Monday, October 25, 2010

சொர்க்கமே என்றாலும்……சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?” என்ற பாடலைக்  கேட்கும் போதெல்லாம் எல்லோருக்கும்  அவரவர் ஊருடைய நினைவுகள் வரும். நம்முடைய பிறந்த ஊர் எவ்வளவு சிறிய கிராமமாக இருந்தாலும் - சிறு வயதில்நாம் பார்த்த, பழகிய இடங்கள், விளையாடிய இடங்கள், நம்முடைய பெற்றோருடன் கழித்த அந்த  இன்பமான நாட்கள் மீண்டும்  திரும்பக் கிடைக்காதா?” என்று எண்ணத்தோன்றும்.

கோவை என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூர் என்னுடைய சொந்த ஊர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே பெருமை. “TEXTILE CITY” என்று அழைக்கப்படுகிற கோயமுத்தூருக்கு இன்னொரு பெயரும் உண்டு “MANCHESTER OF INDIA” என்ற பெயர் தான் அது. இங்குள்ள தட்பவெப்பநிலையும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒருபுறம் உதகமண்டலம் மறுபுறம் கேரளா என்று இருப்பதால் எவ்வளவு வெயில் காலமாக இருந்தாலும் வியர்க்காது. மார்கழி மாதங்களில் சீதோஷ்ணம் மிகவும் நன்றாக இருக்கும். சுவையில் உலகிலேயே இரண்டாம் இடத்தை பெற்ற சிறுவாணி தண்ணீர்தான் எங்களுக்கு குடிநீர்.

நாங்கள் இருந்த ரேஸ்கோர்ஸ் என்ற பகுதி கோயமுத்தூரின் மையப்பகுதி. இந்த பகுதிக்கு காந்திபார்க் - காந்திபார்க் என்ற வழிப்பாதையில் செல்லும் 7C பேருந்து மட்டுமே வரும். இப்பேருந்தில் சென்றால் அநேகமாக எல்லா முக்கிய இடங்களுக்கும் சென்றுவிடலாம். இங்குள்ள வாக்கிங் ரோடில் காலை 4 மணி முதல் 9 மணி வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வாக்கிங் செல்பவர்கள் அதிகம். 

இந்த ரோடின் இருபுறங்களிலும் பூத்துக் குலுங்கும் மரங்களும் பூங்காக்களும் இருக்கும். ரேஸ்கோர்ஸில் ஆரம்பித்து K.G தியேட்டர், K.G ஆஸ்பத்திரி, அரசு கலைக் கல்லூரி, கலெக்டர் பங்களா, சாரதாம்பாள் கோவில் இப்படி 4 - 5 இடங்களை கடந்து திரும்பவும் ரேஸ் கோர்ஸிலேயே முடியும் வட்டப் பாதையே வாக்கிங் ரோடு. இந்த வாக்கிங் ரோடில் காலையில் வாக்கிங் செல்பவர்களுக்காக அருகம்புல் ஜூஸ், காய்கறி சூப்பு போன்ற உடல்  ஆரோக்கியத்திற்கு உதவும் பொருட்களை விற்கிறார்கள். இங்கு இப்பொழுது குழந்தைகளுக்காக உலக அதிசயங்களின் மாடல்கள் மற்றும் கேளிக்கைகளும் வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.

ரேஸ்கோர்ஸ்க்கு அருகில் உள்ள இடம் புலியகுளம். இங்கு உலகிலேயே மிகப்பெரிய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இவரது உயரம் 19 அடி.  மேலும்  ரேஸ் கோர்ஸிலேயே 108 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை  5 அடுக்குகளாக வைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக இருக்கும். இப்படி பல பேறுகளைப் பெற்ற பகுதியில் பல வருடங்கள் இருந்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

இவ்வளவு எழிலான நகரில் இருந்துவிட்டு இப்போது தில்லியில் இருப்பது மனதுக்கு என்னமோ பிடிக்கவில்லை.  தில்லியில் பல வருடங்கள் இருந்தாலும் இந்த ஊர் எனக்கு  பிடிக்கும் என்று தோன்றவும் இல்லை:-)

கோவையைப் பற்றி இது முதலாவது பதிவு.  இன்னும் தொடரும்.

