Monday, May 16, 2011

முடியுமா? முடியாதா?


என்னடா இது தலைப்பிலேயே இப்படி பயமுறுத்தறாங்களேன்னுதானே நினைக்கறீங்க? பயப்படாம படியுங்க

இவள் எப்போது பேசுவாள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகள் இப்போது வாய் மேல் விரல் வைத்து ஒரு ஐந்து நிமிடம் பேசாம இரு என்று சொல்லும்படியாக பேசித் தள்ளுகிறாள். அத்துடன்  இப்போது அவள் கேட்கும் கேள்விகள் முடிவில்லாதது!

அடம்பிடித்த கதை

தினமும் பள்ளியிலிருந்து வந்தவுடன் அன்று நடந்த விஷயங்களையும், விளையாட்டுகளையும் ஒப்பித்து விடுவாள். அவள் சொல்ல வில்லையென்றாலும் நான் விட்டு விடுவேனா என்ன?

அப்படித் தான் ஒரு நாள் பள்ளிக் கதைகளை சொல்லிக் கொண்டு வரும்போது " என் நண்பர்கள் எல்லாம் டியூஷன் போகிறார்கள் நானும் போக வேண்டும் " என்றாள்.  டியூஷன் என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டதற்கு "அங்கு போய் தான் HOME WORK பண்ணவேண்டும்" என்றாள். யாருடைய வீட்டில் அம்மாவும் ஆபிஸ் போகிறார்களோ அந்த குழந்தைகள் தான் டியூஷன் போகும் என்றேன் அவளிடம். அம்மா வீட்டில் தானே இருக்கின்றேன், உனக்கு பாடங்கள் சொல்லித் தருகிறேன் தானே அப்புறம்  டியூஷன் எதற்கு என்று கேட்டதற்கு " என்னை அதற்கு அனுப்ப முடியுமா, முடியாதா? " என்று அடம் வேறு.

என் காலத்தில் கூட (நான் ஏதோ அந்த காலமும் அல்ல. நான் பத்தாம் வகுப்பு முடித்தது 1997-ல். என் பெண்ணும் பெரியவளும் அல்ல ஆறு வயதாகும் முதல் வகுப்பு படிப்பவள்) டியூஷனுக்கு போனால் அது மக்கு பிள்ளை என்று தான் சொல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்னால் மூன்று மாதம் கணிதம் மற்றும் அறிவியலுக்காக டியூஷன் சென்றிருக்கிறேன். ஆனால் என் மகள் முதல் வகுப்பிலேயே டியூஷன் போக வேண்டுமென்றால் என்ன சொல்வதேன்று தெரிய வில்லை. இங்கு வட இந்தியாவில் அப்படித் தான் செய்கிறார்கள். டியூஷன் போவது கூட நாகரீகமோ?

பள்ளியில் நடந்த சம்பவம்

பள்ளியில் நடந்த விஷயங்களை சொல்லும் போது " இன்று என் பள்ளியில் என் அருகில் அமர்ந்திருந்த பையன் என் கழுத்தில் குத்தி விட்டான் " என்றாள். நான் நீ ஆசிரியரிடம் சொல்ல வில்லையா? என்று கேட்டதற்கு " ஆசிரியரிடம் சொன்னேன், அவர் அந்த பையனின் கழுத்தில் திருப்பிக்  குத்த சொன்னார் " என்றாள். நீயும் குத்தினாயா என்றதற்கு,  "ஆமாம்!" என்கிறாள். அவளிடம் இப்படி செய்வது தவறு  அப்படியெல்லாம்  பண்ணக் கூடாது என்று சொல்லி சமாதானம் செய்தேன்.

ஆசிரியரானவர் குழந்தைகளிடம் ஒருத்தொருக்கொருத்தர் "சாரி" சொல்லிக் கொள்ள செய்திருக்கலாம். அல்லது அந்த பையனைக்  கூப்பிட்டு விசாரித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு  “Tit for Tat” என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்என்ன நான் சொல்றது சரிதானே?

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதி வெங்கட்.

