Thursday, June 30, 2011

கோடை விடுமுறை - பகுதி- 2

கோடை விடுமுறை பகுதி 1இல் நான் சிறு வயதில் ருசித்த சில உணவு பற்றி சொல்கிறேன் என எழுதி இருந்தேன்.  அவற்றை இப்போது பார்போமா!  எத்தனை நேரம் தான் பசியோடு காத்திருக்க வைப்பது?

ஆறுமுகம் கடை வறுபயிறு, சுண்டல்:

மாலை 5   மணி ஆகி விட்டால் ஆறுமுகம் கடை வாசலில் கும்பல் அலை மோதும். காரணம் அவர் கடையின் ஸ்பெஷலான வறுபயறும், சுண்டலும் தான். ஒரு மணி நேரத்தில் கொண்டு வந்த அனைத்துமே காலி ஆகி விடும். அவ்வளவு சுவையானதாக இருக்கும். சிறு வயதில் சாப்பிட்ட சுவை, இதை எழுதும் போது என் நாக்கில் தெரிகிறது.

மனோகரன் கடை ரோஸ் மில்க்:

இந்த கடை ஸ்பெஷல் ரோஸ் மில்க் மற்றும் ப்ரூட் மிக்ஸ் ஆகும். ஒரு பாத்திரத்தையோ, தண்ணீர் ஜக்கையோ எடுத்துக் கொண்டு மாமா வீட்டின் கொல்லைபுறக் கதவைத் திறந்து கொண்டு போனால் நடக்கும் தொலைவில் கடைத்தெருவில் இருக்கும் மனோகரன் கடை வந்து விடும். அங்கு சென்று ரோஸ் மில்க்கோ, ப்ரூட் மிக்ஸ்ஸோ வாங்கிக் கொண்டு ஓடி வருவோம் [அப்போது தானே ஜில்லென்று சாப்பிட முடியும்]. அப்போதெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஃப்ரிட்ஜ் கிடையாதே. இப்போது வீட்டிலேயே சுகாதாரமாக செய்தாலும், ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை.

நுங்கு, இனிப்புகள் நெல்லிக்காயை தேனில் ஊறப் போட்டு கொடுப்பது என்று நிறைய ஐட்டங்கள் உண்டு. எங்கள் பாட்டி, சாதாரணமா கீரை வாங்கி சுத்தம் செய்து வேக வைத்து மசித்து தாளித்துக் கொட்டினாலே அவ்வளவு சுவையானதாக இருக்கும்.

இத்தனை சாப்பிட்டால் வயிறு சும்மா இருக்குமா? இதற்கும் ஒரு வைத்தியம் உண்டு. நல்ல கொழுந்து  வேப்பிலையை பறித்து அரைத்து  எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உருண்டை வாயில் போட்டு சிறிய டம்ளரில் மோர் விட்டு எங்கள் வாயில் ஊற்றி அழுத்தி மூடிவிடுவார்கள்.  எத்தனை ஆட்டமும் ஓட்டமும் காட்டினாலும் இந்த வேப்பிலை உருண்டை வைத்தியத்தில் இருந்து தப்ப முடிந்ததில்லை என்பதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு. 

சின்ன அத்தை வீடு இராமநாதபுரத்தில் மாவட்டத்தில். அவர்கள் வீடு நாற்பது ,ஐம்பது பேரை கொண்ட கூட்டு குடும்ப வீடு. பந்தி பந்தியாக சாப்பாடு நடக்கும். அவர்களுக்கு சொந்தமாக ஹோட்டல் உள்ளதால் காலை டிபன் அங்கிருந்து வந்து விடும். நிறைய வாண்டுகள் இருந்ததால் பொழுது போவதே தெரியாது. அங்கிருந்ததும் எனக்கு ஜாலியான அனுபவம் தான்.

பெரிய வகுப்புகள் வந்ததும் ஊருக்கு போகும் வாய்ப்பே இல்லாமல் போனது. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைப்பது கடினம் தான். இன்று வரையிலும் இனிமையான கோடை விடுமுறை நாட்கள் அவை.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்….

