 7 சிறுகதைகளின் தலைப்புகள் கீழே:

1.  கமலாவின் கல்யாணம்
2.  தற்கொலை
3.  எஸ்.எஸ்.மேனகா
4.  சாரதையின் தந்திரம்
5.  கவர்னர் விஜயம்
6.  நம்பர் 888
7.  ஒன்பது குழி நிலம்

இந்த புத்தகத்தில் இருந்த கதைகளில், தொகுப்பின் தலைப்பான ”கமலாவின் கல்யாணம்” என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தது. இக்கதையின் தொடக்கமே இப்படி இருந்தது…

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணம் செய்து வை!” என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்! ஆனால் ஜூனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம்.  நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீண்டு வரும்படி செய்வதற்குள் வாய்ப்பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது.  ஆயிரம் பொய் சொல்லுவதாம்! கல்யாணம் செய்து வைப்பதாம்? அந்த நிபந்தனையின் பேரில் தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான்.”


அடுத்து படித்த புத்தகம் - ”சுண்டுவின் சந்நியாசம்”.  இந்தப் புத்தகத்திலும் விதவிதமான கதைகள். அதுவும் சுதந்திர போராட்டத்துக்கு முன் நடந்த கதைகளாக இருக்கின்றன. விறுவிறுப்பாக இருக்கும் இக்கதைகள் தொடர்ந்து படிக்கும் சுவாரசியத்தைத்  தூண்டுகிறது.

இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகளாவன:

1.  சுண்டுவின் சந்நியாசம்
2.  அமர வாழ்வு
3.  திருடன் மகன் திருடன்
4.  இமயமலை எங்கள் மலை
5.  பொங்குமாங்கடல்
6.  பிரபல நட்சத்திரங்கள்

இத்தொகுப்பில் உள்ள அமர வாழ்வு என்னும் கதை எனக்கு மிகவும் பிடித்தது.  ரசித்துப் படித்தேன்.

இப்புத்தகங்களை படித்துப் பார்த்து அதன் உண்மையான சுவையை அனுபவியுங்கள். வாங்க அணுக வேண்டிய முகவரி -

சாரதா பதிப்பகம்
ஜி-4, சாந்தி அபார்ட்மெண்ட்
3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, (அஜந்தா ஹோட்டல் அருகில்)
இராயப்பேட்டை,
சென்னை – 600014.

ஒவ்வொரு புத்தகமும் ரூபாய் முப்பது மட்டுமே.


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

Wednesday, November 16, 2011

கதம்பம் - 5


போன பகிர்வில் சொன்னது போல, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு எழுதுவதால், இடைப்பட்ட நாட்களில் நடந்த சின்னச் சின்ன விஷயங்கள் பற்றி இந்த முறை கதம்பத்தில் பார்க்கலாம்.

பிர்லா மந்திர்


தீபாவளி சமயத்தில் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட பிர்லா மந்திர் கண்ணைக்  கவர்ந்தது. எங்கள் வீட்டின் பின்புற சாலையில் தான் இருக்கிறது என்பதால் மாலை 06.00 மணிக்கு மேல் சென்று சரவிளக்குகளின் ஒளியில் ஜொலித்த கோவிலை பார்த்து வந்தோம். இன்னொரு விஷயம் இந்த கோவிலில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் நம் எம்.எஸ் அம்மாவின் குரலில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒளிபரப்புகின்றனர். தலைநகரில், அதுவும் புகழ்பெற்ற கோவிலில் எம்.எஸ் அம்மாவின் குரலை கேட்கும் போது பெருமையாக இருக்கிறது.

அப்படிப் போடு… போடு… :


தில்லியில் குளிர் காலம் வந்து விட்டாலே வரிசையாக கல்யாணங்கள் நடைபெற ஆரம்பித்துவிடும். இந்த கல்யாணங்களில் ”[B]பராத்” எனப்படும் மாப்பிள்ளை அழைப்புதான் சிறப்பானது. தாலி கட்டுவது என்பது வெறும் உறவினர்கள் முன்னிலையில் மட்டும் தான்.   [B]பராத்தின் போது மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட குதிரை மீது அமர்ந்து வருவார். வெளியூரிலிருந்து வந்தாலும் மண்டபத்திற்கு சிறிது தூரம் முன்னே அவர்கள் வந்த வண்டிகளை விட்டு, குதிரை மீது அமர்ந்து உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ வருவார். உடன் [B]பேண்ட் வாத்தியங்களும் வரும்.  எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு கம்யூனிட்டி ஹால் இருக்கிறது. இங்கே நடைபெறும் கல்யாணங்களில் இடம்பெறும் DJ-க்கள் போடும் பாடல்களில் நம் தமிழ்ப்  பாட்டுகள் சக்கைப் போடு போடுகின்றன. என்ன பாடல்கள் என்றா கேட்கிறீர்கள். அப்படி போடு... போடு...,  அட்ரா அட்ரா நாக்கு முக்கா… போன்ற குத்துப் பாடல்கள்தான்.  கஷ்டம்….

