Tuesday, October 25, 2011

தீபாவளி நல்வாழ்த்துகள்


அன்பு நண்பர்களே,

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.  தீபாவளி என்றால் இனிப்பும் காரமும் இல்லாமலா? நான் செய்த இனிப்பு, காரம் கீழே. 


படத்தில்: 

  • மைசூர்பாக்
  • மிக்சர்,
  • டபுள் லேயர் தேங்காய் பர்ஃபி
  • கறிவேப்பிலை தேன்குழல்,
  • தீபாவளி மருந்து.

எல்லோரும் எடுத்துக்கோங்க.... 

தீபாவளியை இனிமையாக கொண்டாடுங்க...


நட்புடன்

ஆதி வெங்கட்
புது தில்லி


Sunday, October 16, 2011

நன்றி மறப்பது நன்றன்று
அன்புள்ள நண்பர்களே,

”நன்றி” மூன்றெழுத்து தான் இந்த வார்த்தையில் என்றாலும் இந்த வார்த்தைக்கு பலம் அதிகம்.  கடந்த ஒரு வாரமாக புதிய புதிய வலைப்பதிவாளர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கும் ”வலைச்சரம்” வலைப்பூவில் என்னையும் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் என நியமித்ததற்கு நான் சீனா அய்யாவுக்கு “நன்றி” சொல்லாமல் இருந்தால் அது நன்றாயிராது. வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு எனது நன்றி. 

நான் ஆசிரியர் பொறுப்பு ஏற்ற இந்த ஒரு வாரகாலத்தில் வலைச்சரத்தில் என் பதிவுகளை நாள்தோறும் படித்தும் கருத்துரையை தொடர்ந்து அளித்தும் ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்கடுத்து நன்றி சொல்ல வேண்டியது என்ற கணவருக்குத் தாங்க…. ஏனென்றால் இந்த ஒரு வாரமும் எந்த வித டென்ஷனும் இல்லாமல் நான் பதிவிடுவதற்கு, இதே வாரத்தில் தமிழ்மணம் நட்சத்திர பதிவராக இருந்தும், எனக்கு முழு ஒத்துழைப்பும், உதவிகளும் செய்தார்.

அடுத்து என் மகள் ரோஷ்ணிக்கு தான். அப்பாவும், அம்மாவும் கணினியிலேயே பிஸியாக இருந்தாலும் எங்களை படுத்தாமல் சமர்த்தாக படித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தாள். அதுக்குத் தானே தினமும் டோரா படத்தை போட்டுக் கொண்டிருந்தேன்.

நீங்கள்லாம் டோரா படம் போட்டதற்கு காரணம் என்னன்னவோ நினைச்சு ஏமாந்திருப்பீங்க இல்ல….

இந்த ஆசிரியப் பொறுப்பில் சீரிய முறையில் நான் பணியாற்ற எனக்கு நல்ல உடல்நலத்தை தந்த கடவுளுக்கும் நன்றி…..

இனி வரும் காலத்தில் என் வலைப்பூவில் வரும் பதிவுகளுக்கும் உங்கள் அன்பும், ஆதரவும் எனக்கு தர வேண்டுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


Monday, October 10, 2011

வலைச்சர வாரம்….அன்புள்ள வலையுலக நண்பர்களே,

இந்த பதிவு உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரியப்படுத்தவே பகிர்கிறேன். என்னது “அப்பாடா, இனிமே கோவை2தில்லியில் பதிவுகள் ஒன்றும் வராது!” - ன்னு நினைச்சீங்களா?  அதுதான் இல்லை.

மிகவும் பொறுப்பான ஒரு பதவி என்றால் அது ஆசிரியர் பதவிதான்.  அந்த ஆசிரியர் பதவி எனக்குக் கொடுத்திருக்கிறார் அன்பின் சீனா ஐயா அவர்கள். ஆமாங்க, இன்று [10.10.2011] தொடங்கும் இந்த வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் நாந்தானுங்!

