Tuesday, August 9, 2011

கதம்பம்-3


கதம்பம் என்ற பெயரில் இரண்டு பகுதிகளாக நான் ரசித்த விஷயங்கள், சென்ற இடங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை பற்றி முன்பே தொகுத்திருந்தேன். அந்த வகையில் இந்த பகுதியில் தொலைக்காட்சியில் நான் ரசிக்கும், ரசித்த நிகழ்ச்சிகளைப்  பற்றி பகிரலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஆன்மீக நிகழ்ச்சிகள்:-

காலை நேரத்தில் பக்தி பாடலையோ, ஸ்லோகங்களையோ சொற்பொழிவையோ கேட்டால் மனதுக்கு இதமாகவும், அன்றைய தினம் புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் கழியும் தானே? அந்த மாதிரி நம்மை பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் இரு நிகழ்ச்சிகள்.

பாரதத்தில் தர்மம்:-

விஜய் தொலைக்காட்சியில் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் நல்ல பல ஆன்மீக கருத்துகளை பகிர்கிறார்.

காக்க காக்க குருவருள் காக்க:-

இதுவும் விஜய் தொலைக்காட்சியில் காலை 6.20 க்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வைஷ்ணவ, சிவ பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் ஊருக்கே அழைத்துச் சென்று நமக்கு அவர்களின் சிறப்பை அழகாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ முரளிதர சுவாமிஜீ.

சரி காலை நேர அவசரத்தில் இந்த நிகழ்ச்சிகளைக் காண முடியாதே என்கிறீர்களா? பார்க்க முடியாட்டி என்ன? காதால் நல்ல விஷயங்களை கேட்கலாம் தானே?

ஒரு வார்த்தை ஒரு லட்சம்:-

இதுவும் விஜய் தொலைக்காட்சியில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி. ஜேம்ஸ் வசந்தன் பொறுப்பேற்று நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒருவர் ஒரு வார்த்தையை மூன்று குறிப்புகளால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மற்றவருக்கு உணர்த்த வேண்டும். இரு அணிகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு அணியில் இருவர் இருக்கின்றனர். பல சுற்றுக்களின் இறுதியில் வென்ற அணிக்கு ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஆங்கில வார்த்தைகளுக்கு இங்கு இடமில்லை. நம்மையும் வார்த்தைகளோடு விளையாட இந்த நிகழ்ச்சி அழைக்கிறது.

நீயா? நானா?

கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியும் விஜய் தொலைக்காட்சியில் ஞாயிறு இரவு 9 மணிக்கு துவங்கும் ஒரு விவாத நிகழ்ச்சியாகும். எடுத்துக் கொள்ளும் தலைப்பை இரு அணிகளும் அனல் பறக்க சூடாக விவாதிக்கின்றனர். நான் பார்த்த நிகழ்ச்சியில் தங்கத்தை விரும்பும், வெறுக்கும் பெண்கள்! என்ற தலைப்பில் மிக அற்புதமாக இருந்தது.

கிடுகிடுவென விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கழுத்து நிறைய நகை அணிய ஆசைப்படுகிறேன். இதுவே என் வாழ்வின் லட்சியம் என்று சில பெண்கள் கூறினர். தாய் நகையை விரும்பும் அணியிலும், அவரது மகள் வெறுக்கும் அணியிலும், இதுபோல மகள் விரும்பும் அணியிலும் தாய் வெறுக்கும் அணியிலும் இருந்தது வித்தியாசமாகப் பட்டது. ஒவ்வொருவரின் கருத்தும் இயல்பாய் இருந்தது.

சரி நீங்க எந்த கட்சி என்று கேட்கிறீர்களா? நான் எளிமையாக இருக்க விரும்புபவள். நெக்லஸ், ஹாரம் என்பதெல்லாம் எனக்கு பிடிக்காத ஒன்று. எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தாலிச்சரடுடன் ஒரு செயின் தான். இதை வைத்து மதிப்பவர்கள் மதிக்கட்டும் என்பது என் கருத்து. தில்லியில் இருக்கும் திருடர்களுக்கு தென்னிந்தியர்கள் சிறு அளவிலாவது தங்கம் அணிவார்கள் என்று தெரியும். ஆதலால் தாலிச்சரடை பார்த்தாலும் அபேஸ் தான். எனக்கு தெரிந்தவர்களில் நிறைய பேருக்கு இது திருடு போயிருக்கிறது.