பஸ்ஸில் வாங்கிய பல்பு:


 
”தீபாவளி துணி எடுப்பதற்கு வீட்டுக்குப் பக்கத்திலேயே கனாட் ப்ளேசில் நம்ம ஊர் நல்லி இருக்கு போகலாமா?” என என்னவர் கேட்க, உடனே ”யெஸ்”ஸினேன்.  தான் அலுவலகத்திலிருந்து நேரே அங்கு வந்து விடுவதாகவும் என்னையும் பெண்ணையும் அங்கே வந்துவிடும்படியும் சொன்னார்…  நானும் மகளும் தில்லி மாநகரப் பேருந்தில் ஏறினோம்.  பேருந்தினுள் பார்த்தால் “நடத்துனர்” ஒருவரும் இல்லாதது போல இருந்தது – யாரைப் பார்த்தாலும் பயணி போலவே இருக்க, யாரிடம் பயணச்சீட்டு வாங்குவது எனத் தெரியவில்லை.  பின் பக்கத்தில் ஒரு சர்தார்ஜி அமர்ந்திருக்க, அவரைக் கேட்கலாமா என நான் பார்க்க, அவரும் என்னையே பார்த்துக் கொண்டு இருக்க, பிறகு இரண்டு நிறுத்தங்கள் போன பிறகு, அந்த சர்தாரைப் பார்த்து, “யார் இந்த பேருந்தில் நடத்துனர்?” எனக் கேட்டேன்… அந்த சர்தார் சொன்னார் – “நாந்தேன்… நீங்கள் பயணச்சீட்டு வாங்கவில்லையே, ஒரு வேளை பாஸ் வைத்து இருப்பீர்களோ என நினைத்தேன்" என்றார். நல்லா  பல்பு வாங்கினேன்.  நடத்துனர்-னா ஒரு சீருடை போட்டு இருக்க மாட்டாரோ!

முன்னேறிப்போச்சு:  

தீபாவளி அன்று, வீட்டில் குப்பை எடுத்துச் செல்லும் நபர், இஸ்திரி செய்பவர், தெரு பெருக்கும் துப்புரவு பணியாளர், காலனி காவலாளி என நிறைய பேர் வீட்டுக்கு வந்து தீபாவளி இனாம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவரவர்களுக்கு ஒரு ரேட் வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு கொடுக்கவில்லையெனில் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.  வீட்டில் குப்பை எடுத்துச் செல்லும் நபர் அப்படித் திருப்பிக் கொடுத்தவர்களில் ஒருவர். அவர் சென்ற பின் ஏதோ வேலையாகக் கீழே சென்றபோது அவர் தனது குடும்பத்தினரோடு எல்லா வீடுகளிலும் பணம் வாங்கிக் கொண்டு தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்தார். அது சரி… கார் செலவுக்கே நிறைய பணம் வேண்டுமே… நான் கொடுத்தது நிச்சயம் பத்தாது தான்.  வேறென்ன சொல்ல!

ரோஷ்னி கார்னர்:  

தீபாவளிக்கு இந்த முறை பட்டாசு வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.  பள்ளியில் சொல்லி இருப்பார்கள் போல – சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்போம் என்று. சரி நல்லதாயிற்று என நானும் நினைத்தேன். அவர் வந்தவுடன் அவரிடமும் மகள் சொல்லி, ‘பட்டாசுக்கு பதிலாக காசு கொடுத்துடுப்பா! நான் சேத்து வச்சுக்கிறேன்” என வாங்கிக் கொண்டு விட்டாள்!! 

மீண்டும் சந்திப்போம்….


ஆதி வெங்கட்.

Saturday, November 12, 2011

வந்தேன் வந்தேன் மீண்டும் வந்தேன்…………எல்லாரும் எப்படி இருக்கீங்க? தீபாவளியெல்லாம் நல்லபடியாக சென்றதா? நீண்ட இடைவெளிக்குப் பின் வலைப்பக்கம் இப்போது தான் வர முடிந்தது. வலைச்சர பொறுப்பின் இறுதி நாளன்று தான் ஸ்ரீரங்கத்திலிருந்து தீபாவளிக்காக மாமனார், மாமியார் தில்லிக்கு வந்திருந்தார்கள். குடும்பக் கதைகளையும், ஊர்க்கதைகளையும் பேசுவதற்கே நேரம் சரியாக போய்விட்டது.

அவர்கள் இருக்கும் போது கணினி முன்னால் உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்காதே…. தீபாவளிக்காக செய்த பட்சணங்களை மட்டும் தீபாவளி முதல் நாள் வலையேற்றினேன். தில்லியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட படியால் சென்ற வாரம் ஊருக்கு கிளம்பி விட்டார்கள்.

இங்கே தில்லியில் ஒண்ணு சொல்லுவாங்க, தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ள ஆரம்பித்தால் மார்ச் மாதத்தில் வரும் ஹோலியன்று கழட்டலாம் என்று. ஆனால் இன்னும் அவ்வளவாய்க் குளிர் ஆரம்பிக்கவில்லை. ரோஷ்ணிக்கு மட்டும் பள்ளியில் குளிர்கால ஆடைகள் சென்ற வாரத்திலிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.

டிசம்பர் இறுதியிலிருந்து பொங்கல் வரை பதினைந்து நாட்களுக்கு ஒரு கடுங்குளிர் வாட்டும். அப்போது தான் பள்ளியிலும் விடுமுறை இருக்கும். மற்றபடி ஒரு ஸ்வெட்டர், சாக்ஸ், வீட்டிலும் செருப்பு, வெளியில் போகும் போது ஒரு ஸ்கார்ப் அல்லது மப்ளர் அணிந்து பாதுகாத்துக் கொண்டால் குளிர்காலம் ஆனந்தமானது தான். வியர்த்துக் கொட்டும் கோடையைக் காட்டிலும் குளிர் மேலானது என்பது என் கருத்து.

நேற்று புதியதாக வந்த இந்த இடத்தில் தோழி ஒருவர் கேட்டார். இது உங்களுக்கு தில்லியின் முதல் குளிர்காலமா என்று……. இது என்னுடைய பத்தாவது குளிர்காலம். கோடையை சமாளிக்கக் கூட ஊருக்கு போகலாமா என்று சொல்வேன். ஆனால் குளிர்காலத்தை மிஸ் பண்ணியதேயில்லை. இந்த குளிர்காலத்தை பற்றிய செய்திகளை வரும் பதிவுகளில் அவ்வப்போது தருகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.