Tuesday, November 30, 2010

நேமம்

[விடுமுறைப் பயணம் - பகுதி 2] பகுதி 1


திருச்சியிலிருந்து கல்லணை வழியாக சென்றால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது நேமம் என்ற கிராமம். இதுவும் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர். அம்பாளின் திருநாமம் அலங்காரி. நியமம் என்ற பெயர் மருவி காலப்போக்கில் நேமம் என்றாகி விட்டதுஅப்பர் பெருமானின் வாக்கில் இடம்பெற்ற இத்தலம் அமைதியான இடத்தில் அழகாய் இருக்கிறது.  300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த  கோவிலின் உள்ளே சென்று தரிசிக்கலாமா?

வாயிலில் ஈசனின் நேராக நந்தி அமையப்பெற்றிருக்கிறது. இந்த நந்தி பீடத்தின் மீது இல்லாமல் இரண்டடி பள்ளத்தில் இருக்கிறது. பள்ளத்தில் இருப்பதற்கு காரணமும் சொல்கிறார் கோவிலின் காப்பாளர் - மழை இல்லாமல் மக்கள் அவதிப்படும் போது காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து நந்திக்கு அபிஷேகம் செய்வார்களாம். நல்ல மனதோடு அபிஷேகம் செய்தால் நந்தி பிரதிஷ்டை செய்திருக்கும் பள்ளம் நிறைந்து மழையும் வருமாம். அப்படியில்லாமல், ”இப்படியெல்லாம் செய்தால் என்ன ஆகப் போகிறது என்று நினைத்து வேண்டா வெறுப்பாக செய்தால் நந்தி இருக்கும் பள்ளம் நிரம்பாமல், அபிஷேகம் செய்யும் நீர் அனைத்தும் பூமிக்குள் சென்று காவிரியை அடைந்துவிடும் என்கிறார்.அடுத்து உள்ளே சென்று ஐராவதேஸ்வரரை கண்குளிரக் கண்டு தரிசித்தோம். அடுத்து அம்பாளை தரிசிப்போம். இங்கு அலங்காரி, ஆதி அலங்காரி என இரு அம்பாள்களின் சன்னதி இருக்கிறது. இதற்கும் ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆங்கிலேயர்கள் படையெடுப்பில் அம்பாளை காப்பாற்றுவதற்காக அலங்காரி அம்மனை காவிரியாற்றில் புதைத்து விட்டார்களாம். சில வருடங்கள் கழித்து அம்பாளை தேடிய போது கிடைக்கவில்லையாம். ஆதலால் வேறு ஒரு அம்மன் சிலை செய்து பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஒரு நாள் பூஜை செய்பவரின் கனவில் அம்மன் வந்து காவிரியாற்றில் தான் இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார். பின்பு அம்மன் சிலையை கண்டெடுத்து அந்த சிலையும் மறுபிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆகவே இரு அம்மன்கள். காவிரியில் கண்டெடுத்த அம்மன் ஆதி அலங்காரி. புதிதாக செய்த அம்மன் அலங்காரி. இரு அம்பாளுக்கும் அபிஷேகங்கள் ஆராதனைகள் சிறப்பாக செய்யப் படுகின்றன.


சுற்றுச் சன்னிதிகளாய் பிள்ளையார், வள்ளி-தெய்வானையுடன் இருக்கும் முருகன், நவக்கிரகங்கள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உண்டுகாவிரியின் கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் அழகாய் இருக்கிறதுபிரபலம் இல்லாத கிராமத்துக் கோவில் என்பதால் அவ்வளவாய் மக்கள் வந்து போவதில்லைகாலையில் பூஜை செய்துவிட்டு பூட்டிக்கொண்டு சென்று விடுகிறார் கோவிலின் அர்ச்சகர்நிம்மதியாய் கோவிலை தரிசிக்க காலையிலேயே சென்று விடுவது நல்லது.

காஞ்சி மாமுனிவர் அருளியதெய்வத்தின் குரலில் அலங்காரி அம்மனின் மகிமை பற்றி எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்நாங்கள் சென்றது நவராத்திரி காலமானதால், அலங்காரி அம்மனின் உற்சவமூர்த்திக்கு அழகாய் அலங்காரம் செய்து ஊஞ்சலில் வைத்திருந்ததையும் தரிசித்தோம்.


