Thursday, June 16, 2011

கதம்பம்-1நீண்ட நாட்களாக புதிதாக பதிவுகள் எதுவும் எழுதமுடியவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்த மாமனாரும், மாமியாரும் 42 நாட்கள் எங்களுடன் இருந்து விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இப்போது வீடே வெறிச்சோடிக் கிடப்பது போல் ஒருஉணர்வு. மகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமுறை. ஜூலை ஒன்றாம் தேதிதான் மீண்டும் துவங்குகிறது. நானும் மகளும் அவர்களுடன் செல்லலாம் என்று முன்பே திட்டமிட்டு பயணச்சீட்டு முன்பதிவு செய்து வைத்திருந்தோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியவில்லை. டிசம்பர் விடுமுறையில் செல்லலாம் என்று டிக்கட்டை ரத்து செய்து விட்டோம் (கடுங்குளிரிலிருந்து தப்பிக்கலாமே என்று மனதை தேற்றிக் கொள்கிறேன்).

தில்லி தர்பார்:

வெயில் பயங்கரமாக இருக்கிறது.காற்றில் ஈரப்பதம் அதிகமாகி விட்டதால் வியர்வை மழையில் நனைந்து கொண்டிருக்கிறோம். எப்போதுமே ஜூன் மாதம் இங்கே மோசமான தட்ப வெட்பநிலை கொண்டதாக இருக்கும். நேற்று இரவு சிறிது நேரம் மழை பெய்தது . ஜூலை முதல் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இங்கு மாம்பழம் கிலோ 40 ரூபாய்க்கும், சீசன் பழமான கிர்ணி பழம் 25 ரூபாய்க்கும் கிடைக்கிறது. நேற்று கிர்ணி பழ ஜூஸ் முயற்சி செய்தேன். நன்றாக வந்தது. பிறிதொரு பகிர்வில் அதன் செய்முறையை பகிர்கிறேன்.

இர்வின் ரோடு பிள்ளையார் கோவில்:

புதிய இடத்துக்கு மாறிய பின் கோவிலுக்குச் சென்று என்னுடைய ஃபேவரிட் பிள்ளையார் உம்மாச்சியைப் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் இந்த ஞாயிற்றுக்கிழமை இர்வின் ரோடு பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். தென்னிந்தியப் பாணியில் கோபுரத்துடன் கூடிய அழகிய கோவிலில் ”அபீஷ்ட கணபதி” என்ற பெயருடன் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் சின்னஞ்சிறு பிள்ளையார். சுற்று சன்னதிகளில் நவக்கிரகங்கள், துர்க்கை, குருவாயூரப்பன், ஐயப்பன், முருகன், ஆஞ்சனேயர் முதலானோர் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்கள். தரிசனம் முடித்து எல்லோருக்காகவும் வேண்டிக் கொண்டு வெளியில் வந்தால் தொட்டடுத்த வளாகத்தில் ஹனுமான் மந்திர் உள்ளது.

ஹனுமான் மந்திர்:


 
வட இந்திய கோவிலான இந்த கோவிலுக்குள் நுழையும் முன்னரே கோவில் அருகே இருந்த ஒரு அலுவலகத்தில் உள்ள கூலர் மேல் அழகாக உட்கார்ந்து வருவோர் போவோரை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டே ”நான் இங்கே இருக்கேனே…” என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தார் மாருதி. உள்ளே சுற்று சன்னதிகளில் பளிங்கு சிலைகளில் சிவன்-பார்வதிக்கு நடுவில் விநாயகர், சீரடிசாய் பாபா, ராமர், லட்சுமணர், சீதை ஆஞ்சநேயர், ராதா கிருஷ்ணர், ஆகியோர் பளபளக்கும் உடைகளில் அருள்பாலித்துக் கொண்டிருந்தனர். திவ்வியமான தரிசனம் செய்து விட்டு வந்தோம்.

சென்ட்ரல் பூங்கா:


 
கோவில் தரிசனங்கள் முடிந்த பின் சிறிது தூரம் சென்றால் ”பாலிகா பஜார்” என்றுஅழைக்கப்படும் ”Underground Market” உள்ளது. இங்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். தற்போது உள்ள நிலை பற்றி மீண்டும் அங்கு சென்று வந்த பின் இன்னொரு பதிவில் பகிர்கிறேன். அந்த பஜாருக்கு மிக அருகில் புல்வெளிகளுடன் கூடிய அழகிய பூங்கா உள்ளது. அங்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து விட்டு வந்தோம். இங்கு உள்ள இரண்டு வழிகளில் ஒன்றில் நம்மை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள். உணவு பண்டங்களை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால் நம் மக்கள் இன்னொரு பாதை வழியாக உள்ளே நுழைந்து சாப்பிட்டுவிட்டு உணவுப்பண்டங்களின் கழிவுகளை பூங்காவிலிட்டு அசிங்கப் படுத்திக் கொண்டிருந்தனர். இவர்கள் என்றுதான் திருந்துவார்களோ?

