Monday, December 13, 2010

தென்குடித்திட்டை


தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தின் அருகில் உள்ள ஒரு இடமே திட்டை என அழைக்கப்படும் தென்குடித்திட்டை. இந்த கோவில் 1000-2000 ஆண்டுகள் பழமையானது. இங்கே அருள் பாலித்துக் கொண்டு இருப்பவர்கள் வசிஷ்டேஸ்வரர் மற்றும் உலகநாயகி [சுகந்தகுந்தளாம்பிகை]. இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் செண்பகம்.


காவிரி ஆற்றின் கிளையாறுகளாகிய வெண்ணாறு மற்றும் வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள ஒரு திட்டில் இந்த இடம் இருப்பதால் இதன் பெயர் திட்டை. உலகப் பிரளயத்தில் இவ்விடம் திட்டாக இருந்ததால்குடித்திட்டை என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


ஸ்வயம்புவாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி வசிஷ்டேஸ்வரர் திருமேனி மேல் இப்பவும் 20-25 நிமிடங்களுக்கு ஒருமுறை கோவில் விமானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் விழுந்து கொண்டு இருக்கும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. விமானத்தில் தொன்று தொட்டே சந்திரகாந்தக் கல் இருப்பதாகவும் சந்திரனிலிருந்து ஈரத்தை உறிஞ்சிக் கொண்டு சொட்டுவதாகவும் வரலாறு கூறுகிறது. ஆவணி மாதத்தில் 15,16,17 தேதிகளில் சூரியனின் கிரணங்கள் வசிஷ்டேஸ்வரர் லிங்கத் திருமேனி மேல் பரவி பூஜை செய்வதாகவும், உத்தராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு பூஜை செய்கிறாராம்.

வசிஷ்டேஸ்வரர் சன்னதியில் நாம் நின்று கொண்டிருக்கும் போது நமக்கு மேலே பார்த்தால் பனிரெண்டு ராசிகளுக்கும் அதன் சின்னம் பொறிக்கப்பட்ட கல் உள்ளது. அவரவர் ராசிக்கு நேரே கீழே நின்றால் அங்கிருந்து வசிஷ்டேஸ்வரரையும், உலக நாயகியையும் சேர்ந்தார் போல தரிசிக்கலாம் என்றும் கூறினார்கள்.

கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்து திட்டை வழியாகவே செல்கிறது.  தஞ்சாவூரிலிருந்து ரெயில் மற்றும் பேருந்து மூலமாகவும் வரலாம். கோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை வேளையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.


காம தேனு, திருமால், வசிஷ்டர், கெளதமர், ஆதிசேஷன் முதலானோர் பூஜித்த ஸ்தலம். திருஞான சம்பந்தர் அவர்களால் பாடப்பெற்ற இந்த ஸ்தலம் குருபகவானின் பரிகார ஸ்தலமாக இருக்கிறது.  குரு பகவானுக்கென தனி சன்னிதியும் இருக்கிறது. குருபகவான் இங்குராஜகுருவாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். வசிஷ்டேஸ்வரருக்கும், உலகநாயகிக்கும் இடையில் குரு சன்னதி இருக்கிறது.  இந்த குரு பகவானின் ஸ்தலத்தில் குருப் பெயர்ச்சி காலங்களில் குருபரிகாரத்திற்காய் சிறப்புப் பூஜைகளும் நடக்கின்றன.  நாங்கள் சென்றது குருப்பெயர்ச்சிக்கு சில நாட்கள் முன் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்ததைக் கண்டோம்.

கோவிலின் வெளியே அமைந்திருக்கும் அழகிய சூல தீர்த்தம் நகரத்தார் பாணியில் கட்டப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது. திட்டை கோவில் தரிசனம் முடிவதற்குள்ளேயே மாலை நேரம் ஆகிவிட்டதால், தஞ்சாவூர் பெரிய கோவில் செல்லும்போது இரவு ஆகிவிட்டது.  கோவில் மூடுவதற்குள் தரிசனம் முடித்துக்கொண்டு திருவரங்கம் திரும்பினோம்.  இப்படி இனியதாய் எங்கள் பயணம் முடிந்தது.  இந்த பயணத்தில் எங்களுடன் வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.  மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.

24 comments:

 1. அழகாக விவரங்கள் அளிக்கின்றீர்கள்..

  பெங்களூரில் இருந்து ஒருமுறை கோபால்ஸாமிபெட்டா கோயில் போயிருந்தபோது அங்கும் இப்படி விமானத்திலிருந்து நீர் விழுவதாகக் கேள்விபட்டிருக்கிறேன்..

  ReplyDelete
 2. வாங்க முத்துலெட்சுமி,

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு. மிக்க நன்றியும் கூட.

