Monday, January 24, 2011

(B)பல்லே (B)பல்லே [Cho]சோலே


வட இந்தியர்கள் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நிறைய சப்ஜி [Side Dish] செய்வார்கள். அதில் முக்கியமான சப்ஜிகளில் இந்த சன்னா மசாலாவும் ஒன்று. இதற்கு காபூலி [Kabooli] சன்னா, பெரியதாக இருக்கும் வெள்ளைக் கொண்டக் கடலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பட்ட சன்னா மசாலா செய்முறையை தெரிந்து கொள்வோமா?

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக் கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ½ டீஸ்பூன்
சோலே மசாலா – ½ டீஸ்பூன் (இப்போதெல்லாம் கடைகளிலேயே கிடைக்கிறது.)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
எலுமிச்சைசாறு – புளிப்பு சுவை பிடித்தால், கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் இரண்டு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். நான் பெரும்பாலும் சேர்ப்பது கிடையாது.

செய்முறை:

ஒரு கப் கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் மேலே கொடுக்கப் பட்ட பொருட்களில் உள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன் பிடித்தால் பூண்டு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம். அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பின்பு அதில் அரைத்து எடுத்த வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, சோலே மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்படி வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் இந்த க்ரேவி நம் மேல் தெளிக்காமலும், கிச்சன் டைல்ஸ் மேலும் தெளிக்காமலும் இருக்கும்.

க்ரேவி நன்றாக வதங்கியதும் ஊற வைத்திருந்த கொண்டக் கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மூழ்கும் வரை) குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் (மிகவும் குறைந்த தணலில்) 25 நிமிடங்கள் வைத்து அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரங்கழித்து குக்கரைத் திறந்து விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும். சுவையான சன்னா மசாலா தயார்.

நான் முதலில் கொண்டக் கடலையை தனியாக வேக வைத்து க்ரேவி செய்து அதில் கலந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் தோழி ஷோபனாதான் க்ரேவியிலேயே கொண்டக்கடலையை  வேக வைக்கும் முறையை சொல்லிக் கொடுத்தார். அவருக்கு என் நன்றி. இப்பொழுதெல்லாம் என்னவருக்கு நான் கொடுக்கும் மதிய உணவில் சோலே கொடுத்தால் அதை சாப்பிடும் அவரது அலுவலக நண்பர்கள் பஞ்சாபிகள் செய்தது போலவே இருக்கிறது என்கிறார்களாம். நீங்களும் செய்து உங்களவரை அசத்துங்களேன்!!!.  சாப்பிட்டு உங்களவர் “(B)பல்லே (B)பல்லே” என ஒரு பஞ்சாபி பாங்க்ரா நடனமே ஆடுவார்!!!

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

ஆதி

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.
Wednesday, January 19, 2011

POPEYE ஆகணுமா - பாலக் பனீர்!


சென்ற பதிவான சப்பாத்தி சுட்டுச் சுட்டு போடட்டுமா-வில் சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள தேவையான எனக்குத் தெரிந்த வடஇந்திய சப்ஜி வகைகளின் செய்முறையை எழுதுவதாகச் சொல்லி இருந்தேன்.  இந்த இடுகையில் பாலக் பனீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  ஹிந்தியில்பாலக்என்றால் பசலைக் கீரைபசலைக் கீரையில் விட்டமின் A, K, C, B2, B6 போன்ற பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன.  அதில் போடும் மற்ற பொருளான பனீரிலும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கும்.  


ஆங்கிலத்தில் பாலக் கீரையை Spinach என்று சொல்வார்கள்.  “THE POPEYE SHOW” பார்த்து ரசிக்காத யாரும் உண்டோ.  அதில் பாலக் சாப்பிட்ட உடன் அவருக்கு அப்படி ஒரு சக்தி வரும் இல்லையா, அது போல இந்த பாலக் பனீர் சாப்பிடுங்க, நல்ல சக்தி கிடைக்கும்!தேவையான பொருட்கள்:

பாலக் [பசலைக்கீரை]  :     1 கட்டு.
வெங்காயம்                       :     2
தக்காளி                               :     2
பச்சை மிளகாய்              :     1 அல்லது 2
இஞ்சி                                   :     1 துண்டு
மிளகாய்த் தூள்              :     அரை டீ ஸ்பூன்
மல்லித் தூள்                   :     1 டீ ஸ்பூன்
கரம் மசாலா                    :     ½ டீ ஸ்பூன்
சீரகம்                                   :     ½ டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி                 :     ¼ டீ ஸ்பூன்
உப்பு                                     :     தேவைக்கேற்ப
எண்ணை                           :     சிறிதளவு [வதக்க]
பனீர்                                     :     200 கிராம்

செய்முறை:

பாலக்கீரைக் கட்டினைப் பிரித்து, இலைகளைத் தனியாக ஆய்ந்து, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்யவும்.  குக்கரில் வெயிட் போடாமல் 10 நிமிடங்களுக்கு ஆவியில் வைக்கவும்

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்துக்கொள்ளவும்

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்து எடுத்த விழுதினைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.  வதக்கிய பின் அதில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கவும்

வெந்து இருக்கும் பாலக் கீரையை எடுத்து ஆற வைத்து மிக்சியில் நன்கு அரைக்கவும்அரைத்து எடுத்த பாலக் கீரை விழுதை வாணலியில் வதங்கி உள்ள க்ரேவியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

பிறகு பனீரை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து, சின்னச் சின்னத் துண்டுகளாய் வெட்டி எடுத்து கொதித்துக் கொண்டு இருக்கும் பாலக் கலந்த க்ரேவியில் போடவும்.  போட்டு ஒரு கொதி வந்த பிறகு இறக்கி வைத்து சூடாகப் பரிமாறவும்.  பனீர் போட்ட பிறகு நிறைய கொதிக்க விட்டால், பனீர் கெட்டிப்பட்டு சுவை மாறிவிடக்கூடும். இந்த பாலக் பனீர் ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம் .

ஆதி

குறிப்பு:  இந்த இடுகையை மீள் பதிவாக சாப்பிட வாங்க வலைப்பூவிலும் பகிர்ந்து இருக்கிறேன்.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.