Sunday, December 5, 2010

புன்னைநல்லூர் மாரியம்மன்

[விடுமுறைப் பயணம் பகுதி 4] பகுதி-1 பகுதி-2 பகுதி-3நேமம், வரகூர் ஆகிய இரண்டு புண்ணிய ஸ்தலங்களை ஆனந்தமாக தரிசித்த பிறகு நாங்கள் சென்றது தஞ்சாவூரில் இருந்து 7 கிலோ மீட்டர்  தொலைவில் உள்ள அழகான புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். வாருங்கள், உள்ளே சென்று தரிசனம் செய்யலாம்.  நுழைந்ததுமே மராத்திய மன்னர்களால் அமைக்கப்பட்ட கண்ணைக் கவரும் வெளி மண்டபம் பக்தர்களை வரவேற்கிறது.


500 வருடங்களுக்கும் பழமையான இந்த கோவிலின் முக்கியமான மூலவர் மாரியம்மன். முத்துமாரியம்மன் என்றும் சொல்வதுண்டு. புன்னை வனத்தில் இருந்ததால் புன்னைநல்லூர் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார். ஆறடி உயரமுள்ள இந்த மாரியம்மன் புற்றுமண்ணால் ஆன சுயம்பு வடிவம். அம்மனைக் காணக் கண்கோடி வேண்டும். அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. 5 வருடத்துக்கு ஒரு முறை, ஒரு மண்டலத்துக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் வெண் திரையில் அம்மனை வரைந்து அதற்கு ஆவாகனம் செய்து அர்ச்சனைகளும் ஆராதனைகளும் செய்வார்களாம். இந்த நேரத்தில் மூலவரான மாரியம்மனுக்கு இரு வேளைகளும் தைலக்காப்பு, புனுகுச் சட்டம் சாத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அம்மன் உக்கிரமாக இருப்பாராம். அதனால் இளநீர் போன்றவை நைவேத்தியம் செய்யப்படுகிறது.

கோவிலில் தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.  குடம் குடமாகத் தண்ணீரைக் கொண்டு வந்து இதில் கொட்டுகிறார்கள். இதனால் அம்மனின் உக்கிரம் தணியுமாம். கோடைக் காலங்களில் அம்மனின் முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்க்குமாம். இந்த கோவிலின் உற்சவ மூர்த்திக்கும், விஷ்ணு துர்க்கைக்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. சுற்று சன்னிதிகளாக விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னிதிகள் உள்ளன. இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் வேம்பு. தீர்த்தம் வெல்லகுளம்.

இந்த அம்மனின் வரலாற்றைக் காண்போம். கிபி 1680 இல் மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்தனர்.  இதில் வெங்கோஜி மகாராஜா என்பவர் சமயபுரம் சென்று அம்மனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் அம்மன் தரிசனம் செய்ய செல்லும் போது அர்த்தஜாம பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டு விட்டது. ராஜா இரவு கோவிலிலியே தங்கி காலையில் தரிசனம் செய்ய எண்ணி தூங்கிப் போனார். அவரின் கனவில் வந்த அம்மன் தான் தஞ்சைக்கு அருகில் புற்றில் இருப்பதாக சொன்னார். விழித்தெழுந்த ராஜா கனவில் கண்டதை எண்ணி சிலிர்த்துப் போனார். உடனே தஞ்சை சென்று அம்மன் குறிப்பிட்ட இடத்தைத் தேடினார். ஒரு பெண்னுருவில் வந்த அம்மன் வழி காட்டியிருக்கிறார். இந்த இடத்தில் சதாசிவ பிரமேந்திரரால் அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதன் பின் வந்த துளஜேந்திர ராஜாவின் (1728 -1735) புதல்விக்கு வைசூரியினால் கண் பார்வை போய்விட்டதாகவும் இந்த அம்மனை வேண்டிக் கொண்ட பின் கண் பார்வை கிடைத்ததாகவும் வரலாறு கூறுகிறது. ராஜா அம்மனுக்கு அழகிய கோவில் அமைத்ததாகவும் கூறுகிறது.

ஆங்கிலேய துரைகளுக்கும் தன் சக்தியை காட்டியிருக்கிறார். மராட்டிய காலத்தில் “ரெசிடெண்ட் என்ற ஆங்கிலேய துரை அம்மனுக்கு அடிபணிந்ததாக வரலாறு கூறுகிறது.

இங்கு திருவிழாவென்று பார்த்தால் ஆடி மாதம் முத்து பல்லக்கு, ஆவணி மாதத்தில் கடைசி ஞாயிற்றுகிழமை தேரோட்டம், புரட்டாசி மாதம் தெப்போற்சவம், மற்றும் நவராத்திரி என்று வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.

