Saturday, October 8, 2011

நவராத்திரி நினைவலைகள்சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் வீட்டில் வழக்கம் இல்லை. அம்மாவின் பிறந்த வீட்டில் கொலு வழக்கம் உண்டு. ஆனால் அப்பா வீட்டில் இல்லை. அதனால் எனது கொலு வைக்கும் ஆசை நிராசையாகிவிட்டது.

வருடா வருடம் நாங்கள் இருந்த பகுதியில் சிலர் கொலுவுக்கு அழைப்பார்கள். உள்ளூரிலேயே மாமா வீடு இருந்ததால் மாமா வீட்டு கொலு பார்க்கவும் செல்வோம். எங்கள் பகுதியில் இருந்த எங்கள் தூரத்து உறவினரின் வீட்டில் கொலு பார்க்க போகலாம் என்று அம்மா அழைத்தாலே எனக்கு வெலவெலத்துப் போகும். வேண்டாம் என்று தவிர்ப்பேன். அடிக்கடி செல்லாவிட்டாலும் இந்த மாதிரி வரலஷ்மி நோன்புக்கு, நவராத்திரிக்கு, பொங்கலுக்கு, என்று என்னை இழுத்துக் கொண்டு செல்வார்.

தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி எனக்கு எல்லாவற்றிற்குமே பயம்! அப்படியிருக்க அவங்க வீடே ஒரு சின்ன மிருகக்காட்சிசாலை மாதிரி நாய், பூனை, முயல், பறவைகள், என்று விதவிதமாக அதுக இஷ்டத்துக்கு உலாவிக் கொண்டு இருக்கும். இவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வைக்க அவர்களுக்கு பிடிக்காது. படி ஏறும்போதே நாயின் ”கிர்….” என ஆரம்பித்து குரைப்பதைக் கேட்டதும் வயிற்றுக்குள் டி[D].டி.எஸ்.-சில் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்து விடும்.

என் மேல் அந்த நாய் பாய்ந்து விடாமல் இருக்க, அதை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பத்து நிமிடம் நடுங்கிக் கொண்டே கொலுவை பார்ப்பது போல பாவனை செய்து விட்டு (உதறும் உதறலில் கொலுவை எங்கே பார்ப்பது? நேரடியாக நாயைப் பார்த்து, ஓரக்கண்ணால் கொலுவை பார்த்து) வெற்றிலை பாக்கை வாங்கிக் கொண்டு ”கிளம்பலாம்” என்று அம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கூத்து. வருடம் தான் கூடியதே தவிர என் பயம் போகவேயில்லை.

திருமணமாகி வந்த பின்னாலாவது கொலு வைக்கலாமென்றால் புகுந்த வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கமில்லை. தில்லியில் நாங்கள் இருந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. எப்படியும் இந்த ஒன்பது நாளிலும் குறைந்த பட்சம் 35 வீடுகளிலிருந்தாவது கொலுவுக்கு அழைப்பார்கள். தினமும் நாலைந்து வீடுகளுக்காவது செல்வோம்.  தினம் தினம் விதவிதமான சுண்டல் சேகரிப்பு தான் போங்க! அத்தனையும் என்ன செய்யறது என்று குழம்பிப் போனபோது என் தோழி சொன்ன யோசனை தான், நவராத்திரி சுண்டல் சப்ஜி!

இப்ப வீடு மாத்தி வந்த பிறகு இந்த ஏரியாவில் முதல் நவராத்திரி.  யாரையும் தெரியாது என்று நினைத்து ‘நவராத்திரி கலெக்‌ஷன்’ போச்சே என சோகமாய் இருந்தபோது, தெரிந்த நண்பரின் மனைவி ஒரு பட்டியல் கொடுத்து ”தினமும் இந்தந்த வீடுகளில் கொலு வைத்து, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது, பாராயணத்துக்கு ஆள் இல்லை, அதனால கண்டிப்பா வந்துடுங்க” எனச் சொன்னார்கள். 

இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டில் நடந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்றதில், இந்த ஏரியாவில் யாரும் தெரியலையே என்று இருந்ததற்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய பேர் வீட்டில் விதவிதமான பொருட்களும் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுத்தார்கள்.  அவற்றில் சில கீழே….


