Monday, September 5, 2011

எப்போதும் பெண்
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின்எப்போதும் பெண்என்ற புத்தகத்தை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் வாசித்திருந்தாலும் வீட்டுப் புத்தக அலமாரியில் இருந்த அந்த புத்தகத்தை இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் ஆழ்ந்து வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த முறை படித்து முடித்த பின் புத்தகத்தின் தாக்கம் என்னுள் நிறையவே இருந்தது. அதை கையில் எடுத்ததிலிருந்து கீழே வைக்கவே தோன்றவில்லை. இருந்தாலும் வேலைகள் இருக்கிறதேஅதனால் கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் பயன்படுத்தி  படித்து முடித்து விட்டேன். சுஜாதாவின் எழுத்தைப் பற்றி விமர்சிப்பதற்கு எனக்கு வயதும் இல்லை, தகுதியும் இல்லை. இந்த கதை நான் பிறந்த வருடமான 1982-ல் மங்கையர் மலரில் தொடராக வந்ததாம்.

சுஜாதா அவர்கள் இந்த கதை தொடராக வந்த போது முன் குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்

இந்தத் தொடரை நீங்கள் எளிதில் வகைப்படுத்த முடியாது. ஒரு விதத்தில் பார்த்தால் கட்டுரை போல் இருக்கும், அதே சமயம் ஒரு கதையும் தென்படும், கொஞ்சம் ஃபிலாஸஃபி தெரியும். கொஞ்சம் கவிதைகூடத் தப்பித் தவறி வரும். இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். படியுங்கள். இதன் விஷயம் எனக்குப் பிடித்தமானது. பொய் இல்லாமல், பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும்தான் என்னை இதை எழுதச் சொல்லும் சக்திகள்.”
ஒரு அப்பா அம்மாவுக்கு எதிர்பாராத விதமாக நான்காவது குழந்தையாக உருவாகும் ஒரு பெண்ணின் கதை இது. அவள் கருவாக உருவான அன்று முதல் அவளின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் அறிவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் அழகாக விளக்கியுள்ளார். கதையின் நடை வெகு இயல்பாக இருந்தது. இந்தக் கதையில் வரும் அந்த பெண்ணைப் பெற்றவர்கள் இறுதி வரை அப்பா, அம்மாவாகவே வருகிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு பெயர்களே தேவைப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கதையின் ஆரம்ப வரிகள்

சிருஷ்டியின் அல்லது பரிமாண தத்துவத்தின் மிக மிக தற்செயலான ஸ்டாடிஸ்டிக் விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்ட சங்கதி அது. அவள் பெண் என்று தீர்மானமாகும் அந்த கணம் வரை அது யாருக்கும் தெரியாது.”
பெண்ணாகப்  பிறந்தவளுக்கு அவளுக்குள் எழும் சந்தேகங்களையும், உணர்வுகளையும், அச்சங்களையும் அப்படியே எழுத்தில் தந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. தாயாகப்பட்டவளின் நிலை என்ன? தந்தையின் நிலை என்ன? என்று அழகாக தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை பலரும் முன்பே படித்திருக்கலாம். இதுவரை படிக்காதவர்கள் அவசியம் வாங்கி [விலை ரூபாய் 90/- மட்டுமே] படித்து அதன் தாக்கத்தை உணருங்கள்.

இந்த புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 600018

இப்புத்தகத்தினை நீங்கள் இணையத்திலும் வாங்க முடியும்.  இணைய முகவரி www.uyirmmai.com.  

மீண்டும் சந்திப்போம்….

ஆதி வெங்கட்.

 
 

39 comments:

 1. வாத்தியாரின் '' எப்போதும் பெண் '' ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஓரு புதிய விஷயம் தோன்றும் .... அவர் பெண்களை அவதானித்த விதம் சிறப்பாக இருக்கும் ... மீண்டும் படிக்க தூண்டும் பதிவு .....நன்றியும் வாழ்த்தும் சகோ ....

