Wednesday, August 25, 2010

சூப்பர் அம்மா சூப்பராம்மா?


சில மாதங்களாக ஒரு பிரபல தமிழ் ஊடகத்தில் ‘’SUPER MOM’’ என்ற நிகழ்ச்சி வருகிறது. தாயின் திறமையைப் பொருத்து அவர் சாதா அம்மாவா இல்லை சூப்பர் அம்மாவா என்பதை தெரிவு செய்வார்களாம்! ஒரு குழந்தையின் தாய் என்னென்ன திறமைகள் கொண்டிருக்கிறாள் என்பதை பல சுற்றுக்களின் வாயிலாக நிரூபிக்க வேண்டும். இதில் பல தாய்மார்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் இறுதியில் சிறந்த தாய் அதாவது ’SUPER MOM யார் என்று தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்!!.


பங்குபெறும் தாயார்களை பாடவோ, ஆடவோ, ஓவியம் வரையவோ சொன்னால் கூடப் பரவாயில்லை. நான் சில சுற்றுக்களைப் பார்த்தபோது பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சரியம் எதற்கு என்றால் நமது பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய மிக அழகான போட்டிகளை வைத்திருந்ததுக்கு.


கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, நவராத்திரி, போன்ற பண்டிகை சுற்றுக்களும் இருந்தன. இது போக பழங்கால முறைப்படி ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை உபயோகப்படுத்தி சட்னி அரைக்க வைத்தனர். அப்புறம் பாண்டியாட்டம் கூட ஆடச் சொன்னார்கள்.


பண்டிகை சுற்றுக்களில் நம் தாய்மார்கள் தயங்கியும் திக்கித் திணறியும் பதிலளிக்கிறார்கள். அதற்கு பிறகு மனோதத்துவ சுற்றுக்களும் இருந்தன. அதில் மனோதத்துவ நிபுணர் தாயிடமும், குழந்தையிடமும் தனித் தனியாக கேள்விகள் கேட்கிறார். பிடித்தவை, பிடிக்காதவை இப்படிப் பல.


அடுத்தது பயம் எதற்கு என்று கேட்டால், இறுதிச் சுற்று வரை வந்த அம்மாக்களுக்கு வைத்த போட்டி தான். கஷ்டமான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ள தன்னுடைய குழந்தையை தரப்பட்ட ஐந்து நிமிடங்களுக்குள் அச்சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் இந்த சுற்றில் முன்னேற முடியாதபடி அதிவேகத்தில் குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சுவது, வழுக்கும் தரையில் நடந்து சென்று உயரத்தில் ஏறுவது, ரோட்டில் கயிற்றில் நடப்பார்களே அது போன்று ஒரு பைப்பின் மீது நடக்க வைப்பது, பனிக்கட்டிகளுக்குள் இறங்கி தேட வைப்பது, இப்படிப் பல சோதனைகளைக் கடக்க வேண்டுமாம். இதெல்லாம் செய்து முடிப்பவர் தான் ‘’SUPER MOM”! என்னைப் பொறுத்தவரை இப்படியெல்லாம் செய்தால்தான் சூப்பர் அம்மாவாக முடியுமா என்றால், கிடையவே கிடையாது.


ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய அம்மா ஒரு ‘’SUPER MOM’’ தான். தன்னுடைய முதுகில் குழந்தையை கட்டிக்கொண்டு வேலை செய்கிற ஒரு தாய், வறுமையில் உழலும்போதும், தனக்கு கிடைக்கிற உணவை தன்னுடைய குழந்தைக்குக் கொடுக்கத் துடிக்கும் தாய், குழந்தையை படிக்க வைப்பதற்காக வீட்டு வேலைகள் செய்பவள். இப்படி ஒவ்வொருவருமே சூப்பர் அம்மாதான்! நாம் சாப்பிடும் உணவில் கூட நம் அம்மா செய்தது தான் சிறந்தது என்று தானே எல்லோருக்கும் தோன்றுகிறது!


ஒரு ஐந்து வயது குழந்தையின் தாய் என்ற பார்வையில் பார்க்கும் போது இந்த நிகழ்ச்சியே ஒரு தேவையில்லாத ஒன்றாகத் தோன்றுகிறது! விளம்பரங்கள் மூலமாக தாங்கள் ஈட்டும் தனத்திற்காக, இப்படி தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் பல தாய்மார்களும் வெறித்தனமாக பங்களித்து ஆதரவு அளிக்கிறார்கள் என்பது தான் வருந்த வேண்டிய விஷயம்.


ஆதி

 

Thursday, August 19, 2010

இளைய நிலா பொழிகிறது!

