Monday, February 28, 2011

தாதி - நானி

அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய இருக்கும் இந்த காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே.  Service Street” என்று சொல்லக்கூடிய சிறிய தெருவைத்  தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம் வந்து விடும்.  இந்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய் 30 அடி இடைவெளிதான். 
ஒற்றைக் கல் சுவராக  இருப்பதால், இந்த வீட்டில் ஒரு பாத்திரம் விழுந்தால் கூட அடுத்த வீட்டில் சத்தம் கேட்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.   இதை விட மோசமான விஷயம் அடுத்த தெருவில் உள்ள வீட்டில் பேசுவது எல்லாம் கூட துல்லியமாய்க்  கேட்கும். 
என் வீட்டின் பின்புற வீட்டில் உள்ளவர்கள் பேசும் எல்லாமே, நமக்குத் தேவையோ இல்லையோ நம் காதில் வந்து பாயும்.  இந்த வீட்டின் பெண்மணி ஆடும் தோய்ப்பு நடனம் பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.  பெரும்பாலான நாட்களில் நாங்கள் காலையில் துயிலெழக் கேட்கும் சுப்ரபாதமே, “பிங்கி பாட்டி கரோ!” என்பது தான்.  ஹிந்தி புரிந்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும்.  இல்லையெனில் பதிவின் முடிவில்  புரிய வைக்கிறேன்.
நாங்கள் காலையில் பெண்ணரசியை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சீக்கிரமாக தயார் செய்து கொண்டு இருக்க, அங்கே அவர்கள்பிங்கியை தயார் செய்து கொண்டு இருப்பார்கள், என்ன, மேலே சொன்னபடியான வாக்கியங்கள் அவ்வப்போது  சத்தமாய் வந்து கொண்டிருக்கும். 
அதுவும் ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டார் அந்த பிங்கி.  திரும்பத் திரும்ப அவர் அம்மா ஐந்தாறு முறையாவதுபிங்கி பாட்டி கரோஎன்று சொல்லவேண்டும், பிறகுதான் வேலை நடக்கும். 
 சரி என்னடா அதுபாட்டியைஎதுக்குடா அடிக்கடி கூப்பிடறான்னு சந்தேகம் வருதா?  ஹிந்தியில்பாட்டி கரோஎன்றால்டாய்லெட் போஎன்று அர்த்தம்.  இந்த பாட்டியை கேட்டு நாளை ஆரம்பித்தால்இந்த நாள் இனிய நாள்என்று சொல்ல முடியுமா என்ன?
இந்த பாட்டியோட அர்த்தமே வேறு ஆகிவிடுவதால், தில்லியில் உள்ள தமிழ் குழந்தைகள் தனது பாட்டியைபாட்டிஎன அழைக்காமல் ஹிந்தியிலேயே அப்பா வழி எனில்தாதி [Dhadhi] எனவும் அம்மா வழி பாட்டி எனில்நானி” [Naani] என்றுமே   அழைக்கின்றனர்.

Monday, February 14, 2011

பூத்துக் குலுங்குது தில்லி


தில்லியில் சீசன் என்றால் அது பிப்ரவரி - மார்ச் மாதங்கள் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய மாதங்கள் தான். தில்லியை சுற்றி பார்க்க வருபவர்கள் கூட இந்த மாதங்களில் வந்தால் தான் சிரமமில்லாமல் இருக்க முடியும். காரணம் கோடையில் அதிக பட்சமாக சுட்டெரிக்கும் வெயில். குளிர்காலத்தில் கடுங்குளிர். இந்த சீசனில் தட்பவெப்ப நிலை இதமாக இருக்கும்.

பிப்ரவரி மாதத்தில் தான் வசந்தபஞ்சமி வரும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைதான் இது.  அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடுவார்கள்.  பள்ளிகளில் சிறு குழந்தைகளை மஞ்சள் நிற உடை உடுத்தி, மஞ்சள் நிற பூவினையும், மஞ்சள் நிற உணவினையும் எடுத்துக்கொண்டு வரச் சொல்வார்கள்.

