Thursday, December 9, 2010

கரு காத்த நாயகிநேமம், வரகூர், புன்னைநல்லூர் சென்று வந்த நாம் இப்போது செல்லப் போவது தஞ்சாவூர் அருகில் இருக்கும் அழகிய ஊரான திருக்கருகாவூர்.  இங்கு இருக்கும் முல்லைவனநாதர் ஸமேத கர்ப்பரட்சாம்பிகை கோவில் 1000-2000 வருடங்கள் பழமையானது. இந்த ஊரின் புராணப் பெயர் கருகாவூர், மற்றும் திருக்களாவூர். ஈசனின் பெயர் முல்லைவனநாதர். முல்லை வனத்தில் இருந்ததால் இந்த பெயர். இவருக்கு கர்ப்பபுரீஸ்வரர், மாதவிவனேஸ்வரர் என்ற நாமங்களும் உண்டு. இவர் ஒரு சுயம்பு மூர்த்தம். புற்று மண்ணால் ஆனவர். இன்றும் முல்லைக் கொடிகள் படர்ந்திருந்த வடு லிங்கத்தின் மீது இருப்பதாகக் கூறுகின்றனர். புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகங்கள் கிடையாது. புனுகுச் சட்டம் சாற்றப் படுகிறது.

அம்மனின் பெயர் கர்ப்பரட்சாம்பிகை. கரு காத்த நாயகி என்றும் கூறுவதுண்டு. கர்ப்பத்தை காத்ததால் அம்மனுக்கு இந்த பெயர். அம்மன் இடது கையை இடுப்பின்கீழ் வைத்து கர்ப்பத்தை தாங்கிய படி உள்ளது இங்கு சிறப்பம்சம். இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் முல்லை. தீர்த்தம் பால் குளம்.

நாங்கள் சென்ற சமயம் மதிய வேளை என்பதால் கோவில் சார்த்தப் பட்டிருந்தது. ஆகையால் மதிய உணவினை கோவிலுள்ளே மரத்தடியில் நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட்டோம்.  மாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது. முல்லைவனநாதர் சன்னிதிக்கு நேரெதிராக இங்கு இரட்டை நந்தி காணப்படுகிறது. இதில் ஒன்று உளிபடாத விடங்க மூர்த்தம். சிவன் சன்னதிக்கு அருகே இரண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒன்று சுயம்பு. இங்கு தங்கத் தொட்டில் பிரார்த்தனை பிரபலம்.

உள்ளே சென்று ஈசனையும் கர்ப்பரட்சாம்பிகையையும் கண்ணார கண்டுக் களித்தோம். அம்மன் சன்னிதியில் திருமண பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கும், குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கும் அர்ச்சனை சீட்டுடன் நெய் வழங்கப் படுகிறது. அர்ச்சகர் அப்படி வேண்டி வருபவர்களை அழைத்து அம்மனின் கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள நிலைப்படியில் நெய் விட்டு மெழுகச் சொல்லி கோலம் போடச் சொல்கிறார். குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்கு பிரசாதமாக நெய் கொடுத்து 45 நாட்களுக்கு சாப்பிடச் சொல்கிறார். இந்த நெய் சாப்பிடும் போது உணவில் பத்தியமோ, கட்டுபாடுகளோ தேவையில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஸ்தலத்தின் வரலாற்றை காண்போம். நித்துருவர் வேதிகை தம்பதிகளுக்கு பல வருடங்கள் குழந்தை இல்லாததால் இந்த கோவிலின் அம்மனை வேண்டிக் கொண்ட பின் வேதிகை கருவுற்றாராம். ஒரு நாள் கர்ப்ப வேதனையில் தன் இல்லத்தில் இருந்த போது அந்த வழியாக வந்த ஊர்த்துவபாத மகரிஷி யாசகம் வேண்டி வந்திருக்கிறார். மயக்கத்தில் இருந்ததால் வேதிகையால் எழுந்திருக்க முடியவில்லை. கணவரும் வீட்டில் இல்லை. இதையறியாத மகரிஷி சாபமிட்டதால் வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்மனிடம் வேண்டிக் கொண்டதினால், அம்மன் வேதிகையின் கருவை ஒரு குடத்தில் ஆவாகனம் செய்து வளர்த்து குழந்தையாக்கிக் கொடுத்திருக்கிறார். இதுவே கரு காத்த நாயகியின் வரலாறு.

சுகப் பிரசவமாக வேண்டிக் கொள்பவர்களுக்கு இந்த கோவிலில் கர்ப்பரட்சாம்பிகையிடம் வைத்து பூஜை செய்த விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியெடுத்ததும் இந்த எண்ணெயை தடவிக் கொள்ளச் சொல்கிறார்கள். இதனால் சுகப்பிரசவமாகும். இந்த எண்ணெயை தபால் மூலமும் பெறலாம். சுகப் பிரசவமாக ஒரு ஸ்லோகமும் உண்டு.

ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸீரதாநாம யஷினி
தஸ்யாஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது


நவராத்திரி சமயத்தில் நாங்கள் சென்றிருந்தோம். கோவிலின் வெளியே கொலு வைத்திருந்தார்கள். 11 படிகள் வைத்து தெப்பக்குளம் அமைத்து தொட்டில் கட்டி குழந்தைப் போல் ஒரு பொம்மையைப் படுக்க வைத்திருந்தது மிக அழகாக இருந்தது.


