Tuesday, January 11, 2011

சப்பாத்தி சுட்டு சுட்டு போடட்டுமா?


என்னுடையவெயிலைத் தேடிபதிவில் சப்பாத்தி என்னை  படுத்திய  பாட்டை எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன்.  சொன்னால் சொன்ன படி செய்ய வேண்டாமா?  அதற்குத் தான் இந்த பதிவு.

சிறு வயதிலிருந்தே சிற்றுண்டி சாப்பிடுவதை விட சாதம் சாப்பிட்டால் தான் எனக்கு சாப்பிட்ட திருப்தி ஏற்படும். அதுவும் அப்பா, அம்மா பலகாரம் செய்ய வேண்டிய நாட்களில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் போன்றவைதான் செய்வார்கள். அப்பொழுது எனக்கும் என் தம்பிக்கும் சிறிது கொடுத்து விட்டு, சாதம் போட்டுக் கொள்ளச் சொல்வாள் அம்மா.

மாதம் ஒருமுறை தான் சப்பாத்தி செய்வார்கள். சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள பாசிப்பருப்பில் செய்யும் கூட்டு. என்றாவது சாதாரண நாட்களில் வெங்காயம் சேர்த்து கொள்ளலாம் என்கிற போது உருளைக்கிழங்கு மசாலா. இவை இரண்டும் தான் நான் சப்பாத்திக்கு சாப்பிட்ட சைட் டிஷ்கள்.   கல்லில் இருந்து எடுத்த சூட்டுடனே ஒன்று சாப்பிடுவேன் அவ்வளவுதான். அதன் பிறகு மோர்சாதம் சாப்பிட்டு விடுவேன்.

என் வீட்டில் இருந்த வரை நானே சமையல் செய்ய பழகிய பின்னும் சப்பாத்தி செய்தாலும், எனக்கு அவ்வளவாக பிடிக்காது என்பதால் சூட்டோடு ஒன்றே ஒன்று தான் சாப்பிடுவேன். இப்படியிருக்க மூன்றாண்டு இயந்திரவியல் டிப்ளமா முடித்த பின் கம்ப்யூட்டர் கோர்ஸ் செய்யலாம் என்று AUTOCAD கற்றேன். அதன் பிறகு CNC (COMPUTER NUMERICAL CONTROL) TURNING AND MILLING கற்க வட மாநிலங்களில் பணியாற்றி அப்பொழுது தான் சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்த மாமா வீட்டில் சிறிது காலம் இருந்தேன். மாமி தினமும் காலையில் சப்பாத்தி தான் செய்வார். எண்ணெய் விடாமல் ஃபுல்காவும், சப்ஜி விதவிதமாகவும் இருக்கும். நானும், ”நாம எங்க தினமும் சப்பாத்தியும், சப்ஜியும் செய்யப் போறோம் ?” என்ற நினைப்பில் அதன்  செய்முறையை வேண்டா விருப்பாய் தெரிந்து கொள்வேன். அவ்வளவுதான் சப்பாத்திக்கும் எனக்கும் உள்ள தொடர்பு.



இப்படி இருக்க, திருமணம் செய்து என்னை அனுப்பியது, சப்பாத்தியில் பிறந்து சப்பாத்தியிலேயே வளர்ந்த தில்லிக்கு. என்னவரிடம் என்ன சமைக்க என்று கேட்டால், ”காலை சாப்பிட சப்பாத்தி, மதியம் அலுவலகத்திற்கும் சப்பாத்தி, இரவு உனக்கு எது பிடிக்கிறதோ அதுஎன்று ஏதோ எனக்கு நல்லது செய்வது போல் சொல்வார். அவரது நண்பர்கள் அனைவரும் வட இந்தியர்களே. சாதமோ, இட்லி போன்றவையோ கொண்டு சென்றால் இவருக்கு அவர்களின் சப்பாத்தி தான் கிடைக்கும் என்பதால் இவரும் சப்பாத்தியைத்தான் எடுத்துச் செல்வார்.

