Thursday, September 29, 2011

அரிசி தேங்காய் பாயசம்


முன்பு பிள்ளையார்பிள்ளையார் பதிவில் அரிசி தேங்காய் பாயசத்தின் படத்தை மட்டும் பகிர்ந்திருந்தேன். இப்போது அதன் செய்முறையை உங்களுடன் பகிர்கிறேன். இது நவராத்திரி சமயம் அல்லவா! இந்த பண்டிகை நாட்களில் ஸ்வாமிக்கு பாயசம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியம் செய்வோம். அதில் ஒரு வித பாயசம் இது. நான் அளவு வைத்து செய்வதில்லை. கண் திட்டம் தான். உங்களுக்காக அளவுகள் கொடுத்திருக்கிறேன்.

தேவையானப் பொருட்கள் :-

பச்சரிசி – 50 கிராம்
தேங்காய்ஒரு மூடி
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய்நான்கு
காய்ச்சிய பால்அரை லிட்டர்.
முந்திரி, திராட்சைசிறிதளவு
நெய்ஒரு ஸ்பூன்

செய்முறை :-

அரிசியை நன்கு அலசி அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தேங்காயை துருவி ஏலக்காயுடன் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ஊறிய அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த அரிசி, தேங்காய், ஏலக்காய் விழுதைச் சேர்த்துக் கூடத் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது கவனமில்லாமல் விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். அரிசி நன்கு வேக வேண்டும். பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அரிசி தேங்காய் கலவையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லத்துடன் சேர்ந்து நன்கு வெந்து விட்டது என்று தெரிந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். ஒரு வாணலியில் நெய்யை விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். காய்ச்சிய பாலை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

சுவையான அரைத்து விட்ட அரிசி தேங்காய் பாயசம் சாப்பிட தயார். நவராத்திரி நாளில் வீட்டுக்கு வருபவர்களுக்கும் இந்த பாயசத்தை கொடுத்து அசத்தலாமே!

பின்குறிப்பு :-

இதே செய்முறையில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு விட்டு மிக்சி ஜாரில் தண்ணீர் விட்டு அதையும் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். விக்கிற விலை வாசியில் எதையும் வீணாக்கக்கூடாது.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


20 comments:

 1. ஆஹா.... ஒரு நாள் செஞ்சுடணும். வெல்லத்துக்கு நமக்கு கோல்டன் ஸிரப் இருக்கு. நோ ஒர்ரீஸ்:-)))))

  ReplyDelete
 2. உருளியில் பாயாசம் அழகா இருக்கு..:) நான் ரெசிப்பிய செய்துபாக்கறனோ இல்லையோ உங்க பதிவு போட்டோ ரசிக்கும்படி இருக்குது ஒவ்வொரு சமையல் போஸ்ட் லயும்..:)

  ReplyDelete
 3. திருமதி பி.எஸ். ஸ்ரீதர் அவர்களின் கருத்து:

  படித்தவுடன் செஞ்சு பார்க்கனும்னு ஆசை வந்துவிட்டது.பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 4. பாயாசத்தைவிட உருளிதான் கண்ணைப் பறிக்குது!! பாயாசம் ஈஸியாத்தான் இருக்கு; ஆனா கைவிடாம கிளறணும்னு சொல்றீங்களே.. அதுதான் கொஞ்சம் யோசிக்கிறேன்... ”அடிபிடிக்கிறது”க்கு என்னை ரொம்பப் பிடிக்கும்!! :-))))))))

  ReplyDelete
 5. ஏலக்காய் மணக்கும் சுவையான பாயசப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. அரைச்சு விட்டதும் நல்லாத்தான் இருக்கு. எங்கூட்ல அரிசியை நல்லா குழைய வேக விட்டுட்டு, அப்றம் அதுலயே எல்லாத்தையும் சேர்த்து செய்வோம். ஒரு சின்னத்துண்டு சுக்கு சேர்த்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்.

