முன்பு பிள்ளையார் – பிள்ளையார் பதிவில் அரிசி தேங்காய் பாயசத்தின் படத்தை மட்டும் பகிர்ந்திருந்தேன். இப்போது அதன் செய்முறையை உங்களுடன் பகிர்கிறேன். இது நவராத்திரி சமயம் அல்லவா! இந்த பண்டிகை நாட்களில் ஸ்வாமிக்கு பாயசம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியம் செய்வோம். அதில் ஒரு வித பாயசம் இது. நான் அளவு வைத்து செய்வதில்லை. கண் திட்டம் தான். உங்களுக்காக அளவுகள் கொடுத்திருக்கிறேன்.
தேவையானப் பொருட்கள் :-
பச்சரிசி – 50 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – நான்கு
காய்ச்சிய பால் – அரை லிட்டர்.
முந்திரி, திராட்சை – சிறிதளவு
நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை :-
அரிசியை நன்கு அலசி அரை மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். தேங்காயை துருவி ஏலக்காயுடன் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ஊறிய அரிசியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் அரைத்த அரிசி, தேங்காய், ஏலக்காய் விழுதைச் சேர்த்துக் கூடத் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது கவனமில்லாமல் விட்டு விட்டால் கட்டி தட்டி விடும். அரிசி நன்கு வேக வேண்டும். பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அரிசி தேங்காய் கலவையுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். வெல்லத்துடன் சேர்ந்து நன்கு வெந்து விட்டது என்று தெரிந்ததும் அடுப்பை நிறுத்தி விடலாம். ஒரு வாணலியில் நெய்யை விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். காய்ச்சிய பாலை தேவையான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான அரைத்து விட்ட அரிசி தேங்காய் பாயசம் சாப்பிட தயார். நவராத்திரி நாளில் வீட்டுக்கு வருபவர்களுக்கும் இந்த பாயசத்தை கொடுத்து அசத்தலாமே!
பின்குறிப்பு :-
இதே செய்முறையில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.
அரைத்த விழுதை பாத்திரத்தில் போட்டு விட்டு மிக்சி ஜாரில் தண்ணீர் விட்டு அதையும் பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். விக்கிற விலை வாசியில் எதையும் வீணாக்கக்கூடாது.
மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.