தில்லி வந்த புதிதில் நம்மூரில் செய்வதை போல எண்ணெய் விட்டு தான் செய்து தருவேன். என்னவரும் ஒன்றுமே சொல்லாமல் எடுத்து செல்வார். (இப்பவும், எதை செய்து கொடுத்தாலும் எடுத்துட்டு தானே போறேன் என்று பின்னாலிருந்து அவரின் குரல்! :)]. பனிரெண்டு ஆண்டுகள் தில்லியில் பேச்சிலர் வாழ்க்கை நடத்தியதில் என்னவருக்கு சமையல் நன்றாகவே வரும்.  சிறிது நாட்களுக்கு பிறகு அவரிடம் தான் ஃபுல்கா செய்வதை கற்றுக் கொண்டேன். சப்ஜிகளும் மாமியிடம் கற்றுக் கொண்டது, பின்பு என்னவரிடம் கற்றுக் கொண்டது, அருகில் உள்ள தோழிகளிடம் தெரிந்து கொண்டது என முப்பது நாட்களுக்கும் முப்பது விதமான சப்ஜி செய்யும் அளவுக்குத் தேறி விட்டேன்.  அதில் சிலவற்றின் செய்முறை அடுத்த பகிர்வுகளில் பகிர்ந்து கொள்கிறேன் [இன்னும் சில பதிவுகள் போட வழி கிடைச்சாச்சு!!].

நான் தான் சப்பாத்தி சாப்பிட பெரும்பாடு பட்டேன். காலை, மதியம் என இரு வேளைக்கும் என்னவருக்கு செய்து தந்து விட்டு எனக்கு மட்டும் வேறு செய்ய மனசில்லாததால் நானும் இரண்டு சப்பாத்தியை நெய் தடவி சர்க்கரை தூவி சுருட்டிச் சாப்பிடுவேன். சில நாட்கள் தேங்காய்துருவல் மற்றும் சர்க்கரையுடன் நொறுக்குத் தீனி போல் சாப்பிடுவேன். கீழ் வீட்டில் உள்ள நண்பரின் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விளையாடுவேன். அதற்கு சப்பாத்தி தந்தால் தொட்டுக் கொள்ள கெட்சப் கேட்கும். அதற்காக கெட்சப் வாங்கி நானும் தொட்டு சாப்பிட்டு பார்ப்பேன். எப்படி சாப்பிட்டாலும் பிடிக்கவில்லை.

பிறகு என்னவருக்கு சப்பாத்தி கொடுத்து அனுப்பி விட்டு, மாவு இருந்தால் தோசை அல்லது ஓட்ஸ் கஞ்சி என்று காலத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்

குழந்தை பிறந்து இப்போது என் குட்டிச் செல்லத்திற்கும் அப்பாவைப் போலவே சப்பாத்தி தான் பிடிக்கிறது. தில்லி வந்து ஒன்பது வருடங்கள் ஆனாலும் இப்போது வரை என் வோட்டு இட்லி, தோசைக்குத்தான்.  ”சப்பாத்தி ஒழிக!” என்று கோஷமிட நான் தயார், என்னுடன் சேர்ந்து கோஷமிட யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு வேளை தோசை இனாம்!!!!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போமா?

ஆதி.

39 comments:

  1. சப்பாத்தி வாழ்க பல்லாண்டு . மிகவும் ரசிக்கும் வகையில் எதார்த்ய்ஹமாக எழுதி இருக்கிறீர்கள் பகிர்வுக்கு நன்றி . அடுத்த சப்பாத்தியில் சந்திக்கிறேன்

    ReplyDelete
  2. என் ஓட்டும் இட்லிக்குதாங்க :)

    ReplyDelete
  3. தமிழ்நாட்டிலேயே அதுவும் திருச்சியிலேயே பிறந்து, படித்து, வளர்ந்து, வேலையும் கிடைத்து, ஓய்வு பெற்றுள்ள எனக்கும் சப்பாத்தியை ஒரு முழு உணவாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

    நீங்கள் சொல்வது போல ஒன்றோ இரண்டோ அதுவும் நல்ல சூடாக இருந்தால் ஒரு மாறுதலுக்காக சாப்பிடலாம்.