  ReplyDelete
 4. வாங்க லாவண்யா,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 5. பல புதிய தகவல்களுடன் விறுவிறுப்பாய் இருந்த பதிவு.. இப்படி சட்டென்று முடிந்து விட்டதே..

  ReplyDelete
 6. அருமையான பயண கட்டுரை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 7. கோயில் எதிரே உள்ளே தீர்த்தம் சதுர வடிவமாக அம்சமாக இருக்கும். முக்கால் வாசி நாட்கள் தண்ணீர் (நிரம்பி) இருக்கும். நீங்கள் சென்ற போது தண்ணீர் இருந்ததா? ராஜகுரு தரிசனம் அற்புதம். சிறிய கோயில் சக்தியில் பெரிய மூர்த்தங்கள்.
  //கும்பகோணத்திலிருந்து திருக்கருகாவூர் செல்லும் நகரப் பேருந்து திட்டை வழியாகவே செல்கிறது. // சாலையோரத்திலேயே கோயில்.
  அதே பாதையில் உள்ள திருவையாறு ஐயாரப்பரை தரிசித்திருக்கலாமே....

  நல்ல பதிவு மற்றும் பகிர்வு. நன்றி ;-)

  ReplyDelete
 8. வாங்க ரிஷபன் சார்,

  கருத்துக்கு நன்றி. விரைவில் மற்றுமொரு பயணத்தில் சந்திப்போம்.

  வாங்க சித்ரா,

  கருத்துக்கு நன்றி.

  வாங்க ஆர்.வி.எஸ்,

  கோவில் தீர்த்தத்தில் நாங்கள் சென்ற சமயமும் தண்ணீர் இருந்தது. நீங்க குறிப்பிட்டிருக்கிற கோவில் அனைத்தையும் அடுத்த முறை கண்டிப்பாக சென்று பார்க்கிறோம். நன்றி.

  ReplyDelete
 9. நிதானமா சொல்லியிருக்கீங்க...அழகா... கூடவே வந்த அனுபவம்

  வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 10. வாங்க மங்கை,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 11. சென்றமுறை புதுகை போயிருந்த போது அப்பா இந்தக்கோவிலுக்கு அழைத்துச்சென்றார். ரொம்ப பிரசித்தி பெற்ற கோவிலாம். அங்கே இருக்கும் குருக்களின் 6 வயது மகனும் அப்பாவுடன் சேர்ந்து மந்திரம் சொன்னது இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

  ReplyDelete
 12. கோவை டு தில்லி பெயர் வித்தியாசமா இருக்கேன்னு வந்தேன்.

  நல்லா எழுதறீங்க. வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. வாங்க புதுகைத் தென்றல்,

  நாங்க போன போதும் குருக்களின் மகன் அவன் அப்பா ஒரு வரி சொன்னதும், அடுத்த வரி மிகச் சரியான நேரத்தில் சரியான உச்சரிப்புடன் சொன்னான். பள்ளி இல்லாத வேளைகளில் அப்பாவுடன் சொல்வானான்.
  கருத்துக்கு நன்றி.

  வாங்க GOPI RAMAMOORTHY,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 14. ஆஹா ... அருமையான ஷேத்ராடனம் ! முடிகிறதே என வருத்தமாகத்தான் இருக்கிறது தோழி... பிறிதொரு சமயம் சந்திப்போம். நன்றி!

  ReplyDelete
 15. புனித பயணம் தொடரட்டும்...

  ReplyDelete
 16. இந்தக் கோவிலை பற்றி கேள்வி பட்டது இல்லை. முதல் முறை .. நன்றி

  ReplyDelete
 17. நான் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் கோவில்.

  அருமையான விளக்கங்கள் ஆதி.

  ReplyDelete
 18. வாங்க நிலாமகள்,

  கருத்துக்கு நன்றி.

  வாங்க கலாநேசன்,

  கருத்துக்கு நன்றி.

  வாங்க எல்.கே,

  இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். நன்றி.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  கோவிலுக்கு சென்று வாருங்கள். கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 19. கோவில் தரிசனம் செய்து நீங்கள் புண்ணியம் சேர்த்துக் கொண்டதுடன், எங்களையும் படிக்க வைத்து எங்களுக்கும் கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக் கொடுத்தீர்கள். நன்றி.

  ReplyDelete
 20. வாங்க ஈஸ்வரன் சார்,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 21. இனி புதுசாக என்ன தொடரப் போகிறீர்கள்?விரைவில் தொடருங்கள்.

  ReplyDelete
 22. ambaloda eyes yenna oru dekshanyam!!! thanks for the post.

  ReplyDelete
 23. வாங்க ASIYA OMAR,

  வருகைக்கு நன்றி. விரைவில் எதிர்பாருங்கள்.

  வாங்க தக்குடு பாண்டி,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…