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

14 comments:

 1. நம்ம மக்கள் என்னிக்கு திருந்துவாங்க ? கதம்பம் நல்லா இருக்கு

  ReplyDelete
 2. படங்களுடன் பதிவும் அருமை
  ஆனாலும் வேலைப்பளுவின் காரணமாகவோ என்னவோ
  கொஞ்சம் அவசரம் அவசரமாக பதிவிட்டதைப்போல ஒரு எண்ணம்
  பதிவைப் படிக்கையில் தோன்றுகிறது
  அடுத்த விரிவான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

  ReplyDelete
 3. மீண்டும் பதிவிட வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.

  //”பாலிகா பஜார்” என்றுஅழைக்கப்படும் ”Underground Market” உள்ளது.//

  இந்த பஜாருக்கு நானும் என் சிறிய மகனும் 2005 இல் முதன் முதலாக டெல்லிக்கு வந்தபோது சென்றோம்.

  அங்கு போய் எது வாங்கினாலும் பேரம் பேசி வாங்கணும் என்று உறவினர் ஒருவர் சொல்லியிருந்தார்.

  [தனிப்பதிவே போடும் அளவுக்கு நிறைய சரக்குகள் உள்ளன] ரூ 850 சொன்ன கேன்வாஸ் ஷூவை, ஒரு கடைக்காரப்பையன் எங்களை விடாமல் துரத்திக்கொண்டே வந்து, கடைசியில் நான் அவன் துரத்தலுக்கு இரக்கப்பட்டு கொடுப்பதாகச்சொன்ன ரூ. 150 ஐ மட்டும் வாங்கிகொண்டு சந்தோஷமாகக் கொடுத்து விட்டு 1 ஜோடி போதுமா, இன்னொரு ஜோடியும் தரட்டுமா என்றான்.

  என் மகனுக்கு ஒரே ஆச்சர்யம். 850 இல் 100 தள்ளி 750 க்கு கேட்கலாம் என்று நினைத்தேன் என்றான் என்னிடம். பணம் முழுவதும் என்னிடமே வைத்திருந்ததால், என் மகனால் தனியாக அந்தக்கடையில் பேரம் பேசி ஏமாறாமல் தப்பிக்க முடிந்தது.

  அங்கு யார் போனாலும் 100 ரூபாய் பொருளை 10 ரூபாய்க்கு தருவாயா என்று தைர்யமாக கேளுங்கள். கடைசியில் 15 க்கோ அல்லது 20 க்கோ தந்து விடுவார்கள்.

  இதுபோல அந்த பஜாரில் நான் பல பொருட்கள் மிகவும் மலிவாக வாங்கி வந்தேன். அதுவும் ’ஹிந்தி தோடாதோடா மாலும்’ என்ற நிலையில்.

  ReplyDelete
 4. கதம்பப் பதிவு சுருக்கமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது ஆதி! புகைப்படங்களும் அழகு!!

  ReplyDelete
 5. வீட்டை சுற்றி மினி ரவுண்டப் காட்டிவிட்டீர்கள் ... சென்ட்ரல் பூங்கா மேக பின்னணியில் அழகாக இருக்கிறது ....

  ReplyDelete
 6. ஓ, மாமா-மாமி வருகையில் பிஸியா இருந்ததாலத்தான் பதிவு எழுதலையா ஆதி?

  ஆனா, வெங்கட் சார் போன மாசம்தான் அதிகமா பதிவுகள் எழுதிருக்கார் போலருக்கு!!

  (அப்பாடா.. கொளுத்திப் போட்டாச்சு) ;-)))))))

  இந்தப் பதிவுல சொல்லிருக்க விஷயங்களின் தனிப்பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்ட்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. கதம்பம் நல்லாயிருக்கு..பாலிகா பஜார் ரயில்வே ஸ்டேஷன் பற்றியும் எழுதுங்கள்.அண்டர்க்ரவுண்ட் ஸ்டேஷன் எக்ஸ்லேட்டர் அப்படியே பாலிக்கா பஜார் கேட்டிற்கு பக்கத்தில் நம்மை விடுவது அழகு.