இன்னும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது இந்த நவராத்திரியில்.  ரோஷ்னியும் என் கூட தினமும் வந்ததால் அவளுக்கும் இந்த ஸ்லோகங்கள் சொல்வதில் நாட்டம் வந்து இருக்கிறது.  இப்போது ஐந்து-ஆறு ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறாள். “நாமும் கொலு வைக்கலாமே, அம்மா”ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.  அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்.  பார்க்கலாம்…

மீண்டும் சந்திப்போம்..

ஆதி வெங்கட். 

43 comments:

 1. நல்ல அழகான பதிவு. நாய் உள்ள வீடுகளில் நுழையவே எனக்கும் பயம் தான், இன்றும் கூட.
  என் சிறு வயது பயத்தை தாங்கள் அழகாக எடுத்துக்கூறியுள்ளது வெகு இயல்பாக இருந்தது.

  சின்ன வயதிலிருந்தே கொலு/கொலு பொம்மைகள் மேல் எனக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு. என் அக்கா வீட்டில் வைப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு மட்டும் போய் வருவேன்.

  “வாங்கோ மாமி, பாட்டுப்பாடுங்கோ” என்ற விளம்பரம் ஒன்று என்னால் வருஷாவருஷம் வரையப்பட்டு என் அக்கா வீட்டு கொலுவில் அமர்க்களமாக வைக்கப்படும். வருபவர்கள் பொம்மைகளைவிட அந்த அறிவிப்பில் நான் வரைந்துள்ள ஒரு மாமியின் படத்தை வெகுவாக ரசிப்பதுண்டு.

  நவராத்திரி நாட்களில் தினமும் ஒரு குழுவாக ஒவ்வொருவர் வீட்டிலும் லலிதா சஹஸ்ரநாமம் சொல்வது துபாயில் உள்ள வீடுகளில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.

  தினமும் ஒருவர் வீடு. அனைவரும் கூடிடுவார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டு, பல்வேறு உணவு அயிட்டங்களும் கொண்டு வந்து விடுவார்கள்.

  சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல், பாயஸம், வடை, அப்பளம், புளிசாதம், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், சுண்டல் என பலவகை உணவுகள் பல வீடுகளிலிருந்து வந்து இறங்கி விடும்.

  ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கூடி விடுவார்கள். லலிதா சஹஸ்ர நாமம் பெண்களால் சொல்லப்படும். ஆண்கள் ஒரு அறையில் அரட்டை அடித்துக்கொண்டு இருப்பார்கள். குழந்தைகள் குதூகலமாக வேறு ஒரு ரூமில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

  பூஜை முடிந்ததும் அனைவருக்கும் பஃபே சிஸ்டத்தில் உணவு, அவரவர்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டு சாப்பிட்டு விட்டு, தூக்கியெறியும் தட்டுக்களை, கோப்பைகளை ஒரு பெரிய உரச்சாக்குப்பையில் போட்டுவிடுவார்கள். கை அலம்பிக்கொண்டு, காரில் அவரவர்கள் அவரவர்கள் வீடுகளுக்குப் பறந்து விடுவார்கள்.

  தினமும் இது போல ஒவ்வொருவர் வீட்டில் அனைவரும் கூடி பூஜை செய்வார்கள்.

  4 நாட்கள் முன்பு துபாயில் உள்ள என் பெரியமகன் வீட்டுக்கு பிரபல பாடகி திருமதி நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் சாதாரண கரும்பச்சைக்கலர் சுடிதாரில், தன் இரு பெண் குழந்தைகளுடன் வருகை தந்து, எந்த பக்க வாத்யங்களும் இல்லாமல் அழகாக ஒரு முழுப்பாட்டு பாடிச்சென்றுள்ளனர். அந்த வீடியோவைப் பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  2004 ஆம் ஆண்டு நவராத்திரி சமயம் நானும் என் மனைவியும் அங்கு இருந்தோம். எல்லா அமர்க்களங்களையும் நேரில் கண்டோம்.

  உங்கள் பதிவைப்பார்த்ததும் அந்த ஞாபகமே வந்தது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  அடுத்த வருஷம் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் உங்கள் வீட்டு கொலுவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 2. ஆஹா பொம்மை கொலு வரவுகள் தாம்பூலம் லட்சண்மாக இருக்கிறதே!