  இதையும் ஒரு நாள் செஞ்சு பார்க்கணும். அதென்ன ஒரு நாள்??..... இன்னிக்கே செஞ்சுடறேன் :-))))

  ReplyDelete
 7. 3 to 4 in Indli & 3 to 4 in Tamilmanam also. vgk

  அரிசி தேங்காய் பாயஸம் சூப்பரோ சூப்பர்.
  உடனே டெல்லிக்கு விமான டிக்கெட் வாங்கி உங்கள் ஆத்துக்கு வந்து சூடாக செய்யச்சொல்லி ஒரு சொம்பு நிறைய வாங்கிப்

  பாயாஸம் பருகினால் தான் என்
  ஆயாசம் தீரும் போல உள்ளது.

  vgk

  ReplyDelete
 8. வாங்க டீச்சர்,

  கண்டிப்பா செஞ்சு பாருங்க.

  தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. வாங்க முத்துலெட்சுமி,

  பதார்த்தத்தை செய்து அலங்கரிப்பது வரை தான் நான். போட்டோ எடுப்பது அவர் தான்.உங்கள் பாராட்டை ’அவர்’க்கு தான் சொல்லணும். சொல்லிடறேன்.:))))

  உருளிக்கு ஒரு வரலாறு இருக்கிறது.

  இது மூன்று தலைமுறை கடந்து வந்த உருளி. என் மாமியாரின் அம்மா பயன்படுத்தி, அதற்குப் பிறகு மாமியார், இப்போது நான். அடுத்து என் மகளும் பயன்படுத்தலாம்.

  எங்க வீட்டில் அரிசி உப்புமா, பாயசம், திருவாதிரைக் களி போன்றவை செய்வது எல்லாமே இதில் தான். உப்புமா குக்கரிலோ, வாணலியிலோ செய்தால் பிடிக்காது. இந்த வெங்கல உருளியில் அடிக் காந்தலுடன் இருந்தால் தான் சுவைப்பார்கள். ரோஷ்ணி உள்பட..

  தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 10. வாங்க ஆச்சி,

  கண்டிப்பா செஞ்சு பாருங்க. சுலபமானது தான்

  பின்னூட்டம் போட ஏன் முடிவதில்லை என்று தெரியவில்லை.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 11. வாங்க ஹுஸைனம்மா,

  உருளியின் வரலாறை மேலே முத்துலெட்சுமிக்கு பதிலா போட்டிருக்கிறேன் பாருங்க.

  தண்ணீர் கொஞ்சம் கூடுதலா சேர்த்து குறைந்த தணலில் வச்சுக்கோங்க அடிபிடிக்காது.

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 12. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களின் வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 13. வாங்க அமைதிச்சாரல்,

  எங்கம்மா இப்படி தான் அரைச்சு விட்டு செய்வாங்க. சுக்குப் பொடி அடுத்த முறை சேர்த்து செய்கிறேன்.
  செய்து பார்த்தீங்களா?

  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 14. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  வாங்க சார். செய்து தந்து விட்டால் போச்சு. வீட்டுக்கு யாராவது வருகை புரிந்தால் மகிழ்ச்சி தான்.

  தங்களின் வருகைக்கும், இனிய கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 15. அருமையான பாயசம்.செய்து பார்க்கணும்.

  ReplyDelete
 16. ஆதி, நான் இன்னிக்கு இந்தப் பாயாசம் செஞ்சு சாப்டாச்சு!! நல்ல ரிச் டேஸ்ட்!!

  நாங்க கிண்ணத்தப்பம்னு ஒரு பலகாரம் செய்வோம், இதேபோல அரிசி, தேங்காய்(ப்பால்), சீனி சேர்த்து அரைத்து அவித்து எடுப்பது. அதே டேஸ்ட் தெரிந்தது.

  ரொம்ப ஈஸியா இருந்துது. முக்கியமா, அடி பிடிக்கலை!! :-)))))))

  ReplyDelete
 17. எங்கள் வீட்டில் அம்மா அடிக்கடி விழா காலங்களில் செய்யும் எங்களுக்கு பிடித்த பாயாசம்.

  உருளியை கைவிட்டு நாளாகி விட்டது உங்கள் உருளி பாயாச படத்தை பார்த்ததும் அதில் செய்ய ஆசை வந்து விட்டது செய்து விடுகிறேன் இன்று.

  ReplyDelete
 18. வாங்க ஜிஜி,

  நன்றிங்க.

  ReplyDelete
 19. வாங்க ஹுஸைனம்மா,

  செய்து பார்த்து தெரிவித்ததில் மகிழ்ச்சி. கிண்ணத்தப்பம் பேர் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 20. வாங்க கோமதிம்மா,

  தங்களின் கருத்திற்கு நன்றிம்மா.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…