    அதுவும் இந்தப் பாசிப்பருப்பு டால் என்பது [பிறந்த குழந்தையை முத்தமிட்டது போல] கார சாரமே இல்லாதது. சுத்த வழுவட்டையானது.

    நல்ல காரசாரமான சுள்ளென்று உரைக்கக்கூடிய புளிக்காய்ச்சல் / கசப்பு நார்த்தங்காய் அல்லது கடாரங்காய் ஊறுகாய் போல ஏதாவது இருந்தால் தான் அந்த 1 அல்லது 2 சூடான சப்பாத்தியையும் உள்ளே தள்ள முடியும்.

    சாப்பிட்டதும் வெற்றிலை போடுவது போல, நம் இட்லி, தோசை சட்னி சாம்பாருக்குப் பிறகு வேண்டுமானால் போனால் போகிறது என்று இந்தச் சப்பாத்திகளை சாப்பிடலாம்.

    ஆனாலும் ஒன்று ... வட இந்தியர்கள் வீட்டில் செய்வது போல இங்கு தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு, மெல்லியதாக, தகடு போல, சப்பாத்தி செய்யத் தெரிவதில்லை என்றும் நினைக்கிறேன்.

    எது எப்படியோ நானும் உங்களின் “சப்பாத்தி ஒழிக” கட்சி தான். அதனாலேயே என் எடை எப்போதும் 97 to 99 தான்.

    அருமையான பதிவு தான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தில்லியில் இருந்து ஊருக்குப் போகும் போதெல்லாம் எனக்கு சப்பாத்திதான் பிடிக்கும் என்று அவர்களாகவே எண்ணிக் கொண்டு எனது தாயார் ஸ்பெக்ஷலாக சப்பாத்தி செய்து போடுவார்கள். நம்ம சோகத்தை ஏன் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நானும் சாப்பிடுவேன். என்ன ஆனாலும் அம்மா கையல்லவா! ருசியாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  5. மிளகாய்ப்பொடி தடவிய சப்பாத்தி சாப்பிட்டிருக்கீங்களா? நல்லாருக்கும் :-)))

    எங்கூட்லயும் டப்பாவுல இட்லி கொடுத்தனுப்புனா, ஒண்ணுமே மிஞ்சாது. இட்லியை சப்பாத்திக்கு பண்டமாற்று செஞ்சுக்குவாங்க :-))).

    ReplyDelete
  6. வாங்க @ பனித்துளி சங்கர்,

    சப்பாத்தி வாழ்க பல்லாண்டுனு சொன்னதால் தோசை இனாம் கிடையாது.
    கருத்துக்கு நன்றி சகோ.

    வாங்க @ புவனேஸ்வரி ராமநாதன்,

    நீங்க என் கட்சி. கருத்துக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. வாங்க VAI. GOPALAKRISHNAN சார்,

    நீங்களும் என் கட்சி என்பதில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி சார்.

    வாங்க ESWARAN சார்,

    நானும் ஊருக்கு போனவுடன் சொல்வது நாங்கள் கிளம்புகிற வரை சப்பாத்தி தயவு செய்து பண்ணாதீர்கள் என்று தான். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க அமைதிச்சாரல்,

    என் மகள் சப்பாத்தியில் மிளகாய்ப் பொடி தடவி சாப்பிட்டால் சூப்பராயிருக்கும்னு சொல்லுவாள். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  9. எனக்கும் சப்பாத்தி பிடிக்காது,. அப்பா மெஸ் வைத்திருப்பதால், சேலத்தில் இருந்தவரை மாலை தோசை மற்றும் சப்பாத்தி இணைந்துதான் சாப்பிடுவேன். இப்பொழுது மாதம் இரண்டுமுறை சப்பாத்தி. நடுவில் டெல்லியில் அலுவலக வேலையை கம்பெனியின் கெஸ்ட்ஹவுசில் தங்கியப் பொழுது தினமும் சப்பாத்தி செய்து படுத்திவிட்டான் அங்கிருந்த சமையல்காரன்.