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. அடுத்தவருடம் உங்கள் வீட்டுக்கொலு படம் போடுங்கள்.

  ReplyDelete
 4. பொம்மைகள் நீங்களே அழகாக செய்திருந்தீர்களே! அருமையான பிள்ளையார் நீல கலரில் அற்புதமாக இருந்தாரே!

  ReplyDelete
 5. இனிய நினைவலைகள்...

  ரோஷ்னிக்கு வாழ்த்துக்கள்.

  அடுத்த நவராத்திரியில் உங்க வீட்டுக் கொலு கலக்கட்டும்.

  ReplyDelete
 6. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கொலு - புதிய உறவுகளை ஏற்படுத்தி தருகிறது என்கிறீர்கள்!

  ****
  நானும் கொலு பற்றி எழுதியுள்ளேன்! பாருங்கள்

  சென்னையில் கடந்தமுறை சர்க்கஸ்-ஐ மூர் மார்க்கெட் அருகே அமைத்திருந்த பொழுது, அண்ணன் பையனை அழைத்துப்போவதாக வாக்குறுதி தந்தேன். வேலை நெருக்கடியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றமுடியவில்லை. பல நாள்கள் முறைத்துக்கொண்டே திரிந்தான்.

  பிராயசித்தமாக நவராத்திரி கொலு ஒன்றிக்கு அழைத்துப் போகலாம் என யோசித்தேன். சமயோசிதமாய், இந்தமுறை அவனிடம் எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லை. சென்னையில் எங்கு நிறைய்ய... பொம்மைகள் கொண்டு கொலு அமைப்பார்கள் என தேடியபொழுது, சென்னை தீவுத்திடலில் கொலு வைத்திருப்பதாக செய்தி பார்த்தேன்.
  http://nondhakumar.blogspot.com/2011/10/blog-post.html

  ReplyDelete
 7. நவராத்திரி கொலுவுக்கு சென்ற இடத்தில் பைரவரிடம் பயந்த அனுபவங்கள் நல்ல வேடிக்கை ..
  டெல்லி தாம்பூல பரிசுகள் வண்ண மயமாக இருக்கிறது ..
  அடுத்த வருடம் கொலுவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் ....

  ReplyDelete
 8. உறவுகளை வளர்த்துக் கொள்ளவும்
  மென்கலைகளில் ஆர்வம் கொள்ளவும்
  அதை வெளிப்படுத்தவும் உண்மையில்
  கொலு நன்றாக ப்யன்படுகிறது
  அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. இனிமையான நினைவுகள் ஆதி.

  தாம்பூலத்தில் வைத்துக்கொடுத்த பொருட்கள் அழகாக இருக்கு.

  // “நாமும் கொலு வைக்கலாமே, அம்மா”ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள். அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும். பார்க்கலாம்…//

  கட்டாயம் கொலு வைக்கவும். குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நவராத்திரியில் நவரசமும் அனுபவப்பட்டிருக்கிறீர்கள். :-))

  சதி லீலாவதியில் வரும் நாய் வசனம் ஞாபகம் வருகிறது.

  “குலைக்கிற நாய் கடிக்காது மாமி!”

  ”நோக்கும் நேக்கும் தெரியரது.. நாய்க்கு தெரியனுமோல்யோ!!”

  :-))

  ReplyDelete
 11. நவராத்திரி பெண்களுக்கான பண்டிகை என்றாலும் எங்க ஊரில் எனக்கென்று ஒரு பணியை ஒதுக்கியிருந்தார்கள். தென்னங்கன்று, வாழைக்கன்று வாங்கி வருவது; கொலுவுக்கு அலங்கார மின்விளக்குகள் அமைப்பது; பூங்கா, பழநி மலை, தெப்பக்குளம் போன்றவற்றை அமைக்கத் தேவையான களிமண், புல், அட்டைப்பெட்டிகள் ஆகியவற்றை நான்தான் சேகரித்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒவ்வொரு நாளும் பலவீட்டுச் சுண்டல் சாப்பிட்டது இன்னும் ஞாப்கம் இருக்கிறது. :-)

  ReplyDelete
 12. //“நாமும் கொலு வைக்கலாமே, அம்மா”ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள். அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்.//

  எல்லா வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கத்தை ஆரம்பிச்சு வைக்கிறதே புள்ளைங்கதானே :-))

  ReplyDelete
 13. உங்க அப்பா வீட்டில் அம்மா ஏன் கொலு வைக்கவில்லை? அவர்களுக்கு வைத்து அனுபவம் இருப்பதால் வைத்திருக்கலாமே? மகளுக்காக இனி நீங்களும் வைப்பீங்க இல்லியா?

