Friday, January 7, 2011

உன் குற்றமா? என் குற்றமா? சட்னி வித்தியாசமா?

இட்லி, தோசைக்கு பொதுவாக தேங்காய், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம், இவற்றில் சட்னி அரைப்போம். நண்பரின் வீட்டில் ஒரு நாள் சாப்பிட்ட போது இட்லிக்கு வித்தியாசமான சுவையுடன் ஒரு  சட்னி கொடுத்தார்கள். அது அதிக ருசியுடன் மிகவும் நன்றாக இருந்தது. எப்போதும் குறைவாய் சாப்பிடும் என்னவர் கூட மேலும் இரண்டு இட்லிகளை  உள்ளே தள்ளினார். உருளைக்கிழங்கு சட்னி என்று ஒரு நாள் ஏதோ ஒரு புத்தகத்தில் பார்த்தேன்அது போலவா  இது என்று இந்த வித்தியாசமான சட்னியின் செய்முறையை தோழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதோ அதன் செய்முறை உங்களுக்காக.


தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 2 [ஆஹா வெ()ங்காயமாச்சே! எங்கே தேடுவேன் வெங்காயத்தை?]
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
தோசை மிளகாய்ப் பொடி – 3 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப கூடவோ குறைத்தோ சேர்த்துக்கலாம்)
உப்புதோசை மிளகாய்ப் பொடியிலேயே இருப்பதால், தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம்.
கடுகு - சிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு

செய்முறை:-

மேலே குறிப்பிட்ட வெங்காயம், தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, தேங்காய்த் துருவல், தோசை மிளகாய்ப் பொடி, தேவையானால் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து எடுத்து அதை அரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான் சுவையான சட்னி தயார்.  இப்படி  சுவையாக இருக்க தோசை மிளகாய்ப் பொடியில் சேர்த்திருக்கும் எள் மற்றும் பெருங்காயமே காரணம்.



அது சரி தோசை மிளகாய்ப் பொடி எப்படி செய்யறதுன்னு கேட்கறீங்களா? இதோ அதன் செய்முறை:-

½ டம்ளர் கடலை பருப்பு, ½ டம்ளர் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், தேவைக்கேற்ப மிளகாய், எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு கைப்பிடி எள்ளை வெறும் வாணலியில் வறுத்து உப்புடன் மிக்ஸியில் பொடித்தால் தோசை மிளகாய்ப் பொடி தயார்.

பின் குறிப்பு(1):- தோசை மிளகாய்ப் பொடிக்கு அரைக்கும் போது வெள்ளை உளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்து சேர்த்துக் கொண்டால் தோலில் உள்ள சத்தும் சேரும்.

பின் குறிப்பு(2):-  சட்னி நல்லா தயாரிக்காதது உன்குற்றமா அல்லது தேவையானவைகளை வாங்கிக் கொடுக்காதது என் குற்றமா என்று கணவன் பாடுவது மாதிரி கற்பனை செய்துகிட்டா தலைப்பு வந்துடப் போவுது

பின் குறிப்பு(3):- இட்லி மிளகாய் பொடி பற்றி தெரிந்த வட இந்தியர்கள் இதை கன் பௌடர் [Gun Powder] என்று அழைக்கிறார்கள்!!

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.




13 comments:

  1. ஆஹா சட்னி நல்ல காரமா இருக்கும் போலிருக்கே

    ReplyDelete
  2. நாங்கள் இந்த சட்னியில் சோம்பும், சிறிது கொத்தமல்லி இலையும் சேர்ப்போம்.

    ReplyDelete
  3. ஓ தலைப்புக்கு ஐடியா நல்லாருக்கே..:)

    ReplyDelete
  4. வாங்க ஆர்.கே.சதீஷ் குமார்,

    தேவையான காரத்துக்கு தகுந்த மாதிரி பொடிய சேர்த்துக் கொள்ளலாம்.
    முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    வாங்க அமுதா கிருஷ்ணா,

    இனிமேல் நீங்க சொன்ன மாதிரியும் செய்து பார்க்கிறேன்.
    முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    வாங்க முத்துலெட்சுமி,

    ஆமாமா!!!!. கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  5. உங்க வீட்டுக்கு சாப்பிட எப்போ வரலாம்..

    ReplyDelete
  6. ஹலோ...

    என்னது உருளைக்கிழங்கு சட்னியா?

    என்னங்க இது, கேள்விப்படாத பேரால்ல இருக்கு.. நடக்கட்டும்... சுஜாதா கதையில் சொன்ன மாதிரி “எதையும் ஒரு முறை”ன்னு டேஸ்ட் பார்த்துட வேண்டியது தான்...

    ReplyDelete
  7. //வட இந்தியர்கள் இதை கன் பௌடர் [Gun Powder] என்று அழைக்கிறார்கள்!!// nalla name thaan!!..:)))

    ReplyDelete
  8. உங்க சட்னியை விட அலங்கரித்த கருவப்பிள்ளை மீதுதான் எனக்கு கண்,எங்க ஊர்பக்கம் கருவப்பில்லைய பாக்கவே முடியலங்க

    ReplyDelete
  9. வாங்க விக்னேஷ்வரி,

    குளிர் முடியட்டும் ஒரு நாள் வாங்க. நன்றி.

    வாங்க R.GOPI,

    கருத்துக்கு நன்றி.

    வாங்க தக்குடு,

    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    வாங்க THIRUMATHI BS SRIDHAR,

    இங்க வீட்டிலேயே கறிவேப்பிலை வளர்க்கிறேன். காய்கறி சந்தையிலும் கிடைக்கும்.
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. Super recipe.... செய்து பார்த்து விட வேண்டியதுதான். மிளகாய் பொடி சேர்த்து, வெங்காய சட்னி செய்ததில்லை.

    ReplyDelete
  11. சட்னி சூப்பராத்தான் இருக்கும்போல.நானெல்லாம் ஏற்கனவே மிளகாய்ப்பொடி ரசிகை வேற

    ReplyDelete
  12. வாங்க சித்ரா,

    செய்து பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும். கருத்துக்கு நன்றி.

    வாங்க ராஜி,

    என் மகளும் மிளகாய்ப் பொடி ரசிகை தான். அரை தோசைக்கு இரண்டு ஸ்பூன் மிளகாய்ப் பொடி வேண்டும். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. அருமையான சட்னி என் ஈவண்டுக்கு இணைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…