Friday, June 24, 2011

கோடை விடுமுறை - பகுதி-1


கோடை விடுமுறை என்றாலே கோடை வாசஸ்தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்று வருவது என்பது  இப்போதைய கலாச்சாரமாகி விட்டது. ஆனால் என் சிறு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் பிறந்த ஊரான சிவகங்கைக்குத் தான் அழைத்துச் செல்வார்கள். கடைசி பரீட்சை முடிந்த அன்றே கிளம்பி விடுவோம். கோயமுத்தூரிலிருந்து பேருந்து பிடித்து மதுரை சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஒரு மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை சென்றடைவோம். பெரும்பாலும் அப்பாவும் வருவார். இல்லையென்றால் அம்மா, நான் தம்பி மூன்று பேரும் செல்வோம். கோவையிலிருந்து மதுரைக்குமணிநேரம். சிவகங்கைக்கு 1 மணிநேரம். ஆக மொத்தம்மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை அடையலாம். இதுவே அன்றைய நாளில் எனக்கு பெரிய பயணமாகத் தோன்றும். இப்போதோ தில்லிக்கு 40 மணிக்கும் மேற்பட்ட ரயில் பிரயாணத்தை நான் மேற்கொள்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

அத்தை / மாமா வீடு

சிவகங்கையில் என் அத்தையும் (அப்பாவின் அக்கா) மாமாவும் (அம்மாவின் தம்பி) இருக்கிறார்கள். பெரிய சிவன் கோவில் இருக்கும். அதற்கு எதிர் புறமாக அத்தையின்  அந்த கால வீடு. நெடுக போய்க்கொண்டே இருக்கும். முதலில் வராந்தா. அங்கிருந்தே மாடிக்கு செல்லும் வழி இருக்கும். வராந்தாவைத் தாண்டிச்  சென்றால் ஏழு, எட்டு தூண்களுடன் கூடியரேழிஎன்று சொல்லப்படும் பெரிய அறை இருக்கும். அடுத்து இடதுபுறம் ஒரு சிறிய அறை. அதற்கடுத்து கூடம். கூடத்தின் ஒரு புறம் பூஜையறைக்கு வழி, அடுத்து ஸ்டோர் ரூம். அதைக் கடந்தால் பெரிய சமைலறை. சமையலறைக்கு நடுவில் பெரிய முற்றம். அதை தாண்டி கிணற்றடி. இதன் இரு புறங்களிலும் இரண்டு அறைகள். விறகுகள் அடுக்கி வைக்க. அப்புறம் தோட்டம். தோட்டத்தில் 6,7 தென்னை மரங்களும், செம்பருத்தி, நந்தியா வட்டை போன்ற பூச்செடிகளும் இன்ன பிறவும் இருந்தது

கிணற்றடியில் தண்ணீர் இறைத்து, துவைத்து, குளித்து அமர்க்களம் செய்வோம். இரவில் அங்கேயே இருக்கும் தாழ்வாரத்தில் எல்லோரும் வட்டமாக அமர்ந்து கொள்ள, அத்தை சாதத்தை உருட்டி கையில் பிசைந்து போடப் போட, நாங்கள் அதன் நடுவே குழி செய்ய, அது கொள்ளும் அளவு குழம்பு விடுவார். அதோடு சாப்பிட்டால் அளவே இல்லாமல் உள்ளே போகும். செம்பருத்தி இலைகளை பறித்து தோய்க்கும் கல்லிலேயே வைத்து கசக்கினால் நுரை வரும் இதை தலையில் தேய்த்து குளிப்போம். காலையில் பூஜைக்கு மலர்கள் பறிப்பது எங்கள் வேலை.

அப்பா, அம்மாவை விட்டு நானும் தம்பியும் முதல் முறையாக அத்தை வீட்டிற்கு சென்ற போது நான் தோட்டத்துக்குச் சென்று மலர் பறிக்கும் போது என் அத்தை பையன் தோட்டத்து கதவை வெளியிலிருந்து பூட்டி சாவியை ஓட்டுக்கு மேலே வீசிவிட நான் அழுது கதறி, பின்பு எல்லோரும் ஓடி வந்து அவனை திட்டி சாவியை எடுத்து கதவைத்  திறந்தார்கள். இந்த அமர்களத்தில் எனக்கு ஜுரம் வந்து படுத்தது, அதற்காக திரும்பவும் அத்தை பையனுக்கு கிடைத்த திட்டு இன்றும் நினைவிருக்கிறது.

மாலை வேளைகளில் சிவன் கோவிலுக்கு சென்று வருவோம். இரவு நேரத்தில் அத்திம்பேர் சொல்லும் குட்டிக் குட்டிக் கதைகளைக் கேட்க ஆர்வமாயிருக்கும். அதைக் கேட்பதில் அலாதியான சந்தோஷம் எங்களுக்கு. அவர் சொல்லிய கதைகளில் சுண்டு விரல் உயரமுள்ள பையனின் கதை, ராஜா ராணி கதைகள் என நிறைய கதைகள் நாங்கள் விரும்பிக் கேட்டவை.