பூக்களைப் பார்த்தாலே மனதுக்கு இதமாக, சந்தோஷமாகத் தோன்றும். கடுங்குளிர் முடிந்து கொஞ்சமாக குளிரும் மிதமான வெயிலும் ஆரம்பிக்கும் இந்த வேளையில் பூச்செடிகள் எல்லாம் பூத்து குலுங்கும். சாலைகளின் ஓரங்களிலும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் கார்டனில் (MUGHAL GARDEN) இந்த மாதத்தில் தான் பலவிதமான ரோஜாக்கள், டேலியா, மற்றும் பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்கும். ஆதலால் இந்த நேரத்தில் தான் பார்வையாளர்களுக்கும் முகல் கார்டன் சுற்றிப் பார்க்க அனுமதி கிடைக்கும்.

இந்த கார்டன் 15 ஏக்கர் பரப்பளவுள்ளது. இதில் வித விதமான மலர்களும், மூலிகைத் தோட்டமும், அரிதான மரங்களும், அரிதான மலர்களும், ரோஜாவுக்கென்றே தனி தோட்டமும் இருக்கும். இந்த பெரிய இடத்தை சுற்றிப் பார்க்கும் போது அங்கங்கே இளைப்பாற இடங்களும் உண்டு. சென்ற வருடம் தான் முதன் முறையாக சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பாதுகாப்பு காரணத்துக்காக செல்போன், ஹாண்ட் பேக், உணவுப் பொருட்கள். பேனா, போன்ற எதையும் உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அப்படின்னா, கத்தி, துப்பாக்கி எல்லாம் எடுத்துட்டு போகலாமான்னு கேட்கக் கூடாது!  குழந்தையை வைத்துக் கொண்டு எதையும் எடுத்துச் செல்லாமல் போகவும் முடியாது.  இந்த காரணத்துக்காகவே தான் சென்ற வருடம் தான் சென்றோம். இந்த வருடமும் முகல் கார்டன் திறந்த உடன் செல்ல நினைத்து இருக்கிறோம். இந்த முகல் கார்டனை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இங்கு புகைப்படங்களும் எடுக்க அனுமதி இல்லை. சென்ற வருடம் ஊரிலிருந்து உறவினர்கள் இந்த சீசனில் வந்திருந்தார்கள். அவர்களுடன் LOCAL SIGHT SEEING வேன் எடுத்துக் கொண்டு சென்றோம். அப்போது சென்ற இடங்களிலும், சாலை ஓரங்களிலும் பூத்திருந்த மலர்களின் அணிவகுப்பை காணுங்கள்.

தில்லியின் அப்டேட்கள்

கடுங்குளிர் முடிந்து விட்டதால் நானும் ரஜாய், ஸ்கார்ஃப், சாக்ஸ் இவற்றிலிருந்து விடுதலையாகி விட்டேன். சற்று சுறுசுறுப்பாகவும் உணர்கிறேன். குளிர் காலங்களில் காய்கறிகளும், பழங்களும், பார்க்கவே பச்சை பசேல் என வாங்கத் தூண்டும்படியாக இருக்கும் என்று  ஏற்கனவே கூறியிருந்தேன் அல்லவா!  இந்த வார காய்கறிச் சந்தைக்கு சென்ற போது, மற்ற பழங்களுடன் திராட்சை வர ஆரம்பித்திருப்பதைப் பார்த்தேன். காய்கறிகளின் விலையும் மலிந்திருந்தது.

உருளைக்கிழங்கு, காலிப்ளவர், முள்ளங்கி ஆகியவை ஒன்றரை கிலோ 10 ரூபாய்க்கும், பச்சைப் பட்டாணி, கேரட் ஆகியவை கிலோ 10 ரூபாய்க்கும் கிடைக்கிறது. வெங்காயம் கிலோ 25 ரூபாயாகவும், தக்காளி கிலோ 20 ரூபாயாகவும் விற்கிறது. இது மலிவு என்றாலும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த சீசனில் உருளைக்கிழங்கு 4 கிலோ 10 ரூபாய்க்கு கூட வாங்கியிருக்கிறேன்.   உங்க ஊரில் எப்படி?

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போமா?