கோவிலுக்குக் கிராமத்திலிருந்து வந்திருந்த ஒரு வயதான பெண்மணி எங்கள் அனைவரையும் அவரது இல்லத்திற்கு அழைத்து சாப்பிட பாயசமும் கொடுத்தார்கள். முன்பின் அறியாதவர்களைக் கூட வீட்டிற்கு அழைத்து உபசரித்த கிராமத்து பண்பை எண்ணி வியந்தேன்.

அடுத்து செல்லப்போவது வரகூர் வேங்கடேச பெருமாள் சன்னிதிக்குபோகலாமா?

Saturday, November 27, 2010

விடுமுறைப் பயணம்பயணம், சுற்றுலா செல்வது எனக்கு ரொம்பப் பிடித்தமான விஷயம்.  தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுகள் நடந்தபோது குழந்தைக்கு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் நாங்கள் திருச்சி சென்று என்னவரின் வீட்டில் தங்கினோம்.

பொதுவாக மதுரையைத்தான்  “தூங்கா நகரம் என்று சொல்கின்றனர்.  காவிரியாறு ஓடும் அழகான ஊரான திருச்சியையும், ”தூங்கா நகரம் என்று சொல்லலாம். இரவு 1 மணிக்குச்  சென்றாலும் உள்ளூர் நகர பேருந்துகள் கிடைக்கும். கட்டணம் மட்டும் இரு மடங்கு. திருச்சி செல்லும்போதெல்லாம், திருச்சியிலுள்ள மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில், திருவானைக்கா, ஸ்ரீரங்கம், சமயபுரம், குணசீலம், வயலூர் போன்ற கோவில்களுக்கெல்லாம் ஒரு முறையாவது சென்று வருவோம்.
இம்முறை திருச்சி-தஞ்சையின் அருகில் உள்ள சில கோவில்களுக்கெல்லாம் ஒரு டெம்போ ட்ராவலர் வண்டி வைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஒரு நாள் பயணமாய் சென்று வந்தோம்.  காலை ஏழு மணிக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி இந்த ஒரு நாள் பயணத்தில் நேமம், வரகூர், புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கருகாவூர், திட்டை, தஞ்சை பெரிய கோவில் போன்ற இடங்களுக்கெல்லாம் செல்வதாய் ஏற்பாடு செய்திருந்தார் என்னவர்.

உங்களையும் என்னுடன் கூட இந்த பயணத்தில் அழைத்துச் செல்கிறேன். முதலாவதாய் நாம் பார்க்கப் போவது திருச்சியிலிருந்து கல்லணை வழியாய் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள நேமம் என்ற இடத்திற்கு.  நேமம் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஐராவதேஸ்வரர்-ஆதி அலங்காரி-அலங்காரி சன்னிதியில் சந்திப்போமா?

Thursday, November 18, 2010

மழலைகளின் சுட்டித்தனங்கள்


ஒவ்வொரு வீட்டிலும் மழலைகளின் சுட்டித்தனங்கள் வெகுவாக ரசிக்கவும், வியக்கவும், சிரிக்கவும் வைப்பதாகவே  இருக்கும். நமது மழலைப்பருவம் என்பது அலாதியான ஒன்று. கவலைகள், பயம் அற்றது. பல நேரங்களில் குழந்தைகளாகவே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் வந்து போயிருக்கும். 

எங்க வீட்டு சுட்டிக்கு ஒருநாள் காக்கா பானையிலிருந்து தண்ணீர் குடித்த கதையை விளக்கிக் கொண்டிருந்தேன். ”காக்காவுக்கு பயங்கர தாகம் எடுத்ததாம், பக்கத்திலிருந்த ஒரு பானையில் கீழேயிருந்த தண்ணீரை குடிக்க அதனால் முடியவில்லையாம், அதனால் பானையில் சிறுசிறு கற்களை பொறுக்கிப் போட்டு தண்ணீர் மேலே வந்ததும் குடித்து விட்டு சென்றதாம் என்று கூறினேன். உடனே அவள்அம்மா, எதற்காக கற்களை பொறுக்கிப் போட வேண்டும். பானைக்குள் ஒரு குட்டி ஏணி போட்டு இறங்கி குடித்திருக்கலாமே என்றாளே பார்க்கலாம்!  நாமெல்லாம் சிறு வயதில் இப்படி எல்லாம் கேள்வி கேட்டிருப்போமா என்பது சந்தேகமே!