  ReplyDelete
 2. 2 to 3 in Indli
  சுஜாதா அவர்களின் ‘எப்போதும் பெண்’ பற்றிய தங்களின் பார்வையை வெகு அருமையாக, அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  ReplyDelete
 3. புதிய தகவல். சுஜாதா அறிவியல் பத்தித்தான் எழுதிருக்காருன்னு தெரியும். பெண் பத்தியும் எழுதிருக்காரா!!

  ReplyDelete
 4. தங்கள் பதிவு இந்த புத்தகத்தை படிக்கத் தூண்டுகிறது.முயற்ச்சிக்கிறேன்.பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 5. இன்ட்லியில் வாக்கிட முடியவில்லையே.மீண்டும் try பன்றேன்.

  ReplyDelete
 6. இதுவரை எப்படியோ சுஜாதாவின்
  இந்தப் புதினம் கண்ணில் படாமல் தப்பித்து வந்திருக்கிறது
  அழகான விமர்சனைப் பதிவைத் தந்தமைக்கு நன்றி
  மதுரையில் தற்போது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது
  அதற்காக வாங்குவதற்க்கான புத்தகப் பட்டியல் தயார்
  செய்து வைத்திருந்தேன்.அந்தப் பட்டியலில் இதையும்
  சேர்த்துக் கோண்டேன்
  ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. எளிமையும் அருமையுமான பகிர்வு..:)

  ReplyDelete
 8. சுஜாதாவுக்கு வராத எழுத்தே இல்லை என்று நிரூபிக்கிற இன்னொரு தொடர் இது. தொடராகவும் பின் புத்தக வடிவிலும் பலமுறை படித்து ரசித்த நாவல். தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய உங்கள் பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 9. வாங்க பத்மநாபன்,

  தங்கள் கருத்துக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 10. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 11. வாங்க ஹுஸைனம்மா,

  ஆமாங்க. தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 12. வாங்க ஆச்சி,

  படித்துப் பாருங்கள். தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிப்பா.

  ReplyDelete
 13. வாங்க ஆச்சி,

  இண்ட்லியிலும் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு இப்படித் தான் வாக்களிக்க முடியாமல் இருக்கிறேன்.

  ReplyDelete
 14. வாங்க ரமணி சார்,

  வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலில் இந்த புத்தகத்தையும் சேர்த்துக் கொண்டதில் மகிழ்ச்சி.
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 15. வாங்க தேனம்மை லட்சுமணன் மேடம்,

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. வாங்க ரிஷபன் சார்,

  தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 17. நல்ல புத்தக அறிமுகம். சுஜாதாவின் எழுத்துக்களுக்கு
  ரசிகர்கள் எக்கச்சக்கமாக உண்டு. அவர் தொடாத விஷயமே இல்லே. இந்தபுத்தகமும் சுவாரசியம் மிக்கதுதான்

  ReplyDelete
 18. நல்ல பதிவு, ஆதி.ஏற்கனவே படித்திருந்தாலும் நீங்க ஏழுதியிருப்பதை பார்த்ததும் மீண்டும் படிக்க தோன்றுகிறது.நன்றி.

  ReplyDelete
 19. சுஜாதா ஒரு பல்கலை கழகம்ய்யா.....!!!

  ReplyDelete
 20. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete
 21. Never read this before... will get it next time... thanks for sharing your views...

  ReplyDelete
 22. வாங்க லஷ்மிம்மா,

  தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றிமா.

  ReplyDelete
 23. வாங்க ரமா,

  தங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. வாங்க MANO நாஞ்சில் மனோ,

  தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 25. வாங்க ரத்னவேல் அய்யா,

  தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 26. வாங்க புவனா,

  READ AND ENJOY. THANKS FOR UR COMMENT.

  ReplyDelete
 27. ஆதி! இந்தப் புத்தகத்தை என் காதலிக்கு பரிசளித்தேன்.. இப்போதும் அவள் என் காதலியாக உடன் இருக்கிறாள். லேட்டாக வந்தத்திற்கு சாரி!