கோவில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

அம்மனிடம் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, பணியிட மாற்றம் போன்ற பல விதமான பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைத்திருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டோர் வேண்டிக் கொண்டு சரியானதும் மாவிளக்கு போடுகின்றனர். உடம்பில் கட்டிகள் வந்து அவதிப்படுவோர் இங்குள்ள வெல்லக் குளத்தில் வெல்லம் போடுகின்றனர். வெல்லம் கரைவது போல கட்டிகளும் கரைவதாக நம்பப்படுகிறது.

அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உகந்த பொருளும் அதனால் கிடைக்கும் பலனும் அங்கே எழுதி வைத்திருந்தனர்.  அதன் படம் கீழே உங்களுக்காக.


மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலை தரிசித்த மனதிருப்தியோடு எங்கள் பயணத்தினை நாங்கள் தொடர்ந்தோம்.  அடுத்து சென்ற இடம் திருக்கருகாவூர். முல்லை மணம் கமழும் முல்லைவனத்தில் சந்திப்போம்.


20 comments:

 1. நல்ல புகழ் பெற்றக் கோவில். இன்னும் போனது இல்லை. போகணும், பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 2. புன்னை நல்லுருக்கு சென்று மாரியம்மனை தரிசித்த திருப்தியை அளித்து விட்டீர்கள் ... படங்களும் தகவல்களும் சிறப்பாக அமைந்தது இருந்தது ..

  ReplyDelete
 3. வாங்க எல் கே,

  நன்றி.

  வாங்க உயிரோடை,

  நன்றி.

  வாங்க பத்மநாபன்,

  நன்றி.

  வாங்க முத்துலெட்சுமி,

  நன்றி.

  ReplyDelete
 4. அட எங்க பக்கத்து ஊரு கோவில். பூச்சொரிதல் சமயத்துல இந்தக் கோவில்பத்தி அதிகம் எங்க வீட்டுல பேச்சு நடக்கும்.

  ReplyDelete
 5. தஞ்சை சென்றால் கண்டிப்பாய் போய் தரிசனம் செய்து வருவோம் நாங்கள்.

  போனமாதம் போனபோது தங்க பாவாடை சாற்றி இருந்தார்கள்.தினம் தினம் யாரவது பணம் கட்டி தங்க பாவடை சாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

  இந்தமாதம் உங்களால் தரிசனம் ஆனது.

  அடுத்து பார்த்து வெகு நாட்களாய் ஆன முல்லைவன நாதரை தரிசிக்க காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 6. வாங்க புதுகைத் தென்றல்,

  முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  நன்றி.

  ReplyDelete
 7. நாங்கள் திருச்சியில் வசித்த நாட்களில் அவ்வப்போது இந்தக் கோவிலுக்கு செல்வது உண்டு! நான்கு வருடங்களுக்குப் பின் அம்மனைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். நன்றி!

  ReplyDelete
 8. தங்கப் பாவாடையில் அம்மன் தரிசனம் அற்புதம்! நன்றி தோழி...

  ReplyDelete
 9. வாங்க மோகன்ஜி ,

  நன்றி.

  வாங்க நிலாமகள் ,

  நன்றி.

  ReplyDelete
 10. பயணமா ! வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. வாங்க தேவன் மாயம்,

  நன்றி.

  ReplyDelete
 12. நல்லா எழுதி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. அட எங்க ஊருக்கு பக்கத்தில் உள்ள கோயில். மிக சக்தி வாய்ந்த கடவுள் என நம்பப்படுகிறது. பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 14. வாங்க CHITRA,

  முதல் வருகைக்கும் ,கருத்துரைக்கும் நன்றி.

  வாங்க மோகன்குமார் சார்,

  நன்றி.

  ReplyDelete
 15. மாரியம்மன் என்றாலே L.R. ஈஸ்வரி அவர்களின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. (அடிக்கடி விடுமுறை சென்று வாருங்கள். அப்போதுதான் எங்களுக்கு இது போன்று நல்ல பயணக் கட்டுரை கிடைக்கும்.)

  ReplyDelete
 16. வாங்க ஈஸ்வரன்,

  நன்றி.

  ReplyDelete
 17. அற்புதமான பதிவு. புன்னை நல்லூர் மாரியம்மா புகழைப் பாடுவோம்.. என்று எல்.ஆர்.ஈஸ்வரி பாடல் காதில் ஒலிக்கிறது. இதே புன்னை நல்லூரில் ஒரு ராமர் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் கோயில் பின்புறம். சிறிய கோவில். அற்புதமான அர்ச்சாவதாரம். தரிசிக்க வேண்டிய ஒன்று. பார்த்தீர்களா? ;-)

  ReplyDelete
 18. வாங்க RVS,

  ராமர் கோவிலுக்கு போகலை. அடுத்த முறைப் போய் பார்க்கிறேன். நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…