    எனவே சப்பாத்தி ஒழிக

    ReplyDelete
  10. வாங்க எல்.கே,

    இரண்டு மூன்று பதிவுகளுக்கு பிறகு உங்கள் கருத்துரையை காண்கிறேன். மாதம் ஒரு முறை சப்பாத்தி சாப்பிட்ட நான் இப்பொழுது காலையில் செய்யும் முதல் வேலை சப்பாத்திக்கு மாவு பிசைவது தான். சப்பாத்தி ஒழிக சொன்னதால் தோசை இனாம். கருத்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  11. நல்லா எழுதி இருக்கீங்க..
    எங்க வீட்டில் சப்பாத்திக்கு சாம்பார் கூட சாப்பிடுவோம்.. நான் மட்டும் வெங்காயம் தக்காளி தயிரில் போட்டு தொட்டு சாப்பிடுவேன்.. சமையல் கத்துக்கிட்டதும் முதல்ல வெஜிடபிள் ஸ்டப்டு சப்பாத்தி..கோஃப்தான்னு தான் வெரைட்டி காமிச்சு அசத்தினேன்..

    இப்ப தில்லிக்கே கல்யாணமாகி வந்தாச்சு..:)

    நான் வரலைப்பா உங்க கோஷத்துக்கு..

    ReplyDelete
  12. NAANUM UNGAL KATCHI ...CHAPPATHI OZHIGA
    BREAKFAST,LUNCH ,DINNER EPPAVUME EN PONNU CHAPPATHI THAAN KETKIRAAL.

    ReplyDelete
  13. உங்களுக்கு நேர் எதிர் நான். சோறு சமைப்பதுதான் கஷ்டம். (வகை வகையாச் செய்வேன். ஆனா சோறு, வெஞ்சினம், குழம்புன்னு எல்லாம் செம காம்பினேஷனோட இருக்கணும் எனக்கு) சரி நானும் ஒரு பதிவு போடுறேன்.

    ReplyDelete
  14. வாங்க முத்துலெட்சுமி,

    இங்கயும் சப்பாத்திக்கு சாம்பார், ஊறுகாய் இவற்றுடனும் சாப்பிடுவதுண்டு. நடுங்கும் குளிரில் சப்பாத்தி தான் பெரும்பாலும் சாப்பிட வேண்டி உள்ளது. கருத்துக்கு நன்றி.

    வாங்க ANGELIN,

    என் மகளும் இதே கதை தான். தோசை இனாம் உங்களுக்கு உண்டு. முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    வாங்க புதுகைத் தென்றல்,

    அடுத்தது நீங்க பதிவு போடுங்க. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. நன்றி கோவை2தில்லி...மாவு 2 மணி நேரத்தில் புளித்துவிடாது...

    ஆனால் 2 மணி நேரம் என்று சொல்வது உடைத்த அரிசி ரவை உறுவதற்காக...அந்த டைம் ஊறினால் போதும்...

    அதற்கு மேல் இருந்தால் புளிக்க ஆரம்பித்துவிடும்...சுவையில் வித்தியசம காணப்படும்

    ReplyDelete
  16. வாங்க GEETHA AACHAL,

    முதல் வருகைக்கும், விளக்கத்திற்கும் நன்றி. உங்க பதிவிலும், என் பதிவிலும் பதில் அளித்தமைக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. என் ஓட்டும் இட்லிக்குத்தாங்க. ஆனா சப்பாத்தி ஒழிகன்னு சொல்ல மாட்டேன். (தோசை கிடைக்குமா கிடைக்காதா??)

    ReplyDelete
  18. சப்பாத்தி ஒழிக கட்சிதான் நானும். அதனாலேயே மும்பை விட்டு ஓடி வந்தேன். அங்கே என் அத்திம்பேர் அத்தை கட்டித்தரும் சப்பாத்தியை கர்ம சிரத்தையாய் வாங்கிக் கொண்டு ஹோட்டலில் போய் அவருக்குப் பிடித்த ஐட்டம் வாங்கி இதையும் சேர்த்து சாப்பிடுவார். அந்த நடிப்பு எனக்கு வராததால் ‘சாவல்’ எப்ப கிடைக்கும் என்று ஏங்கி திருச்சி வந்து விட்டேன். கலகலப்பான பதிவு.