ஒரு முறை ஒரு வேலையாக வங்கிக்கு சென்று கொண்டிருந்த என்னை சாலையில் இருந்த ஐந்தாறு போலீஸ்காரர்கள் நிறுத்தி நான் அணிந்திருந்த செயினைக் காட்டி ஏன் இப்படி அணிந்து வந்து கழுத்து அறுபடுகிறீர்கள் என்று திட்டினார்கள். நான் இது தங்கம் இல்லை என்று கூறினேன். அவர்கள் அறுக்க முயல்பவன்இது தங்கமா! இல்லையா!” என்று யோசிக்க மாட்டான். ஆகவே துப்பட்டாவால் கழுத்தை மூடிக் கொள்ளும் படி கூறவே அப்படியே சென்றேன்.


பொக்கிஷம்:-

சேரன், பத்மப்ரியா, விஜயக்குமார் மற்றும் பலர் இணைந்து நடித்த பொக்கிஷம் திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பானது. சேரனின் நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று என்று சொல்லும் விதமாய் இருந்தது. லெனினாக சேரனும், நதீராவாக பத்மப்ரியாவும் அற்புதமாக நடித்த கண்ணியமான காதல் கதை. மறைந்த தனது அப்பாவின் பொக்கிஷமான பெட்டியை எதேச்சையாக திறந்து பார்க்கும் மகன், காதலியை நினைத்து அவருக்காக எழுதிய கடிதங்களை பல வருடங்களுக்கு பிறகும் அந்த காதலியிடம் சேர்க்கிறார் மகன். இதன் மூலமே தன் அப்பாவின் ஆத்மா சாந்தியடையும் என்று எண்ணுகிறார்.

மின்னஞ்சல், குறுஞ்செய்தி என்று சென்று கொண்டிருக்கும் இந்த அவசர கணினி உலகில் கடிதங்களால் அக்காலத்தில் காதலை வளர்த்த விதத்தை அழகாக படமாக்கியிருக்கிறார்கள். 1970-களின் வாழ்க்கை முறை சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் சண்டை, வெட்டு குத்து, ஆபாசம் எதுவும் இல்லாமல் சிறப்பாக இருக்கிறது. ஒருவர் ஒரு கடிதம் எழுதி அது மற்றவருக்கு சென்றபின் அவர் பதில் எழுதி அது இவரிடம் வரும் வரை எவ்வளவு காத்திருப்பு. அதில் தான் எவ்வளவு சுகம். பதில் கடிதம் வராமலும், காதலியை பிரிய நேரிட்ட போதும் சேரன் துடிக்கும் துடிப்பு தத்ரூபமாக இருக்கிறது. நிச்சயம் இந்த படத்தை பார்ப்பதற்கும் பொறுமை வேண்டும் தான். வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை பாருங்களேன்.

மீண்டும் வேறு பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.


10 comments:

 1. டி.வி நிகழ்சிகளை விட
  உங்கள் பதிவில் நீங்கள் சொல்லிச் செல்வது
  சுருக்கமாக இருந்தாலும்
  நிறைவாகத் தெரிகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஆகா.. பாத்தீங்களா பொக்கிஷம்.. சரிதான்..
  சேரன் பேஸ் புக்ல யாரும் இப்பயாச்சும் பாத்தீங்களான்னு கேட்டிருந்தார் போல..
  நல்ல படம் தான்..

  நகை தங்கம் மாதிரி போட்டிருந்தாலும் திருடன் வரத்தான் செய்வான்..அவசரத்தில் என்ன உரைச்சாப்பார்ப்பான்.. பெட்டர் கருமணி க்ரிஸ்டல் மாதிரி ..