  கடைசி படத்தில் இருப்பது என்ன? வித விதமான கைப்பைகள் போல இருக்கே?

  ReplyDelete
 14. இனிமையான நினைவுகள் சூப்பர் படம்

  ReplyDelete
 15. மந்தவெளி நடராஜன்October 9, 2011 at 7:46 AM

  ஆதி வெங்கட் அவர்களே,

  நினைவலைகள் பசுமையாய் இருக்கும்பொழுதினில்-நவராத்திரி பற்றிய எண்ண அலைகளை சுவைபட எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
  சக்தியில்லையேல் சிவமில்லை என்று சக்தி வழிபாட்டைஇன்று வரை ஆண்கள் ஆராதித்தாலும் ஏனோ ஆண்களை நவராத்திரிக்கு இன்றுவரை அழைத்ததற்கான பிரமாணம் கிடைத்ததில்லை. என் சிறுவயதில், என் இருசகோதரிகளை கொலுவிற்கு அழைத்து செல்வேன். ஆனாலும் எனக்கு உள்ளே கூப்பிட்டதாக அல்லது, சுண்டல் கொடுத்ததாகவோ சரித்திரமில்லை. வீட்டிற்கு வந்தவுடன் பல இல்லங்களின் சுண்டல்களில் ஒரு பங்கு எனக்கு கிடைக்கும்.

  மலைமகளும், மகளும், கலைமகளும் கொலுவிருக்கும் வண்ணமய கொலுவில் தங்களுக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் நிறைவாக இருந்தது. இந்த கொலு வைப்பதின் மூலம் பக்தி மணத்தினை பரப்பிடவும் , மக்கள் அன்பை பரிமாறிக்கொள்ளவும், புதிய நட்புக்களை பெற்றிட உதவுவதோடு நமது கலாச்சாரங்களை பாதுகாத்திட உதவிடும் என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இருப்பதிற்கில்லை.
  நந்தன ஆண்டு, தங்களுக்கு, தாங்கள் கொலு வைக்கும் ஆசையினை நிறைவேற்றிடவல்ல ஆண்டாக அமைந்திட, எங்கள் மனமார்ந்த
  வாழ்த்துக்கள். சிவன்களை ஒரு மாற்றத்திற்க்காகவேனும்,கூப்பிட எண்ணினால், எம்மை நினைவில் கொள்ளவும். நான் லலிதா சஹஸ்ரநாமாவை இயம்பிட உறுதி அளிக்கிறேன்

  மந்தவெளி நடராஜன்
  08-10-2011.

  ReplyDelete
 16. அடுத்த வருடம் உங்கள் வீட்டு கொலு ஃபோட்டோ போட்டுடுங்க.ஓக்கேவா?.நல்ல நினைவலைகள்தான்.
  பகிர்விற்கு நன்றி :-))

  ReplyDelete
 17. நாயோட பயந்துகிட்டு கொலு :)) ஒரே சிரிப்பு போங்க.. நானும் உங்களைபோல ஒரு தெனாலி தான்..

  வைங்க.. நாங்களும் வரம்.. தூரத்துல இருகீங்க இல்லன்னா.. எங்கவீட்டுக்கும் வரலாம்ல.. ட்ரை செய்யுங்க :))

  ReplyDelete
 18. நவராத்திரி கொண்டாடுவது எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா?அழகா சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 19. கொலுவைப்பற்றிய சுவாரஸ்யமான பதிவு! சின்ன வயசில் நானும் என் இளைய சகோதரியும் ஒவ்வொரு வீடாகச்சென்று பாடி பாராட்டுக்கள் வாங்கியது நினைவுக்கு வந்தது!!

  ReplyDelete
 20. http://simulationpadaippugal.blogspot.com/2011/09/blog-post_29.html

  ReplyDelete
 21. http://simulationpadaippugal.blogspot.com/2011/10/2011.html

  ReplyDelete
 22. இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டில் நடந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்றதில், இந்த ஏரியாவில் யாரும் தெரியலையே என்று இருந்ததற்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள்.//

  புதியநட்பு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எல்லாம் நம் மனதுக்கு நிறைவு.