எல்லோருக்கும் கல்லூரி நாட்களை நினைத்தாலே ‘’பசுமை நிறைந்த நினைவுகளே’’. என பாடத்தோன்றும் அல்லவா! எனக்கும் அப்படித்தான். நான் படித்தது ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில். நமது வாழ்வில் குழந்தைப் பருவமும், கல்லூரி நாட்களும் மீண்டும் கிடைக்காது. பணம் படைத்தவனோ, வறுமையின் பிடியில் உழல்பவனோ கல்லூரிக்குள் வந்துவிட்டால் எல்லோரும் நண்பர்கள் ஆக இருப்பது எவ்வளவு சுகமானதொரு அனுபவம்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கை முதலாம் ஆண்டு அறிமுகங்களுடனும் பயத்துடனும் கழிந்தது. இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகள் ஒரே கலாட்டாவும் கூத்துமாகத்தான் இருந்தது. பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே எங்களுடைய கலாட்டாவும் ஆரம்பமாகிவிடும். எங்கள் நண்பர்களில் ஒருவர் நன்றாகப் பாடுவார், ஆனால் அவருக்கு பாட்டு வரிகள் தெரியாது. எங்களுக்கு போர் அடிக்கும்போது, தோழி ஒருத்தி முன் இருக்கையில் அமர்ந்து ஒரு பேப்பரில் பாடலை எழுதிக்கொடுக்க, அந்த நண்பர் ஸ்வர சுத்தமாக எங்களுக்கு மட்டும் கேட்கும்படி அழகாகப் பாடுவார்.

தினம் தினம் இது போன்று ஏதோ ஒரு பாடல் வரிகளை தோழி எழுதிக் கொடுக்க, அவர் பாட, நாங்கள் கேட்டுக்கொண்டு இருப்போம் ஆனால் பேராசிரியர் தான் பாவம் கடமை உணர்ச்சியுடன் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார். [அப்படின்னா பாடமே படிக்கலையான்னு கேட்கக் கூடாது! நாங்கல்லாம் படிப்புல புலிங்கோ!].

அப்படி நாங்கள் கேட்ட பாடல்களிலேயே அதிக முறை கேட்ட பாடல் “பயணங்கள் முடிவதில்லை” படத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடிய அற்புதமான பாடல்களில் ஒன்றாகிய “இளையநிலா பொழிகிறதே, இதயம் வரை நனைகிறதே….” என்ற பாடல்தான். இதோ அந்த பாடல் எனக்காகவும் உங்களுக்காகவும்…..

 
கேட்கும்போதே மீண்டும் அந்த கல்லூரி நாட்களுக்கே சென்று விடத் தோன்றுகிறது எனக்கு. நீங்களும் கொஞ்சம் கொசுவத்தி சுத்தி அந்த பாடல் நாட்களுக்குச் சென்று வாருங்கள்.


மீண்டும் சந்திப்போம்…… ஆதி.

Tuesday, August 10, 2010

புதுமுகம் ஒரு அறிமுகம்என்னுடைய வலைப்பூவின் தலைப்பு சொல்வது போலவே நான் கோவையிலிருந்து தில்லிக்கு வந்து வசிக்கும் ஒரு தமிழ் மகள். எனது தாய்மொழி தமிழ் என்று சொல்லிக்கொள்வதில் எப்போதுமே ஒரு தனி கௌரவம். எங்கள் கோவையின் அழகான கொங்கு தமிழ் பேசி, கேட்டு மகிழ்ச்சியில் திளைத்ததில் எனக்கு மிகப் பெருமை.

வாழ்க்கையில் எல்லாப் பெண்களுக்கும் திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களில் ஒன்று இட மாற்றம். சிலருக்கு வேறு கிராமம், சிலருக்கு வேறு நகரம், மற்றும் பலருக்கு வேறு மாநிலம், வேறு நாடு என்று அமைந்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை.

கல்யாணம் முடிந்து பக்கத்து ஊரிலோ, அதே மாநிலத்திலோ இருந்தாலாவது நாம் ஆசைப்படும் போது தாய் வீட்டுக்குச் சென்று வரலாம். வேறு மாநிலத்திற்கோ, வேறு நாட்டுக்கோ சென்று விடும்போது நினைக்கும்போதெல்லாம் தாய் வீடு செல்ல முடியாது என்பது ஒருவிதத்தில் சோகம் தான்.

கல்யாணம் ஆகும்வரை கோவையிலிருந்து தமிழகம் தவிர வேறு எங்கும் சென்றிராத [அறியாச் சிறு வயதில் திருப்பதி சென்றது தவிர] எனக்கு இப்படிப்பட்ட மாற்றம் – கோவை 2 தில்லி! ஊரில் மட்டுமா மாற்றம் – கல்யாணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் எத்தனை பெரிய மாற்றங்களை உண்டு பண்ணி விடுகிறது.

என்னுடைய இந்த வலைப்பூவில் நான் கண்ட மாற்றங்கள், எனக்குப் பிடித்த விஷயங்கள் பற்றியும், சமையல் குறிப்புகள் [ஆஹா கிளம்பிட்டாங்கய்யா இன்னுமொருத்தங்க!], பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் போன்றவற்றை எழுதப் போகிறேன்.

நீங்கள் எல்லோரும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்…


ஆதி