23 comments:

 1. எல்லாரும் போகிறார்கள் என்று தனக்கும் ஆசை.. ட்யுஷனுக்கு ஒரு மாதம் அனுப்பினால் குழந்தை தானாக உங்களிடம் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்து விடுவாள்....
  //அதை விட்டுவிட்டு “Tit for Tat” என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்!
  டீச்சரம்மாவுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டும் போலிருக்கு..///

  ReplyDelete
 2. இங்கே சென்னையில் டியூஷன் போவது ஒரு வித கட்டாயம். டியூஷன் போகவில்லை என்றால் பிள்ளைகள் படிக்காமல் நாசமாய் பொய் விடும் என்று ஒரு மனநிலை பெற்றோர்களிடம் இருக்கிறது. வேலைக்கு போகும் அம்மா போகாத அம்மா என்ற வித்யாசம் எல்லாம் இல்லை. பல அம்மக்களுக்கு குழந்தைகளுக்கு இணையாக நேரம் செலவழித்து சொல்லித் தரும் பொறுமை இல்லை. ஒரு அவசரம் மற்றும் ஒரு ஆவேசம். உன் வயசு தானே அவன் செய்யறானே இவ பன்னறாலே உன்னக்கு என்ன கொழுப்பு என்று எடுத்த எடுப்பில் அடி தான்.
  KG யிலேயே டியூஷன் அனுப்பும் அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. முதல் வகுப்பிற்கு ட்யூசன் அவசியமில்லை என்பதை புரியவைக்கதான் வேண்டும்.

  அதுவும் வட இந்தியாவில் டியூசன் கட்டணம் கேட்டாலே நம்மூர் பிரைமரி பள்ளிகளின் மாதாந்திர கட்டிணத்தைவிட அதிகமா இருக்கு.

  இங்கு நாகரீகம்(ன்ற பேரில்)வளந்தளவிற்கு பிள்ளைகளுக்கு கோச்சிங்,டிசிப்ளின் சொல்லித்தரதில்ல இல்லனுதான் நினைக்கிறேன்.எல்லாம் பந்தாவாதான் இருக்கு.

  ReplyDelete
 4. Voted 5 to 6 in Indli.

  நல்ல பதிவு. நம் காலம் வேறு. நம் குழந்தைகள் காலம் வேறு. என்ன செய்வது. ஊரோடு ஒத்துப்போக வேண்டியதாகத்தான் உள்ளது. என் பேத்தியும் அப்படித்தான் ஏதாவது டியூஷன், பாட்டு க்ளாஸ், ஸ்லோகக்கிளாஸ், டான்ஸ் க்ளாஸ் என ஓயாமல் எங்கேயாவது போய் ஓய்வு ஒழிவு இல்லாமல் இருந்து வருகிறாள். தொலைபேசியில் அவளைப்பிடித்து பேசவே முடிவதில்லை. பாவம் இந்தக் காலக்குழந்தைகள்.

  ReplyDelete
 5. //டியூஷன் போவது கூட நாகரீகமோ//
  கொடுமை தான் போங்க... எப்படி மாறி போச்சு உலகம்?ஹ்ம்ம்...

  //அதை விட்டுவிட்டு “Tit for Tat” என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்//
  ரெம்ப சரியா சொன்னீங்கப்பா... டீச்சர்க்கு டீச்சர் வேணும் போல இருக்கு...:(

  ReplyDelete
 6. தங்க தாமரை பெற்ற கோவை அரசியே,

  தாங்கள் பெற்ற மகளிடம் தாங்கள் பெற்ற அனுபவத்தை படித்து துயருற்றேன். நமது குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய கல்வியின் தரத்தைப்பற்றி சிந்திக்க, நம்மை ஆள்பவருக்கு நேரமில்லை. அடிக்கு அடி, ரத்தத்திற்கு ரத்தம் என்று நஞ்சை சிறார்களுக்கு ஊட்டுபவர்களுக்கு இதயமே இல்லையா? இந்த சூழ்நிலையில் வளர்ந்த நமது சந்ததியினர் வருங்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்ற சிந்தனையில் உறக்கம் வருவதில்லை.மாறாக, கல்வியை தரமுள்ளதாகவும் அதே சமயத்தில் படிக்க மிகவும் ஆரவத்தை ஊட்டுவதாகவும் அமைந்தால் , நாம் கற்று அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எழுச்சி குழைந்தைகளுக்கு தானாகவே கைவரப் பெறும் என்றார், ஸ்ரீ அரவிந்தர் அவர்கள். அந்த பொற்காலத்தை நமக்கு விரைவில் அளித்தடல் வேண்டும் என்று நம்மை படைத்தவனிடம் இறைஞ்சுவோம்.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 7. இங்கயும் இப்ப இதுதான் நிலை. நான் பன்னிரெண்டாவது படிக்கும் பொழுது கணக்கு பாடத்திற்கு மட்டும் போனேன். வேற வழி இல்லை.

  ஒரு சில ஸ்கூலில் ட்யூசன் எடுக்கு ஆசிரியை/ஆசிரியர்கள் பள்ளியில் ஒன்றும் நடத்துவதில்லை

  ReplyDelete
 8. வாங்க பத்மநாபன்,

  நீங்க சொல்வது போலும் செய்து பார்க்கலாம். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

  வாங்க விருட்சம்,

  எல்லா இடத்திலும் கட்டாயம் ஆகி விட்டது போலிருக்கிறது. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

  வாங்க திருமதி பீ.எஸ் ஸ்ரீதர்,

  இங்கு எல்லாமே காஸ்ட்லி தான். ஒரே பந்தாவா தான் இருக்கு. என்ன செய்வது? இதிலிருந்து நம் குழந்தைகளை நாம் தான் ஒழுங்காக வழிநடத்த வேண்டும். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிங்க.

  வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார்,

  பாவம் தான் குழந்தைகள். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்.

  வாங்க அப்பாவி தங்கமணி,

  டீச்சருக்கே டீச்சர் தான் வேண்டும் போல் இருக்கிறது. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி புவனா.

  வாங்க வீ.கே. நடராஜன் அவர்களே,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.

  வாங்க எல்.கே,

  நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான். சில ஆசிரியர்கள் பணம் சம்பாதிக்க தான் பார்க்கிறார்கள். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 9. //டியூஷனுக்கு போனால் அது மக்கு பிள்ளை என்று தான் சொல்வார்கள்.//
  ஆமாங்க.நாம படிக்கும்போதுதான் அப்படி.இப்போலாம் டியூஷனுக்கு போவது பாஷன் ஆகிவிட்டது.
  குழந்தைகள் தான் பாவம்.
  //அவர் அந்த பையனின் கழுத்தில் திருப்பிக் குத்த சொன்னார் "//
  பிஞ்சுலையே வன்முறையைத் திணிக்கிறாங்களே இப்படி?
  காலம் போற போக்கைப் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு.

  ReplyDelete
 10. அந்த ஆசிரியருக்கு அன்னிக்கு என்ன கோபமோ?
  டியூஷன் போவது இப்போது பேஷன்..
  சிந்தனையைத் தூண்டும் பதிவு..

  ReplyDelete
 11. //பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்! //

  நன்று.

  ReplyDelete
 12. ஆசிரியப் பணி மகத்தான ஒன்று. இப்போது தகுதியே இல்லாமல் அனைவரும் ஆ'சிறி'யர்கள் ஆகி படுத்துகிறார்கள். அந்த ஆசிரியர் செய்தது மிகவும் தவறான செயல். நல்ல பதிவு சகோ. ;-))

  ReplyDelete
 13. வாங்க ஜிஜி,

  ஆமாப்பா. இப்போ பேஷன் தான் ஆகிவிட்டது போலும். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

  வாங்க ரிஷபன் சார்,

  ஆசிரியர்கள் இப்போது அப்படித்தான் போலிருக்கிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.

  வாங்க அமைதி அப்பா,

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

  வாங்க ஆர்.வீ.எஸ்,

  ஆசிரியர் செய்தது தவறான செயல் தான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 14. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது...நல்ல பதிவு!

  ReplyDelete
 15. யதார்த்த நிலையை சொல்லியிருக்கிறீர்கள். எங்குமே டியூஷன் என்பது அவசியம் போல் ஆகி விட்டது. இதற்கு காரணம் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்க இயலாதது என்றே நினைக்கிறேன். இங்கே யாருக்கும் நேரம் இல்லை. பாடம் சொல்லிக் கொடுப்பதோ கதைகள் சொல்வதோ வழக்கொழிந்து போன விஷயங்கள் ஆகிவிட்டன. போதாதற்கு ஆரிரியப் பணியில் புகுந்துவிட்ட பொருளாதார நிர்பந்தங்கள்..கவலையாக இருக்கிறது ஆதி!

  ReplyDelete
 16. என் சமீபத்திய அனுபவத்தில் - இந்த வயதுக் குழந்தைகள் அவர்கள் ஆசிரியை சொல்வது தான் சரி என சாதிப்பார்கள்! ரசியுங்கள்! காலம் மாறும்.

