Tuesday, March 22, 2011

நாங்களும் கிராஜுவேட் ஆகிட்டோம்ல!தலைப்பை பார்த்ததும் நான்தான் கிராஜுவேட் ஆகிட்டேன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு. கிராஜுவேட் ஆனது என் மகள். “அப்போ உனக்கு அவ்வளவு பெரிய மகள் இருக்கிறாளா? அப்படின்னா வயசு எவ்வளவு இருக்கும்” ந்னு கணக்கு பண்ணீங்கன்னா நீங்க ஏமாந்திருவீங்க! ”ஸ்..... அப்பா இப்பவே கண்ண கட்டுதே!” என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுவதற்குள்  விஷயத்துக்கு வருகிறேன். [அப்பாடா! விஷயத்துக்கு வந்தாச்சா?]

என் மகள் படிக்கும் பள்ளியில் KINDER GARDEN முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகும் குழந்தைகளுக்காக வருடா வருடம் GRADUATION DAY பள்ளியில் ஏற்பாடு செய்வார்கள். என் மகள் இந்த வருடம் UKG முடித்து முதல் வகுப்புக்கு செல்லப் போகிறாள். ஆதலால் இதன் பொருட்டு பள்ளியில் ஒவ்வொரு குழந்தையிடமும் ரூபாய் 300 வீதம் ஒரு மாதத்திற்கு முன்பே வசூல் செய்ய ஆரம்பித்து விட்டனர். ”அதானே, காசு இல்லாம தோசையா?”

LKG, UKG படிக்கும் எல்லா குழந்தைகளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர்களாகவே முடிவு செய்ததால், ஒரு நடன நிகழ்ச்சியில் என் மகள் பங்கேற்றாள். இதற்கான பயிற்சியும், தினமும் பள்ளியில் எடுத்துக் கொண்டிருந்தாள். சென்ற வருடம் FASHION SHOW வில் பங்கேற்று LUCKNOW பெண்ணாக அலங்கரித்து சென்றாள். சென்ற வருடம் வசூலித்த தொகை ரூபாய் 150. இப்ப எதுக்கு 300 ரூபாய்னு கேட்டா, ”ஒரு வருடத்துல விலைவாசி எகிறிடுச்சுல்ல!” என்ற பதில் உடனே வருகிறது. 

வசூல் தொகை போக நிகழ்ச்சிக்கேற்ப ஆடைகள் வாடகைக்கு எடுத்து அனுப்ப வேண்டும். என் பெண்ணிற்கு பள்ளி சீருடையிலேயே நடனம் என்று சொல்லி விட்டனர். அதனால் அந்த செலவில்லை.

பட்டமளிப்பு விழா நாளும் வந்தது. சிறப்பு விருந்தினரின் உரை முடிந்ததும் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும், பொம்மலாட்டமும், இன்ன பிற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒவ்வொரு பருவநிலைக்கேற்ற உணவுகளாக குழந்தைகள் வேடமிட்டும், அந்த பருவத்துக்கு ஏற்ற உடைகளை அணிந்து கொண்டும் மழலை மொழிகளில் அவர்கள் பேசுவதை கேட்க ஆனந்தமாக இருந்தது. மருத்துவராகவும், செவிலியராகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், ஆசிரியராகவும் வந்து இரண்டு வரிகளில் தன்னை பற்றி மழலைக் கொஞ்சும் மொழியில் பேசியது அழகாய் இருந்தது.

இதன் பின்னர் ஒவ்வொரு வகுப்பின் குழந்தைகளையும் மேடையில் நிற்க வைத்து பட்டமளிப்பு விழா உடையில் சிறப்பு விருந்தினரின் கையால் பதக்கம் அணிவித்தனர். இதைப் பார்த்த எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. காரணம் நான் பத்தாவது முடித்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தவள். அதன் பிறகு PART TIME B.E பண்ண வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் என்னை  படிக்க விட வில்லை. திருமணமாகி இங்கு வந்த பின் கணவரிடம் என் ஆசையைக் கூறினேன். அவர் ஒத்துக்கொண்டாலும், புதிய இடம், மொழிப் பிரச்சனை போன்ற  காரணங்களால் என்னால் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அதன் பின் மகளும் பிறந்துவிடவே அந்த ஆசையை மறந்தே விட்டேன். (அடடா! இவ சுய புராணம் தாங்கலையே!) 

என் மகள் வளர்ந்து கல்லூரிக்கு சென்று பட்டம் பெற எப்படியும் பதினைந்து வருடமாவது ஆகும். ஆனால் இப்போதே அந்த பட்டம் பெறும் நிகழ்ச்சியைக் காண முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்!

ஆதி வெங்கட்.

Friday, March 18, 2011

ஆலு மேத்தி


வட இந்தியர்கள் செய்யும் சப்ஜிகளில் சிலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகைகளில் இந்த ஆலு மேத்தியும் ஒன்று. ஆலு என்பது உருளைக்கிழங்கின் இந்தி பெயர். இதை எந்த காய்கறியுடனும் சேர்த்து சப்ஜி செய்வார்கள். நாம் இப்போது பார்க்கப் போவது மேத்தி என்று இந்தியில் அழைக்கப்படும் வெந்தயக்கீரையுடன் சேர்த்து செய்வதைப் பற்றி. வெந்தயக்கீரை உடலுக்கு நன்மை தரக்கூடியது என்று அனைவரும் அறிந்ததே. அதன் செய்முறைக்குச் செல்வோமா?.