இதுவரை எனக்கு அளித்து வந்த ஆதரவினை தொடர்ந்து அளியுங்க.  இந்த வாரத்தின் எல்லா நாளும் வலைச்சரம் பக்கம் வந்து எல்லா பதிவுகளையும் படித்து, கருத்து எழுதி, அறிமுகம் செய்யப்பட்ட எல்லோருடைய பக்கங்களையும் படிங்க!

சரியா?  ஓவர் டு வலைச்சரம்….  அப்படின்னா, கோவை2தில்லியில் ஒருவாரம் விடுமுறையா எனக் கேட்டால், அதுதான் இல்லை. இங்கேயும் ஒன்றிரண்டு இடுகைகள் வரும்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

Saturday, October 8, 2011

நவராத்திரி நினைவலைகள்சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் வீட்டில் வழக்கம் இல்லை. அம்மாவின் பிறந்த வீட்டில் கொலு வழக்கம் உண்டு. ஆனால் அப்பா வீட்டில் இல்லை. அதனால் எனது கொலு வைக்கும் ஆசை நிராசையாகிவிட்டது.

வருடா வருடம் நாங்கள் இருந்த பகுதியில் சிலர் கொலுவுக்கு அழைப்பார்கள். உள்ளூரிலேயே மாமா வீடு இருந்ததால் மாமா வீட்டு கொலு பார்க்கவும் செல்வோம். எங்கள் பகுதியில் இருந்த எங்கள் தூரத்து உறவினரின் வீட்டில் கொலு பார்க்க போகலாம் என்று அம்மா அழைத்தாலே எனக்கு வெலவெலத்துப் போகும். வேண்டாம் என்று தவிர்ப்பேன். அடிக்கடி செல்லாவிட்டாலும் இந்த மாதிரி வரலஷ்மி நோன்புக்கு, நவராத்திரிக்கு, பொங்கலுக்கு, என்று என்னை இழுத்துக் கொண்டு செல்வார்.

தெனாலி படத்தில் வரும் கமல் மாதிரி எனக்கு எல்லாவற்றிற்குமே பயம்! அப்படியிருக்க அவங்க வீடே ஒரு சின்ன மிருகக்காட்சிசாலை மாதிரி நாய், பூனை, முயல், பறவைகள், என்று விதவிதமாக அதுக இஷ்டத்துக்கு உலாவிக் கொண்டு இருக்கும். இவற்றை எல்லாம் கூண்டில் அடைத்து வைக்க அவர்களுக்கு பிடிக்காது. படி ஏறும்போதே நாயின் ”கிர்….” என ஆரம்பித்து குரைப்பதைக் கேட்டதும் வயிற்றுக்குள் டி[D].டி.எஸ்.-சில் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்து விடும்.

என் மேல் அந்த நாய் பாய்ந்து விடாமல் இருக்க, அதை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பத்து நிமிடம் நடுங்கிக் கொண்டே கொலுவை பார்ப்பது போல பாவனை செய்து விட்டு (உதறும் உதறலில் கொலுவை எங்கே பார்ப்பது? நேரடியாக நாயைப் பார்த்து, ஓரக்கண்ணால் கொலுவை பார்த்து) வெற்றிலை பாக்கை வாங்கிக் கொண்டு ”கிளம்பலாம்” என்று அம்மாவை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் கூத்து. வருடம் தான் கூடியதே தவிர என் பயம் போகவேயில்லை.

திருமணமாகி வந்த பின்னாலாவது கொலு வைக்கலாமென்றால் புகுந்த வீட்டிலும் கொலு வைக்கும் வழக்கமில்லை. தில்லியில் நாங்கள் இருந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. எப்படியும் இந்த ஒன்பது நாளிலும் குறைந்த பட்சம் 35 வீடுகளிலிருந்தாவது கொலுவுக்கு அழைப்பார்கள். தினமும் நாலைந்து வீடுகளுக்காவது செல்வோம்.  தினம் தினம் விதவிதமான சுண்டல் சேகரிப்பு தான் போங்க! அத்தனையும் என்ன செய்யறது என்று குழம்பிப் போனபோது என் தோழி சொன்ன யோசனை தான், நவராத்திரி சுண்டல் சப்ஜி!

