Tuesday, August 30, 2011

பிள்ளையார் பிள்ளையார்....


எனக்கு மிகவும் பிடித்த கடவுளான பிள்ளையாரினைத் துதிக்க நாம் வருடாவருடம் கொண்டாடும் பிள்ளையார் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி வருகிறது.   அவ்வப்போது நான் அவருடன் பேசுவதுண்டு. எல்லாவற்றுக்கும் என்னவரிடம் கேட்கிறேனோ இல்லையோ, பிள்ளையாரிடம் கேட்டு விடுவேன்!.  அம்மா சொல்வார், பிள்ளையார் சதுர்த்தி அன்று எத்தனை பிள்ளையார் கோவில் செல்கிறோமோ, அவ்வளவு நல்லது என.  அதனால் கோவையில் இருக்கும் போது 108 பிள்ளையார் கோவில், ஆசியாவிலேயே பெரிய பிள்ளையாரான புலியகுளம் முந்தி விநாயகர் என சென்று பார்ப்போம். 


அவ்வப்போது நான் செய்த சில பிள்ளையார் பொம்மைகள், கைவினைப் பொருட்கள் ஆகியவை கீழே உங்கள் பார்வைக்காக….

வீட்டில் தேவையற்று இருந்த சில குறுந்தகடுகளை வைத்து, பிள்ளையார் உருவம் பதித்து, அலங்காரம் செய்து [சுற்றிலும் ஒட்டி இருப்பது வெறும் ஸ்டிக்கர் பொட்டுகள் தான்!] அதைச் சுவற்றில் தொங்க விடும்படி செய்தது…..


மாயக்கண்ணன் மட்டும்தான் நீல நிறத்தில் இருக்க வேண்டுமா என்ன? என் பெண் விளையாடுவதற்காக வாங்கிய ”மோல்டிங் க்ளே”- இல் இருந்த நீலநிற க்ளே கொண்டு செய்த நீல நிற பிள்ளையார் எப்படி இருக்கிறார்?


இறுக்கம் தளர்ந்த குக்கர் கேஸ்கட்டைத் தூக்கித்தான் போடவேண்டுமா என்ன?. அதில் சிறிது உல்லன் நூலைச்சுற்றி கேலண்டரில் வீட்டுக்கு வந்த பிள்ளையார் படத்தினை வைத்து சுற்றிலும் ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு சில அலங்காரங்கள் செய்து நான் செய்த ஒரு கைவினைப் பொருள் பாருங்களேன்….  


வேறு எதாவது இருக்கிறதா என்கிறீர்களா?  இருக்கிறது.  நான் பென்சில் கொண்டு வரைந்த ஒரு பிள்ளையார் படம்.  அதன் புகைப்படம் கீழே….


இதெல்லாம் சரி், ”பிள்ளையார் சதுர்த்திக்கு உங்கள் பக்கம் வந்தோமே, எங்களுக்கு இனிப்பு எதுவும் இல்லையா?” என்று கேட்பவர்களுக்கு பிள்ளையார் சதுர்த்திப் பண்டிகைக்கு செய்ய ஏற்ற “அரைத்து விட்ட அரிசி-தேங்காய் பாயசம்” கீழே….  உருளியிலும் வைத்திருக்கிறேன், பிளாஸ்டிக் கிண்ணத்திலும் வைத்திருக்கிறேன்.  அதாவது பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் இரண்டும்….  இருந்தாலும் உருளியில் இருக்கும் பாயசத்தின் சுவை தனிதான்…செய்முறை வேறு ஒரு பகிர்வில் தருகிறேன்.அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்…...

ஆதி வெங்கட்.Monday, August 29, 2011

அத்தியாவசியமான வைட்டமின்கள்சென்ற புத்தக கண்காட்சியில் திரு என். சொக்கன் அவர்கள் எழுதியவைட்டமின்கள் அத்தியாவசியத் தேவைஎன்ற புத்தகத்தை வாங்கியிருந்தேன். இப்போது தான் ஆழ்ந்து படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
நமது அன்றாட வாழ்வில் வைட்டமின்களின் அவசியத்தையும், உணவு பழக்கத்தில் வைட்டமின்களை பெறுவது பற்றியும், இதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை பற்றியும் விரிவாக கூறியுள்ளார்.

இனி இப்புத்தகத்தில் ஆசிரியர் கூறியுள்ள சில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்

வைட்டமின்என்ற சொல்லின் பெயர்க்காரணமே நமக்கு அதன் அடிப்படைப் பண்புகளைத் தெளிவாக வரையறுத்து விடுகிறது. உண்மையில் இரண்டு சொல்களின் தொகுப்பு இது – VITAL+ AMINE = VITAMIN.  வைடல் என்றால் (நம் உடலுக்கு) அவசியம் தேவைப்படுகிற ஒரு சமாசாரம். அமைன் என்றால் நைட்ரஜன் கலந்த கூட்டுப் பொருள். இந்த இரண்டையும் இணைத்து வைட்டமின் என்ற பெயரை தேர்வு செய்தவர், போலந்தைச் சேர்ந்த காசிமிர் ஃபன்க் (KAZIMIERZ FUNK) என்ற ஆய்வாளர். நம்முடைய உடலுக்குள் பல வேலைகள் நடைபெறுவதற்கு இந்த வைட்டமின்கள்தான் காரணமாக அமைகின்றன.