  ReplyDelete
 28. வாங்க மோகன்ஜி,

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்துரை....
  மகிழ்ச்சி.
  தங்கள் அழகான கருத்துரைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 29. மீண்டும் படிக்க தூண்டும் பகிர்வு .....நன்றியும் வாழ்த்தும்

  ReplyDelete
 30. ஓணத்திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. வாங்க இராஜராஜேஸ்வரி,

  தங்களது வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 32. வணக்கம்! தங்கள் பதிவு நன்றாக இருந்தது. சுஜாதாவின் பெரும்பாலான நூல்களை நானும் விரும்பிப் படித்திருக்கிறேன்.

  ReplyDelete
 33. வாங்க எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்,

  தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete
 34. சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று

  பெண்களை "போக பொருள்" போல தான் எழுதுவார் என சற்று குற்றச்சாட்டு அவர் மீது உண்டு. இந்த கதையை படித்தால் அவருக்கு பெண்கள் மேல் இருக்கும் மதிப்பு தெரியும்

  உங்கள் இப்பதிவை முன்னர் பார்க்க வில்லை. இன்று நிரஞ்சனா பதிவில் நீங்கள் தந்த சுட்டி மூலம் வந்தேன்

  ஒரே வருத்தம் கதை குறித்து நீங்கள் விரிவாய் எழுதாமல் சுருக்கமாய் முடித்து விட்டீர்கள். படிப்பவருக்கு சுவாரஸ்யம் போய் விடும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம்

  ReplyDelete
 35. Hai Sister, நீங்க சொன்னதால படிக்கணும்னு நினைச்சேன். ஆனா இப்ப நீங்க கொடுத்துருக்கற அறிமுகத்தைப் படிச்சதும் படிச்சே தீரணும்னு முடிவே பண்ணிட்டேன். (ஆனா நான் வாங்க வேண்டியதில்லை. இருக்கவே இருக்கு Ganesh Uncle‌ளோட Own Library! Ha... Ha...) My Heartful Thanks to you Sis!

  ReplyDelete
 36. இப்பதான் இந்தப் பதிவைப் பற்றித் தெரிந்து கொண்டேன். எப்போதும் பெண் படித்து வருடக்கணக்காகிவிட்டது.
  மிகவும் நன்றி. நேற்று தான் தி.ஜா வின் உயிர்த்தேன் படித்து உருகிக் கொண்டிருந்தேன்.

  இந்தச் சுட்டியைக் கொடுத்த திரு.பத்மநாபனுக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 37. வாங்க மோகன்குமார் சார்,

  நீங்கள் சொன்னது போல் கதையை நாமளே சொல்லிட்டா படிப்பவர்களுக்கு சுவாரசியம் போய் விடும் என்றும் நினைத்தேன். இன்னொன்று புத்தக விமர்சனங்கள் எழுத ஆரம்பித்த சமயம் எழுதியது இது. அதனால் ஏதோ எனக்கு தெரிந்த அளவு எழுதியிருக்கிறேன்.
  இப்ப உங்களுடைய புத்தக விமர்சனங்கள் படித்த பின் தான் கதையையும் சொல்லி படிப்பவர்களுக்கு முன்பே ஈர்ப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிந்து கொண்டு வருகிறேன்.
  சுட்டி மூலம் வந்து படித்து கருத்திட்டதற்கு நன்றி சார்.

  ReplyDelete
 38. வாங்க நிரஞ்சனா,

  அறிமுகத்தை படித்ததும் நிச்சயம் படிச்சே தீரணும்னு முடிவு பண்ணியதற்கு நன்றி.

  கணேஷ் சாரோட லைப்ரரியை நினைத்தால் எனக்கு பொறாமையா இருக்கு....:)

  நன்றி நிரஞ்சனா.

  ReplyDelete
 39. வாங்க வல்லிம்மா,

  மீண்டும் படித்துப் பாருங்கள் அம்மா.
  தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிம்மா.

  சுட்டியை கொடுத்த பத்மநாபன் அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…