  ReplyDelete
 8. ஆதி மேடம்! உங்கள் கதம்பம் தஞ்சாவூர் கதம்பம் போல் மணம் வீசுது. எனக்கென்னவோ டில்லிக்கு வரும் போதெல்லாம் திருவிழாவில் காணாமல் போன குழந்தை பீலிங் வரும்ங்க.

  ReplyDelete
 9. கதம்பம் கலக்கலா இருக்குங்க... குட்டி பொண்ணு ஸ்கூல் மொதல் நாள் போட்டோ இப்போ தான் பாக்கறேன்... வெரி கியூட்... ஷேர் பண்ணினதுக்கு தேங்க்ஸ்... செல்லம் பேர் என்ன? மொதலே சொல்லி இருக்கீங்களானு தெரியல... சாரி...

  ReplyDelete
 10. ரோஷ்ணிக்கு சுத்திப் போடுங்க சகோ...

  ReplyDelete
 11. க‌த‌ம்ப‌ம் உங்க‌ ப‌க்க‌த்து வீட்டிலிருந்து நேர‌ம் கிடைக்கும் போது பேசிக்கொள்வ‌து போல் வெகு இய‌ல்பு. வித‌ வித‌ வாச‌னையும் வ‌ண்ண‌மும் க‌ல‌ந்த‌ செய்திக‌ள்.

  ரோஷிணி அதிர்ஷ்ட‌க்காரிதான்(அப்பா ஜாடையிலிருக்கிறாளே) பெண்குழ‌ந்தைக‌ள் அப்பா போல‌வும், அப்பா கோண்டாக‌வும் இருப்ப‌து விஷேஷ‌ம் தானே.(இப்ப‌டியெல்லாம் சொன்னாலாவ‌து குழ‌ந்தை வ‌ள‌ர்ப்பில் ஒத்தாசையாயிருப்பார்க‌ளென்ற‌ அந்த‌க் கால‌ ஏற்பாடு!)

  ReplyDelete
 12. வாங்க எல்.கே,

  ஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  வாங்க ரமணி சார்,

  ஆமாம். ஒரு மணி நேரத்தில் தோன்றியதை எழுதியது. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

  ”கரோல் பாக்”கில் உள்ள அஜ்மல்கான் ரோடிலும் இப்படித் தான் பேரம் பேசி வாங்குவார்கள். உங்கள் பாலிகா பஜார் அனுபவத்தை கதையாகவே எழுதலாமே சார்.

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  வாங்க மனோம்மா,

  நன்றிமா. தூக்கம் வராமல் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது இப்படி குட்டி குட்டி விஷயங்களை தொகுக்கலாமே என்று தோன்றியவுடன் எழுதியது.

  வாங்க பத்மநாபன் சார்,

  செண்ட்ரல் பூங்கா அழகு. நாங்கள் சென்ற போது மழையும் தூறிக் கொண்டு இருந்தது. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சார்.

  ReplyDelete
 13. கதம்பச் செய்திகள் நன்றாக உள்ளன.

  என் வலைப்பூவிலும் நான் கதம்பம் என்ற பெயரில் எழுதி வந்து இது வரை ஆறு பதிவுகள் போட்டுவிட்டேன்! முடிந்தபோது வந்து பாருங்கள்!

  ReplyDelete
 14. வாங்க ஹுசைனம்மா,

  அவருக்கு நிறைய நேரம் இருந்திருக்கு. எனக்கு நேரமே கிடைக்கலை. பட்டாசெல்லாம் வெடிக்காது. :) ( கண்ணு வைக்காதீங்க! மே மாதம் நான்கு பதிவுகள் தான் போட்டிருக்காங்க )
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  வாங்க அமுதா கிருஷ்ணா,

  பாலிகா பஜாருடன் மெட்ரோ பற்றியும் எழுதுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

  வாங்க மோகன்ஜி,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

  வாங்க புவனா,

  மகளின் பெயர் ரோஷ்ணி. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிபா.

  வாங்க கலாநேசன்,

  கண்டிப்பா சுத்திப் போடுகிறேன். நன்றி சகோ.

  வாங்க நிலாமகள்,

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிங்க.
  ஆமாங்க. ரோஷ்ணி அப்பா கோண்டு தான்.

  வாங்க மிடில்கிளாஸ்மாதவி,

  கண்டிப்பாக வந்து பார்க்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…