  ReplyDelete
 3. நானும் பொக்கிஷம் படத்தை இப்பத்தான் பார்த்தேன். ரொம்பவே பிடிச்சிருந்தது. கதம்பம் அருமை

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.
  நாங்களும் சில சமயங்களில் இந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதுண்டு. சில விஷயங்கள் மிகவும் நன்றாகவே பயனுள்ளதாகவே உள்ளன. நன்றி.

  ReplyDelete
 5. //சரி காலை நேர அவசரத்தில் இந்த நிகழ்ச்சிகளைக் காண முடியாதே என்கிறீர்களா? பார்க்க முடியாட்டி என்ன? காதால் நல்ல விஷயங்களை கேட்கலாம் தானே?//
  சரியாக சொல்லியிருக்கீங்க ஆதி. நானும் காலை வேளையில் ஆன்மீக நிகழ்ச்சிகளை கேட்டுக்கொண்டே வேலைகளை செய்வேன்.
  நல்ல பகிர்வு நன்றி.

  ReplyDelete
 6. நல்ல கதம்பம்...

  காலையில் ஆன்மீகம் குறிப்பா முரளிதர சுவாமியின் உபன்யாசம்

  மாலை சூப்பர் சிங்கர்...எங்கள் வீட்டிலும் விஜய் டீவி நிகழ்ச்சிகள் தான் .

  ReplyDelete
 7. "ஒரு வார்த்தை ஒரு லட்சம்" எனக்கும் பிடிக்கும். அதுவும் இந்த வாரம் சூப்பர்.

  ReplyDelete
 8. குறிப்பிட்டிருக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள் எங்கள் வீட்டிலும் உண்டு.
  நீயா நானாவும் உண்டு
  சூப்பர் சிங்கரை விட்டுட்டீங்களே
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. நான் போட்ட கமெண்டைக் காணோமே? பரவால்ல, மறுக்காச் சொல்லிடுறேன்.

  //துப்பட்டாவால் கழுத்தை மூடிக் கொள்ளும் படி //
  நகை போட்டுறக்கவங்களைப் பாத்தா இதேதான் தோணும். ரெண்டு நா முன்னாடிகூட, 10 பவுன் தாலிக்கொடி பறிப்புன்னு செய்தி!!

  கடிதங்கள் - கையில் வச்சு, மறுபடி மறுபடி படிச்சுப் பாத்து, அது கசங்கி, இத்துப் போற வரை வாசிச்சு வாசிச்சு.. அது ஒரு காலம்...

  ReplyDelete
 10. வாங்க ரமணி சார்,
  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  வாங்க முத்துலெட்சுமி,
  ஏற்கனவே பாதி படத்திலிருந்து பார்த்திருக்கிறேன். இந்த முறை தான் ஆரம்பத்திலிருந்து பார்க்க முடிந்தது.
  நானும் கருகமணி தான் போட்டுக் கொள்கிறேன்.

  வாங்க புதுகைத்தென்றல்,
  ஆமாங்க. நல்ல படம். கருத்துக்களுக்கு நன்றிங்க.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
  ஆமாம் சார். சில நிகழ்ச்சிகள் நல்லதாகவே இருக்கின்றன.
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  வாங்க ராம்வி,
  நீங்களும் அப்படித்தானா! வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க பத்மநாபன்,
  சூப்பர் சிங்கர் போன சீசன் தான் பார்த்தேன். இந்த முறை பார்க்கவில்லை.
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.

  வாங்க கலாநேசன்,
  இந்த வாரம் நல்லாயிருந்தது. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  வாங்க ராஜி,
  இந்த சீசன் சூப்பர் சிங்கர் பார்ப்பதில்லைங்க. வருகைக்கும் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  வாங்க ஹுஸைனம்மா,
  கமெண்ட் ஏதும் வரலையேங்க.
  எங்கள் வீட்டில் நாங்கள் இருவரும் எழுதிய கடிதங்களை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம்.
  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…