கோவிலின் பிரகாரத்திலேயே ஒரு சிறிய தோட்டம் வைத்து, ”பூக்களைப் பறிக்காதீர்கள் என ஒரு கல்லில் கவித்துவமாய் செதுக்கி வைத்திருந்தனர். அதில் பொறித்து இருந்த வாசகம் கீழே:

“பூக்களைப் பறிக்காதீர்கள்”

அறிவிப்புப் பலகையை படித்த பின்னாலும், தரையெங்கிலும், நமது தாயின் திருமுடியை அலங்கரிக்க வேண்டிய பூக்களின் சிதறல்கள் சிதறிக் கிடக்கின்றனவே! சூறைக்காற்றினாலா? காற்றை கோபித்துக் கொள்ளாதீர்கள்!  பாவம் காற்றுக்குப் படிக்கத் தெரியாது!!

கோவில் திறந்து இருக்கும் நேரம் – காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை.  முல்லைவன நாதர் மற்றும் கர்ப்பரட்சாம்பிகையை தரிசித்து அவர்களின் அருளுக்கு பாத்திரர்களாக ஆவோம்.  அடுத்து உங்களை தென்குடித்திட்டை பற்றிய பதிவில் சந்திக்கிறேன்.

16 comments:

 1. மிக மிக பிரபலமான கோவில் இது. பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 2. எனக்கும் இங்கிருந்து எண்ணெய் வாங்கி வரச்செய்தாங்க அம்மான்னு நினைக்கிறேன்.. அறிவிப்பு அழகா இருக்கு ஆதி ..

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு. அந்த காலத்திலேயே இன்ங்பேட்டர் எல்லாம் இருந்து இருக்கு. இதே போன்ற அறிவிப்பை நானும் எங்கோ வாசித்திக்கிறேன்

  ReplyDelete
 4. ஒரு முறை நானும் இந்தக்கோயிலுக்குப்போயிருக்கிறேன்.
  அந்தத் தோட்டத்தைப் போல மிகச் செம்மையாகப் பராமரிக்கப்படும் வேறு எந்தக் கோயில் தோட்டத்தையும் நான் இதுவரை கண்டதில்லை.அவற்றில் காணப்படும் தமிழ் வாசகங்களும் அருமையாக இருக்கும்.
  நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. கடவுள் தான் நம் ஆகச் சிறந்த இன்குபேட்டர் ! ஸ்லோகத்தை இறை நம்பிக்கையுள்ள மருத்துவர்கள் தத்தம் மருத்துவமனைகளில் வருவோர் பயனுற எழுதி வைக்கலாம்! நவராத்திரியில் காணக் கிடைத்தது தங்கள் பேறு! பூக்களைப் பறிக்காதீர்கள் கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
 6. என் மகளுக்கு நல்லபடியாக பிரசவம் ஆக என் தங்கை அங்கிருந்து எண்ணெய் வாங்கி வந்தாள். பேத்தி மாதினி நலமாக பிறந்தாள்.

  கருணை மழை பொழியும் கற்பகம் எல்லோருக்கும் கருணை புரியட்டும்.

  பூக்களைப் பறிக்காதீர்கள் கவிதை நல்லா இருக்கு.

  தேவி கொலுவும் அழகு.

  நன்றி உங்களுக்கு.

  ReplyDelete
 7. வாங்க எல் கே,

  வருகைக்கும் ,கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  எனக்கும் இந்த எண்ணெய் வரவழைச்சுக் குடுத்தாங்க. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 8. வாங்க லாவண்யா (உயிரோடை),

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க சுசீலாம்மா,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 9. வாங்க நிலா மகள்,

  வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  எனக்கு என் புகுந்த வீட்டில் இந்த எண்ணெய் வரவழைத்து கொடுத்தார்கள். சுகப்பிரசவம் தான் ஆச்சு. என் மகள் ரோஷ்னியும் அழகாக பிறந்தாள். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. பக்தி பரவசமானது படித்ததும். எழுத்தின் சக்தி அது.
  படங்களும் அழகாய்.. தொடருங்கள்..

  ReplyDelete
 11. வாங்க ரிஷபன் சார்,

  தங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்புகளும், ஆதரவும் என்னை தொடர்ந்து எழுத வைக்கிறது. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 12. திருக்கருகாவூர் பக்கத்தில் ஊத்துக்காடு உள்ளது. வேங்கடசுப்பையர் ஊர். காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயில் உள்ளது. காளிங்கனின் வாலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு தலை மேல் நடனம் ஆடும் கிருஷ்ணன். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் வாலைப் பிடித்த கையில் கிருஷ்ணன் சிலையின் கால் அந்த ஐந்துதலை காளிங்கன் சிரசில் ஒட்டாது. காளிங்கன் தலைக்கும் கிருஷ்ணனின் காலுக்கும் நடுவில் ஒரு பேப்பரை விட்டு எடுக்கலாம். அட்டகாசமாக இருப்பார்! அடுத்தமுறை போனால் அதற்க்கும் போய் வாருங்கள்.

  அந்தப் பக்கம் போனால்முல்லைவனநாதருக்கு ஒரு ஹாய் சொல்லாமல் வருவதில்லை....

  நல்ல பதிவு / பகிர்வு ;-)

  ReplyDelete
 13. வாங்க ஆர்.வி.எஸ்,

  காளிங்க நர்த்தனக் கிருஷ்ணனின் கோவில் தகவலுக்கு நன்றி. அடுத்த முறை கண்டிப்பாக போய்ப் பார்க்கிறேன். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 14. திருக்கருகாவூர்-சென்று வந்தது போன்று இருந்தது, படங்களும் அருமை.

  ReplyDelete
 15. //பூக்களைப் பறிக்காதீர்கள்
  காற்றை கோபித்துக் கொள்ளாதீர்கள்!
  பாவம் காற்றுக்குப் படிக்கத் தெரியாது!!//
  அழகிய ஹைக்கூ...

  ReplyDelete
 16. வாங்க பாரத்….பாரதி….,

  முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…