அப்பா, அம்மா, பாட்டி, தாத்தாக்கள் நமக்குக் கூறும் கதைகளை நாமெல்லாம் அப்படியே நம்பினோம். இப்பொழுது இருக்கும் குழந்தைகள் எப்படியெல்லாம்  யோசிக்கிறார்கள் என்று நினைத்து வியந்தேன்.

ஒருநாள் மாலை என் தோழியின் வீட்டுக்கு போயிருந்தபோது அவளின் குழந்தை அழுது கொண்டே இருந்தாள். என்னவென்று காரணம் புரியவில்லை. சிறிது நேரத்துக்கு முன்புதான் உணவளித்ததால், பசி அழுகையாகவும் இருக்க முடியாது. உடல்நிலையிலும் ஒன்றும் பிரச்சனையில்லை. பின் எதனால் என்று யோசிக்கும் போது சுமார் மாலை 4 மணியிலிருந்து அழுது கொண்டிருப்பதும் வெளியே போக செருப்பு போட்டுக் கொண்டு பால் தூக்கு (இங்கு பாலை எல்லோரும் தூக்கு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வருவார்கள்) எடுத்துக் கொண்டு நிற்பதும் தெரிந்தது. தோழியிடம் விசாரித்த போது, தினமும் அவர் குழந்தையை அழைத்து சென்று பால் வாங்கி வருவாராம். அன்று பால் இருந்தபடியால் செல்லவில்லை. குழந்தை தினமும் வெளியே செல்லும் நேரம் வந்தும் செல்லாததால் அழுதுகொண்டே இருந்திருக்கிறாள். பின்பு சமாதானப்படுத்த தூக்குப் பாத்திரத்தை வெறுமனே எடுத்து கொண்டு குழந்தையை அழைத்துக் கொண்டு சென்று வந்தவுடன் குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சமர்த்தாக சாப்பிட்டு விட்டு தூங்கினாள்.

இந்த கால குழந்தைகளின் சுட்டித்தனத்தை என்னவென்று சொல்வது.  இவர்களுக்கு பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள நிறைய வாய்ப்புகள் இருப்பதும் காரணமாய் இருக்கலாம்

Monday, November 15, 2010

மக்களே உஷார்

என்னடா இது? தலைப்பைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே எனத் தோன்றுகிறதா? எதைப் பற்றி உஷார்படுத்தப் போகிறேன் என்று நீங்கள் யோசிக்கும் முன் நானே சொல்லி விடுகிறேன்.

ஒருபுறம் இன்று பூமி வெப்பமயமாதல் பற்றி எல்லோரும் பேசுகிறோம், கவலைப்படுகிறோம். மறுபுறம் கலியுகம் முடியப்போகிறது, உலகம் அழியப் போகிறது என்று சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. காடுகளை அழிப்பது, பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பது என்று ஒருபுறமும், அராஜகங்கள் நடப்பது மறுபுறமும் என்று இன்னும் எத்தனையோ.

நான் இங்கே கூற வருவது உணவுப்பொருட்களில் கலப்படம் பற்றி. பெருவாரியான உணவுப்பொருட்களில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதை பயன்படுத்துவதால் வயிற்றுக்கும், வீட்டுக்கும் தீமை விளைவிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சமையலுக்காக புளியை கரைத்துக் கொண்டிருந்தேன். கையில் ஏதோ தட்டுப்படவே என்னவென்று பார்த்தால் அது ஒரு ஸ்க்ரூ. அதிர்ந்து விட்டேன். எதிர்பாராத விதமாக வயிற்றுக்குள் சென்றிருந்தால் என்ன ஆவது? எடை அதிகரித்து காண்பிப்பதற்காக சேர்த்திருக்கலாம். அல்லது பேக் செய்யும் போது அலட்சியத்தால் விழுந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.