இப்ப வீடு மாத்தி வந்த பிறகு இந்த ஏரியாவில் முதல் நவராத்திரி.  யாரையும் தெரியாது என்று நினைத்து ‘நவராத்திரி கலெக்‌ஷன்’ போச்சே என சோகமாய் இருந்தபோது, தெரிந்த நண்பரின் மனைவி ஒரு பட்டியல் கொடுத்து ”தினமும் இந்தந்த வீடுகளில் கொலு வைத்து, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது, பாராயணத்துக்கு ஆள் இல்லை, அதனால கண்டிப்பா வந்துடுங்க” எனச் சொன்னார்கள். 

இந்த ஒன்பது நாளும் ஒவ்வொரு வீட்டில் நடந்த லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்றதில், இந்த ஏரியாவில் யாரும் தெரியலையே என்று இருந்ததற்கு புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய பேர் வீட்டில் விதவிதமான பொருட்களும் தாம்பூலத்துடன் வைத்துக் கொடுத்தார்கள்.  அவற்றில் சில கீழே….


இன்னும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது இந்த நவராத்திரியில்.  ரோஷ்னியும் என் கூட தினமும் வந்ததால் அவளுக்கும் இந்த ஸ்லோகங்கள் சொல்வதில் நாட்டம் வந்து இருக்கிறது.  இப்போது ஐந்து-ஆறு ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறாள். “நாமும் கொலு வைக்கலாமே, அம்மா”ன்னு சொல்ல ஆரம்பித்து விட்டாள்.  அடுத்த வருடமாவது எங்களது வீட்டிலும் கொலு வைக்க வேண்டும்.  பார்க்கலாம்…

மீண்டும் சந்திப்போம்..

ஆதி வெங்கட். 

Saturday, October 1, 2011

நவராத்திரி சுண்டல் சப்ஜிசுண்டல் என்றால் என்னவென்று நமக்குத் தெரியும். சப்ஜி வட இந்தியர்கள் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட செய்யும் ஒரு சைட் டிஷ். ஆனால் நாம் இன்று பார்க்கப் போவது சுண்டல் சப்ஜி. இந்த சப்ஜியை ஒரு நவராத்திரி சமயத்தில் என் தோழி சொல்லிக் கொடுத்தார். நவராத்திரி சமயத்தில் நாம் கொலு பார்க்கச் செல்லும் வீடுகளிலெல்லாம் சுண்டல் தருவார்கள். நாலைந்து வீடுகளுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தானியத்தில் சுண்டல் தருவதுண்டு. அனைத்தையும் நாம் சாப்பிடுவது கடினம். தூக்கி எறியவும் மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். அதை இந்த மாதிரி சுண்டல் சப்ஜியாக செய்து சப்பாத்திக்கு தந்தால் சுவையாகவும் இருக்கும் விரைவில் காலியும் ஆகிவிடும்.தேவையானப் பொருட்கள் :-

சுண்டல்ஒன்றிலிருந்து ஒன்றரை கப் (மூன்று நான்கு விதமான பயறுகள் இருந்தால் அதிலும் முக்கியமாக வேர்க்கடலை இருந்தால் நன்றாக இருக்கும்).

பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சிஒரு சின்ன துண்டு
பச்சை மிளகாய் – 1 () 2
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
உப்புசிறிதளவு (சுண்டலிலேயே உப்பு இருக்கும் இது க்ரேவிக்கு)
எண்ணெய்தேவையான அளவு

தாளிக்க :-

சீரகம் - சிறிதளவு

செய்முறை :-

வெங்காயத்தை தோலுரித்து நான்காக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் வெட்டிக் கொண்டு, இஞ்சியை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். மிக்சியில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் இதில் சுண்டலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஐந்திலிருந்து பத்து நிமிடம் கொதிக்க விட்டால் சுவையான சுண்டல் சப்ஜி சாப்பிட தயார். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற காம்பினேஷன்.

மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

சுண்டல் படம் http://adupankarai.kamalascorner.com/ என்ற பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது...