Thursday, September 23, 2010

நான் சேகரிக்கும் பொக்கிஷங்கள்


நம்மில் பலருக்கு வித விதமான தபால்தலைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் சிலருக்கு வாழ்த்து அட்டைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் இருக்கும். சிலர்    சாவிக்கொத்துகளை  சேகரித்து வைப்பார்கள். சிலர் பிரபலமானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி - தோழர், தோழிகளின் கையெழுத்துகள் புகைப்படங்கள் என சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இதெல்லாம் இங்கு எதற்கு சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படி சேகரிக்கும் பொக்கிஷங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே. என் குழந்தை பிறந்ததிலிருந்து இது வரை ஒவ்வொரு வருட முடிவிலும், அந்த வருடத்தில் அவள் அணிந்த அழகான உடைகளை பாதுகாப்பாக  எடுத்து வைப்பேன். அவள் பெரியவளாகும் போது இவைகளை காண்பித்தால் இதெல்லாம் நாம் சிறுவயதில் அணிந்தோமா என்று அவளுக்கு  வியப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

இது ஒரு உதாரணம். இவை போன்று அப்பா கொடுத்த 5 ரூபாய் புது நோட்டு; அம்மா கொடுத்த தலைதீபாவளி சீரில் இருந்த  1 ரூபாய் புது நோட்டு; புடவை கட்ட ஆசைப்பட்டு வாங்கிய முதல் புடவை; கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த முதல் சுடிதார்; அவர் எனக்கு எழுதிய கடிதங்கள்; நாங்கள் முதன்முதலாக சென்ற ”ரன்” சினிமாவின் டிக்கெட்; நான்  ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப்  போகிறேன் என்று டாக்டர் உறுதி செய்த நாளின் காலண்டர் ஷீட்; அப்பா கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்த புத்தகங்கள் - இப்படிப் பல பொக்கிஷங்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன் [இதுக்கே தனியா ஒரு அறை வேண்டும் போல இருக்கு என்று  என்னவர் அவ்வப்போது புலம்புவது தனிக்கதை].

இதைப் படிக்கும் போது உங்களுக்கும் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் என்னென்ன என்று மனதுக்குள் கொசுவத்தி சுத்த ஆரம்பித்துவிட்டதா?. 

மீண்டும் சந்திப்போம்!

ஆதி

Saturday, September 18, 2010

ஆசை யாரை விட்டது


இயந்திரவியல் துறை டிப்ளமோ மாணவிகளாகிய நாங்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் பணிமனைக்குச் (WORKSHOP) செல்ல வேண்டியிருக்கும். அப்படி ஒருநாள் பணிமனைக்குச்  செல்லும் முன்னர் பெண்கள் அறைக்கு சென்றோம். அங்கு பார்த்தால் சில மாணவிகள் மருதாணி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆசை யாரை விட்டது. சரி நாமும் வைத்துக் கொள்வோம் என்று தோழிகள் மூன்று பேரும் ஒரு கையில் வைத்துக் கொண்டு அந்தக்  கையை ஓவர்கோட் பாக்கெட்டினுள் விட்டுக் கொண்டு ஸ்டைலாக பணிமனைக்குச் சென்று விட்டோம்.

 நல்ல வேளை அன்று பணிபுரிய வேண்டிய வேலை எதுவும் இல்லாததால் அவரவர்  இருக்கையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் சிலர் எங்கள் மூவரிடமும் ஏன் ஒரு கையை மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க எங்கள்  கைகளைக் காண்பித்தோம்.

என்ன தைரியம் உங்களுக்கு!” என்று திட்டினார்கள். இவர்களே இப்படி திட்டுகிறார்களே, விரிவுரையாளர் பார்த்தால்  எங்கள் கதி அதோகதிதான் என்று நினைத்துக்கொண்டோம். இறுதியாண்டில் வேறு இருக்கிறோம் தேர்வின் போது பிரச்சனை ஆகி விட்டால்? இப்படி பல கேள்விகளை எங்கள் மனதினுள் ஓட விட்டு  இடைவேளை வரும் வரை காத்திருந்தோம்.

இடைவேளை வரவும் அவசரம் அவசரமாக பெண்கள் அறைக்குச் சென்ற நாங்கள்  என்ன காரியம் செய்தோம் தெரியுமா?
 
ஆனது ஆயிற்று இனி என்ன ஆனாலும் சரி என்று மற்றொரு கையிலும் மருதாணி வைத்துக் கொண்டு வகுப்பிற்குத் திரும்பினோம். ஆசை யாரை விட்டது?

டிஸ்கி: தில்லிக்கு வந்த பிறகு, எல்லா இடங்களிலும்  பல வடிவங்களில் அழகழகாய் கைகளில் மருதாணி வைத்து விடுவதற்கென்றே பலர் இருப்பதினால் ஆசை தீர மருதாணி வைத்துக்கொள்கிறேன்!

ஆதி.

Friday, September 3, 2010

புளியில்லா சாம்பார்


சாம்பார் செய்ய புளி ஊறவைக்க புளி டப்பாவை திறந்து பார்த்தா, சுத்தமா புளியே இல்லையா? சாம்பார்தான் கடையிலேயே விக்குதே வாங்கிக்கலாமேன்னு சொல்லவா இந்த பதிவு? சரி புளியில்லாம சாம்பார் எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாமா? திடீர் விருந்தாளிகள் வந்தாலும் இந்த சாம்பாரை நீங்க சுலபமா செய்யலாம். இந்த செய்முறையை எனக்கு என்னோட மாமியார் சொல்லிக் கொடுத்தாங்க. அவங்களுக்கு எனது நன்றி!


தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் : 2

தக்காளி : 3

துருவிய தேங்காய் : 2 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம் : சிறிதளவு.

தனியா : 2 தேக்கரண்டி

கடலைப் பருப்பு : 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் : 2 [அ] 3

பெருங்காயம் : சிறிதளவு.

உப்பு, மஞ்சள் பொடி : தேவைக்கேற்ப

துவரம்பருப்பு : ஒரு கப்.

எண்ணெய் : தேவைக்கேற்ப

கருவேப்பிலை : சிறிதளவு

கொத்தமல்லி : சிறிதளவு


செய்முறை

துவரம்பருப்பை குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சிறிதளவு எண்ணைய் விட்டு தனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை பொன்னிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறிய பிறகு அதனுடன் தேங்காய் சேர்த்து கொறகொறவென அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்துக் கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கி பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரைத்து வைத்த விழுதினைப் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பினை போட்டு நன்றாக கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழைகளை மேலே தூவி விடுங்கள். இப்போ புளியில்லா சாம்பார் ரெடி! பரவாயில்லையே புளியே இல்லாமல் சாம்பார் செஞ்சுட்டியே! சரியான "சமையல் புலி" தான் நீ என்ற பட்டத்தையும் வாங்கிக்கோங்க!

ஆதி