இது போல பிற உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்கள் பற்றி பார்ப்போம். வெல்லம் உபயோகிக்கும் போது முடிந்த வரை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி உபயோகிக்கவும். ஏனென்றால் மண், கல், நகங்களும் கூட அதில் இருக்கிறது. மாதுளம் பழங்களில் சிவப்பு நிறத்தை மிகைப்படுத்தி காண்பிப்பதற்காக ஊசி மூலம் மருந்து செலுத்தப் படுகிறது. தர்பூசணிப் பழத்திலும் இதே கதை தான்.


நாம் வாங்கும் பாலிலும் கலப்படம் செய்யப்படுகிறது. பாக்கெட் பாலாவது பரவாயில்லை. கறந்த பாலை வாங்கும் போதே வடிகட்டி வாங்கவும். இதில் முடி, வைக்கோல், குப்பை போன்றவையும் இருக்கலாம். சமீபத்தில் ஒரு பால் கடையின் முன் நின்றிருந்த போது கவனித்தது என்னவென்றால் பால்கடைக்காரர் புகைபிடித்துக் கொண்டிருக்கும் போது சாம்பலை தட்டினார் அது அத்தனையும் பாலில் தான் விழுந்தது. இப்போது வட இந்தியாவில் பாலுக்குப் பதிலாய் ரசாயனப் பொருட்களைக் கலந்து பால் என்ற பெயரில் ஏதோ ஒரு வெள்ளை திரவத்தை விற்றுக்கொண்டு இருக்கின்றனர்.


இவை ஒரு சில உதாரணங்கள் தான். இப்படி ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து உபயோகிப்பதானால் மிகவும் கடினம் தான். ஆனால் முடிந்த வரை கண்முன் நடப்பதை தடுக்கலாம். முதலில் சுத்தம் சுகாதாரம் தேவை. காய்கறி மற்றும் பழங்களை மூன்று தடவை கழுவி பயன்படுத்தவேண்டும்.

நமது முன்னோர்களுக்கு வியாதிகள் வருவது அரிதாக இருந்தது. இன்று யாரை விசாரித்தாலும் ஏதோ ஒரு உடல்நலக் குறைபாடு உள்ளது. வியாதிகளோ ஏராளமாய் வருகிறது. ஆகவே நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியம் என்னும் நிறைவில்லா செல்வத்தை அளிப்போம்.

உஷாரய்யா உஷாரு!!!!!!!!!!!!!!!!

Thursday, November 11, 2010

கொத்தமல்லி சாதம்


எங்க அம்மாகொத்தமல்லி சாதம்  செய்து தருவாங்க! அவங்க செஞ்சாங்கன்னாவாவ் எனச் சொல்ல வைக்கும் தனி டேஸ்ட் தான். திருமணமான பிறகு நானும் நிறைய தடவை செய்து பார்த்துட்டேன்.   ஆனாலும், அம்மாவோட கைப்பக்குவம் அளவுக்கு வரலை. அதுக்காகநல்லா இருக்காதா?”ன்னு எல்லாம் கேட்கக்கூடாது. ரொம்பவே நல்லா இருக்கும். அம்மா பண்ணும்போது சாதம் தனியா வடிச்சுட்டு கலவைய போட்டு கலப்பாங்க. ஆனா நான் இங்கு குளிர்காலங்களில் தனித்தனியா செய்தா ஆறிடும்கறதனால, கீழ்க்கண்ட முறைப்படி பண்ணுவேன். உங்களுக்கு எப்படி வசதியோ அது மாதிரி செய்து  சாப்பிடுங்க.

தேவையான பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 () 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு

தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
பெருங்காயம்சிறிதளவு

செய்முறை:-

அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறி வைக்கவும்.  நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம், வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைத்த கொத்தமல்லி விழுதையும்  போட்டு நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிற விகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை  நிறுத்தி விடவும்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்!  இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ, வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.

எப்போதும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற கலவை சாதங்களையே சாப்பிட்டு போரடித்து இருக்கும் எல்லோரும் இதைவாவ், இது ரொம்ப நல்லா இருக்கே!” என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டுவாங்க!

ஆதி.

இந்த ரெசிபியை ஜலீலாக்காவின் பேச்சிலர்ஸ் ஃபீஸ்ட் ஈவன்ட்டிற்கு அனுப்பி உள்ளேன்.