மாமாவின் வீடு அடுத்த தெருவிலேயே இருந்தது. இங்கும் அங்குமாய் இருப்போம். காலையில் அத்தை வீட்டில் சாப்பிட்டால் மதியம் மாமா வீட்டில். மாமா எங்களை நிறைய சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். ஒரு முறை மாமா, மாமி, அம்மா மூவரும் இரவுக் காட்சிக்கு பேய் படத்துக்கு செல்லும் போது என்னையும் தம்பியையும் பாட்டியுடன் சம்பூர்ண ராமாயணத்துக்கு அனுப்பினார். மறக்க முடியாதது. மாமா சாப்பிட நிறைய வாங்கித் தருவார். அப்படி நான் ரசித்து, ருசித்து சாப்பிட்டவற்றில் சிலவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  

அதுவரை காத்திருங்களேன்.  காத்திருந்து கிடைக்கும் எந்த ஒரு பொருளிலும் சுவை அதிகம் அல்லவா….

மீண்டும் சந்திப்போம்….

ஆதி வெங்கட்.

15 comments:

 1. குழந்தைப்பருவ கிராமத்து வாழ்க்கை, ரேழி, தோட்டம், கிணறு, கதைசொல்லிக்கேட்டல், கிணற்றடியில் நிலா வெளிச்ச சாப்பாடு எல்லாமே அருமை. பாராட்டுக்கள்.


  Voted 1 to 2 in indli

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு ...வித்தியாசம் பார்க்காத உறவு முறைகள் ... தொலைக்காட்சியின் தொல்லையில்லாத உற்சாகமான விளையாட்டுகள் ...கோடை விடுப்பு குதூகலம்தான் ...

  ReplyDelete
 3. நிகழ்ந்தது நினைக்கும்flash back எப்போதுமே திகட்டாத ஒன்றுதான்..
  இன்றைய வேகமான காலகட்டத்தில் நாம் இழந்து வரும் உறவு வட்டங்களின் அண்மையை,அவற்றின் கதகதப்பைச் சுவாரசியமாக நினைவூட்டிக் கொண்டு செல்கிறீர்கள்.
  தொடரட்டும் உங்கள் எழுத்தார்வம்..

  ReplyDelete
 4. அழகா எழுதி இருக்கீங்க ஆதி. நிச்சியம் கோடை விடுமுறை கொண்டாட்டங்கள் மறக்க முடியாதது தான். இப்போ ஊர் ஊரா சுத்தினாலும் அப்ப அத்தை/மாமா/தாத்தா/பாட்டி உறவுகளுடன் மகிழ்ந்த சந்தோசத்துக்கு ஈடு செய்ய முடிவதில்லை.. என்னையும் அந்த நாள் நினைவுகளுக்கு கொண்டு போயிட்டீங்க... waiting to read more...:)

  ReplyDelete
 5. nalla kondaattamaaka thaan therikirathu.. .vaalththukkal

  ReplyDelete
 6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  முதல் பின்னூட்டம் மூலம் என்னை மகிழ்வித்ததற்கு நன்றி சார்.

  வாங்க பத்மநாபன்,

  தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிங்க.

  வாங்க எம்,ஏ.சுசீலாம்மா,

  தங்கள் வாழ்த்துக்கு நன்றிமா.

  வாங்க புவனா,

  தங்கள் கருத்துக்கு நன்றிபா. சிறு வயது கொண்டாட்டங்கள் மறக்க முடியாதது தான்.

  வாங்க மதுரை சரவணன்,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 7. அப்போதைய வாழ்க்கை முறை
  அதிக ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருந்தது
  இன்றுபோல் இல்லை
  அன்றைய நினைவுகளைப் பகிர்கையில்
  எழுத்தில் கூட அந்த அமைதி
  தானாக வந்து அமர்ந்து கொள்வது போல் படுகிறது
  சொல்லிச் செல்லும் விதம் அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பழைய நினைவுகளை கொசுவர்த்தி சுத்த வெச்சுட்டீங்க. எனக்கு வெளியூர் போற குடுப்பினை எல்லாம் இல்லை. ரெண்டே கிலோமீட்டர் பாட்டி வீடு. என்ன மாமா பசங்க/சித்தி பொண்ணுங்கன்னு பெரிய பட்டாளமே வருவாங்க. ஒரு மாசத்துக்கு அதகளம்தான்

  ReplyDelete
 9. but today we are putting our children to spl camps during summer break also :(

  ReplyDelete
 10. வாங்க ரமணி சார்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க எல்.கே,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 11. "கோடைவிடுமுறை" இனிய நினைவலைகள்.

  சிறுவயதுக்கால கிட்டிப்புல், கோயில்திருவிழா,மண்கிணறுவெட்டுதல்,மாபிள்,இன்னும் ..பல...பல.. மீண்டன.

  ReplyDelete
 12. நல்லாத் தொடங்கி இருக்கீங்க ஆதி.. நாங்களும் அந்த காலத்துல இந்த ஆச்சி வீடு அந்த ஆச்சி வீடுன்னு லீவை உறவுகளோடு தான் எஞ்சாய் செய்தோம்..

  ReplyDelete
 13. வாங்க மாதேவி,

  கோடைவிடுமுறை விளையாட்டுகளே சூப்பராக இருக்கும். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  வாங்க முத்துலெட்சுமி,

  ஆமாங்க. உறவுகளோடு இனிமையாய் இருகும்.
  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 14. Nandri aadhi nam sivagangai ninaivugalai nee solliya vidham andha kaalathirke kondu sendru vittadhu ennai nandri:-)

  ReplyDelete
 15. வாங்க லதா அக்கா,

  ஆமாம். அந்தக் காலங்கள் திரும்ப வராது. என் பழைய பதிவுகளை தொடர்ந்து படிப்பதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…