ஆதி.

Tuesday, October 19, 2010

“தசாவதார்”


சிறு வயதில் சினிமாவுக்கெல்லாம் எங்களை அழைத்துக் கொண்டு போவது அரிதான விஷயம். விடுமுறை நாட்களில் அம்மா ஏதோ ஒரு படத்தைத் தேர்வு செய்து அழைத்துப்  போவார்திருமணமாகி தில்லி வந்த பின்பும் தமிழ் படங்கள் இங்கே  அவ்வளவாக வெளியிடாததால் பார்க்க வாய்ப்பு இல்லாமலே இருந்தது.

கமல்ஹாசன் நடித்ததசாவதாரம்தில்லியில் வெளியாகவேவார இறுதியில் அதற்க்குச்  செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருந்தோம். வாரக் கடைசியில் ஒரு வேலையாக வெளியே சென்ற என் கணவர் யதேச்சையாக அவருடைய நண்பரை சந்திக்கவும்  அவர்  தசாவதாரம் பார்க்கப் போவதாகச்  சொல்லி, அவரே எங்கள் எல்லோருக்கும் சேர்த்து டெலிபுக்கிங் செய்து விட்டார்.


எல்லோரும் சேர்ந்து நண்பருடைய வண்டியில் புறப்பட்டோம். போகும் வழியில் நண்பர் “WAVES”ல் தசாவதாரம் போட்டிருப்பதாக சொல்லி அங்குதான் டெலிபுக்கிங் செய்து உள்ளதாகச் சொன்னார். என்னவரோ, தான் பேப்பரில் ”FUN CINEMAS V3S MALL”ல் போட்டிருப்பதாக பார்த்த ஞாபகம் என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே  “WAVES” வந்துவிட்டது.

இரண்டாம் தளத்திற்குச் சென்று சினிமா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தோம். அங்கு பார்த்தால் கும்பலும் இல்லை, வந்திருந்த ஒரு சிலரும் ஹிந்திக்காரர்கள். தமிழ் போஸ்டரும் இல்லை என்னடா இது என்று நினைத்தபடியே உள்ளே சென்று உட்கார்ந்தோம்.

படம் ஆரம்பமானது. ஆஹா! கமல்ஹாசன்  இதோ வரப்போகிறார்  என்று பார்த்தால் காலச்சக்கரம் சுழலும் படம் வந்த பிறகுதசாவதார்என்ற கார்ட்டூன் படத்தின் டைட்டில் ஓடியது. ஒன்றரை மணி நேர படம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி குழந்தைகளுக்குச் சொல்லும் அழகான படம்.

கமல்ஹாசன் படம்  பார்க்கச் [!] சென்ற எங்களுக்கோ ஒரே அதிர்ச்சி. என் பெண்ணுக்கும், நண்பரின் பெண்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற படம் என்பதால் ஒரே குஷி

ஒரு டிக்கெட் 130 ரூபாய் கொடுத்து வாங்கியதால் பேசாமல் அமர்ந்து பார்த்து விட்டு வந்தோம். அத்தோடு விட்டோமா, இரண்டு நாட்கள் கழித்து கமல்ஹாசன் நடித்ததசாவதாரம்படத்திற்கும் சென்றோம்.

ஒரே பெயரில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வெளிவந்ததால் வந்த குழப்பம். டெலிபுக்கிங் செய்த நண்பரை இப்போது பார்த்தாலும்  கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம்.

சொந்த செலவில் சூனியம் – "தசாவதார்" மற்றும் "தசாவதாரம்" படம் பார்க்க எங்களுக்கு ஆன செலவு – 1000 ரூபாய்.


"அட தேவுடா" என்று நினைக்கத் தோன்றியிருக்கணுமே உங்களுக்கு இந்நேரம்!


ஆதி