Saturday, October 1, 2011

நவராத்திரி சுண்டல் சப்ஜிசுண்டல் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். சப்ஜி வட இந்தியர்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட செய்யும் ஒரு சைட் டிஷ். ஆனால் நாம் இன்று பார்க்கப் போவது சுண்டல் சப்ஜி. இந்த சப்ஜியை ஒரு நவராத்திரி சமயத்தில் என் தோழி சொல்லிக் கொடுத்தார். நவராத்திரி சமயத்தில் நாம் கொலு பார்க்கச் செல்லும் வீடுகளிலெல்லாம் சுண்டல் தருவார்கள். நாலைந்து வீடுகளுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தானியத்தில் சுண்டல் தருவதுண்டு. அனைத்தையும் நாம் சாப்பிடுவது கடினம். தூக்கி எறியவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். அதை இந்த மாதிரி சுண்டல் சப்ஜியாக செய்து சப்பாத்திக்கு தந்தால் சுவையாகவும் இருக்கும் விரைவில் காலியும் ஆகிவிடும்.தேவையானப் பொருட்கள் :-

சுண்டல்ஒன்றிலிருந்து ஒன்றரை கப் (மூன்று நான்கு விதமான பயறுகள் இருந்தால் அதிலும் முக்கியமாக வேர்க்கடலை இருந்தால் நன்றாக இருக்கும்).

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சிஒரு சின்ன துண்டு
பச்சை மிளகாய் – 1 () 2
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்புசிறிதளவு (சுண்டலிலேயே உப்பு இருக்கும் இது க்ரேவிக்கு)
எண்ணெய்தேவையான அளவு

தாளிக்க :-

சீரகம் - சிறிதளவு

செய்முறை :-

வெங்காயத்தை தோலுரித்து நான்காக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் வெட்டிக் கொண்டு, இஞ்சியை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். மிக்சியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் இதில் சுண்டலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஐந்திலிருந்து பத்து நிமிடம் கொதிக்க விட்டால் சுவையான சுண்டல் சப்ஜி சாப்பிட தயார். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற காம்பினேஷன்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

சுண்டல் படம் http://adupankarai.kamalascorner.com/ என்ற பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது...  18 comments:

 1. ரீமிக்ஸ் சப்ஜி பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. 2 to 3 in INDLI.

  சுண்டலை வீணாக்காமல் ரீசைக்கிள் செய்யச்சொல்லுகிறீர்கள்.

  எவ்வளவு பேர்கள் இதைப் பொறுமையாகச் செய்து பார்பார்களோ!

  நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  நவராத்திரி வெள்ளிக்கிழமை என் வீட்டுக்கு (என் வலைப்பூவுக்கு) வருவீர்கள் என்று நினைத்து கூடை கூடையாக பூ (ஜாதிப்பூ etc.,) வாங்கி வைத்துக் காத்திருந்தோம்.

  எங்கெங்கோ இப்படி சுண்டல் சேகரிக்கச் சென்று விட்டீர்களே!!

  பரவாயில்லை இன்று புரட்டாசி சனிக்கிழமையாவது வாங்கோ!!

  vgk

  ReplyDelete
 3. பயனுள்ள பதிவு
  இங்கு குறைந்த பட்சம் பத்துவீட்டு
  சுண்டல் எடுத்துக்கொண்டு மனைவி வருவாள்
  பிடித்த இரண்டுக்குமேல் வீணாகத்தான் போகும்
  இனி வீணாக்கமாட்டோம்.நன்றி
  தொடர வாழ்த்துக்கள் த.ம 4

  ReplyDelete
 4. வீணாக்காம சப்ஜி செய்யணும்ன்னே சுண்டல் செய்யற பார்ட்டி நாங்க :-))))

  ReplyDelete
 5. சுண்டல் சப்ஜி நல்ல ஐடியா சகோ....செய்முறை விளக்கமும் அருமை...இதை சாப்பிட்டு பழகிய பிறகு நவராத்திரிக்கு அப்புறமும் சுண்டல் சப்ஜியே வேணும்னு பசங்க கேட்க போறாங்க பாருங்க.....

  ReplyDelete
 6. சப்பாத்தி சுண்டல் நல்ல காம்பினேசன்...

  ReplyDelete
 7. சுண்டல் சப்ஜி ஜோர்...

  ReplyDelete
 8. போன பதிவுலயே கவனிச்சேன் - மிக்ஸி ஜாரையும் கழுவி சேத்துக்கச் சொன்னது; இந்தப் பதிவுல, வீணாக்காமல் ரீமிக்ஸ் பண்ணுவது - சந்தேகமேயில்லை, நீங்களும், நானும் ஒரே கட்சி!! :-))))))

  ReplyDelete
 9. சுண்டல் சப்ஜி ஐடியா நல்லா இருக்கே.

  ReplyDelete
 10. சுண்டல் சப்ஜி மிகவும் அருமை,பக்குவம் சூப்பர்,ருசி அமோகம்.நாங்கள் திருச்சியில் இருந்த சமயம் பக்கத்தாத்திலும், எதிர்த்தாத்திலும் கொலு வைப்பாங்க,இரண்டு மாமியும் முதலில் அழைக்க வருவதே எங்களைத்தான்,அவர்கள் நினைவு வந்துவிட்டது.விஜயதசமி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. உங்கள் சுண்டல் சப்ஜி ஐடியாவைப் படித்து விட்டு இனி ஒவ்வொரு கொலு வைக்கிற வீடுகளிலும் விசிட் அடித்து இன்னும் கொஞ்சம் சுண்டல் கொடுங்கள் என்று கேட்டு வாங்கப் போகிறார்கள்.

  ReplyDelete
 12. சுண்டல் சப்ஜி அருமை. தினம் செய்த சுண்டல் படமா?
  படம் நன்றாக இருக்கிறது.(ருசியும் அற்புதமாய் தான் இருக்கும்)

  பூபருப்பு சுண்டல் செய்த அன்று ஒரே மழை இங்கு, நிறைய பேர் வரவில்லை கொலுவுக்கு அன்று. கொஞ்சம் பச்சரிசி ஊறவைத்து மிளகாய் பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின் பருப்பைப் போட்டு ஒரு சுற்று சுற்றி இரவு அடை செய்தேன் .

  ReplyDelete
 13. ஆதி , சுண்டல் படம் உங்களோடது நினைத்து விட்டேன் பின் கீழேப் பார்த்து தெரிந்து கொண்டேன்.கமலாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. சுண்டல் சப்ஜி மிகவும் அருமை,

  ReplyDelete
 15. சுண்டல் அருமை ...புளிப்பு அதிகம் வேண்டும் என்றால் கொஞ்சம் எலுமிச்சை சொட்டுகள் இரண்டு மூன்று விடலாம்.
  நன்றி ரெசிபிக்கு.

  அன்பு வலைபூ வாசகர்களே , சவால் போட்டியில் பங்கு பெரும் என் சிறுகதை:

  B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

  ReplyDelete
 16. ஆகா சுண்டல் படத்தைப் பார்க்கும்போதே உடனும்
  செய்து சாப்பிடவேண்டும்போல் உள்ளது .மிக்க நன்றி சகோதரி அருமையான பகிர்வுக்கு ..............

  ReplyDelete
 17. கருத்துரை கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…