தேவையான பொருட்கள் :-

உருளைக்கிழங்கு – 4 ( நடுத்தர அளவுள்ளது )
வெந்தயக்கீரை – 1 கட்டு
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
எண்ணெய்தேவையான அளவு
உப்புதேவையான அளவு

செய்முறை :-

வெந்தயக்கீரையை ஆய்ந்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். அதே போல் உருளைக்கிழங்கையும் தோல் சீவி பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் உருளைக்கிழங்கை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும் ஆய்ந்து வைத்த வெந்தயக்கீரையை சேர்த்து வதக்கவும். இதனுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இப்பொழுது ஒரு கை தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து திறந்தால் சுவையான ஆலு மேத்தி தயார்.

பின் குறிப்பு :-

கொடுக்கப்பட்ட பொடிகளை தவிர்த்து வெறும் சாம்பார்ப்பொடி சேர்த்தும் செய்யலாம். இதை சாதத்துடனும், சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.மீண்டும் சந்திப்போம்

ஆதி வெங்கட்.

Monday, March 14, 2011

ஐம்புலன்களுக்கு விருந்து!


முகல் கார்டனுக்கு  வார இறுதியில் செல்லலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டிருந்த போது அலுவலகத்திலிருந்து வந்த கணவர் செய்தித்தாளில் தில்லி சுற்றுலாத் துறை GARDEN OF FIVE SENSES-இல் இரண்டு நாட்கள் தோட்டத் திருவிழா நடத்துவதாகச்  சொல்லவும் ஆஹா! நெடுநாட்களாக போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இடமாச்சே என்று அடுத்த நாளே  கிளம்பி விட்டோம்.

எங்கள் ஏரியாவிலிருந்து மெட்ரோ பிடித்து KASHMERE GATE ல் இறங்கி அங்கிருந்து HUDA CITY CENTER செல்லும் இன்னொரு மெட்ரோ பிடித்து SAKET மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தோம். அங்கு FREE SHUTTLE SERVICE TO GARDEN OF FIVE SENSES என்று எழுதிய வண்டிகள் இந்த விழாவின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து இந்த இடத்திற்கு செல்லும் தூரம் 2 கிமீ. எங்களுக்காகவே நின்று கொண்டிருந்த ஒரு இனோவாவில் ஏறி தோட்டத்திற்குச் சென்று சேர்ந்தோம்.

நுழைவு வாயிலிலேயே (பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 20 ரூ. சிறியவர்களுக்கு 10 ரூபாய்) இருந்த கவுண்ட்டரில் நுழைவுச் சீட்டுகளை   வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். வாயிலிலேயே பரிசு பெற்ற தொங்கும் தொட்டிகள் இருந்தது. அந்தரத்தில் பூப்பந்துகள் தொங்குவது போல இருந்த  ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு. . இன்னொரு புறம் மலர்களாலேயே அமைத்த மயில், யானை, ஒட்டகச்சிவிங்கி, மாடு [மாட்டுக்காரனுடன்] என்று அழகாக அலங்கரித்து இருந்தனர்.

உள்ளே சென்று ஒவ்வொரு இடமாய் பார்த்துக் கொண்டு வந்தோம். மொட்டை மாடியில், பால்கனியில் வைத்துக்கொள்ள வசதியாகட்ரே கார்டன் கூட அழகாய் செய்து வைத்திருந்தனர். எங்கெங்கு பார்த்தாலும் விதவிதமான மலர்கள் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருந்தது.  என்னவர் நிறைய புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார்!  பூக்கள்பூக்கள் என அங்கிருந்த பூக்கள், நீரூற்று, என அவர் எடுத்த படங்களை இங்கே காணலாம்.

ஆங்காங்கே கிராமிய கலைஞர்கள் செவிக்கும் கண்ணுக்கும் விருந்து படைத்துக் கொண்டு இருக்க கூடவே   தோட்டத்தில் பறித்த காய்கறிகளின் அணிவகுப்பும் இருந்தது!  ஒரு பக்கத்தில் மூலிகைத்தோட்டம் மூலிகை வாசனையை  பரப்ப, காக்டஸ் தோட்டம் இன்னொரு பக்கத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் பாடிக்கொண்டு இருந்தது!

சிறுவர்களுக்காக ஒட்டக சவாரி, சவாலான சாகச விளையாட்டுகளையும்  ஏற்பாடு செய்திருந்தனர்.  நிறைய உணவகங்களும் அமைத்து இருந்தனர்மக்களும் சாப்பிட்டு விட்டு, நம்முடைய வழக்கமான வழக்கப்படி எல்லா இடத்திலும் குப்பையை  போட்டுக் கொண்டு இருக்க   ஒவ்வொரு மறைவிடத்திலும் நிறைய காதல் ஜோடிகள்யாரைக் கண்டு எனக்கு என்ன பயம்!” என்ற எண்ணத்தில்  மெய்மறந்து உட்கார்ந்திருந்தனர்!!

தோட்டத்தின் ஒரு புறத்தில், சிறிய தொட்டிகளில் செடிகளும், விதைகளும், செடிகளை வளர்க்க விதவிதமான வடிவங்களில் மண் தொட்டிகளும், செடிகளுக்கு போடுவதற்கு உரங்களும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

பூக்களை ரசித்து, ஐம்புலன்களுக்கும் விருந்து கிடைத்த ஒரு திருப்தியோடு வீடு திரும்பினோம்!  இந்த தோட்டம் வருடம் முழுவதும் திறந்திருக்கும்.  இந்த தோட்டத்தின் மொத்த பரப்பளவு 20 ஏக்கருக்கு மேல்.  தில்லி வரும் சமயத்தில் சென்று பார்க்கலாம்.   இந்த தோட்டத்தின் மற்ற விவரங்களை ஏற்கனவே என்னவர் அவரது "தலை நகரிலிருந்து" தொடரில் எழுதி இருக்கிறார்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திக்கிறேன்.

ஆதி வெங்கட்