Thursday, December 2, 2010

வரகூர் வேங்கடேச பெருமாள்

[விடுமுறைப் பயணம் பகுதி 3] பகுதி-1  பகுதி-2

திருவரங்கத்திலிருந்து கல்லணை வழியாக சென்று நேமம் ஐராவதேஸ்வரர் அலங்காரி அம்மனை தரிசனம் செய்தாச்சு. அடுத்து நாம் செல்லப் போவது வரகூர் வேங்கடேச பெருமாள் கோவில்.இதுவும் தஞ்சை செல்லும் வழியில் உள்ள கிராமக் கோவில் தான். 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பழமையான, ஆனால் அவ்வளவாக பிரபலம் இல்லாத கோவில். இந்த கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் மடியில் தாயார் மகாலட்சுமியை அமர்த்தியவாறு காட்சி தருகிறார். உற்சவர் வேங்கடேச பெருமாள். தாயார் ஸ்ரீதேவி பூதேவி. பெருமாள் இங்கு லட்சுமி நாராயணர், வராக மூர்த்தி, கண்ணன் என்ற மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் உற்சவரே பிரசித்தி பெற்றவர் என்பதால் உற்சவரின் பெயரான வேங்கடேச பெருமாளின் பெயராலேயே இக்கோவில் அழைக்கப்படுகிறது.

நாங்கள் சென்ற சமயம் மதியம் நடை சாற்றுவதற்கு முன் என்பதால் தரிசனம் செய்தபின் சிறிது காத்திருந்து, வேலை முடிந்து வந்த அர்ச்சகரிடம் கோவிலின் சிறப்பு பற்றி கேட்டோம்.  அதற்கு அவர் சொன்னது – “குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்  இங்கே வந்து  பெருமாளின் பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டிக் கொண்டு  அணிந்து கொண்டால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும், குழந்தை பிறந்ததும் அந்த வெள்ளிக்காப்பை உண்டியலில் செலுத்தி விட வேண்டும் என்றும் சொன்னார். இங்கு பிரசாதமாக ஒரு பொடி தருகிறார்கள்.  அருமையான  சுவையுள்ள இதனை எப்படி செய்கிறார்கள் தெரியுமா?துளசி,ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றை இடித்துத்  தான்.

நாங்கள் செல்லும் போது உற்சவர் வேங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாய் ஊஞ்சலில் காட்சித் தந்தார்.  புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் அந்த அழகிய காட்சியை கேமராவில் அகப்படுத்த முடியவில்லை.

இவ்வூரில் வசித்த ஆனைபாகவதர், பெருமாள் மீது பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார் எனவும், நாராயணகவி என்ற பக்தர் இங்கு நடக்கும் உறியடித் திருவிழாவைகிருஷ்ண சிக்யோத்ஸவம் என்ற பிரபந்தம் பாடியுள்ளார் எனவும் கோவில் புராணம் கூறுகிறது.

நாராயண தீர்த்தருக்கு பெருமாள், கிருஷ்ணராகக் காட்சி அளித்ததால் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறதாம். ஆனால், இங்கு கிருஷ்ணருக்கென சிலை வடிவம் எதுவும் கிடையாது. லட்சுமி நாராயணரையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகிறார்கள்.  கோகுலாஷ்டமியன்று சுவாமி மடியில் குழந்தை கிருஷ்ணரை வைத்து, பெருமாளையே யசோதையாக அலங்கரிப்பார்களாம்.

அனுதினமும் காலை 5.30 முதல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் 8.15 வரையும் இந்த கோவில் திறந்திருக்கும்.  கோவிலின் எதிரே உள்ள வீட்டிலேயே கோவிலின் அர்ச்சகர் இருக்கிறார்.  வீட்டு வாசலிலே அழகிய திண்ணை.  கோவில் பூட்டி இருக்கும் நேரத்தில் சென்று விட்டால் சில்லென்ற காற்று வாங்கிக்கொண்டு திண்ணையில் காத்திருக்கலாம்.

அர்ச்சகர் வீட்டில் நாங்களும் சிறிது இளைப்பாறிவிட்டு கிளம்பினோம்.  கிராமத்து வீடாகிலும் வீட்டின் முற்றத்தில் அழகிய வாஷ் பேசின்பீங்கானால் உருவானது அல்ல, ஒரு 20 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் பிளாஸ்டிக் கேன் பாதியாய் நறுக்கி, அதன் வாயில் ஒரு பிளாஸ்டிக் குழாய் சொருகி, கைகழுவும் நீர் வெளியே போகும்படி சமயோசிதமாய் செய்து வைத்திருந்தார்கள்! இது ஓர் நல்ல ஏற்பாடு அல்லவா?

அடுத்ததாக நாம் செல்லப்போவது புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்திற்குநீங்கள் தயார்தானே?


17 comments:

 1. //பழமையான, ஆனால் அவ்வளவாக பிரபலம் இல்லாத கோவில். //

  தவறான தகவல்.

  இந்தக்கோயிலைப்பற்றியும், அதன் மிகப்பிரபலமான உரியடி உத்ஸவம் பற்றியும், தமிழ்நாட்டில் தெரியாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
  அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான கோயில்.