  பாட ட்யூஷனுக்குப் பதில் குழந்தைக்கு ஆர்வமுள்ள வேறு கிளாஸிற்கு அனுப்பலாம்; இயன்றால், பக்கத்து குழந்தைகளோடு சேர்த்து ஹோம் வொர்க் செய்ய வைத்தால் ட்யூஷன் ஆசை தீர்ந்தது!

  ReplyDelete
 17. வாங்க கே.பி.ஜனா சார்,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்.

  வாங்க மோகன்ஜி,

  தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொணடதற்கு நன்றி சார்.

  வாங்க மிடில்கிளாஸ் மாதவி,

  ஆம். நீங்கள் சொல்வது போல் ஆசிரியர் சொல்வது தான் சரி என்கிறார்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 18. டியூஷன் போவது கூட நாகரீகமோ?//
  என்ன செய்ய‌...? பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் ந‌டுக‌ண்ட‌ம் ந‌ம‌க்கு!

  //ஆசிரியரானவர் குழந்தைகளிடம் ஒருத்தொருக்கொருத்தர் "சாரி" சொல்லிக் கொள்ள செய்திருக்கலாம். அல்லது அந்த பையனைக் கூப்பிட்டு விசாரித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு “Tit for Tat” என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்! என்ன நான் சொல்றது சரிதானே?//

  அதானே? ப‌ழிவாங்கும் உண‌ர்வை ஆசிரிய‌ரே ஊட்டுத‌ல் முறையா?

  ReplyDelete
 19. //டியூஷன் போவது கூட நாகரீகமோ//
  என்ன கொடுமை சார்.

  //அதை விட்டுவிட்டு “Tit for Tat” என்பது போல அப்படி செய்யச் சொல்லி பிஞ்சுக் குழந்தைகளின் மனதிலே நஞ்சினை விதைக்காமல் இருந்திருக்கலாம்//
  இப்ப எல்லாம் 20 வயசிலேயே டீச்சர் ஆகினால் இப்படித் தான். மற்ற தொழில்களில் சின்ன வயதிலேயே ஆரம்பிப்பது வேறு. டீச்சிங்க் வித்தியாசமான தொழில். ரொம்பவே டெடிகேஷன் வேணும். அதை விட, பக்குவமும் வேணும். எனக்கு வருகிற கோவத்தில் அந்த டீச்சர் மூஞ்சில இரண்டு குத்து விடணும் போல இருக்கு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  ReplyDelete
 20. Happy Anniversary acca.

  ReplyDelete
 21. நல்ல பகிர்வுகள். ஒரு மாதம் டியூசன் அனுப்பினால் அடுத்த் மாதத்தில்ருந்து வீட்டிலேயே ஹோம் ஒர்க் செய்து கொள்கிறேன் என்பார்கள்.
  குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய ஆசிரியரின் செயல் கண்டிக்கத்தக்கது.

  ReplyDelete
 22. ட்யூஷன் கலாச்சாரம், இந்தியர்களிடையே, எல்லா நாடுகளிலும் பரவிக் கிடக்கிறது. இத்தனைக்கும் அநேக பெண்களும் இப்போ படிச்சவங்கதான். ஆண்களும் ஓரளவு குடும்பத்து விஷயங்களில் ஈடுபாடு காட்டறாங்க. ஆனாலும், ட்யூஷன் கலாச்சாரம் பரவிக் கிடக்கிறதைப் பாத்தா பயம்தான் வருது!! ஸ்கூல் ஃபீஸுக்கே திணறவேண்டியிருக்கு, இதில் ட்யுஷன் பீஸும்னா கழுத்தை நெறிக்குமே!!

  ReplyDelete
 23. வாங்க நிலாமகள்,

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

  வாங்க அனாமிகா துவாரகன்,

  முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க. ஆசிரிய தொழிலுக்கு வருபவர்களுக்கு அர்பணிப்பு வேண்டும். என்ன செய்வது? மிகச்சிலரே இப்படி இருக்கிறார்கள்.

  வாழ்த்துக்கு தாமதமாக நன்றி கூறி கொள்கிறேன்.

  வாங்க இராஜராஜேஸ்வரி,

  ஆசிரியரின் செயல் கண்டிக்க தக்கது தான். வரிகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

  வாங்க ஹுசைனம்மா,

  ஆமாம். நீங்கள் சொல்லும் கருத்துக்கள் வாஸ்தவம் தான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…