    ReplyDelete
  19. வாங்க கலாநேசன்,

    ”சப்பாத்தி ஒழிக”ன்னு சொல்ல மாட்டேன்னு சொன்னதால் தோசை குடுக்கலாமான்னு வேண்டாமான்னு ஆலோசனை பண்ண வேண்டும். கருத்துக்கு நன்றி.

    வாங்க ரிஷபன் சார்,

    நீங்க என் கட்சியானதால் ஒரு வேளை தோசை இனாம் உங்களுக்கு உண்டு. ”சாவல்” சாப்பிட்டால் தான் வயிறு நிறைந்த மாதிரி இருக்கும். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. எனக்கு சப்பாத்தி பிடிக்கும் என்றாலும், தொடர்ந்து சப்பாத்தி சாப்பிட முடியாது.

    சுவைபட சொல்லியிருக்கிறீர்கள் ஆதி.

    ReplyDelete
  21. வாங்க கோமதி அரசு அம்மா,

    நடுங்கும் குளிரில் அநேகமாக இப்போது மூன்று வேளையுமே சப்பாத்தி சாப்பிட வேண்டி உள்ளது. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  22. இட்டிலிக்கு ஜே! தோசைக்கு ஜே!
    சப்பாத்தி ஒழிகன்னு சொல்ல மாட்டேன். அன்னபூரணி கோச்சுப்பா!!
    இன்று வரை இரவில் கொஞ்சூண்டாவது மோர் சாதம் சாப்பிடாமல் என் வயிறு என்னை தூங்க விடுவதில்லை.. ஏன் பிளாக்கர் அப்டேட் ஆக மாட்டேன் என்கிறது?

    ReplyDelete
  23. எனக்கும் கொஞ்சமாவது சாதம் சாப்பிடணும். இல்லன்னா ஒரு கப் தயிராவது குடிக்கணும். ஏன் அப்டேட் ஆவதில்லைனு தெரியலை? கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  24. இதுக்கு பேருதான் சோத்தால அடிச்ச சுவரு... என் வாமபாகம் அப்படி சொல்லுவாள்... ;-)

    ReplyDelete
  25. இந்த குளிரில் தண்ணியில் கை வைக்காம எந்த வேலயும் செய்யமுடியல,சாதம் மட்சிங் டிஷ்ணு செய்வதற்கு சிம்பிளா ரொட்டியும்,எந்த சப்ஜியாவது ஒன்று இருந்தால் பரவாயில்ல.

    ReplyDelete
  26. வாங்க ஆர்.வீ.எஸ்,

    ஆமாமா. கருத்துக்கு நன்றி.

    வாங்க THIRUMATHI BS SRIDHAR,

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  27. சப்பாத்தி பதிவு சூப்பர். சீக்கிரமா சப்ஜிக்கான ரெசிப்பீசும் எழுதுங்க.
    ரொம்ப புண்ணியமா இருக்கும்.ஏன்னா மண்டைய பிச்சுக்கற விஷயம் அது .பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. சூப்பர் பகிர்வு,முப்பது நாளும் முப்பது வகை ரெசிப்பியா?விரைவில் வட இந்திய பாணியில் உள்ள ரெசிப்பி முதலில் கொடுங்க.எனக்கு சப்பாத்தியும் பிடிக்கும் இட்லி தோசையும் பிடிக்கும் யாராவது பூ மாதிரி சுட்டு தந்தால்.

    ReplyDelete
  29. வாங்க ஜி.ஜி,

    கண்டிப்பா சீக்கிரம் போடறேன். கருத்துக்கு நன்றி.

    வாங்க ASIYA OMAR,

    அடுத்த பதிவா சப்ஜி தான் போடப் போறேன். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  30. http://pudugaithendral.blogspot.com/2011/01/blog-post_18.html

    எதிர் பதிவு போட்டாச்சு. :))

    ReplyDelete
  31. படித்து விட்டேன். நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  32. //முப்பது நாட்களுக்கும் முப்பது விதமான சப்ஜி செய்யும் அளவுக்குத் தேறி விட்டேன்//
    அப்போ விகடன்ல முப்பது நாள் முப்பது ரெசிபி புக் போட ரெடினு சொல்லுங்க... ஹா ஹா

    //இப்போது வரை என் வோட்டு இட்லி, தோசைக்குத்தான்//
    நானும் தான்... ஆனா அந்த இட்லி சனியன் தான் வர்றதில்லையே? ஹ்ம்ம்...

    //என்னுடன் சேர்ந்து கோஷமிட யார் வந்தாலும் அவர்களுக்கு ஒரு வேளை தோசை இனாம்!!!!//
    தோசை நானே செஞ்சுப்பேன்... இட்லி தரீங்கன்னா சொல்லுங்க.... தினமும் கோஷம் போட நான் வரேன்... ஹா அஹ ஹா

    ReplyDelete
  33. சப்பாத்தி ........... கலக்கலா எழுதி இருக்கீங்க....

    உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு dashboard ல ஏனோ அப்டேட் ஆகவில்லை.

    ReplyDelete
  34. வாங்க புவனா,

    நான் உங்களுக்கு இட்லி தருகிறேன். நீங்கள் கோஷம் போட தயாராகுங்கள். கருத்துக்கு நன்றி.

    வாங்க CHITRA,

    கருத்துக்கு நன்றி. ஃபாலோ பண்றவங்க DASHBOARD ல் என் பதிவுகளின் அப்டேட் வர மாட்டேங்குது. எப்படி சரியாகும்னு தெரியலை. கடந்த நாலு பதிவா இப்படித் தான் இருக்குது.

    ReplyDelete
  35. நானும் சப்பாத்தி ஒழிக கட்சியில்தான் இருந்தேன் ஜெய்ப்பூர் வந்த புதிதில்...இப்போ சப்பாத்திக்கு ஜே போடுறேன்!!

    ReplyDelete
  36. அச்சச்சோ!நீங்க குடுக்கற தோசைக்கு ஆசைப்பட்டு எத்தனை பேர்
    சப்பாத்தி ஒழிகனு சொல்லிருக்காங்க
    எனக்கும் சப்பாத்தி அடிக்கடி சப்பிட பிடிக்காதுன்னாலும் தக்காளித் தொக்கு
    இருந்தா அஞ்சு கூட சாப்டுவேன்

    ஆனாலும் தோசைக்கு நடுல மிளகாய்ப்பொடியை எண்ணெய் விட்டு
    குழைச்சு தொட்டு சாப்டற சுகமோ,தச்சு மம்முல இருக்கற சுகமோ
    சப்பாத்திக்கு கிடையாது
    எனக்கு பாதி தோசை உண்டா

    ReplyDelete
  37. வாங்க அன்புடன் அருணா,

    நீங்க ஜெய்ப்பூரில் இருக்கீங்களா! நானும் ஒரு முறை அங்க வந்திருக்கேன். நான் சப்பாத்திக்கு ஜே ல்லாம் போட மாட்டேன். முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    வாங்க ராஜி,

    நான் வேறு வழியில்லாமல் தான் சப்பாத்தி சாப்பிடுகிறேன். இதுவே நம்மூர் ல இருந்தேன்னு வைங்க மாசத்தில ஒரு தடவை தான். இந்த குளிர்ல தச்சு மம்மு சாப்பிடறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கு பாதி தோசை தான். அழகான கருத்துரைகளை இடும் உங்களுக்கு என் பாராட்டுகள்.

    ReplyDelete
  38. என்ன பா இது எல்லோரும் சப்பாத்தி ஒழிக என்று கோழமிடுகிறீர்கம்,

    என் பையனுக்கு தினம் சப்பாத்தி கொடுத்தால் போதும் ஆகையால் வாரத்தில் முன்று நான்கு முறை

    சப்பாத்தி, குபூஸ், ரொட்டி பரோட்டா இப்படி தான்.
    சிக்கன் சப்பாத்தி ரோல்.

    எனக்கு பூரி, பொங்கல் எல்லாமே பிடிக்கும், சப்பாத்தியும் பிடிக்கும்.

    ReplyDelete
  39. வாங்க JALEELA KAMAL,

    சப்பாத்தியும் பிடிக்கும் என்று சொன்னதால் தோசை கிடையாது. கருத்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…