Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பதிவுலக நண்பர்களுக்கு,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வரும் இந்த புத்தாண்டில் எல்லோரும் எல்லா வளமும் பெற்று இன்புற்று இருக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.  நட்புடன்

ஆதி

புது தில்லி

Monday, December 27, 2010

வெயிலைத் தேடிதில்லியில் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம்தான். இப்பொழுது என்னுடைய ஒன்பதாம் குளிர் காலம், ஆனாலும் குளிர் விட்டு போயிடுச்சு என்று சொல்ல முடியாது!  இங்கே  ஒரு வழக்கு மொழி சொல்வார்கள், ”தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போடத் தொடங்கினால் ஹோலிக்கு மறுநாள் கழட்டலாம் என்று.

குளிர் காலத்தில் வியர்வை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் சோர்வே ஏற்படாது. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம். அதே போல நன்றாக பசிக்கும். அதற்கு ஏற்றாற்ப் போல விதவிதமாகப் பழங்களும், சிற்றுண்டிகளும், இனிப்புகளும், காய்கறிகளும் கிடைக்கும். இந்த பனிக்காலத்தில் எல்லோர் வீட்டிலும் செய்யும் ஒரு இனிப்புகாஜர் அல்வா என்கிறகாரட் அல்வா.” என் வீட்டில் நான்செய்த காஜர் ஹல்வா கீழே உங்களுக்காய்…..


அதே போல் அநேக பெண்கள் இந்த நேரத்தில் செய்யும் ஒரு வேலை ஸ்வெட்டர் பின்னுவது. நானும் திருமணமாகி இங்கு வந்த பின் ஒரு வட இந்தியப் பெண்மணியிடம் இதைக் கற்றுக் கொண்டு எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேன். என்னிடமிருந்து அவர் இட்டிலி, ரசம் போன்றவற்றின் செய்முறையை கற்றுக் கொண்டார். அய்யய்யோ ஆன்ட்டி வயிறு என்னானதோ என்று நீங்க நினைக்க வேண்டாம், இன்னும் நல்லாத்தான் இருக்காங்க! இங்கு வீட்டில் வளர்க்கும் நாய், ஆடு, எருமை போன்ற விலங்குகளுக்குக் கூட ஸ்வெட்டர் அணிவிப்பார்கள். இதை  முதலில்  பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


 
இட்லிக்கு மாவு அரைத்து வெளியில் வைத்தால் அப்படியே தான் இருக்கும். பொங்கவே பொங்காது. பின்னர் தான் இங்கு இருக்கும் நம்மூர் தோழிகள், மாவு அரைத்து உப்புப் போட்டு கரைத்த பின் அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி கம்பளியால் சுற்றி வைத்தால் மாவு பொங்கும் எனச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் பழைய ஸ்வெட்டரை இந்த டப்பாவுக்கு போட்டு மஃப்ளர் சுற்றி வைப்பேன். இந்த செய்முறை ஓரளவு குளிரில் எடுபடும். கடுங்குளிரில் இதுவும் நடக்காது. இட்லி, தோசை சாப்பிடும் ஆசையை சிறிது நாள் தள்ளிப் போட வேண்டியதுதான்.

தயிர் உறைவதற்கு பாலை அப்படியே காய்ச்சி CASSEROLE ல் விட்டு இரண்டு மூன்று கரண்டி தயிர் விட்டு வைத்தால் தான் அது தயிராக மாறும். இல்லையேல் அது பாலாகவே தான் இருக்கும். இந்த கடும் பனிக் காலத்தில் வெளியில் நின்றிருக்கும் போது பேசும் எல்லோர் வாயிலிருந்தும் சிகரெட் குடிக்காமலே புகை வரும். சாலையோரங்களில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்வார்கள்.


பொதுவாகவே தில்லியில் ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கேற்ற பழங்கள் விதவிதமாய் கிடைக்கும். இந்த பனிக் காலத்தில் கிடைக்கும் பழங்கள். ஆப்பிள், கின்னு (ஆரஞ்சு மாதிரியே இருக்கும்), பைனாப்பிள், சப்போட்டா, திராட்சை, பப்பாளி, பேரீச்சை போன்றவை.

அதே போல அங்கங்கே வேர்க்கடலை, பாப்கார்ன், போன்றவைகளை வறுத்துக் கொடுப்பார்கள். இதற்குக் கடைகளும் உண்டு.  பெயர்கஜக் பண்டார் இங்கு கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பொரி உருண்டை போன்றவை விற்கப்படும்.

இந்தப் பனியில் எல்லோரும் பகல் வேளைகளில் வெயிலைத் தேடி பூங்கா, மொட்டை மாடி போன்ற இடங்களில் அமர்வார்கள். இங்கு இருக்கும் எங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் எல்லோர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு உணவு செய்து ஞாயிறுகளில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வெயிலில் குழந்தைகளை விளையாட விட்டு பெரியவர்களான நாங்கள் அரட்டையடித்து உணவு உண்டு வருவோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

மேலே உள்ளவைகள் சில விவரங்களே. இதில் விடுபட்டவைகளையும், என்னுடைய முதல் பனிக் காலத்தைப் பற்றியும், சப்பாத்தி என் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாமா?

Monday, December 20, 2010

தோய்ப்பு நடனம்!!

இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள்  கீழே படிங்க.

முன்னாட்களில் துணியெல்லாத்தையும் ஆத்தங்கரைக்கு எடுத்துட்டு போய் ஓடற தண்ணியில காலை வைச்சு, கரையோரமா கிடக்கும் கல்லில் பொறுமையா தோய்ச்சுட்டு அப்படியே குளிச்சுட்டும்  வருவாங்க.  துணியில் இருக்கும் அழுக்கை நாம் வெளுக்க, ஓடும் தண்ணீரில் இருக்கும் சிறு மீன்கள் நம் காலில் இருக்கும் அழுக்கைத் தின்னும்போது நாம் உணரும் குறுகுறுப்பு இருக்கே!ஆஹா அது ஒரு  அலாதியான ஆனந்தம். அகண்ட காவிரியில் இந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் நான் திருப்பராய்த்துறை செல்லும்போதெல்லாம்  கிடைக்கிறது.


அப்புறமா துவைக்கறதுக்குன்னு ஒரு மிஷின் வந்த பிறகு துணியையும் சோப்புத் தூளையும்  போட்டு தண்ணீரை திறந்து விட்டு, பட்டனை அமுக்கிட்டு  வந்துட்டா, மத்த வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கலாம்.  தோய்ச்சு முடிச்சு மிஷின்நான் தோய்ச்சு முடிச்சுட்டேனே அப்படின்னு ஒரு லாலி பாடின பிறகு எடுத்து காய வைச்சா போதும். எனக்கு மெஷின்ல தோய்க்கறதை விட கையால  தோய்க்கிறதுதான் பிடிக்கும். குளிர்காலத்தில தான் வேற வழியில்லாம மெஷின்ல தோய்க்கிறேன்.


கல்லுல துணியை அடிச்சு தோய்க்கும்போது வேற ஒரு வசதியும் இருந்துச்சு. வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், அட நான் துணியைத்  தாங்க சொல்றேன்! இங்க வட இந்தியாவில் துணி தோய்க்கிற கல் கிடையாது.  அதுக்கு பதிலா ஒரு மரக்கட்டை வச்சிருப்பாங்க, கிரிக்கெட் பேட் மாதிரி அதுக்குப் பேரும்பேட் தான்.  அந்த பேட்டால துணியை அடி அடின்னு அடிச்சி விளாசுவாங்க பாருங்க... அது அந்த துணியை போட்டிருந்த ஆளையே அடிக்கற மாதிரி இருக்கும்.

எங்க பின்னாடி வீட்டுல ஒரு அம்மணி இருக்காங்க.  அவங்க வாஷிங்மெஷின்- தோய்க்கிறத வேடிக்கை பார்க்கறது எனக்கு ஒரு வாடிக்கை. மெஷின்- துணியைப் போட்டு ஒரு முறை தோய்த்த உடனே அந்த துணியை எடுத்து டிரையர்ல போட்டு குழாயடில வீசுவாங்க.    அங்க ஒரு தடவை வாளில போட்டு அலசுவாங்க.  அதுக்கப்பறம், வாஷிங் மெஷினையே தலைகீழாக்கி தண்ணியை வெளியேத்துவாங்க.  இத்தனைக்கும் அழுக்குத் தண்ணிய வெளியேத்தற குழாயும் நல்லாத்தான் இருக்கு. பிறகு வாளியில் அலசுன துணியை எடுத்து மெஷின்ல போட்டு 10 நிமிடம் தோய்க்க விடுவாங்க.

திரும்பவும் டிரையர்ல போட்டுட்டு அது வேகமா சுத்தும்போது மெஷினை  கையில பிடிச்சுப்பாங்க, அது என்னமோ , இவங்க படுத்தற பாட்டைத் தாங்காம ஓடிப்போயிடற மாதிரி. ஏற்கனவே, அந்த மெஷின் பலகணில ஒரு சின்ன சந்துல தான் இருக்கு, அது எங்க ஓடறது? அது வேகமா சுத்தும்போது அதைப் பிடிச்சுட்டு இருக்கிறதுன்னால இவங்க, அந்த சின்ன இடத்திலேயே, அதுவும் நின்ன இடத்துலேயே நின்னு ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க , அதைக் காண கண் இரண்டு பத்தாது.   பரதநாட்டியம், குச்சிப்புடி, ப்ரேக், ஒடிசின்னு பலவிதமான ஆட்டங்களையும் கலந்து ஆடுனா எப்படி இருக்கும், அது மாதிரி அவங்க நடனம் இருக்கும்.

ஒரு நாள் அவங்க ஆடுற ஆட்டத்தை வீடியோ எடுக்கலாம்னு ஆசைதான், அதுக்கு உலகளாவிய பதிப்புரிமை எல்லாம் வித்து காசாக்கலாம்தான், ஆனா அப்படியே ஆடிக்கிட்டே அவங்க வீட்டு பலகணியிலேர்ந்து பாய்ஞ்சு வந்துடுவாங்க ளோங்கற பயத்துல இன்னும் வீடியோ எடுக்கல இதை எப்படி தைரியமா சொல்றீங்கன்னு கேட்கறீங்களா, அந்த அம்மணி ஹிந்திக்காரங்க! அதனால தமிழில்  நான் எழுதறதை  படிக்க முடியாதுன்னுன்ற தைரியம்தான்.