Saturday, August 13, 2011

பரங்கிக்காய் பாயசம்



”வலைப்பூவுக்கு பிறந்தநாள்” கொண்டாட்டத்தில்பரங்கிக்காய் பாயசத்தினைஉங்களுக்காய் பகிர்ந்திருந்தேன். பரங்கிக்காய், அரசாணிக்காய் (என்ற ஊர் கோவையில்), மஞ்சள் பூசணி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இப் பரங்கிக்காயில் ஒரு சுவையான ரெசிபி இதோ.

சில ஆண்டுகள் முன்பு இந்த பாயசத்தை என் நாத்தனார் ஒரு முறை செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கிறேன். அதன் பின்பு சென்ற முறை மார்கெட்டில் காய் வாங்கியதில் பரங்கிக்காய் நிறைய இருந்தது. சாம்பார், ”பரங்கிக்காய் தொக்கு" இவை போரடித்து விட்டதால் இந்த முறை பாயசம். நீங்களும் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்.  இதோ அதன் செய்முறை.

தேவையானப் பொருட்கள்:

பரங்கிக்காய்  - கால் கிலோ
பால்அரை லிட்டர்
சர்க்கரை – 150 கிராம்.
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரிதேவையான அளவு
திராட்சைதேவையான அளவு.
ஏலக்காய்ப் பொடிசிறிதளவு

செய்முறை:

பரங்கிக்காயை கேரட் துருவுவது போல் துருவிக் கொள்ளவும். இல்லையென்றால் மிக்ஸியில் இட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யைக் காய வைத்து முந்திரி, திராட்சையை வறுத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் துருவிய (அல்லது) அரைத்த பரங்கிக்காயை அதன் பச்சை வாசனை போகும் வரை வாணலியில் இருக்கும் நெய்யில்  வதக்கிக் கொள்ளவும். வதக்கியதில் காய் நன்கு வெந்திருக்கும். இந்த சமயத்தில் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கிளறவும். இதில் ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கொதிக்கும் நிலைக்கு வந்ததும் இறக்கி வறுத்த முந்திரி, திராட்சையும், பாலையும் சேர்த்து பரிமாறவும்.

சுவையான பரங்கிக்காய் பாயசம் தயார்.

பின் குறிப்பு: இயற்கையான சுவை வேண்டுபவர்கள் அப்படியே சாப்பிடலாம்.  தேவைபட்டால் இதனுடன் சில சொட்டுகள் வெனிலா எசென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.  வரப்போகும் பண்டிகை நாட்களில் எப்போதும் சேமியா, பருப்பு பாயசம் சாப்பிட்ட நம் நாவுக்கு இந்தப் பரங்கிக்காய் பாயசம்  வித்தியாசமான ஒரு சுவையைக்  கொடுக்கும்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திப்போம்

ஆதி வெங்கட்.

இந்த குறிப்பை ஃபாயிஜா அவர்களின்  PASSION ON PLATE - GIVE AWAY ஈவண்ட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்.






15 comments:

  1. வித்தியாசமான சுவையான பகிர்வு பரங்கிக்காய் பாயசம். அப்படியே அல்வா ஆகவும் வைத்துக் கொள்ளலாம் போல அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பாயசம்..

    ReplyDelete
  3. ஆஹா
    பரங்கிக்காய் தொக்கு
    பரங்கிக்காய் பாயாசம்
    பார்க்கவே பரவசம் ஊட்டும்படியாக
    படத்தையும் போட்டு
    எங்களைச் செய்து பார்க்கத் தூண்டும்
    உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பரங்கிகாய் பாயசம் போலவே இனிப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  5. பரங்கிக்காய் பாசம் அருமை , வாழ்த்துக்கள் சகோ!!!!!!!!!

    ReplyDelete
  6. பிறந்த நாளுக்கு வந்து பாயசமும் சாப்பிட்டாச்சு ஆதி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிக்க இனிக்க ..
    பரங்கிக்காயைப் பார்த்தால் இனி இந்தப் பதிவும் நினைவில் வரும்

    ReplyDelete
  8. நமக்கும் கோயம்புத்தூர்தானுங்க... இன்னிக்குத்தான் உங்க வலைப்பூ எனக்கு அறிமுகமாச்சு... அடிக்கடி வருவேன். உங்க பதிவெல்லாமே நல்ல இருந்துச்சு. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்க!

    ReplyDelete
  9. பரங்கிக்காயிலும் பாயசம்.அசத்தல்.

    ReplyDelete
  10. வித்தியாசமா இருக்கு.. :) வேற இதுல டிஷ் எதும் போட்டிருக்கீங்களா.. கொஞ்சம் எழுதுங்க..

    ReplyDelete
  11. வாங்க இராஜராஜேஸ்வரி,

    ஆமாங்க. அல்வா மாதிரியும் வைத்துக் கொள்ளலாம்.வித்தியாசமாகத் தான் இருக்கும்.பாராட்டுக்கு நன்றிங்க.

    வாங்க ஜலீலாக்கா,

    கருத்துக்கு நன்றிங்க.

    வாங்க ரமணி சார்,

    தங்கள் கவிதை போன்ற அழகான கருத்துக்களுக்கு நன்றி சார்.

    வாங்க லக்ஷ்மிமா,

    தங்கள் இனிமையான கருத்துக்களுக்கு நன்றிமா.

    வாங்க அய்யம்மாள்,

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

    வாங்க ராம்வி,

    பிறந்தநாளுக்கும் வந்து பாயசமும் சாப்பிட்டதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. வாங்க புவனா,

    நன்றி.

    வாங்க ரிஷபன் சார்,

    தங்களின் இந்த இனிமையான கருத்துக்கு நன்றி சார்.

    வாங்க எம்.எஸ்.பிரதாப் சிங்,

    நம்மூர்காரங்க என் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டு வருவதற்கு நன்றிங்க.தொடர்ந்து படிங்க.

    வாங்க ஸாதிகா,

    முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    வாங்க முத்துலெட்சுமி,

    பரங்கிக்காயில் ஏற்கனவே தொக்கு போட்டிருக்கேனே...
    கருத்துக்களுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  13. Delicious.., Thanks for linking this recipe to my event 

    ReplyDelete
  14. http://www.en-iniyaillam.com/2013/03/passion-on-plate.html

    ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு, பரிசுக்குத்தேர்வாகியுள்ள தங்களுக்கு என் அன்பான மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…