வைட்டமின்களின் வேலை:-

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருந்து, நம் உடலுக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுத் தருவதற்கு வைட்டமின்கள், குறிப்பாக B காம்ப்ளெக்ஸ் வரிசையைச் சேர்ந்த வைட்டமின்கள் துணை புரிகின்றன.நம்முடைய தினசரி உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றை உடைப்பதற்கும் எரிப்பதற்கும் வைட்டமின்களின் உதவி தேவைப்படுகிறது.

வைட்டமின்களின் அவசியத்தை பாருங்கள்:

நம் உடலில் ஒரே ஒரு வைட்டமின் குறைந்தால் கூட நோய்கள் தாக்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. மற்ற வைட்டமின்கள் எவ்வளவு இருந்தும் பலன் இல்லை. ஒரு வைட்டமினின் வேலைகளை இன்னொரு வைட்டமின் செய்ய முடியாதாம்.

வைட்டமின்களை யாரும் சாப்பாட்டுக்குப் பதிலாக எடுத்துக் கொள்ள முடியாது. சாப்பாட்டில் பயன்படுத்தப்படும் சில பொருள்கள்., நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன. அதற்காக இந்த வைட்டமின்களை மாத்திரை வடிவில் விழுங்கி விட்டால் சாப்பாடு தேவையில்லை என்று அர்த்தமில்லை.

மொத்தம் எத்தனை வைட்டமின்கள்:-

வைட்டமின் A
வைட்டமின் B (எட்டு வைட்டமின்களின் தொகுப்பு: B1, B2, B3, B5, B6, B7, B9, B12 )
வைட்டமின் C
வைட்டமின் D
வைட்டமின் E
வைட்டமின் K
இந்த பதிமூன்று வைட்டமின்களும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1)   கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ( FAT SOLUBLE )
2)   நீரில் கரையும் வைட்டமின்கள் ( WATER SOLUBLE )

புத்தகத்தின் கடைசியில் வைட்டமின்களை பெறுவதற்கான பத்து கட்டளைகளை கூறியுள்ளார்.  அவற்றை நாம் தொடர்ந்தாலே நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களை பெற முடியும் என்பது திண்ணம்அந்த பத்து கட்டளைகள் என்ன என்பதை புத்தகத்தினை வாங்கிப் படியுங்கள்.  விலையும் அதிகம் இல்லை நண்பர்களே.  ரூபாய் இருபத்தி ஐந்து [25] மட்டுமே.  புத்தகத்தினை வாங்க கீழ்க்கண்ட முகவரியை அணுகுங்களேன்:-

கிழக்கு பதிப்பகம்
177/103,
அம்பாள் கட்டடம், முதல் மாடி
அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்)
ராயப்பேட்டை, சென்னை 600014
தொலைபேசி: 4200-9601, தொலைநகல்: 4300-9701 
இணைய முகவரி:  www.nhm.in


மீண்டும் சந்திப்போம்.....

ஆதி வெங்கட்Wednesday, August 17, 2011

பீட்ஸா - சீடை


இன்னும் இரண்டே நாளில் கோகுலாஷ்டமி வரப்போகிறது என்கிற நிலையில் உமாவுக்கு அவள் அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது. மகள் தியா பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாக இந்தப் பண்டிகையின் சிறப்புக்களைப் பற்றி கேட்க   கண்ணனின் லீலைகளையும், விஷமங்களையும் பற்றி அவள் சொல்லிக் கொண்டிருக்கவும், கணவன் அலுவலகத்திலிருந்து வரவும் சரியாக இருந்தது.  கோகுலாஷ்டமிக்கு என்னென்ன பட்சணங்களும் நைவேத்தியங்களும் செய்வார்கள் என்று கேட்ட தியாவிடம் சீடை, தட்டை போன்ற பட்சணங்களும், கண்ணனுக்கு மிகவும் பிடித்த அவலில் பாயசமும், பால், தயிர் வெண்ணெய் என்று விவரித்துக் கொண்டிருந்தாள்.

அம்மா நீ என்னென்ன பண்ணப் போற?” என்று தியா கேட்டு முடிப்பதற்குள்அதெல்லாம் ஒன்றும் இழுத்து விட்டுக் கொள்ளாதே?  கிருஷ்ணன் உன்னிடம் சீடை, முறுக்கு பண்ணித்தா என்று கேட்டாரா? இதெல்லாம் மனிதர்களா வகுத்துக் கொண்ட நியதி. விதவிதமாக சாப்பிட இப்படி ஒரு ஏற்பாடு. உன் திருப்திக்கு வேண்டுமென்றால் பாலையோ, பழத்தையோ நைவேத்தியம் செய்து விடுஎன்றான் கணேசன். அவன் எப்பவுமே இப்படித் தான்.