  அடுத்தமுறை நீங்களும் கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு உங்கள் மகளின் ஆசையை பூர்த்தி செய்யுங்கள்.

  ReplyDelete
 23. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  மகிழ்ச்சி சார்.தங்களின் கருத்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 24. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் கருத்துக்கு நன்றிங்க. அடுத்த வருடம் எங்க வீட்டு கொலு படம் போட ஆண்டவன் அருள் புரியட்டும்.

  ReplyDelete
 25. வாங்க மாதேவி,

  தங்களின் கருத்துக்கு நன்றிங்க. ரோஷ்ணிக்கு வாழ்த்தை சொல்லி விட்டேன்.

  ReplyDelete
 26. வாங்க நொந்தகுமாரன்,

  தங்களின் கருத்துக்கு நன்றிங்க. உங்கள் பதிவை கண்டிப்பாக படிக்கிறேன்.

  ReplyDelete
 27. வாங்க பத்மநாபன்,

  தங்களின் கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 28. வாங்க ரமணி சார்,

  தங்களின் இனிய கருத்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 29. வாங்க ரமா,

  தங்களின் இனிய கருத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 30. வாங்க ஆர்.வீ.எஸ்,

  தங்களின் கருத்திற்கு நன்றி சகோ.

  சதிலீலாவதி வசனம் நினைவுபடுத்தி மகிழ்வித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 31. வாங்க சேட்டை,

  உங்க நவராத்திரி நினவலைகளை அழகாக சொல்லிட்டீங்க. நன்றிங்க.

  ReplyDelete
 32. வாங்க அமைதிச்சாரல்,

  ஆமாங்க. நீங்க சொல்றது சரி தான்.

  நன்றிங்க.

  ReplyDelete
 33. வாங்க ஹுஸைனம்மா,

  புகுந்த வீட்டில் வழக்கம் இருந்தா தான் வைப்பாங்க.இப்பல்லாம் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தா வைக்கலாம் என்கிறார்கள்.

  அப்பா வீட்டில் வழக்கம் இல்லாததால் அம்மா வைக்கவில்லை. நானும் மாமியாரிடம் கேட்டிருக்கிறேன். பார்க்கலாம்...

  படத்தில் இருப்பது ரெண்டு சின்ன கைப்பை, இரண்டு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடிகள், ஒரு விளக்கு, ட்ரேயும் தாம்பூலத்தில் வைத்து கொடுத்தது தான்.

  ReplyDelete
 34. வாங்க வைரை சதீஷ்,

  நன்றிங்க.

  ReplyDelete
 35. வாங்க மந்தவெளி நடராஜன் அவர்களே,

  தங்களின் நீண்ட கருத்துரைக்கும் உங்கள் சிறு வயது நினைவலைகளுக்கும் நன்றி.எங்க வீட்டில் கொலு வைத்தால் எல்லோருக்கும் அழைப்புண்டு.

  ReplyDelete
 36. வாங்க ராஜி,

  தங்களின் கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 37. வாங்க முத்துலெட்சுமி,

  நீங்களும் என் கட்சி தானா!
  ஒரே ஊரில் இருந்திட்டு அடிக்கடி பார்க்க சந்தர்ப்பம் அமைய மாட்டேங்குது....

  ReplyDelete
 38. வாங்க லக்ஷ்மிம்மா,

  தங்களின் இனிய கருத்திற்கு நன்றிம்மா.

  ReplyDelete
 39. வாங்க மனோம்மா,

  ஒவ்வொரு வீட்டிற்கும் பாவாடை சட்டை போட்டுக் கொண்டு செல்வது அலாதியானது. இப்போ என் மகள் ஒன்பது நாளும் விதவிதமான பாவாடைகள் தான்.

  உங்க கொசுவத்தி நல்லா இருந்ததும்மா. நன்றிம்மா.

  ReplyDelete
 40. வாங்க சார்,

  உங்க இடுகைகளை முன்பே படித்து விட்டேன். அழகா இருந்தது.

  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 41. வாங்க கோமதிம்மா,

  தங்களின் கருத்திற்கு நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…