ஆதி வெங்கட்.

13 comments:

 1. வணக்கம் சகோதரி அசத்தலான கோடைகால விடுமுறையை
  அனுபவித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.அனுபவ பகிர்வு அருமை!....

  ReplyDelete
 2. வறுபயிறு, சுண்டல், ஜில்லுன்னு ரோஸ் மில்க், நுங்கு, இனிப்பு நெல்லிக்காய், கீரை மசியல் எல்லாம் சாப்பிட்டதும் கொழுந்து வேப்பிலை உருண்டை+மோர் ஆஹாஹா

  நல்ல பதிவு. எனக்கும் எல்லாம் சாப்பிடணும் போல ஆசை ஏற்பட்டுவிட்டது.

  [கொழுந்து வேப்பிலையை அப்படியே மரத்திலிருந்து பறித்து, லேசா அலம்பிவிட்டு அப்படியே சாப்பிட்டுவிடுவேன் நான். அந்தக்கசப்பு நல்லவே இருக்கும்.]

  ReplyDelete
 3. உங்களுக்கு கிடைச்ச நொறுக்ஸ் எனக்கும் இப்பவே வேணும்.. வேப்பிலை உருண்டையை மட்டும் வெங்கட்டுக்கு தந்து விடுங்கள் ஆதி!

  ReplyDelete
 4. அடப்போங்க நீங்க.......... இப்படிக் கொசுவத்தி ஏத்தி வச்சுட்டீங்களே!!!!

  ஹூம்...........என்னவெல்லாம் தின்னோம்! எப்படியெல்லாம் தின்னோம்...... அந்தக் காலம் மீண்டும் வருமான்னு மனசு ஏங்குதுங்க:(

  பதிவு அருமை!

  ReplyDelete
 5. வேப்பிலையா :( நாம தப்பித்தோம்.

  இருமல் சளிக்கு தூதுவளை இலை அவித்துத் தருவார்கள் குடித்திருக்கிறேன்.

  ReplyDelete
 6. இளமை காலத்தில் இருந்தவைகளை
  இன்றைய காலத்தில் இழந்தவைகளை
  இயல்பாய் பதிவிட்டது
  அருமை சகோதரி
  எங்க மன்னார்குடியிலும்
  இது போல நிறைய இருக்கு

  ReplyDelete
 7. வறுபயிறு, சுண்டல், ரோஸ்மில்க்....ம்..ம்..மலரும் நினைவுகள் அருமை!

  ReplyDelete
 8. நினைத்துப் பாருங்கள் ஆதி.நாம் அனுபவித்த அந்த கோடை விடுமுறை
  சந்தோஷம் நம் குழந்தைகளிடையே உள்ளதா?அவர்களது வேறு உலகமாகி விட்டது

  ReplyDelete
 9. வாங்க அம்பாளடியாள்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோதரி.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க மோகன்ஜி,

  ஏன் சார் வேப்பிலை உருண்டையை மட்டும் அவருக்கு தரணும்.

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க துளசி மேடம்,

  அந்த காலம் போல வராது. தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  வாங்க மாதேவி,

  ஆமாங்க. வைத்தியமெல்லாம் வீட்டிலேயே நடக்கும்.
  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  வாங்க ARR சார்,

  உங்க மன்னார்குடி நினைவுகளையும் தொகுக்கலாமே சார்.
  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க மனோம்மா,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிமா.

  வாங்க ராஜி,

  ஆமாம். நம் குழந்தைகளின் உலகமே வேறாகி விட்டது.

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. ரோஸ்மில்க்காய் தித்திப்பாய் வாசனை வீசியது மலரும் நினைவுகள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. வாங்க இராஜராஜேஸ்வரி,


  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 12. நாங்களும் அப்படித்தான் திருநெல்வேலி ஜங்ஷன் பாலஸ் தியேட்டரில் படம் பார்க்கும் போது இடைவேளையில், பக்கத்து மாருதி விலாஸ்சிலிருந்து ரோஸ் மில்க் வரவழைத்து சாப்பிடுவோம்......

  ReplyDelete
 13. வாங்க goma,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…