விஷப்பரிட்சை எதுக்கு என்று நினைத்திருக்கலாம் அல்லது மனைவியை கஷ்டப்பட வைக்க வேண்டாமென எண்ணியிருக்கலாம் என்று தனக்குள் பேசிக் கொண்ட உமா அடுத்து தனது அம்மாவுடன் கொண்டாடிய கோகுலாஷ்டமி பற்றிய நினைவுகளில் மூழ்கிப்போனாள்.அம்மா நினைத்தால் இரண்டே மணியில் ஐம்பது பேருக்கு சமையல் செய்து முடிப்பாள். கைமணம் அற்புதமாக இருக்கும். ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் பண்டிகைகளில் குறை வைத்ததே இல்லை. குழந்தைகள் பத்து நாட்கள் வைத்திருந்து சாப்பிடட்டுமே என்று பார்த்துப் பார்த்து செய்வாள். கோகுலாஷ்டமி வந்து விட்டால் வெல்ல சீடை, உப்பு சீடை, தேன்குழல், தட்டை, இன்னும் பிறவும் இருக்கும். ஒவ்வொன்றும் அரை டின் அளவுக்காகவாவது செய்வாள். குழந்தைகளான என்னையும், தம்பியையும் உதவிக்கு அழைத்துக் கொள்வாள். மாவு தயார் செய்து விட்டு சீடைக்கு அழுத்தி உருட்டி எண்ணையில் போட்டால் முகத்தில் வெடித்துடும்கறதாலே மாவை எடுத்து விரல்களின் இடையில் அழுத்தாமல் உருட்ட வேண்டும் என்பாள். நாங்களும் அம்மாவுக்கு ஒன்றும் ஆயிடக்கூடாதே என்று பவ்யமாக உருட்டி போடுவோம். இதுவரை ஒருநாளும் சீடையோ மற்ற பட்சணங்களோ நன்றாக வரவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை
ஆயிரம் குறை சொல்லும் பாட்டியும் (அப்பாவின் அம்மா) ”உன் பொண்டாட்டி செய்யும் தட்டை நன்றாக இருக்கும்என்பார்.  அம்மாவின் கைப் பக்குவத்தில் சரியான உப்பு காரத்துடன் கரகரவென தட்டை அபாரமாக இருக்கும். பண்டிகைக்கு மட்டும் தான் செய்வாளா என்றால் இல்லை. வெளியில் எங்காவது செல்லும் போதோ, கோவிலிலோ பார்ப்பவர்கள் யாராவது கர்ப்பமாக இருப்பதாகக் கூறினால் அம்மா உடனே மாவு அரைத்து தட்டை தட்டி, ஒரு பாட்டில் புளிக்காய்ச்சல் செய்து, ஒரு இனிப்புடன், இரண்டு முழம் பூவுடனும் கிளம்பி விடுவார்.

உமா கர்ப்பமாக இருந்த போது இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. புற்றுநோயால் அவதிப்பட்டு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்த அம்மா உமாவின் திருமணத்துக்குப்பின் அவளுக்கு நல்வாழ்க்கை கிடைத்துவிட்ட திருப்தியுடன் அடுத்த வருடமே இறந்து விட்டாள். அடுத்த மாதமே உமா கர்ப்பமானாள். அம்மாவின் நட்சத்திரத்திலேயே பிறந்த தியாவை அம்மாவின் மறு உருவமாகவே எண்ணினாள். திடீரென யாரோ கையை பிடித்து உலுக்கும் உணர்வு ஏற்பட்டதும் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள்.

இன்று பண்டிகைகள் வந்தாலே பெரும்பாலானவர்கள் கடையில் வாங்கி நைவேத்தியம் செய்து விடுகின்றனர். செய்ய செய்யத் தானே கைப்பழக்கம் வரும். ஒரு தடவை சொதப்பினாலும் மறு தடவை சுமாராகவாவது வரலாம். நாம் செய்தோம் என்ற திருப்தியும், கைக்கு அடக்கமான செலவுடனும், சுகாதாரமாகவும் இருக்கும். நம்முடைய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் எக்காரணத்தைக் கொண்டும் விட்டு விடக் கூடாது. ஆயிரந்தான் உலகம் முன்னேறினாலும் கடவுளுக்கு பீட்ஸாவையும் பர்கரையுமா நைவேத்தியம் செய்ய முடியும்? அம்மா எத்தனையோ விதமான பட்சணங்கள் செய்தார்கள். இன்று நாம் நாலு விதமாவது செய்தால்தான் நாளை நமது மகள் அவள் காலத்தில் இரண்டு விதமாவது செய்வாள். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுவது என்னுடைய தலையாய கடமை அல்லவா?

முடிவெடுத்தவளாய் சமையலறைக்குச் சென்று பட்சணங்களுக்கு வேண்டிய பொருட்களுக்கான பட்டியலை எழுதத் துவங்கினாள்.

ஆதி வெங்கட்.