தொக்குகளில் மாங்காய், தக்காளி, இஞ்சி போன்ற பல வகைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம், சுவைத்திருப்போம். இந்த தொக்கு வகைகள் தயிர் சாதத்துக்கும் [ நான் சமையல் பற்றி எழுதும்போது என் ஃபேவரிட் ஆன தயிர் சாதம் பற்றி எழுதாம விடலாமா!], இட்லி, தோசைக்கும் நல்ல காம்பினேஷன். பிரயாணங்களின் போது நாம் பொதுவாய் எடுத்துச் செல்லும் சப்பாத்திக்கும் மேற்கண்ட வகை தொக்குகள் ஏற்றதாக இருக்கும்.
புதிய வகை தொக்கு ஒன்றை ஸ்ரீரங்கத்திலிருந்து வந்திருந்த என் மாமியார் சொல்லிக் கொடுத்து அதை செய்தும் காண்பித்தார். நன்றாக இருந்தது. அது ”பரங்கிக்காய் தொக்கு”. மாங்காய் தொக்கு போலவே தான் இருந்தது. ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்தலாம். பொதுவாக கல்யாணம், மற்றும் ஹோட்டல்களில் போடும் சாம்பாரில் இந்த பரங்கிக்காய் தான் மிதக்கும் – வேண்டா வெறுப்பாய் எடுத்துப் போட்டு விடுவோம். ஆனால் அதை வைத்து ஒரு சுவையான தொக்கின் செய்முறை உங்களுக்காக...
தேவையான பொருட்கள்:-
பரங்கிக்காய் – 1 துண்டு (சுமார் 200 கிராம் )
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – தேவையான அளவு
வெந்தயம் – ½ தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 100 மில்லி
செய்முறை:-
பரங்கிக்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அடுப்பை பற்றவைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும். பெருங்காயம் சேர்க்கவும். துருவி வைத்த பரங்கிக்காயை சேர்த்து சுருள வதக்கவும். அதில் மேலே குறிப்பிட்ட பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விடவும். சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார். அட எங்க கிளம்பிட்டீங்க? அரசாணிக்காய் வாங்கவா? என்னடா இது மேலே பரங்கிக்காய் தொக்கு பத்தி எழுதிட்டு, இப்ப திடீர்னு அரசாணிக்காய்னு சொல்றாங்களேன்னு பார்க்கறீங்களா? எங்கூர் கோயம்புத்தூர்ல பரங்கிக்காயை அரசாணிக்காய்னு தான் சொல்வோமுங்க!
வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்!
ஆதி வெங்கட்.