Friday, September 3, 2010

புளியில்லா சாம்பார்


சாம்பார் செய்ய புளி ஊறவைக்க புளி டப்பாவை திறந்து பார்த்தா, சுத்தமா புளியே இல்லையா? சாம்பார்தான் கடையிலேயே விக்குதே வாங்கிக்கலாமேன்னு சொல்லவா இந்த பதிவு? சரி புளியில்லாம சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாமா? திடீர் விருந்தாளிகள் வந்தாலும் இந்த சாம்பாரை நீங்க சுலபமா செய்யலாம். இந்த செய்முறையை எனக்கு என்னோட மாமியார் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு எனது நன்றி!


தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் : 2

தக்காளி : 3

துருவிய தேங்காய் : 2 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம் : சிறிதளவு.

தனியா : 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு : 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் : 2 [அ] 3

பெருங்காயம் : சிறிதளவு.

உப்பு, மஞ்சள் பொடி : தேவைக்கேற்ப

துவரம்பருப்பு : ஒரு கப்.

எண்ணெய் : தேவைக்கேற்ப

கருவேப்பிலை : சிறிதளவு

கொத்தமல்லி : சிறிதளவு


செய்முறை

துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணைய் விட்டு தனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து கொறகொறவென அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கி பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பினை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழைகளை மேலே தூவி விடுங்கள். இப்போ புளியில்லா சாம்பார் ரெடி! பரவாயில்லையே புளியே இல்லாமல் சாம்பார் செஞ்சுட்டியே! சரியான "சமையல் புலி" தான் நீ என்ற பட்டத்தையும் வாங்கிக்கோங்க!

ஆதி

18 comments:

  1. ஓ நேற்று புளி தீந்து போனதால் .. புலி நீங்கள் செய்ததா ?

    ReplyDelete
  2. வாங்க முத்துலெட்சுமி . வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தேவையான சாமான் லிஸ்ட்டில ஒண்ணு போடலியே?
    சாப்பிடுவதற்கு இரண்டு பேர். கூப்பிட்டீங்கன்னா கோயமுத்தூரிலிருந்து தில்லி என்ன கூப்பிடு தூரம்தானே, வந்துடமாட்டோம்?

    ReplyDelete
  4. தோழி first மன்னிப்பு கேக்கறேன் ..கமெண்ட் லேட் ஆ போடறேன் இல்லையா அதுக்கு தான் ...இப்போ சாம்பார் பத்தி சொல்லறேன் ரொம்ப அருமையா இருக்கு பா உங்க புளியில்லா சாம்பார் ...படம் கூட சூப்பர் ஆ இருக்கு ..பார்த்தாலே சாப்பிட தூண்டறது ...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. வாங்க DR P KANDASWAMY PHD அய்யா,
    கண்டிப்பா சாப்பிட வாங்க. நீங்க தான் இப்ப டெல்லி வந்திருந்தீங்களே.
    அடுத்த தடவை கண்டிப்பா எங்க வீட்டுக்கு வாங்க.

    ReplyDelete
  6. வாங்க சந்தியா,
    இந்த சாம்பார் செஞ்சு பாருங்க. தோழி போன தடவை என் பெயர் கேட்டு இருந்தீங்க. என் பதிவில் இண்ட்லிக்கு பக்கத்தில் இருக்கும் பாருங்க அது தான் என் பெயர்.

    ReplyDelete
  7. அப்பிடியா... இப்பவே போயி பார்கிறேன் ரொம்ப நன்றி

    ReplyDelete
  8. புளியில்லாம சாம்பாரை உங்கள் வீட்டுப் புலியிடம் பரிசோதித்துப் பார்த்து விட்டீர்கள்தானே!

    ReplyDelete
  9. வாங்க ஈஸ்வரன் சார்,
    பரிசோதித்து பார்த்திட்டு தான் பதிவு போட்டிருக்கேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. வாங்க புவனா அக்கா,
    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  11. பதிவு மணக்கிறது..

    ReplyDelete
  12. புளி இல்லாமல் சாம்பாரா?
    கேட்கவே ஜோராய் இருக்கே?
    சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  13. வாங்க ரிஷபன் சார்,
    செய்து பாருங்கள் வீடே மணக்கும்.

    வாங்க ஆர் ஆர் ஆர் சார்,
    சாப்பிட்டால் ரொம்ப நன்றாயிருக்கும்.

    ReplyDelete
  14. ஆஹா எத்தனை அருமையான ரெசிபி..மிக்க நன்றி நாளைக்கே செஞ்சு பாக்குறேன்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. ரொம்ப நன்றிங்க. காயத்ரி.

    ReplyDelete
  16. புளி இல்லாமல் சாம்பாரா?

    நான் நிறைய தடவை சாம்பாருக்கு புளி ஊறவைக்க மறந்துடுவேன்.
    எனக்கு ஏற்ற பதிவுதான் நன்றி கோவை2தில்லி.

    ReplyDelete
  17. வாங்க ஜிஜி,
    வரவுக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி.

    ReplyDelete

படிச்சீங்களா! உங்கள் கருத்தினையும் சொல்லுங்களேன்…