  ReplyDelete
 2. RVS Said:

  லக்ஷ்மி நாராயணர் தரிசனம் முடிந்தது. புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு மொட்டை உண்டு. பக்கத்தில் இருக்கும் அந்தக் குளக்கரையில் வைத்து. அம்மன் வரப்ப்ரசாதி. ஆங்கில துரைகளையும், மராத்திய மன்னர்களையும் தன் அருளால் மிரட்டியவள்.

  @@ RVS: பிளாகர் ஏதோ தகராறு செய்கிறது. உங்கள் கருத்து தவறுதலாய் டெலீட் ஆகிவிட்டது. மின்னஞ்சலில் இருந்து போட்டுவிட்டேன். கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 3. உறியடி உத்சவம்.. சாலையிலேயே அங்கப்ரதட்சிணம் என்று ரொம்ப பேமஸ்.
  வெள்ளை நிற வராக மூர்த்தி வந்தாராம்.. ஸ்வேத வராகர் என்று அர்ச்சகர் ஸ்தல புராணம்

  ReplyDelete
 4. வாங்க VAI. GOPALAKRISHNAN அய்யா,

  முதல் வருகைக்கும் , தகவலுக்கும் நன்றி.

  வாங்க RVS,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சகோ.

  வாங்க ரிஷபன் சார்,

  வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

  ReplyDelete
 5. பொடி வித்தியாசமா இருக்கு ..

  ReplyDelete
 6. வாங்க முத்துலெட்சுமி,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 7. சேவிச்சாச்சு. :)

  ReplyDelete
 8. நல்ல பதிவு.ஸ்வேத வராகர் அருள் பாலிக்கும் அற்புதத் தலம்பற்றி இன்னும் கூட நீங்கள் எழுதியிருக்கலாம்.கோர்வையாக எழுதுகிறீர்கள்! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. வாங்க லாவண்யா (உயிரோடை),

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  வாங்க மோகன்ஜி,

  முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. வரகூர் பெருமாளை திவ்யமா சேவிச்சாச்சு! அடுத்து புன்னை நல்லூருக்கு மூட்டை கட்டிட்டேன். ஜல திரவியப் பொடி என்றொன்று உண்டு தோழி... ஹோமம் செய்யும் போது கலச தீர்த்தத்தில் சேர்ப்பார்கள். நீங்கள் கூறும் பொருட்கள் போல நூற்றுக்கும் மேலான வாசனைத் திரவியங்கள் (குறைந்த பட்சம் எட்டு ) சேர்த்து செய்யப்படுவது. பொதுவாக, பெருமாள் கோயில் துளசி தீர்த்தமே தனிச் சுவை ஆச்சே !பொதுவாக,பெருமாள் கோயில்களில், பிரசாதத்தில் புளியோதரையும் முன்னணியில் நிற்கும் பெருமை வாய்ந்தது.வரகூர் பெருமாள் 108 திவ்ய தேசத்தில் வருகிறாரோ ...

  ReplyDelete
 11. வரகூர் வேங்கடேச பெருமாள் தரிசனம் கிடைத்தது.

  நன்றி ஆதி.

  குருக்கள் வீட்டு வாஷ் பேசின் நல்லா இருக்கே!

  ReplyDelete
 12. வாங்க நிலாமகள்,

  வருகைக்கும், தகவலுக்கும் நன்றி தோழி.

  வாங்க கோமதி அரசு அம்மா,

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 13. தளத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்ற சிந்தனையுடன் வந்தேன் . பதிவுகளும் அருமைதான் . அனுபவப் பயணங்களை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 14. வாங்க பனித்துளி சங்கர்,

  முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 15. வரகூர் பெருமாள் கோவிலுக்கு நேரடியாக சென்று அனுபவத்தை கொடுத்திட்டிங்க... நானும் கோவை தான் , நம்மூர் பாப்பநாயக்கன்பாளைய்ம் கோவை திருப்பதி பெருமாள், பெ.நா. பா ..கரிவரதராஜ பெருமாள்..தென் திருப்பதி காரமடை புதிய சிறுமலைக்கோவில் பெருமாள் தரிசக்க செல்லும் ஞாபகங்கள் வந்தது...

  புன்னை நல்லூர் மாரியம்மனை பாலகுமாரன் எழுதி படித்துள்ளேன்....உங்கள் பதிவில் விரைவில் தரிசனம் கிடைக்கட்டும்....

  ReplyDelete
 16. வரகூர் 108ல் கிடையாது நிலாமகள். வைணவத் தலங்களில் அபிமானத் தலம் என்றும் உண்டு. ஆழ்வார்கள் பாடல் பெறாத, ஆசார்யார்கள் கொண்டாடும் கோவில்.. மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி அப்படி. வரகூரில் நாராயணதீர்த்தருக்கு வெள்ளைப்பன்றியாய் பகவான் காட்சி கொடுத்து அவர் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடி உடல் நலம் பெற்றார். ஒரு நிகழ்வு சார்ந்த பெருமையுடன் கூடிய கோவில்.

  ReplyDelete
 17. வாங்க பத்மநாபன்,

  நீங்களும் கோவை என்பதில் மகிழ்ச்சி. நாங்க இருந்தது ரேஸ்கோர்ஸ் பகுதியில். முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…